Showing posts with label கத்ரீன் தெரசா. Show all posts
Showing posts with label கத்ரீன் தெரசா. Show all posts

Tuesday, January 12, 2016

‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக்க இருந்தாரா?- ஏ ஆர் முருகதாஸ் சிஷ்யர் பேட்டி

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் தற்போது தாணுவின் தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிக்கும் ‘கணிதன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி யுள்ள நிலையில் சந்தோஷை சந்தித்தோம்.



படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே?
‘கணிதன்’ என்ற தலைப்பைக் கேட்டதும் பலரும் இது கணிதத்தைப் பற்றிய படமா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. ‘கணிதன்’ என்ற வார்த்தைக்கு ஒரு நபர் கணக்கிட்டு வேலை செய்வது என்று அர்த்தம். இப்படத்தின் நாயகன் - வில்லன் இருவருமே புத்திசாலிகள். அந்த இரண்டு புத்திசாலிகளின் மோதல்தான் படம்.



எதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறீர்கள்?
கடைசி இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒரு பத்திரிகையாளன் வாழ்வின் உச்சத்தைத் தொட என்ன செய்கிறான் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் படம் பத்திரிகையாளர் களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய தாக இருக்கும். இப்படத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை யும் தெளிவாக காட்டியிருக்கிறேன். இதுவரை யாரும் இந்த விஷயத்தை இத்தனை தெளி வாக சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.



இப்படத்தின் வில்லனாக இந்தி நடிகர் தருணை எப்படி தேர்வு செய்தீர்கள்?
இப்படத்தின் வில்லனைப் பொறுத்தவரை தமிழுக்கு புதியவராகவும், நல்ல உடலமைப்போடும், 40-45 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நிறைய தேடினோம். ஜாக்கி ஷெராஃப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் அவருக்கு வயது அதிகமாக தெரிந்தது. இந்த சூழ்நிலையில்தான் ‘ஜப் வி மெட்’ இந்தி படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த தருணை இந்த வேடத்துக்கு தேர்ந்தெடுத்தோம். இப்படத்தில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.


ஏ.ஆர்.முருகதாஸிடம் பணியாற்றி இருப்பதால் பெரிய நடிகர்களின் நட்பு கிடைத்திருக்குமே. அவர்களை வைத்து ஏன் இப்படத்தை இயக்கவில்லை?
இக்கதை தயாரான வுடன் நான் விஜய் சாரிடம் சொல்லியிருக் கலாம். ஆனால் ஒரு இயக்குநராக என்னுடைய பார்வையில் இக்கதை விஜய் சாருக்கு பொருத்தமாக இல்லை. ஒரு சின்ன பையனை பெரிய நாயகனாக பார்க்க வேண்டும் என்ற பார்வையில்தான் நான் இக்கதையை எழுதியிருக்கிறேன். இப்படத்தைப் பார்த்தவர்கள் ‘அதர்வா இப்படத்துக்குப் பிறகு மாஸ் ஹீரோவாகி விடுவார்’ என்றார்கள். மாஸ் என்பது 10 பேரை அடிப்பதோ, வசனங்கள் பேசுவதோ கிடையாது. நாயகன் பண்ணுகிற விஷயங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். அவ்வளவுதான். இது என் குருநாதர் எனக்கு சொல்லிக் கொடுத்தது. ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் சார் மிக அமைதியாக நடித்திருப்பார். ஆனால் அந்தப் படம் மாஸாக இருந்தது.
பெரிய நடிகர்கள் பலரையும் எனக்கு தெரியும். ஆனால் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த பிறகுதான் பெரிய நாயகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.



ஏ.ஆர்.முருகதாஸிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
நான் அவரிடம் ஒன்றும் தெரியாத ஜீரோவாகத்தான் போனேன். அவரிடம் இருந்துதான் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். ‘நீ இப்படி பண்ண வேண்டும், இதெல்லாம் தப்பு’ என்றெல்லாம் அவராக சொல்லித்தர மாட்டார். அதே நேரத்தில் பல பொறுப்புகளை நம்மை நம்பி கொடுப்பார். எல்லோரையும் சமமாக நடத்துவார். நாமாக அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரிடம் பணியாற்றிவிட்டால், நிச்சயம் ஒரு நல்ல இயக்குநராக உருவாகலாம்.



‘கணிதன்’ படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது அதில் ஏ.ஆர். முருகதாஸின் சாயல் தெரிகிறதே. இதே பாணியில்தான் உங்களது இயக்குநர் பயணம் இருக்குமா?
நான் அவரிடம் பணியாற்ற விருப்பப்பட்டதே, எனக்கு அவர் எடுக்கும் படங்கள் பிடிக்கும் என்பதால்தான். என்னால் முழுமையான ஒரு காதல் கதையை எடுக்க முடியாது. ஏனென்றால் எனக்கு அதில் விருப்பம் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே சமூக அக்கறை உள்ள படங்கள் பண்ண வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஷங்கர் சார் படங்களைப் பார்த்துதான் நான் இத்துறைக்கே வந்திருக்கிறேன்.

நன்றி - த இந்து