Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

Tuesday, May 29, 2012

அன்பே வா - எம் ஜி ஆர் - ஷூட்டிங்க் - விகடன் பொக்கிஷ பக்கங்கள்

சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது.


 மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம். ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.


''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம். 'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன்.
யில் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சரோஜா தேவி, நடுங்கும் குரலில் எம்.ஜி.ஆரைப் பார்த்து, ''என்னங்க! கால்காவுல 'க்ளவுஸ்’ கிடைக்குமா?'' என்று கேட்டார்.



''இங்கேயே கிடைக்குமே'' என்றார் எம்.ஜி.ஆர்.
'இங்கே எப்படிக் கிடைக்கும்?’ என்பதைப் போல் எம்.ஜி.ஆரைப் பார்த்தார் சரோஜா தேவி. உடனே எம்.ஜி.ஆர். வெள்ளை நிற 'க்ளவுஸ்’ இரண்டை எடுத்து வந்து சரோஜா தேவியிடம் கொடுத்தபோது, ''அடடே... நீங்களே வெச்சிருக்கீங்களா! தேங்க்ஸ்'' என்று வாங்கிக்கொண்டார்.



''எம்.ஜி.ஆரிடம் நிறைய 'க்ளவுஸ்’ இருக்கும்போல் இருக்கிறதே'' என்று எம்.ஜி.ஆருடன் வந்திருந்த அவருடைய டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களிடம் சொன்னேன். ''அதை ஏன் கேக்கறீங்க? ஊட்டியில 'அன்பே வா’ ஷூட்டிங் நடக்கிறப்போ, அதில் சம்பந்தப்பட்ட அத்தனை தொழிலாளர்களுக்கும் ஸ்வெட்டரும் பனிக் குல்லாவும் வாங்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்களுக்கெல்லாம் ஒரே குஷி'' என்றார் டாக்டர்.


'சென்னையில் உள்ள ரிக்ஷாக்காரர்கள் அத்தனை பேருக்கும் மழை கோட்டு வாங்கிக் கொடுத்தவருக்கு, இது ஒரு பிரமாதமா?’ என்று எண்ணிக்கொண்டேன்.
'பிளெஸ்ஸிங்டன் கோர்ட்’ என்பது அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் சறுக்கி விளையாடு வதற்காக ஏற்படுத்தப்பட்ட பனிக்கட்டிச் சறுக்கு முற்றம். தென் கிழக்கு ஆசியாவிலேயே இத்தகைய சறுக்கு மேடை சிம்லாவில் மட்டுமே உள்ளது. மலைச் சரிவுகளைப் பின்னணியாகக்கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த அழகிய இடத்துக்கு அருகில் போய் நிற்கும்போது, நம் உள்ளம் குளிர்கிறது. 


 உடல் 'வெடவெட’வென்று நடுங்குகிறது. இந்த அருமையான இடத்தை இப்போது சர்க்கார் பஸ் ஸ்டாண்டாக மாற்றப்போகிறார்களாம். இந்த சேதியைக் கேட்ட  போது எம்.ஜி.ஆர். பதறிப்போய் ''இதென்ன பைத்தியக்காரத்தனம்? பஸ் ஸ்டாண்டுக்கு வேறு இடம் இல்லாமலா போய்விட்டது? இது ரொம்ப அக்கிரமம். விகடனில் இதைப் பற்றி எழுதுங்கள் சார்'' என்றார்.



பஞ்சாப் அழகு ஜோடிகள் சறுக்கி விளையாடும் அபூர்வ காட்சியை எம்.ஜி.ஆரும் சரோஜா தேவி யும் கண்கொட்டாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். ''என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள்கூடச் சறுக்கலாம். ரொம்ப சுலபம். நாலு தடவை கீழே விழுந்தால் தன்னால் வந்துவிடும்'' என்று எம்.ஜி.ஆருக்குத் தைரியம் கூறினார் சிம்லா தமிழர் ஒருவர். ''அது சரி, நான் கீழே விழுவதைப் படமெடுத்துக் காட்டினால், சிரிப்பார்களே'' என்றார் எம்.ஜி.ஆர்.


எப்படியோ எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சறுக்கி விளையாடும் காட்சியை இரண்டே நாட்களில் படமாக்கி முடித்துவிட்டார்கள்.


சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ (ரிuயீக்ஷீவீ) என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய்  நின்று பார்த்தால், தூரத்தில் இமய மலைச் சிகரங்கள் மீது வெள்ளைப் பனி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.


''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா?'' என்றார்.


அந்தச் சமயம் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.


''அடடே! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு? சௌக்கியமா இருக்கீங்களா? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா?'' என்று அன்புடன் விசாரித்தார். 


எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு. மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். சிலர் மார்போடு அவரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் வாழ்வின் பயன் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.


மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... என்ன அர்த்தம்? இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டாமா?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் எம்.ஜி.ஆரைப் பார்த்த காட்சியைப் படம் எடுக்கவில்லையே என்று தோன்றியது.



