Showing posts with label கில்லி. Show all posts
Showing posts with label கில்லி. Show all posts

Friday, May 24, 2013

ஒல்லி கில்லி பெல்லி ஆக 30 வகை ஸ்லிம் ரெசிபி ( சமையல் குறிப்புகள் )


30 வகை ஸ்லிம் ரெசிபி
இளைக்கலாம்... அசத்தலாம்...

ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்ல பார்மஸி’ - இது பிரபலமான பாடல் வரி மட்டுமல்ல... உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஸ்டேட்மென்ட்டும் கூட! அதேசமயம் 'இளைக்கிறேன் பேர்வழி’ என்று பட்டினி கிடந்தால், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பிறகு என்னதான் செய்வது? ''இதற்கு நான் வழி சொல்கிறேன் வாருங்கள்'' என்று அக்கறையுடன் அழைப்புவிடுக்கும் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன், இங்கே 30 வகை 'ஸ்லிம் ரெசிபி’களை வழங்குகிறார். ''உடல் இளைக்க உதவும், சத்துமிக்க காய்கறி, மளிகைப் பொருட்களைக் கொண்டு இந்த உணவு வகைகளை செய்துள்ளேன். வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு, இந்த உணவுகளை முடிந்த அளவு பயன்படுத்தினால், மூன்று மாதங்களில் உடல் எடை கணிசமாக குறையும். கூடவே, கொஞ்சம் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம்'' என்கிறார் மாலதி.

அவல் உப்புமா
தேவையானவை: அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

ஓட்ஸ் கட்லெட்
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி, கேரட் (துருவியது), குடமிளகாய் (நறுக்கியது) - தலா அரை கப், பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2, தனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்யவும். பிரெட்டையும் பொடி செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். அது வதங்கியதும் பொடியாக நறுக்கிய  உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து மூடி வைத்து, பிறகு மேலும் வதக்கவும். காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து... ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, தட்டி தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  தினை அரிசி உப்புமா
தேவையானவை: தினை அரிசி - ஒரு கப், வெங்காயம், கேரட், குடமிளகாய் (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடைந்த தயிர் - 2 கப், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம், தனியா - தலா அரை டீஸ்பூன், வெந்த கடலைப்பருப்பு - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை:  வாழைத்தண்டை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். பச்சை மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த வாழைத் தண்டுடன் சேர்க்கவும். இதனுடன் தயிர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், வெந்த பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, இது நுரைத்து பொங்கி வரும்போது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

 ஓட்ஸ்  சம்பா ரவை இட்லி
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், சம்பா கோதுமை ரவை - அரை கப், தயிர் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 10, 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லிகளாக செய்து பரிமாறவும்.

 வெந்தயத் தட்டு பச்சடி
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், வெந்தயம் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும், வெந்தயத்தையும் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயையும் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பும் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடைந்த தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியை கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

 அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் (நறுக்கியது) - ஒரு கப், பாசிப் பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு (பொடி செய்ய) - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உளுத்தம் பருப்பு (தாளிக்க) - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: அவரைக்காய், பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் உளுத்தம்பருப்பு,   மிளகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து இறக்கி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக எண்ணெயில் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

 தானிய அடை
தேவையானவை: காராமணி - ஒரு கப், பச்சைப் பயறு - ஒரு கப், கொண்டைக்கடலை - ஒரு கப், சிவப்பரிசி - ஒரு கப், சோள ரவை (மளிகைக் கடையில் கிடைக்கும்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெள்ளை வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா தானியங்களையும் முதல் நாளே காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரைப்பதற்கு முன் சோள ரவையை கால் மணிநேரம் ஊற வைத்து சேர்த்து அரைக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, சிறிது நேரம் மூடி வைத்து, சுட்டடெடுக்கவும். ஒரு அடைக்கு கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டால் போதும்.

 கொள்ளு சுண்டல்
தேவையானவை:  கொள்ளு - ஒரு கப், காராமணி, பச்சைப் பயறு - தலா அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: பயறு வகைகள் வேக வைத்த நீரை, ரசம் செய்யும்போது சேர்க்கலாம்.

 புரூக்கோலி சப்பாத்தி
தேவையானவை:  புரூக்கோலி - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், தனியாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புரூக்கோலியை கழுவி பொடியாக நறுக்கவும். கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு இதை லேசாக வதக்கவும். இதனுடன் கோதுமை மாவு, தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, தாவாவில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.  
குறிப்பு: குழந்தை பெற்ற பெண்கள், ஒரு மாதத்துக்கு புரூக்கோலியை சாப்பிடக்கூடாது.

