இணையத்தில் பிரபலமான குறும்படங்களில் ஒன்று ‘ஜீரோ கிலோமீட்டர்’. அதில், திருப்பூரில் கதவைத் திறக்கும் நாயகன் சென்னையில் இறங்கி நடக்கும் அதிசயம் நடக்கும். அந்தக் குறும்படத்தின் இயக்குநர் ரவிக்குமாருக்கு, கோடம்பாக்கம் தன் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்..
திருப்பூரில் நூல் விற்பனை செய்யும் சாதாரண குடும்பத்துப் பையன். பள்ளியில் படிக்கிறப்போ ‘கனவு’ என்ற அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் படங்களை ரசித்துப் பார்த்தேன். இதேமாதிரி நாமளும் குறும்படம் எடுக்கலாம்ணு தோணுச்சு.
10 நிமிடம் மட்டும் பேட்டரி நிற்கும் ஒரு வீடியோ கேமரா கிடைச்சது. அத வச்சு ‘லீவு’ன்னு ஒரு குறும்படம் பண்ணேன். அதுக்குக் கிடைச்ச கைதட்டல், பாராட்டுனால அதைவிட நல்ல படங்களை எடுக்க முடியும்ணு தோணுச்சு. அப்படித்தான் ‘ஜீரோ கிலோமீட்டர்’ குறும்படத்தை எடுத்தேன். அது என்னை சினிமா வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திடுச்சு.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?
‘முண்டாசுப்பட்டி’ பட இயக்குநர் ராம், பால்ய நண்பன். சிறுகதைகளும் நிறைய படிப்பேன். ஒரு சிறுகதையைத் தேர்வு செஞ்சு அதை எழுதின எழுத்தாளரிடம் அனுமதி வாங்கி, குறும்படமா எடுத்து நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். என்னோட படத்தைக் காத்திருப்பு பட்டியலில் வச்சுருந்தாங்க. ஆனா, ராம் படம் தேர்வாயிருச்சு. ராமோட நிகழ்ச்சியில பங்கேற்க சென்னை வந்தேன்.
அப்போ 32 படங்கள்தான் நாளைய இயக்குநர்ல திரையிடுவாங்க. என் படத்தைவிட மோசமா எடுத்த படங்களுக்கு திரையிடல்ல இடம் கிடைச்சிருந்தது. அதனால நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கிட்ட பேசினேன். கூடுதலா நான்கு படங்களைத் திரையிட்டாங்க. என்னோடதும் அதுல ஒண்ணு. அப்படியே இறுதிச் சுற்றுவரைக்கும் வந்தோம். என்னோட `ஜீரோ கிலோமீட்டர்’ படம் 3-வது இடத்தைப் பிடிச்சது. முதல் பரிசு கிடைக்கலேன்னாலும் அங்கே நலன் குமரசாமி நட்பு கிடைச்சது.
இடையில் `கனாக் காணும் காலங்கள்’ தொலைக்காட்சி தொடர் இயக்கியது நீங்கள்தானே?
ஆமாம். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியோட இறுதிச் சுற்றுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தார் இயக்குநர் பாண்டியராஜ். முதல் மூன்று இடங்களைப் பிடிச்ச யாராவது ஒருவரை உதவி இயக்குநரா சேர்த்துக்கிறதா சொல்லியிருந்தார். அவர் கிட்டப் பேசினேன். அவர் அடுத்த படத்துக்கு கூப்பிடுறதா சொன்னார். அப்போ நலன் குமரசாமி, `கனாக் காணும் காலங்கள்’ வாய்ப்பு இருக்கு போலாமான்னு கேட்டார். ஒப்புகிட்டேன்.
அதுல நான் இணை இயக்குநர். சில நாட்கள்லயே தனியா ஷூட் பண்ண ஆரம்பிச்சேன். நலன் தனியா ஷூட் பண்ணுவார். முதல் நாள் செஞ்ச தப்ப அடுத்த நாள் சரி பண்ணிக்குவோம். அப்புறம் நலன் தொடர்லேர்ந்து வெளியே போயிட்டாரு. நான் தனியா தொடர்ந்தேன். மாசம் முடிஞ்சா கணிசமான சம்பளம் கைக்கு வரும். அதனால் லகான் கட்டின குதிரை மாதிரி மண்டை முழுக்க எபிசோட்கள்தான் ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு கட்டத்துல எங்க இப்படியே தேங்கிருவோமோன்னு நெனச்சு, அங்க இருந்து வெளியே ஓடியாந்துட்டேன்.
வந்த உடனே வாய்ப்பு கிடைச்சதா?
அதுக்கும் நலன்தான் காரணம். அவர் `சூது கவ்வும்’ படம் பண்ணினப்போ அதுல நான் இணை இயக்குநர். அப்போ அந்தப் படத்தோட தயாரிப்பாளர் சி.வி. குமார் “உங்ககிட்ட கதை இருக்கா”ன்னு” கேட்டார். இருக்கு சார் ஒன்லைன்தான், டெவலப் பண்ணணும் அப்படின்னேன். அவர் “சீக்கிரமா ரெடி பண்ணுங்க”ன்னு உற்சாகப்படுத்தினார். அப்படி உருவான கதைதான் இது.
இது என்ன கதை?
டைம் மெஷின் மூலமா சுதந்திரப் போராட்ட காலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் செல்லும் விஷ்ணுவும் கருணாகரனும் அடிக்கும் லூட்டிகள்தான் கதை. ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார். இது ஹியூமர் ஃபேன்டஸி.
முதல் படத்திலேயே ஃபேன்டஸி கதையைக் கையாளுவது கடினமாக இல்லையா?
எனக்கு அது ஈஸியான சப்ஜெக்ட்தான். ஆடியன்ஸும் ஈஸியா புரிஞ்சு ரசிக்கிற மாதிரி திரைக்கதை இருக்கும். என்னோட அடுத்த படமும் ஃபேன்டஸி படம்தான்.
நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு உங்களுக்கு விருப்பமான தேர்வை செய்ய முடிஞ்சதா?
இந்தப் படத்தோட மதிப்பு எவ்வளவு, யார் இருந்தா எவ்வளவு ஜெயிக்கும் அப்டின்னுதான் தயாரிப்பாளர் பார்ப்பார். நானும் அறிமுக இயக்குநர்தான். பெரிய நட்சத்திரங்கள், இசையமைப்பாளர், கேமராமேன் அப்படின்னு எடுக்கறதா இருந்தா, பெரிய இயக்குநரை வச்சே படம் எடுத்துருவாங்களே! மற்றபடி, நாம சினிமா எடுக்கணும்னுதான் வந்திருக்கோமே தவிர, குறிப்பிட்ட சிலரை வச்சு சினிமா எடுக்கணும்னு வரலையே.
நன்றி - த இந்து