அரசியல் கட்சித் தலைவர்கள், செய்தி நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
அதாவது கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு 192 அவதூ று வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் மாநில அரசு ஒன்றால், அதிக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதும் இப்போதுதானாம்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, பாமக ராமதாஸ், அன்புமணி, சுப்பிரமணியன் சுவாமி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்குள் பாய்ந்துள்ளன.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தர்மபுரியில் பேசிய பேச்சுக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கை, உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, தமிழக அரசு உள்நோக்கத்துடன் அவதூறு வழக்கு தொடர்வதாகவும், விஜயகாந்தின் விமர்சனம் நியாயமானது என்றும் தீர்ப்பளித்து விட்டது.
தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல செய்திதாள்களும், பத்திரிகைகள் மீதும் தற்போதைய தமிழக அரசு ஏராளமான அவதூறு வழக்குகளை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவை விமர்சனம் செய்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டதற்காக, ஹிந்து ஆங்கில நாளிதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் 4 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து எழுதியதற்காக ஆனந்த விகடன் மீதும் 18 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதனை மறுபிரசுரம் செய்யதற்காக முரசொலி மீது வழக்கு பாய்ந்தது.
தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக ரெடிஃப் , தெகல்கா, அவரது உடல்நிலை குறித்து ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி மீதும் வழக்கு போடப்பட்டது. ஆனால் அதற்குபின், அவரது உடல்நிலை குறித்து எந்த செய்திகளும் வெளிவருவதில்லை.
கடந்த 1991 முதல் 1996 ம் ஆண்டு வரை நடந்த ஆட்சியில், ஜெயலிலதா அரசு 120 அவதூறு வழக்குகளை போட்டிருந்தது. ஆனால் ஆட்சி முடியும் தருவாயில் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவ்வளவு ஏன், தற்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ள நாஞ்சில் சம்பத் மீது கூட 26 அவதூறு வழக்குகள் இருந்தன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அவர் அதிமுகவில் ஐக்கியமானதையடுத்து, அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
தற்போது ஆட்சி முடியும் தருவாயில் செம்பரப்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர் ஆகிய நாளிதழ்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதான் கடைசி அவதூறு வழக்குகள் என்றும் கூறி விட முடியாது. இனியும் வரலாம்.
ஆனால் அதிமுக தரப்பிலோ, கடந்த திமுக ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வகையில் முதல்வர் கருணாநிதி சார்பில் 52 அவதூறு வழக்குகள் பதியப்பட்டதே... அதற்கு பதில் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் 182 அறிவிப்புகளைதான் வெளியிட்டுள்ளார். ஆனால் அதனை விட அவர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
இந்தியாவை பொறுத்தவரை, மேற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜியும் தனது அரசியல் எதிரிகள் மீது அவதுறு வழக்குகளை தொடர்வதில் வல்லவர்தான். தற்போது அவரையும் தமிழக முதல்வர் மிஞ்சி விட்டாராம்.
இப்போது அவதூறு வழக்குகளின் தலைநகரம் சென்னை என்ற பேச்சு டெல்லியில் அடிபடுகிறதாம்!
நன்றி - விகடன்