கடைசிப் பக்கம்
இந்தப்
புள்ளியிலிருந்து!
சிவகாமி ஐ.ஏ.எஸ்.
1. திருமணம் என்பது யார் விருப்பம்?
இளவரசன் கோர மரணம் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பல செய்திகளை வழங்கியிருக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்று பெருமை பொங்கக் கூறிவந்தவற்றின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இளவரசன்-திவ்யாவுக்கு முன்னதாக சாதி மறுப்புத் திருமணங்கள் எதிர்ப்புகளுக்கு இடையில் நடந்து உறுதியான குடும்ப வாழ்க்கையில் தம்பதியினர் ஈடுபட்டிருந்தாலும்கூட, இன்னும் அத்தகைய திருமணங்கள் மனதார ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் இத்திருமணங்களுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களே தருமபுரி வன்முறைக்கும் இளவரசனின் மரணத்துக்கும் காரணமாக அமைந்தன என்பதும் நாடறிந்த உண்மை. நடந்த நிகழ்வுகள் யாவுமே தலித் சமூகத்தைக் கடுமையாகப் பாதித்ததென்பது உண்மைதான். எனினும் தலித் மக்கள் வாழும் இத்தமிழ்ச் சமுதாயமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அதாவது இது இரண்டு மனங்கள் அல்லது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு மட்டுமன்று. ஆயிரமாயிரமாண்டு காலமாக சமூகம் அரசு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது என்பதையே இக்கூற்று நிரூபிக்கிறது. திருமணம் ஓர் அரசியல் நிகழ்வு இல்லையென்றால், சாதிக்குள்ளாகவேதான் திருமணம் நடக்க வேண்டும் என்பது நடை முறைக்கு வந்திருக்குமா அல்லது ஆணின் வயது பெண்ணின் வயதைவிடக் கூடுதலாக இருக்கவேண்டும், திருமணத்தைப் பதிவு செய்தல், விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற விஷயங்கள் சட்டமாகியிருக்க முடியுமா?
இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய நமது சட்டங்கள், அவ்வுறவுக்குள் புகும் ஆண்-பெண் விருப்பத்தைப் பற்றிப் பேசுகிறதா? பண்டைய தமிழர் பண்பாட்டில் காதல்-களவுத் திருமணங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு தற்போது அளிக்கப்படுகிறதா? தற்போதைய திருமணங்கள் அரசியல் வரையறைக்குள்தான் நடக்கின்றன என்றால், வயது வந்த ஆண்-பெண் விருப்பத்துக்கு இடமில்லை அல்லது திருமணம் குறித்த சுதந்திரம் தனி மனிதருக்கு இல்லை என்றே நிரூபணமாகிறது.
தங்கள் பிள்ளைகளின் மேல் அக்கறை; அவர்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் வயது வந்த தமது பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடும் பெற்றோருக்குச் சில கேள்விகள்!
ஊழல் மிகுந்த இச்சமுதாயத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊழலில் ஈடுபடும் பெற்றோர், தமது பிள்ளைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கின்றனரா? ஒருவேளை அதையும் தமது பிள்ளைகளின் நலனுக்காகவே தான் செய்கின்றோம் என்று சொல்வார்களோ?
குடிப்பழக்கம் தேசியக்குறியீடாகி வரும் இக்காலத்தில் நமது பெற்றோர்கள் குடிப்பது கூட பிள்ளைகளின் நன்மைக்குத்தானோ?
ஆணாதிக்கம் நிறைந்த இச்சமுதாயத்தில் பெண்ணை இழிவுபடுத்துவதும், தான் பெற்ற பெண்ணை மனத்தில் வைத்துதானோ?
வேறுபாடுகளும் அதனடிப்படையில் அமைந்த ஒடுக்குமுறைகளும் கொண்ட இச்சமுதாயத்துக்கும் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூட வாதாடுவார்களோ?
திருமணம், கற்பு என்ற கோட்பாடுகளின் மீது கடைந்தெடுத்த அரசியலும், பெற்றோரின் சுயலாபமும் கலந்திருப்பதை நாம் கண்டு கொள்ளாவிட்டால் ஒரு நல்ல எதிர்காலத்தை நம் குழந்தைகளுக்குத் தர முடியாது. சிந்திப்போம் இந்தப் புள்ளியிலிருந்து...
Thanks-Kalki