Showing posts with label காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி. Show all posts
Showing posts with label காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி. Show all posts

Saturday, October 03, 2015

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி

2007  நவம்பர் 17 சனிக்கிழமை காலை 11 மணி… மளிகை கடை, ஹோட்டல், சிறுவியாபாரம் என வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது செங்கல்பட்டு நகரம். திடீரென, ‘கொரங்கு குமாரை போட்டுட்டாங்க…’ என்ற ஒற்றைவரி செய்தி மளமளவென காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. ‘குமாரை வெட்டிட்டாங்களா!?’ ‘எந்த ஏரியாவுல வெட்டினாங்க?’ ‘ஆளு பொழச்சுட்டாரா?’ பொதுமக்களின் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முழுமையாக விடை தெரியவே ஓரிரு மணி நேரமானது. 

ஆனால் அதற்குள் ஒரு த்ரில்லர் சினிமாவின் காட்சிகள் போல அனைத்து கடைகளிலும் மளமளவென ஷட்டர்கள் இழுத்து சாத்தப்பட்டன. ஹோட்டல்களில் கொதித்துக் கொண்டிருந்த அரிசியை வடிக்கக்கூட முடியாமல், அடுப்புகள் அணைக்கப்பட்டன.

நகரெங்கும் ஆங்காங்கே குழுமியிருந்த கூட்டம் முணுமுணுத்தபடி மெல்ல கரையத் தொடங்குகின்றது. மதியத்துக்கு மேல் செங்கல்பட்டு நகரத்திற்குள் பேருந்து வரவு படிப்படியாக குறைந்தது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் தென்படவில்லை. பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளை வீட்டுக்குப் பத்திரமாக அழைத்து வர பெற்றோர்கள் அங்கும் இங்குமாக பதற்றத்துடன் அலைந்து கொண்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிகள், வஜ்ரா வாகனம் என மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவலர்களை செங்கல்பட்டில் குவித்தார் எஸ்.பி. பெரியய்யா. 

ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல் இருந்தது செங்கல்பட்டு. அந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று யாராவது ஒரு ரௌடி கொல்லப்பட்டால்கூட ‘குமார் இருந்தா இப்படி நடக்குமா?’ என்று சொல்வார்கள். 

யார் இந்த குமார்?

செங்கல்பட்டின் ரியல் டான் குமார். ‘குரங்கு’ என்ற அடைமொழியோடு சேர்த்து ‘குரங்கு’ குமார் என்றுதான் சொல்வார்கள். ‘குரங்கு’ குமாரை தமிழகத்தில் தெரியாத விஐபிக்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழக அளவில் குமாருக்கு செல்வாக்கு உண்டு. ‘குமார் அண்ணன் சொன்னார்’ என்று சொன்னால் போதும்... செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு அலுவலகம், கல்லூரி, தாலுகா அலுவலகம், நகராட்சி என எந்த வேலையானாலும் உடனடியாக முடிந்துவிடும். குமார் கை நீட்டி சொல்பவர்கள்தான் செங்கல்பட்டு நகரமன்றத் தலைவர். நல்லது கெட்டது எதுவானாலும் குமார் பெயர் அடிபடாமல் நிகழ்ந்ததில்லை. ஒரு டானுக்கே உண்டான கெத்து குமாருக்கு உண்டு. 

செங்கல்பட்டு நகரின் முக்கிய திருவிழா தசரா. மைசூர் தசராவுக்கு அடுத்து பழமை வாய்ந்த தசரா செங்கல்பட்டு தசரா. தசரா நடக்கும் பதினைந்து நாட்களிலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் கலந்துகொள்வார்கள். இளைஞர்களின் வீரத்தையும், பலத்தையும் நிரூபிக்கும் விதமாக தசராவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் சிலம்பாட்டம், மோடி வித்தை போன்ற போட்டிகள் நடைபெறும்.

முப்பது வருடங்களுக்கு முன்பு குமாரின் பெரிய அண்ணன் தாஸ் என்பவர் கோலோச்சி வந்தார். அவருக்குப் பின் குமாரின் சின்ன அண்ணன் ‘பொட்டிக்கடை’ சேகர் அந்த இடத்தைக் கைப்பற்றினார். அண்ணன் கெத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏரியாவில் கெத்தாக வலம் வரத்தொடங்கினான் குமார். 