 வெள்ளை பூசணி பொரியல்
தேவையானவை: வெள்ளை பூசணி (நறுக்கியது) - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூசணிக்காயை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும் (சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்). காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை பிழிந்து போடவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
வெள்ளை பூசணி வாயுத்தொல்லையை தணிக்கும்.

 முள்ளங்கி ராய்தா
தேவையானவை: துருவிய முள்ளங்கி - ஒரு கப், கடைந்த தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு). பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் (காரல் நல்லது. அப்படியே கூட தயிருடன் சேர்த்து, உப்பு போடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

 ராகி  பசலைக்கீரை மாசாலா
தேவையானவை:  கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - தலா ஒரு கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து, உப்பு போட்டு கிளறி, பால் விட்டு கலக்கவும். இதை ஆவியில் வேக வைத்து... ஆறியதும் சிறு துண்டுகளாக செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் கேழ்வரகு மாவு துண்டுகளை சேர்த்து... கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு கிளறி, கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பவுடரை தூவி இறக்கவும்.

 கோவைக்காய் கறி
தேவையானவை: நறுக்கிய கோவைக்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நன்றாக கழுவி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, கோவைக்காயை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்து மூடி வைத்து, சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கவும்.
கோவைக்காய் இரும்புச் சத்து கொண்டது.

 புடலங்காய் கடுகு பச்சடி
தேவையானவை: பொடியாக நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: நறுக்கிய புடலங்காயை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். அரை டீஸ்பூன் கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து... வெந்த காய் ஆறியதும் அதனுடன் கலக்கவும். பிறகு, கடைந்த தயிர் சேர்த்து... எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

கம்பு ரொட்டி
தேவையானவை:கம்பு மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கம்பு மாவில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைக்கவும். வாழையிலையில் மெல்லியதாக இந்த மாவை தட்டி தவாவில் போடவும். சிறிதளவு எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். பிறகு, திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து செய்யவும்).

 அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை:அகத்திக்கீரை (நறுக்கியது) - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் கீரையை போடவும். பிறகு மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து நீர் தெளித்து மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 5 நிமிடம் கழித்து மறுபடியும் நீர் தெளித்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அகத்திக்கீரை வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. உடம்பில் உள்ள கெட்ட நீரை எடுக்கும்.

 சம்பா ரவை கிச்சடி
தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சம்பா கோதுமை ரவையை கடாயில் சிவக்க வறுக்கவும். வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வெங்காயத்தை போட்டு வதக்கவும், பிறகு கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 சாமை அரிசி உப்புமா
தேவையானவை:சாமை அரிசி - ஒரு கப், வெள்ளை வெங்காயம், கேரட் - தலா ஒன்று, நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும். கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 காராமணி கிரேவி
தேவையானவை: காராமணி - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு - 2 பல், பட்டை - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை முதல் நாள் ஊற வைக்கவும் (மாலையில் செய்வதானால் காலையில் ஊற வைக்கவும்). ஊறிய காராமணியை குக்கரில் வேக வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பட்டை சேர்க்கவும். வெங்காயம் வதக்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். ஆறியதும் இதை விழுதாக அரைத்து, காராமணியுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். உப்பு, கொத்தமல்லி சேர்த்து... 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

 வெஜிடபிள் சாலட்
தேவையானவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கலர் கோஸ், வெள்ளை கோஸ், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன் (வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, வெந்தயப்பொடி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் முளைகட்டிய பயறு சேர்க்கலாம்.
வாரத்துக்கு 4 நாட்கள் இதை சாப்பிட்டால்... உடல் நலம் மேம்படும்.

 கம்பு தோசை
தேவையானவை: கம்பு - 3 கப், சிவப்பரிசி, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், அவல் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கம்பு, சிவப்பரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். 5 மணி நேரம் ஊற வேண்டும். முதலில் கம்பை போட்டு அரைக்கவும். கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு - வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும்.  பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 முருங்கைக்கீரை சூப்
தேவையானவை:ஆய்ந்து, சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பூண்டு - ஒரு பல், மிளகு - கால் டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும். கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வந்தால், முருங்கைக்கீரை நிவாரணம் அளிக்கும்.

