Showing posts with label காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 4). Show all posts
Showing posts with label காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 4). Show all posts

Saturday, October 03, 2015

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 4)

வெடிகுண்டு பிரதேசம் ஸ்ரீபெரும்புதூர்.....


1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய பிரதமர் ஒருவர், ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டால் சிதைக்கப்பட்ட அந்த சம்பவம் நடந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. உலகையே உலுக்கியெடுத்த அந்த சம்பவத்தில் 14 உயிர்கள் பலியாகின. தேசியத் தலைவருக்கு ஆர்டிஎக்ஸ் என்றால், பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாஸ்பரஸ் குண்டு போதாதா? 



ராஜீவ் மரணத்திற்குப்பின் ஸ்ரீபெரும்புதூரில் அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொழில் நகரமாக உருவெடுத்தபிறகு நோக்கியா, ஹுண்டாய், ஃபாக்ஸ்கார்ன், செயின்ட்கோபெயின், நிசான் என பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு அதிகரித்தது. அதே வேகத்தில் அங்கு ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தொழில் போட்டி அதிகரிக்க, வன்மமும் அதிகரிக்க தொடங்கியது. 



இதை அடிப்படையாக வைத்துதான் இந்தப்பகுதியில் குற்றங்கள் நடக்கும். 2012-ல் நடந்த கொலைகளுக்கு காரணம் தொழில் போட்டிதான். தொடர் வெடிகுண்டு சம்பவங்களால் நிலை குலைந்தது ஸ்ரீபெரும்புதூர்.  


குறிவைக்கப்பட்ட குமரன்



ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் பிபிஜி குமரன் என்ற நபரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்தவன் குமரன். சிறுவயதிலிருந்தே சாரயம்தான் தொழில். குடும்பத் தொழிலும் அதுதான். புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் என கட்சிமாறினாலும் கட்டப்பஞ்சாயத்து முதன்மை தொழில். நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருக்கும் கம்பெனிகளில் ஸ்கிராப் தொழில் செய்ய ஆரம்பித்தான். பசை பலம் மிக்க இந்த தொழிலோடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான மண், மணல் உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக சப்ளை செய்துவந்தான். 



கோடிக்கணக்கில் பணம் புரள ஆரம்பித்தது. சாராயம் காய்ச்சி விற்றவன், பல நூறு கோடிக்கு சொத்துக்களுக்கு  அதிபதி ஆனான். சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் அரசியல் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும் என நம்பினான். ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவான மொளச்சூர் பெருமாள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரன். குமரன் மீது போயஸ் கார்டனில் புகார்கள் குவிய, கட்சியை விட்டே கட்டம் கட்டினார்கள் ஒரு கட்டத்தில். 



2011 உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட குமரனால் ஒன்றிய பதவியை கைப்பற்ற முடியவில்லை. அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன் வெற்றி பெற்றார். தேர்தலில் குமரனை வீழ்த்திய வேகத்தோடு பன்னாட்டு நிறுவனங்களுக்கு படையெடுத்தார் வெங்கடேசன். கதவை தட்டிய இடமெல்லாம் கைவிரித்தார்கள். தேர்தலில் வெற்றிபெற்றும் பலனில்லை. குமரனை கூறுபோட நினைத்தான் வெங்கடேசன்.



குமரனுக்கு குறி வைப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. குமரனின் அப்போதைய பிரம்மாண்டம் அப்படி. குறி தவறினால் எய்தவனிடமே அம்பு திரும்பிவிடும் அபாயம். குமரன் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை எப்போதும் வைத்திருப்பான். போதாக்குறைக்கு எப்போதும் அவனுடன் அடியாட்கள் இருப்பார்கள். ஒரே மாதிரியான இரண்டு டொயாட்டோ கார் வைத்திருந்தான். கிட்டத்தட்ட ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணும் ஒரே மாதிரிதான் இருக்கும். எந்த காரில் குமரன் இருக்கின்றான் என்று கண்டுபிடிப்பது சிரமம். 



தீவிர யோசனைக்குப்பின் திட்டம் வகுக்கப்பட்டது. ஒரே அட்டாக்கில் குமரனை வீழ்த்த வேண்டும் என்பது கூலிப்படைக்கு கொடுத்த அசைன்மென்ட். அதற்கு கூலிப்படை எடுத்துக் கொண்ட ஆயுதம் நாட்டு வெடிகுண்டு. இதற்காக தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் கும்பலும் கூலிப்படையுடன் இணைந்தன.

அக்டோபர் 1ம் தேதி குமரனுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ அலுவலகம் அருகே குமரன் சென்ற டொயாடோ கார்மீது தொடர்ந்து வெடிகுண்டு வீசி நிலைகுலையச்செய்தது கூலிப்படை. இதனால் கார், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. வழக்கம் போல கூலிப்படையின் வீச்சரிவாள் விளையாடியது. சில நிமிடங்களில் குமரன் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அன்று மாலையே எழும்பூர் நீதிமன்றத்தில் மூவர் சரணடைந்தனர். அந்த கொலையில் தொடர்புடைய மதுரை, ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் உள்ள கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டனர்.


‘கொலை செய்யப்பட்ட குமரன் மீது 2  கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, மற்றும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என வழக்குகள் ஏராளம்.’ என அறிக்கை வாசித்தார் எஸ்.பி. மனோகரன். 