ராமபாளையம், குண்டூர், மார்க்கெட் இந்த மூன்று பகுதிகள்தான் தசராவில் நடக்கும் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும். அனல் பறக்கும் இந்த போட்டிகளில் மார்க்கெட் பகுதி சார்பாக சண்டைகளில் கலந்துகொண்டு அண்ணன் இடத்தைக் கைப்பற்றினார் குமார். அப்போது இருந்துதான் குமார் ஏரியாவுக்குத் தெரிய ஆரம்பித்தான். மார்க்கெட் மட்டுமல்லாது நகரம் முழுக்கவே குமாருக்கு நட்பு வட்டாரம் விரிவடையத் தொடங்கியது.

ஏரியா பிரச்னைகளில் ‘கொரங்கு’ குமார் குரூப் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்த நிலையில் மக்கான் சந்துப்பகுதியில் ரவி என்பவர் கொலைசெய்யப்பட்டபோது முதன்முறையாக குமார் பெயரும் அதில் அடிப்பட்டது. சண்டையின்போது குரங்குபோல் எதிரிகளை அடித்து புரண்டி எடுத்துவிடுவான் குமார். போலீஸ் பிடிக்க வந்தால்கூட குரங்கு மாதிரி காட்டுக்குள் ஓடிவிடுவான் குமார். ரேடியோ மலைப்பகுதியில் குட்டி குரங்குகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பான் குமார். ‘யார்ரா குமார்?’ என்று கேட்பவர்களுக்கு, ‘குரங்கு வெச்சிகிட்டு விளையாடுவானே சேகர் தம்பி, அவன்தான் கொரங்கு குமார்’ என்று சொல்வார்கள். 

எந்த சண்டையில் யார் மண்டை உடைந்தாலும் குமார் பெயர்தான் ஒலிக்கும். வீட்டை காலி பண்ணணும், கட்டப்பஞ்சாயத்து என எதுவானாலும் குமாரை அழைக்கத் தொடங்கினார்கள். பிறகு அண்ணனின் சாராயத் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்தான் குமார். சந்தனக்கட்டை வியாபாரம், போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்துதல் என தொழிலை விரிவுப்படுத்திக்கொண்டே சென்றான் குமார். 

இதனால் ஆந்திரா, கர்நாடகா என சுற்றுவட்டார மாநில அளவில் உள்ளவர்களோடு அவனது நட்பு விரி வடையத் தொடங்கியது. தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும் குமாரோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கத் தொடங்கினான் குமார். பினாமிக்கள் பெயரில் சொத்துக்கள் வாங்க ஆரம்பித்தான். தனது வீட்டின் அருகே வசிக்கும் அரிசி வியாபாரியின் பெண் லதா என்பவரை கடத்தி திருமணம் செய்து கொண்டான் குமார். ஒரு மகள், மூன்று மகன் என தனக்கு பிறந்த குழந்தைகள் தனது ரௌடித்தனத்தை பார்க்கக் கூடாது என வெளியூர்களில் தங்கவைத்து படிக்க வைத்தான் குமார்.

எல்லாவற்றையும் நிறுத்தணும்!

அதிமுக கட்சி தொடங்கி காலத்திலிருந்தே செங்கல்பட்டு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் ஆதிகேசவன். அவர் கொலையில் முதல் குற்றவாளி குமார். குமார் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கத் தொடங்கியது செங்கல்பட்டு. அப்போதைய எஸ்பி சைலேந்திர பாபுவுக்கு குமாரை என்கவுன்ட்டர் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் ‘நான் ரௌடி தொழிலை விட்டு விடுகிறேன். என்னால் இனி யாருக்கும் பிரச்னை இருக்காது.’ என எழுதிக் கொடுத்துவிட்டு வந்தான் குமார். ரௌடித்தொழிலுக்கு லீவு கொடுத்துவிட்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. கெத்தாக வலம் வர முடியாமல் தவித்த அவனுக்கு அரசியல் அதிகாரங்களை பார்த்து அரசியல் ஆசை மெல்ல துளிர்விட ஆரம்பித்தது. 

