யாகம் காத்த எட்டு கரங்கள்!
காஞ்சி ஸ்ரீஆதிகேசவர் தரிசனம்
எட்டெழுத்து நாயகன், எட்டுத் திருக்கரங்களுடன் அருளாட்சி நடத்தும் அற்புதத் தலம், காஞ்சி- அஷ்டபுயகரம்; ஸ்ரீஆதிகேசவபெருமாள் குடியிருக்கும் திருக்கோயில்!
சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ளது காஞ்சிபுரம். இங்கே ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் மேற்கே பயணித்தால், அஷ்ட புயகரம் பெருமாள் ஆலயத்தை அடையலாம்.
வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இந்தத் தலத்தை திருமங்கையாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் மற்றும் ஸ்வாமி தேசிகன் ஆகியோர் பாடிப் போற்றியுள்ளனர்.
சோழர் கால கட்டுமானத்துடன் திகழும் ஆலயத்தில், சக்ராக்ருதி விமானத்தின் கீழ், எட்டுத் திருக்கரங்களுடன்... வலக்கரங்களில் முறையே சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும், இடக்கரங்களில் சங்கம், வில், கேடயம், கதை ஆகியவையும் திகழ, அருள்கோலம் காட்டும் ஸ்ரீஆதி கேசவரைத் தரிசிக்கக் கண்கோடி வேண்டும்.
சரி, எட்டுத் திருக்கரங்களுடன் இவர் அவதரித்தது ஏன்? 'நாடிக் கண்டுகொண்டேன்’ என, தம்மைத் தேடி ஓடி வரும் பக்தர்களுக்கு அருள, வரம் வாரி வழங்க இரண்டு கரங்கள் போதாதென்று, எட்டுத் திருக்கரங்களுடன் அவதாரம் செய்துவிட்டாரோ?! வேறு ஏதேனும் புராண காரணங்கள் உண்டா?! ஒருமுறை, யாகம் ஒன்று நடத்தத் திட்டமிட்டான் நான்முகன். காஞ்சியில் வேள்வி நடத்தினால், அது அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பாகும். எனவே, புனிதமிகு காஞ்சி யில் யாக காரியங்களை ஆரம்பித்தான்.
ஆனால், ஏற்கெனவே அவருடன் ஊடல் கொண்டிருந்த கலைவாணி, தன்னை அழைக்காமல் பிரம்மன் நிகழ்த்தும் யாகத்தை அழிக்க அரக்கர்களை ஏவினாள். பிரம்மன், பெருமாளைச் சரணடைந்தார். பெருமாளும் எட்டுத் திருக்கரங்களுடன் தோன்றி, அசுர வதம் நிகழ்த்தினார்; பிரம்மனின் யாகம் காக்கப்பட்டது. பிறகு, பிரம்மதேவன் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க, எட்டுக் கரத்தினராய் இங்கேயே கோயில் கொண்டாராம்.
அதுமட்டுமா? எதிர்த்து வந்த சரபேசனை பணியச் செய்து, பயம் நீக்கி, யாகசாலையின் வாயுமூலையை பாதுகாக்கப் பணித்ததும், கஜேந்திரனுக்கு திருவருள் புரிந்ததும் இங்குதான். இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்த பேயாழ்வார்...
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித் தெறித்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித் தெறித்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு
- எனப் போற்றுகிறார்!
தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேலு மங்கை தாயார். ஸ்ரீஆண்டாள், கருடாழ் வார் ஆகியோரையும் இங்கே தரிசிக்க லாம். சனிக்கிழமைகளில் அஷ்டபுயகரத் தான் கோயிலுக்குச் சென்று வழிபட, நம் பிரச்னைகள் யாவும் தீரும் என்கிறார்கள்.
நாமும் ஒருமுறை, நகரேஷு காஞ்சி என்று புராணங்கள் போற்றிக் கொண்டாடும் காஞ்சிபுரத்துக்குச் சென்று, அஷ்டபுயகரத்தானை ஸ்ரீஆதிகேசவனை வழிபட்டு வருவோம். நம் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் செழிக்கும்!
கண்ணனூர் கண்ணபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். மூலவர் திருநாமம் ஸ்ரீநீலமேகப் பெருமாள்; கிழக்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் பிரயோகச் சக்கரத்துடன் திகழ்வது விசேஷ அம்சம். தாயார் திருநாமம் ஸ்ரீகண்ணபுர நாயகி. உற்ஸவர் ஸ்ரீசௌரிராஜ பெரு மாளும் வரப்பிரசாதியே! அர்ச்சகர் ஒருவர், சோழ அரசனிடம்... பெருமாளுக்குக் கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களிக்க, பெரு மாளும் திருமுடியில் கேசத்துடன் திருக்காட்சி தந்ததால் ஸ்ரீசௌரிராஜன் என்ற திருப்பெயர் வந்ததாம். பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? ஏழு வகை புண்ணியங்களுடன் திகழ்கிறதாம்! அதாவது, ஸ்ரீகிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், தண்டகவனம், காவிரி நதி, கடல், கண்ணபுர நகர், நித்திய புஷ்கரணி, உத்பலாவதக விமானம் ஆகிய ஏழு வகை புண்ணியங்கள் திருக்கண்ண புரத்துக்கு உண்டு. ஆக இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு இந்த திவ்ய தேசத்துக்கு. அஷ்ட சுயம்பு திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் எம்பெருமான், திருமந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமாக எழுந்தருளியிருக்கிறாராம். ஆனால் இந்தத் தலத்தில், எட்டெழுத்தின் முழு வடிவினராக எழுந்தருள்கிறாராம். இதை இறைவனே கூறியதாக விவரிக்கிறது தல புராணம். நாகப்பட்டினம்- நன்னிலம் சாலையில் உள்ள திருப் புகலூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். குடும்பத்துடன் இந்தத் தலத்துக்குச் சென்று எட்டெழுத்துநாயகனை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டமெல்லாம் பறந்துபோகும். |