'புதிய வானம்-புதிய பூமி’ என்ற பாட்டைப் பாடியவண்ணம் எம்.ஜி.ஆர். உல்லாசமாக நடந்துவரும் காட்சியை, குஃப்ரி மலைச் சிகரத்தில் படமாக்கினார்கள். வாலி எழுதிய இந்தப் பாட்டுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது அந்த இடம். எம்.ஜி.ஆர். தமது கைகளை வீசி வானத்தையும் பூமியையும் காட்டிப் பாடிக்கொண்டு இருந்த சமயம், வானத்தில் பட்சிகள் கூட்டம் ஒன்று சிவ்வெனச் சிறகடித்துப் பறந்து சென்றது. பட்சிகள் பறக்கும் அந்த அழகிய காட்சியை 'அன்பே வா’ படத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் துடித்தார் தயாரிப்பாளர் சரவணன்.


''அடடா! என்ன அழகான காட்சி? டைரக்டர் சார், இந்தப் பறவைகளை ஏதாவது செய்ய வேண்டுமே...'' என்றார் அவர்.


''சுட்டுச் சாப்பிடலாம் சார்?'' என்றார் ஒரு சாப்பாட்டு ரசிகர்.


''அவற்றை ஏற்கெனவே ஷூட் செய்தாயிற்று, கவலைப்படாதீர்கள்'' என்றார் டைரக்டர்.


போகும் வழியில் மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித் துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றார்.


''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டது.


''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என்றேன்.


''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்றார் எம்.ஜி.ஆர்.


'மால்’ என்பது சிம்லா நகரின் மலைச் சிகரத்தில் அமைந்துள்ள ஓர் அழகு வாய்ந்த இடம். இங்கேயும் இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் நடைபெற்றது. கொழுகொழுவென்ற திபெத் நாட்டு அநாதைக் குழந்தைகள் இந்தச் சாலை வழியாக நடந்துபோகிறார்கள்.


''பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே...
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே...''


என்று பாடிக்கொண்டு வரும் எம்.ஜி.ஆர். அந்தப் பிள்ளைகளில் இருவரைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்.


அடுத்தாற்போல்,
''நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது...''


என்ற அடியைப் பாடும்போது, அங்குள்ள காந்தி மகாத்மாவின் சிலையைப் பார்த்துக் கும்பிடுகிறார்.


அன்று மாலை நான் எம்.ஜி.ஆரிடம் ''தாங்கள் மகாத்மாவை வணங்கும் காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்துவிட்டது. இந்தக் காட்சியைப் படத்தில் பார்க்கும் பொதுமக்கள் பெரிதும் ரசிப்பார்கள்'' என்றேன்.



''காந்தியிடம் எனக்கு எப்போதுமே பக்தி உண்டு. என் வீட்டில் நான் கும்பிடும் என் தாயாரின் படத்துடன் காந்தியின் படத்தையும் வைத்திருக்கிறேன். உலகத்தில் அந்த மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும் புத்தரும்கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்'' என்றார்.



சிம்லாவில் உள்ள திபெத் அநாதைக் குழந்தைகள் இல்லத்தை பிரிட்டிஷ்காரர் ஒருவர் நடத்திவருகிறார். உயரமான மலை உச்சி மீது அமைந்துள்ள அந்த இல்லத்தைப் பார்க்க வரும்படி எங்களை அந்த வெள்ளைக்காரர் கேட்டுக்கொண்டார். அந்த அநாதை இல்லத்துக்குச் செல்லும் பாதையில் கார் போக முடியாதாகையால், எங்களை அழைத்துச் செல்வதற்கு என அந்த வெள்ளைக்காரர் ஜீப் அனுப்பி இருந்தார்.


 செங்குத்தான அந்தப் பாதையில் எங்கள் ஜீப் முக்கி முனகிக்கொண்டு மேலே ஏறியபோது, நாங்கள் பிராணத் தியாகம் செய்வதற்குத் தயாராகிவிட்டோம். ஓர் இடத்தில் அந்த ஜீப் பின்னுக்குப் போய் 'டர்ன்’ எடுத்தபோது பின் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அதல பாதாளத்துக்கும் எங்களுக்கும் இடையே அரை அங்குலம் இடைவெளிதான். மயிர்இழையில் ஊசலாடிக்கொண்டு இருந்த ஜீப்பை அந்த டிரைவர் ஒரு பிரேக் போட்டு நிறுத்தி, மீண்டும் முன்னால் கொண்டுபோனபோது, எம்.ஜி.ஆர். 'முருகா’ என்று கத்திவிட்டார்.


அந்த அநாதைக் குழந்தைகள் இல்லத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, எம்.ஜி.ஆர். அந்த வெள்ளைக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போது அவருடைய கையில் இருந்த 100 ரூபாய் நோட்டுக் கற்றை ஒன்று வெள்ளைக்காரரின் கைக்கு மாறியது.