அதிகாரத்திலிருந்த தன் பழைய சகாக்கள் மூலம் மக்கான் சந்துப்பகுதியில் கவுன்சிலரானார் குமார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் பதவி கைக்கூடியது. செங்கல்பட்டு அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. அமைச்சர்கள் நண்பர்கள் ஆனார்கள். கீழ்மட்ட தொழில்களை விட்டுவிட்டு ஒயிட் காலர் வேலைகளை மட்டுமே செய்துவந்தார் குமாருக்கு. எப்படியாவது ஒரு எம்எல்ஏ-வாக ஆகி விட வேண்டும் என்பது கனவாக இருந்தது. மனதில் அந்த ஆசையை வரித்துக்கொண்டு அதற்காக 'வேலை' செய்யத்துவங்கியிருந்தார் அவர். 

மக்கள் விரும்பிய மறுபக்கம்!

குமார் மற்றொரு முகம் மிகவும் சுவாரஸ்யமானது. யாருக்கு படிக்க பணம் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பணம் கொடுக்கும் வள்ளல் குமார். சுற்றுவட்டாரத்தில் படிக்க காசில்லை என்றால் குமார் வீட்டு கதவைத்தான் தட்டுவார்கள். படிக்கும் வயதில் யாரும் ஊரில் சுற்றி திரிய முடியாது. உடனே அழைத்து விசாரித்து படிக்க தேவையானவற்றை செய்து கொடுப்பார். கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை என்று குமாரிடம் சொன்னால் போதும் அவர்களுக்கு சீட் நிச்சயம். படித்த தகுதிக்கேற்ப வேலை வாங்கி கொடுப்பார். வறுமையால் கிழிந்த சட்டை அணிந்து தெருவில் நடந்தால் குமாருக்குப் பிடிக்காது. அடுத்த சில நிமிடங்களில் புது சட்டையோடுதான் செல்வார்கள்.

யாராவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பொறுப்புள்ள பொது ஜனங்கள்கூட கண்டு கொள்ளாமல் போய்விடுகிற காலம் இது. தனது ஏரியாவில் ரோட்டில் அடிபட்டு கிடந்ததைப் பார்த்தால் முதலில் மருத்துவமனைக்கு சென்று சேர்க்க சொல்வார் குமார். ரவுடிகள் என்று யாரும் மாமூல் வசூலிக்க முடியாது. இதனால் சிறுசிறு ரவுடிகள் அடங்கி ஒடுங்கி நடக்க ஆரம்பித்தார்கள். யாருக்கு எந்த பிரச்னையானாலும் குமார் வீட்டு கதவை தட்டினால் தீர்ந்துவிடும். 

அடுத்தவர்களின் பிரச்னைகளை தீர்த்துவைக்கும் மக்கள் நாயகனாக வலம் வரம்வரத் தொடங்கினார் குமார். வேட்டையாடுவது என்றால் குமாருக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கொடுப்பார் குமார். 

திருவிழாவை மிஞ்சிய திருமணம்

குமாரின் மகள் திருமணம் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்றது. கல்யாணத்துக்கு ஒரு மண்டபம் என்றால், விருந்து உபசரிப்புக்கு கூடுதலாக இரண்டு மண்டபம். யானைப்படை மற்றும் குதிரைப்படையின் அணிவகுக்க, அதைத் தொடர்ந்து மணமக்கள் தேரில் பவனி வர, சாலையெங்கும் விழாக் கோலம். மக்கள் வெள்ளத்தால் சாலைகள் திணறியது. பேருந்துகள் நகருக்குள் நுழையாமல் திருப்பி விடப்பட்டன. அமைச்சர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என விஐபி பட்டாளம் செங்கல்பட்டில் குவிந்ததால் குமாரின் செல்வாக்கு நகரையே புருவம் உயர்த்த செய்தது. 

இதுதான்டா வாழ்க்கை!