 துளசி ரசம்
தேவையானவை: துளசி இலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களை அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் துளசியை அரைத்து அதனுடன் சேர்த்து, நுரைத்ததும் இறக்கி... எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
துளசி, ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

 வெந்தயக் கறி
தேவையானவை:வெந்தயம் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்  - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சக்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வெந்தயத்தை முதல் நாள் ஊற வைக்கவும், மறுநாள் காலையில் எடுத்து நீரை நன்றாக வடித்து, 'ஹாட் பேக்’கில் போட்டு மூடி வைக்கவும். அதற்கு அடுத்த நாள் நன்றாக முளைவிட்டிருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... முளைகட்டிய வெந்தயத்தை சேர்க்கவும். கொஞ்சம் நீர் தெளித்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும்

 அவல் பிஸிபேளாபாத்
தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், நறுக்கிய  பூசணிக்காய் - அரை கப்,  கேரட் - ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி, சௌசௌ - தலா அரை கப், வெங்காயம் - ஒன்று, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை  எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (குடமிளகாய், வெங்காயம் தவிர). அதனுடன் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்து வைத்த பொடியை சேர்த்து... வெங்காயம், குடமிளகாயை வதக்கி போட்டு, அவலை பிழிந்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

 தனியா பொடி
தேவையானவை:தனியா - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியாவை வாசனை வரும் வரை வறுக்கவும். காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அந்த சூட்டில் புளியை பிய்த்துப் போடவும். பெருங்காயத்தை பொரித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நைஸாக பொடி செய்து வைக்கவும்.
இதை புளி இல்லாமலும் செய்யலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நீர் மோரில் ஒரு டீஸ்பூன் போட்டு குடிக்கலாம். இது உடலில் உள்ள கெட்ட நீரை எடுக்கும். பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். குமட்டலை போக்கும்.

 கொள்ளு  ஃப்ளாக்ஸ் சீட் பொடி
தேவையானவை: ஃப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், கொள்ளு - அரை கப்.
செய்முறை: கொள்ளுவை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஃப்ளாக்ஸ் சீட் சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும். வாரம் 3 நாளைக்கு ஏதாவது ஒரு காயில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளு - ஃபிளாக்ஸ் சீட் பொடி சேர்த்தால் காய் சுவையாக இருக்கும்.
ப்ளாக்ஸ் சீட் கொழுப்பு சத்தைக் குறைக்கும்.

சுரைக்காய் பொரியல்
தேவையானவை: நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப்,  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... சுரைக்காயை சேர்க்கவும். மஞ்சள்தூள் தூவி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தேவையென்றால் கொஞ்சம் நீர் தெளிக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து காயை நன்றாக கிளறி, ஃப்ளாக்ஸ் சீட் பொடி தூவி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடத் துக்குப் பிறகு இறக்கவும்.

 வரகு புளியோதரை
தேவையானவை: வரகு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வரகை அரை மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாயை பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... புளிக் கரைசலை விடவும். இதனுடன் உப்பு, தனியா - மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும். வேக வைத்த கடைசியில் வரகை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
ஸ்பைஸி பப்பட் ரோல்
தேவையானவை: ஆச்சி அப்பளம் - 12 (அல்லது தேவைக்கேற்ப), எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஸ்டஃப்பிங் செய்ய தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் -  தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி     மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு  - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை (வெங்காயம் தவிர) குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு மசிக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது, ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, காய்கறி விழுதைப் போட்டு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து ஆறவிடவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும் இந்தக் கலவை ஆறியதும் சிலிண்டர்கள் மாதிரி உருட்டி வைக்கவும் (கலவை தளர இருந்தால், பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்).
வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). தட்டில் நீர் விட்டு, ஆச்சி அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் நனைத்து, உடனே எடுத்து, நீரை மட்டும் ஒற்றி எடுத்தால் நமுத்த மாதிரி ஆகும். அப்பளத்தின் நடுவில்  சிலிண்டர் வடிவ காய்கறி உருண்டையை வைத்து ரோல் செய்தால் அப்பளம் ஒட்டிக்கொள்ளும். அல்லது கையால் நன்கு ஒட்டிவிடவும். எண்ணெய் காய்ந்ததும், ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  


இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி கெட்சப்  மிகவும் ஏற்றது
- ராஜி கணேசன், சென்னை-40


நன்றி - அவள் விகடன்
படம்: ஆ.முத்துக்குமார்