Showing posts with label காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 2). Show all posts
Showing posts with label காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 2). Show all posts

Saturday, October 03, 2015

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 2)

2012 ஜனவரி 7-ம் தேதி... ஸ்டாலின்  கலந்துகொள்ள இருந்த அண்ணாவின் 103-வது ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள், செங்கல்பட்டில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான த.மோ.அன்பரசன் விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக செங்கல்பட்டு வந்திருந்தார். விழா ஏற்பாடுகளை கவனிக்கும் முழுப்பொறுப்பும் ரவிப்பிரகாஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஆம்! ‘குரங்கு’ குமார் கொலைவழக்கில் கைதான அதே ரவிப் பிரகாஷ்தான் அவர். அன்றைய தினத்தில் அவர் செங்கல்பட்டு நகரமன்றத்தின் துணைத்தலைவர். பெரிய தலையை வீழ்த்தினால் சினிமாவில் என்ன நடக்கும்? அதுபோல்தான் ரவிப்பிரகாஷ் பொதுவாழ்க்கையும் தொடங்கியிருந்தது.

விழாவின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்து, தளபதியிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்ற துடிப்புடன் ஓடியாடிக்கொண்டிருந்தார் ரவிப்பிரகாஷ் பரபரப்புடன்.

விழாவில் ரவிப்பிரகாஷைப்பற்றி ஸ்டாலின் என்ன பேசினார்? 

அதற்குமுன் ரவிப்பிரகாஷ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருக்கச்சூரைச் சேர்ந்த பூபதி என்ற ரயில்வே ஊழியரின் மகனான ரவிப்பிரகாஷ், செங்கல்பட்டு பள்ளியில் படித்துவந்தான். செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரின் சித்தப்பா மகன் பார்த்திபனுக்கும் ரவிப்பிரகாஷுக்கும் ஏழாம் பொருத்தம். ரவிப்பிரகாஷ் சிக்கினால் போதும், தலையில் அடிப்பது, கொட்டுவது என துவைத்து எடுத்துவிடுவான் பார்த்திபன்.

பள்ளிப்படிப்பு முடிந்தும் இது தொடர்ந்தது. ஒருகட்டத்தில் ரவிப்பிரகாஷால் இதை பொறுக்க முடியவில்லை. கோபத்தின் உச்சகட்டத்தில் ஒருநாள் பார்த்திபனை தீர்த்துக் கட்டினான் ரவிப்பிரகாஷ். ஆத்திரத்தில் 'செய்து'விட்டாலும் குமாரின் ஆட்கள் தன்னை கொலை செய்யக் கூடும் என்று அஞ்சினான். இதனால் செங்கல்பட்டு வருவதை பெரும்பாலும் தவிர்த்தான். அதைத் தொடர்ந்து ஊருக்கு வெளியில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் என வாழ்க்கை திசைமாறி ஓடிக்கொண்டிருந்தது. ஒருபக்கம் ரவிப்பிரகாஷ் மீது புகார்களும் காவல்துறையில் குவிந்துகொண்டிருந்து.

குமார் இருக்கும் வரை தன்னால் செங்கல்பட்டு நகரத்துக்கு வரமுடியாது என்று உணர்ந்தான். இது அவனுக்கு  கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. குமார் போன்று அதிகார பலம் பெற்றால் தனக்கு பாதுகாப்பு என்ற எண்ணம் அவனுக்குள் விழுந்தது. தானும் நகரமன்ற துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று துடித்தான். செங்கல்பட்டு நகருக்கு உள்ளே வர நினைத்தபோதெல்லாம் குரங்கு குமார் தடையாகவே இருந்தார்.
டானை சாய்ப்பவனும் டான்தான்!

வேறு வழியின்றி குமாரைத் தீர்த்துகட்ட முடிவெடுத்த ரவிப்பிரகாஷ், போனில் மிரட்டல் விடுக்கத் தொடங்கினான். 2007-ம் ஆண்டு செங்கல்பட்டு அதிமுக நகரமன்றத் துணைத்தலைவர் குரங்கு குமாரை வெட்டிச்சாய்த்தான் ரவிப்பிரகாஷ். குரங்கு குமார் கொலை செய்யப்படுவதற்கு முன்புவரை, ரவிப்பிரகாஷ் என்னும் நபர் செங்கல்பட்டு நகரத்துக்கு பெரிய அறிமுகம் கிடையாது.

