‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந் திருக்கும் படம், ‘பிரேமம்’ புகழ் மடோனாவின் அறிமுகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக் கிறது ‘காதலும் கடந்து போகும்’. 2010-ல் வெளியான கொரிய திரைப்படம் ‘மை டியர் டெஸ்பிராடோ’வை அதிகாரபூர்வ மாகத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி.
ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அவர் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பாராத விதமாக இழுத்து மூடப்படுகிறது. தோல்வியுடன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்கா மல், தன் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு, ஒரு சாதாரண வீட்டில் குடியேறி, தீவிரமாக வேலை தேடுகிறார்.
அவருக்கு எதிர் வீட்டில் கதிர் (விஜய் சேதுபதி) என்ற நல்ல மனம் படைத்த ரவுடி வசிக்கிறார். பார் உரிமையாளர் ஆக வேண்டும் என்பது கதிரின் கனவு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது. அந்த நட்பு காதலாக மாறியதா? இருவரின் கனவுகளும் நிறைவேறியதா என்பதுதான் ‘காதலும் கடந்துபோகும்’.
விஜய் சேதுபதி - நலன் குமரசாமி யின் ‘சிரிப்பு ரவுடி’ கூட்டணி இரண்டா வது முறையும் ரசிகர்களைக் கவர்ந் திருக்கிறது. கதாநாயகனின் வழக்கமான பிம்பத்தை உடைத்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பதில் நலன் வெற்றி பெற்றிருக்கிறார். நாள்தோறும் பார், ரவுடிகள், கட்ட பஞ்சாயத்து எனப் புழங்கிக்கொண்டிருந்தாலும் கதிர் அந்த வட்டத்துக்குள் பொருந்தாமல் நிற்பதை இயக்குநர் அழகாகக் காட்டிவிடுகிறார்.
மடோனாவுக்கும் விஜய் சேதுபதிக் கும் இடையில் உருவாகும் நெருக்கத்தை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பார் முதலாளி, அடியாட்கள், போலீஸ் என்ற வலைப்பின்னலையும் யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார். பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம், பொறியியலாளர்களின் பிரச்சினை ஆகியவற்றையும் திரைக்கதைக்குள் இயல்பாகப் பொருத்திவிடுகிறார்.
படத்தில் நிறைய ஒருவரி வசனங் கள் சிரிக்கவைக்கின்றன. ஆனால், திரைக் கதை எந்தப் பெரிய திருப்பமும் இல்லாமல் நிதானமாக நகர்கிறது. சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிடுகிறது. வலு வான நெருக்கடி எதுவும் திரைக்கதையில் உருப்பெறவில்லை. எனவே முடிவை நோக்கிய பயணம் மந்தமாகவே உள்ளது. பார்வையாளர்கள் இணைந்து பயணிப் பதற்கான அம்சம் திரைக்கதையில் இல்லாதது ஒரு குறை. நேர்காணலின் போது யாழினிக்காக கதிர் ஏற்படுத்தும் குழப்பங்கள் சிரிப்பை வரவழைத்தாலும் துளிக்கூட நம்பகத்தன்மையோடு அது அமையவில்லை.
விஜய் சேதுபதியை ஒரே மாதிரியாக சிரிப்பு ரவுடி கதாபாத்திரத்தில் பார்ப்பது சற்று போரடித்தாலும், நடிப்பில் சில புதிய பரிமாணங்களையும் இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. மடோனாவின் அறிமுகக் காட்சிக்கே ரசிகர்களிடம் விசில் பறக்கிறது. தமிழில் முதல் படம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மடோனா. சமுத்திரக்கனி, கிரண், ஜி.எம். சுரேஷ் எனத் துணைக் கதாபாத்திரங்களின் தேர்வும் படத்துக்குப் பொருந்துகிறது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். ‘ககக ககக ககக போ’ பாடலுக்குத் திரையரங்கம் ஆர்ப்பரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் கேமரா படத்தை விஷுவல் டிரீட்டாக ஆக்கியிருக்கிறது.
விஜய் சேதுபதி, மடோனாவின் நடிப்பு, இயல்பான சித்தரிப்பு, நகைச்சுவை ஆகிய அம்சங்கள் படத்தின் பலம். பெரிதாக எதுவும் நிகழாமலேயே கடந்து போகும் திரைக்கதை படத்தின் பலவீனம்.
நன்றி - த இந்து