கத்தியை கீழே போட்டுவிட்டு கதர் சட்டை அணிந்துகொண்டு அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் குமாருக்கு குடைச்சல்கள் இல்லாமல் இல்லை. பழைய விவகாரங்கள் பலமுறை கொலையாவதில் இருந்து தப்பியிருக்கிறார். குமாரால் பாதிக்கப்பட்டவர்கள், செல்வாக்கை இழந்தவர்கள், ஏரியாக்களில் கோலோச்ச முடியாதவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத் தொடங்கியது. ரவிப்பிரகாஷ் என்பவனிடம் இருந்து நேரடியாகவே கொலை மிரட்டல்களும் வரத்தொடங்கியது. ‘உன் பசங்களை தூக்கிடுவேன்’ என்ற வார்த்தைகள் குமாரை நொறுக்கிவிட்டது. இதனால் நிம்மதியை இழக்கத் தொடங்கினார் குமார். 

ஒருநாள் காலையில் தனது ஏரியாவில் அமர்ந்திருந்தார் குமார். வழக்கம் போல ரயிலைப் பிடிக்க, வேகமாக ஓடிக்கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். பக்கத்தில் உள்ள தனது நண்பர்களைப் பார்த்து, “ஏவ்வளவு ஜாலியா போறாங்க பாருடா! இதுதாண்டா வாழ்க்கை! சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு தனியாக போகிறான். யாருக்கும் அஞ்சி வாழணும்னு அவனுக்கு அவசியம் இல்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா ராத்திரி தூங்குறான். பணம் காசு மட்டுமே வாழ்க்கை இல்லடா. நிம்மதி வேணும்'' என்கிறார். அந்த அளவுக்கு அவரை நிம்மதி இழக்க செய்திருந்தன அவரைச் சுற்றி நடந்த சம்பவங்கள். 

சரிந்தது குமார் ராஜ்ஜியம்

தனது கார் டிரைவர் இன்பராஜ் என்பவனின் வழக்கு ஒன்றுக்காக சாட்சியிடம் சமாதானம் பேசுவதற்காகக் கிளம்பி சென்று கொண்டிருந்தார் குமார். அப்போது வண்டி ஒரு முட்டுச்சந்தை அடைந்ததும் திடீரென குமாரின் காரை சூழ்ந்தது சுமார் 50 பேர் கொண்ட ரவுடி பட்டாளம். கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டுச் செல்ல, அந்த இடத்திலேயே வெட்டி சாய்க்கப்பட்டார் குமார். கூலிப்படைக் கூட்டம் குமாரின் தலையைச் சிதைத்தது. சனிப் பிணம் தனியா போகாது என்பதுபோல நண்பன் ஆறுமுகமும் குமாருடன் சிதைக்கப்பட்டான்.

தலையைச் சிதைக்கும் கலாசாரம் செங்கல்பட்டுக்கு அன்றுதான் அறிமுகமானது. குமார் கொலையான சம்பவத்தைக் கேட்டு செங்கல்பட்டு நகரமே திரண்டது. ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கட்சி சார்பாக மரியாதை செலுத்திவிட்டு போனார்கள். குமாரின் நட்பு வட்டாரம் முழுக்க செங்கல் பட்டில் குவிந்ததால், இரண்டு நாட்கள் பதற்றமாகவே இருந்தது செங்கல்பட்டு. ஊரே வியக்க நடத்திய திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் குமாரின் மருமகன் ஹார்ட் அட்டாக்கில் இறக்க அந்த அதிர்ச்சியில் குமாரின் மகளும் துக்கம் தாளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இருக்கும் இடம் தெரியாமல் குலைந்து போனது குமாரின் குடும்பம். 

கூட்டாளிகள் பெயரில் பினாமியாக வாங்கிய சொத்துக்களையும் அவரவர்களே எடுத்துக்கொண்டார்கள். குமார் கொலையான சில தினங்களில் அந்த கொலையை செய்ததாக ரவிப்பிரகாஷ் என்பவன் கைது செய்யப்பட்டான். குமார் வகிக்கும் நகரமன்றத் துணைத்தலைவர் பதவியை வகிக்க வேண்டும். செங்கல்பட்டில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற ரவிப்பிரகாஷின் ஆசைதான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்றது போலீஸ்.

குமார் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ரவிப்பிரகாஷின் ஆசை நிறைவேறியதா?

- அருவா சீவும்..
- பா.ஜெயவேல்

thanx-vigatan