ஒரே கொலை… உச்சத்துக்கு வந்துவிட்டான் ரவிப்பிரகாஷ். செங்கல்பட்டின் அன்டர்கிரவுண்ட் பிசினஸ் எல்லாம் சைலன்டாக ரவிப்பிரகாஷ் பிடியில் வந்தது. குமார் கொலை செய்யப்பட்டதில் திமுக தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சி எனலாம். 2006-ம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. ஆனாலும் நகரமன்றத் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியவில்லை. அதிமுகவின் குமார் நகரமன்றத் துணைத்தலைவரானார்.
இதனால் அப்போதைய அமைச்சர் அன்பரசன் மீது திமுக மேலிடம் அதிருப்தியாக இருந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதும் குமாரை ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்த திமுகவுக்கு ரவிப்பிரகாஷ் துருப்புச் சீட்டு. நகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது திமுகவின் ஆசை. அதே ஆசை ரவிப்பிரகாஷ்க்கும் இருந்தது. குமார் கொலையில் ஜாமீனில் வெளியே வந்த ரவிப்பிரகாஷைக் கண்டு செங்கல்பட்டு மிரள ஆரம்பித்தது. அவன் மீது புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள்.

அரசியல் அடைக்கலம்!


அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான அன்பரசனுடன் நெருக்கமானான் ரவிப்பிரகாஷ். அன்பரசு கலந்துகொண்ட விழாக்களில் கூட்டத்தில் ஒருவனாக கலந்துகொள்ள ஆரம்பித்தான். பின்பு திமுகவில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு கொடியேற்றுவது, அன்னதானம் வழங்குவது, பேனர் வைப்பது போன்ற கட்சி நிகழ்சிகளை  நடத்திவந்தான்.  நகரமன்ற துணைத் தலைவராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்  கைதுசெய்யப்பட்ட ரவிப்பிரகாஷ், அரசியல் பலத்தால் ஜாமீனில் வெளியே வந்து கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தான். வெற்றியும் கண்டார். திமுகவின் சீனியர் புள்ளிகளை ஓரம்கட்டிவிட்டு, தான் நினைத்தது போலவே நகரமன்ற துணைத் தலைவரானார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் நகர துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார். தீபாவளியின்போது பதவி ஏற்றவர், ‘நரகாசூரனைக் கொன்ற நாளில் பதவிக்கு வந்திருக்கிறேன்’ என  நண்பர்களிடம் சொன்னார்.

உருகிய ஸ்டாலின்!

மீண்டும் ஸ்டாலின் கூட்டத்திற்கு வருவோம்...

2012-ம் வருடம் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் அண்ணாவின் 103-வது பிறந்த நாள், செங்கல்பட்டு நகரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் கொண்டாட ஏற்பாடு செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், மாவட்டச் செயலாளர் அன்பரசன் விழா நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கி தீவிரமாக ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விழா ஏற்பாடுகள் முழுக்க ரவிப்பிரகாஷ் முன்னிலையில் நடந்து கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே தா.மோ.அன்பரசன் உடன் ரவிப்பிரகாஷ், விழா நடக்கும் இடத்தில் இருந்தார். மதியம் இரண்டு மணிக்கு மேல், 'சாப்பிட போகலாமா?' என் அன்பரசன் கேட்க  ‘நண்பன் வரதன் கொக்குக்கறி செய்திருக்கிறான். அவனோடு சாப்பிட்டுவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு பைக்கில் சென்றார் ரவிப்பிரகாஷ். நத்தம் பகுதியில் கட்டிவரும் தனது புதிய வீட்டை பார்த்துவிட்டு, நண்பன் வரதனின் வீட்டு வாயிலில் காத்திருந்தார். திடீரென பொலீரோ காரில் வந்திறங்கியது ஒரு கும்பல். தலைதெறித்து ஓடிய ரவிப்பரகாஷ் தலை சிதைக்கப்பட்டது. அச்சு அசலாக குரங்கு குமார் போடப்பட்ட அதே பாணியில்.

தொடங்கியது கொலையுதிர்காலம்
!


சனிக்கிழமை தொடங்கிய அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார் ஸ்டாலின். மாணவர்களின் பேச்சுப் போட்டி முடிந்ததும், ''நீங்கள் பேசுவதை நான் கேட்பேன் என்பதற்காகவே கடினமாக உழைத்து பேச்சுப்போட்டிக்கு தயாராகி இருந்தீர்கள். ஆனால் நமது நகரமன்றத் துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதால், விழாவின் நடுவில் அவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றுவிட்டேன். கழக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த நகரமன்றத் தலைவர் ரவிப்பிரகாஷ் இன்று நம்மோடு இல்லை'' என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
கொல்லப்பட்ட ரவிப்பிரகாஷ் மீது 4 கொலைவழக்கு, 5 கொலைமுயற்சி, துப்பாக்கி வைத்திருந்ததாக இரண்டு வழக்குகள் உள்பட மொத்தம் 12 வழக்குகள் இருந்தது. 'ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில்தான் ரவிப்பிரகாஷ் கொல்லப்பட்டார்’ என்று வழக்கம்போல காவல்துறை சொன்னது.

அதைத்தொடர்ந்து குறுகிய காலத்தில் மளமளவென சரிந்தன தலைகள். செங்கல்பட்டுக்கு கொலையுதிர் காலம் தொடங்கியது.
அறுவா சீவும்...
- பா.ஜெயவேல்
thanx-vigatan