''இந்தக் குழந்தைகள் இல்லத்துக்கு இதைப் பயன்படுத்துங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர். 'எவ்வளவு கொடுக்கிறோம் என்று கணக்குத் தெரியாமலே இப்படி அள்ளிக் கொடுக்கிறாரே’ என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் 'எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்கவில்லை. ஏனெனில், கேட்டாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.



ளமும் வனப்பும் மிக்க சிம்லாவிலும் குஃப்ரியிலும் உள்ள வண்ண வண்ணமான இயற்கைக் காட்சிகளுக்கு இடையே எம்.ஜி. ஆரை ஓடவிட்டு, ஆடவிட்டு, பாடவிட்டுக் கண்ணுக்கு இனிய கலர் படமாக ஆக்கிய பிறகு தான், தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் பூரண திருப்தி. 'அன்பே வா’ படத்தில் வரப்போகும் அந்த எழில்மிகு இயற்கைக் காட்சிகளைப் பற்றியோ, எம்.ஜி.ஆரின் புதுமை மிக்க உல்லாச நடிப்பைப் பற்றியோ நான் இங்கே ஒன்றும் கூறப்போவது இல்லை. ஏனெனில், நீங்களே அவற்றை எல்லாம் படத்தில் பார்க்கப்போகிறீர்களே!



திரும்பி வரும்போது கால்கா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ஜன நடமாட்டமே இல்லை. எம்.ஜி.ஆருக்கு ஒரே குஷி. பிளாட்ஃபாரத்தில் அப்படியும் இப்படியும் உற்சாகத்தோடு அலைந்தார். ''அடடா! இவ்வளவு சுதந்திரமாகத் தென்னாட்டில் நடந்து போக முடியுமா? இதற்குள் ஆயிரம் பேர் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டு இருப்பார்களே. எனக்கு இந்த இடம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா?'' என்று சிறு குழந்தைபோல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.



''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.


றுநாள் பகல் 11 மணி சுமாருக்கு ராஜ்காட்டுக்குப் புறப்படுவதற்காக நாங்கள் அசோகா ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கியபோது, எம்.ஜி.ஆரை நோக்கி ஒரு பெரும் கூட்டம் 'திமுதிமு’வென்று ஓடி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தத் தொழிலா ளர்கள், எம்.ஜி.ஆர். வந்திருக்கும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்டு, காலையில் இருந்தே அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தனர்.



ராஜ்காட்டுக்குச் செல்லும்போது, ''இவர்களுக்கு எல்லாம் உங்களிடம் இத்தனை அன்பு எப்படி உண்டாயிற்று?'' என்று கேட்டேன்.


''அரண்மனை போன்ற இந்த அசோகா ஹோட்டல் மாடியில் இருந்து நான் 'லிஃப்டில்’ இறங்கி வருகிறேன். ஆனாலும், இவர்களுக்கு என்னைக் கண்டு துளியும் பொறாமை ஏற்படவில்லை. அதற்குப் பதில் என்னிடம் அன்பும் நம்பிக்கையும்கொண்டு இருக்கிறார்கள். நான் இத்தனை அந்தஸ்தில் வாழ்வதே அவர்களுக்காகத்தான் என்று எண்ணுகிறார்கள்'' என்றார்.



கார் ராஜ்காட்டில் போய் நிற்கிறது. முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்குகிறார் எம்.ஜி.ஆர். பிறகு, சமாதியை ஒருமுறை வலம் வந்து, மௌனமாக உட்கார்ந்துகொள்கிறார். சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஈடுபடுகிறார். 


உணர்ச்சிப் பெருக்கினால் அவர் கண்களில் நீர் பெருகி வழிகிறது. பின்னர், மெதுவாக எழுந்து நேருஜியின் சமாதிக்குச் செல்கிறார். நாமும் அவரைப் பின்பற்றிச் செல்கிறோம். சமாதியை வலம் வருகிறோம். மலர் வளையங்கள் வைத்து வணங்குகிறோம். இந்த நாட்டின் உய்வுக்காகப் பெரும் தலைவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். அன்று மாலை காந்திஜி கொல்லப்பட்ட நேரத்திலேயே, அந்த இடத்துக்குப் போய்க் கண்ணீர் சிந்திவிட்டுத் திரும்பினோம்.


றுநாள் காலை 6 மணிக்கு டெல்லியைவிட்டுப் புறப்பட்ட 'காரவல்’ 9 மணிக்குள் சென்னையை அடைந்துவிட்டது. வானத்தில் இருந்து பூமியில் இறங்கி நடந்தபோது, குளிரெல்லாம் போய்க் கதகதவென்று இருந்தது. ''எப்படி இருக்கிறது?'' - புன்சிரிப்போடு கேட்டார் எம்.ஜி.ஆர்.


''பழைய வானம்... பழைய பூமி என்று பாடலாம் போல் இருக்கிறது'' என்றேன் நான்.