ஏன் வெடிகுண்டு?



குமரன் கொலைக்குப்பின் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்ந்தது. மதுரை, சிவகாசி போன்ற பகுதிகளில் இருந்து இங்கே வரும் கூலிப்படையினருக்கு வெடிகுண்டு செய்வதெல்லாம் சாதாரணம். பூண்டு பட்டாசை டெவலப் செய்து, அதில் அதிக அளவு பாஸ்பரஸ், இரும்பு துகள்களை கலந்து விடுவார்கள். குண்டுகள் வெடிப்பதால் அதில் உள்ள இரும்பு துகள்கள் எதிரியை துளைத்து நிலைகுலையச் செய்துவிடும். ஆனால் உயிருக்கு ஆபத்து இருக்காது. அந்த அதிர்ச்சியில் இருந்து எதிரி மீள்வதற்குள் அதிரடியாக தாக்கிவிடலாம்.

மீண்டும் ஒரு வெடிகுண்டு!


குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர். திமுக கிளைக்கழக செயலாளரான இவர், அப்பகுதியில் கல்குவாரி தொழில் நடத்தி வந்தார். கல்குவாரி நடத்தும் பொறுப்பை தம்பி வாசுவிடம் விட்டுவிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அவரது உறவினரான ஆனந்தன் தோல்வியை தழுவ, இருவருக்கும் பகை முற்றியது. வெளியூரில் இருந்து கொண்டே குடைச்சல் கொடுத்தான் ஆனந்தன். அதிகார பலத்தை பயன்படுத்தி ஆனந்தனின் சொத்துக்களை சங்கர் அபகரித்தான். இதை விட ஒரு கொலைக்கு காரணம் வேண்டுமா என்ன?



இந்த நிலையில் நவம்பர் 29ம் தேதி சங்கரின் தம்பி வாசு, அண்ணனுக்கு சொந்தமான காரில் மாவட்ட ஆட்சியரின் பங்களாவிற்கு சென்று கனிமவளத்துறை அதிகாரிகளை சந்தித்தான். இரவு எட்டு மணிக்கு மாவட்ட ஆட்சியர் பங்களாவில் இருந்து கிளம்பிய காரில், கனிமவளத்துறை அதிகாரிகளும் வாசுவுடன் வந்தனர். 



ஸ்ரீபெரும்புதூர் அருகே கரசங்கால் சாலையில் காரை மறித்து, முன்னும் பின்னும் தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியது மர்ம கும்பல். காருக்குள் சங்கரை தேட சங்கர் இல்லை என்பதாலும், வாகனங்கள் தொடர்ந்து வந்ததாலும் கூலிப்படையினர் ஏமாற்றத்தோடு ஓடினார்கள். ஆனாலும் டிரைவர் கார்த்திகேயன் அந்த சம்பவத்தில் பலியானார்.

சங்கருக்கு வைத்த குறி தவறியது. சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், சிலமணிநேரத்தில் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அதிகாரிகள் அந்த காரில் இருந்ததும், அந்த காரில் இருந்த கோப்புகள் யார் கையிலும் சிக்கக்கூடாது என்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்ததும் அப்போது சர்ச்சையை கிளப்பியது. 



வெடிகுண்டுக்கு இரையான சங்கர்!


அந்த சம்பவங்களுக்கு பிறகு, "வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்… பாதுகாப்பாக இருங்கள்…!" என காவல்துறையினர் சங்கரை எச்சரித்தனர். இதனால் வாடகை காரில் மட்டுமே சங்கர் பயணம் செய்தான். லைசன்ஸ் துப்பாக்கியையும் உடன் வைத்துக் கொண்டான் சங்கர். துப்பாக்கி இருப்பதால் காவல்துறையினர் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி அடிக்கடி பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தான். ஏற்கனவே நடந்த கொலை முயற்சி சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் 2013 ஜனவரியில் முடிச்சூர்-மணிமங்கலம் சாலையில் வாசுவுடன் காரில் சென்று கொண்டிருந்தான் சங்கர்.

அந்த காரை மறித்த கூலிப்படையினர், வெடிகுண்டுகளை வீச நிலைகுலைந்தது நின்றது கார். இந்த முறை சங்கர் தப்பிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தது கூலிப்படை. தம்பி எதிரிலேயே, காரில் இருந்த சங்கரை வெளியே இழுத்து தள்ளி, வெட்டிச்சாய்தார்கள். 


அதே நேரத்தில் செங்கல்பட்டு தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், திருக்கழுக்குன்றம் அதிமுக பிரமுகர் குள்ள கோபால் என அரசியல் தலைகள் மளமளவென சரிந்தன. 2012-ம் ஆண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கொலைகள் காஞ்சிபுரம் வட்டாரத்தில் நடந்தன. இதில் நான்கில் ஒருபங்கு அரசியல் சார்ந்தவை. அரசியல் அதிர்வலையை உண்டாக்கிய சில கொலைகளை மட்டுமே பார்த்தோம்.



மரணத்தை விட அதிபயங்கரமானது மரண பயம்!  2013ம் வருடம் தொடங்கியது அப்படித்தான்! 



அரிவாள் பேசும்…



-பா.ஜெயவேல்


thanx-vigatan