Showing posts with label கரையோரம் (2016)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கரையோரம் (2016)- சினிமா விமர்சனம். Show all posts

Sunday, January 03, 2016

கரையோரம் (2016)- சினிமா விமர்சனம்

நடிகர் : வசிஸ்டா சிம்ஹா
நடிகை :நிகிஷா பட்டேல்
இயக்குனர் :ஜெகதீஷ் குமார்
இசை :சுஜித் ஷெட்டி
ஓளிப்பதிவு :ஜெய் ஆனந்த்
பெரும் செல்வந்தரான ராதாரவியின் மூத்த மகள் நாயகி நிகிஷா. இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். நிகிஷாவின் தங்கை கணேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இந்த விஷயம் ராதாரவிக்கு தெரிய வருகிறது. ராதாரவி கணேஷை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார். 

ராதாரவி திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார் என்று நினைத்து நிகிஷா தன் தங்கையை காதலனுடன் திருமணம் செய்து வைக்கிறார். சில நாட்களில் ராதாரவி இறக்கிறார். அதைத்தொடர்ந்து நிகிஷாவின் தங்கையும் அவருக்கு பிறந்த குழந்தையும் இறக்கிறார்கள். 

இதனால் சோகத்தில் இருக்கும் நிகிஷா, தன் தோழி இனியாவின் அறிவுரைப்படி கரையோரத்தில் உள்ள பங்களாவில் தங்குகிறார். இந்த பங்களாவிற்கு அருகில் தனிமையில் தங்கியிருக்கும் வஷிஸ்டா என்பவருடன் நிகிஷாவிற்கு பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. 

ஒருநாள் வஷிஸ்டா, நிகிஷாவை ஒரு இடத்திற்கு வரச் சொல்லுகிறார். அங்கு செல்லும் நிகிஷாவிற்கு வஷிஸ்டா இறந்து பத்து வருடங்கள் ஆகிறது என்பது தெரிகிறது. இதனால் அதிர்ந்து போகிறார் நிகிஷா. 

வஷிஸ்டா இறந்தவன் என்றால் தன்னுடன் பேசுவது யார் என்று குழப்பத்தில் இருக்கிறார் நிகிஷா. இந்த விஷயத்தை தன் தோழி இனியாவிடம் சொல்ல, இருவரும் போலீஸை நாடுகிறார்கள். போலீஸ்காரர்களும் வஷிஸ்டா இறந்து பத்து வருடங்கள் ஆகிறது என்பதை உறுதிபடுத்துகிறார்கள். 

இதனால் குழப்பமடையும் நிகிஷாவை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இனியா சிகிச்சையளிக்கிறார். இருந்தாலும், வஷிஸ்டாவுடன் பேசும் வாய்ப்பு நிகிஷாவிற்கு ஏற்படுகிறது.

உண்மையில் அந்த வஷிஸ்டா யார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? நிகிஷாவை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 

படத்தில் நிகிஷாவை சுற்றியே காட்சிகள் நகர்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இனியா, பாசமிகு தோழியாகவும், கிளைமாக்சில் மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து ரசிகர்களிடம் அப்லாஸ் பெற்றிருக்கிறார் சிம்ரன். ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒரு ஹீரோவுக்கு நிகராக இவருடைய கதாபாத்திரத்தையும் காட்சியமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள். கணேஷ், வஷிஸ்டா என இரண்டு கதாநாயகன்கள் நடித்திருக்கிறார்கள். இருவரும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீஷ் குமார். இதில் முதல் பாதியை கிளாமராகவும், பிற்பாதியை திரில்லராகவும் உருவாக்கியிருக்கிறார். இதில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியே ரசிக்க முடிகிறது.  

சுஜித் ஷெட்டியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெய் ஆனந்தின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியும் உள்ளது. 

மொத்தத்தில் ‘கரையோரம்’ கரை சேரும்.


-மாலைமலர்