விளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் ‘கத்துக்குட்டி’
நண்பன் ஜிஞ்சருடன் (சூரி) சேர்ந்து ஊர் வம்பு, அடிதடி என்று சுற்றிவரும் இளைஞன் அறிவழகன் (நரேன்). அம்மாவுக்கு செல்லப் பிள்ளையான, அப்பாவுக்கு அடங்காத பிள்ளையான அவர், தன் பகுதியில் விவசாயம் அழிந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். நாயகி ஸ்ருஷ்டி டாங்கே, பறவைகளை நேசிப் பது, செடிகொடிகள் வளர்ப்பது என்று இயற்கையை நேசிக்கும் கிராமத்து பெண்ணாக வருகிறார். ஒரு மோதலில் ஆரம்பிக்கும் நரேன் - ஸ்ருஷ்டி டாங்கேவின் சந்திப்பு, காலப்போக்கில் காதலாக மாறுகிறது.
இந்நிலையில் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குறிவைத்து சிலர் காய் நகர்த்துகிறார்கள். அதே நேரத்தில் 40 ஆண்டுகாலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நரேனின் அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ சீட் நரேனுக்கு கிடைக்கிறது. ஒரு பக்கம் தேர்தலில் ஜெயிப்பது, மற்றொரு பக்கம் விவசாய நிலங்களை மீட்பது என்று ஒரே நேரத்தில் இரண்டு லட்சியங்களுடன் செயல்படுகிறார் நரேன். அவரால் இந்த இரண்டு லட்சியங்களையும் நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
‘மளிகைப் பொருட்களின் பட்டியலில் மதுபான பாட்டிலும் இடம்பெற்றதால் டாஸ்மாக் காட்சிகளை தவிர்க்க முடிய வில்லை’ என்ற வரியோடு படத்தைத் தொடங்கும்போதே இயக்குநரின் துணிச் சல் தெரிகிறது. அந்த துணிச்சலை படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
பொதுவாக சமகால அரசியல் பிரச் சினையை சினிமாவாக எடுக்கும்போது அதில் ஆவணத்தன்மை வெளிப்பட்டு விடும். ஆனால், இந்தப்படத்தின் திரைக் கதையில் காமெடி, அடிதடி, சென்டி மென்ட், அரசியல், அழகியல் என்று கமர் ஷியல் விஷயங்கள் சரியான விகிதத் தில் சேர்க்கப்பட்டுள்ளன. விளைநிலங் கள் எப்படி அதன் இயல்பு நிலையை இழக்கிறது என்பதை சரியாக பதிவு செய் துள்ளார் இயக்குநர் இரா. சரவணன்.
கிராமத்துக்குள் செல்போன் டவர் வைப்பது அங்குள்ள பறவைகளுக்கு எப்படி இடையூறாக இருக்கிறது, ரியல் எஸ்டேட்காரர்கள் செய்யும் அட்டூழியம், ஈமு கோழி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவது, பட்டினிச் சாவுக்கான காரணம், அரசியல்வாதிகளின் சேட்டை என்று பல விஷயங்களைப் பற்றி இப்படம் விவாதிக்கிறது.
அடிதடி வம்புகளால் ஊர் முழுக்க கெட்டபெயர் வாங்கி குவித்திருக் கும் நரேன், அரசியலில் இறங்கப்போகி றோம் என்றதும் அப்படியே பல்டி அடித்து நல்லவனாக மாறும் இடம் கலகலப்பு. எதார்த்தமான கிராமத்து இளைஞன் வேடத்தில் மிக இயல்பாக பொருந்திப் போகிறார் நரேன்.
நாயகனுக்கு இணையான வேடம் சூரிக்கு. ‘பிடிவாரண்டுக்கே பயப்பட மாட் டான்… பஞ்சாயத்துக்கா பயப்பட போறான்’ என்பது போன்ற காமெடி பஞ்ச் வசனங்களை படம் முழுக்க அள்ளித் தெளிக்கிறார். காமெடியை தாண்டி நெகிழ்ச்சியான காட்சிகளிலும் மனதில் இடம்பிடிக்கிறார் சூரி.
‘சாப்பிட வழியில்லாம சாவறதுக்கு பேரு பட்டினிச் சாவு இல்ல... நாலு பேருக்கு சாப்பாடு போடமுடியாம போச் சேன்னு நினைச்சு சாவு றதுதான் பட்டினிச் சாவு’ என்பதுபோன்ற வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
மாவட்டச் செயலாளராக வரும் ஞான வேல், நரேனின் அம்மாவாக வரும் துளசி ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். நரேனின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜுக்கு இது முதல் படம். ஆனால் நடிப்பில் தேர்ந்த அனுபவசாலியாகத் தெரிகிறார்.
கிராமத்து உடையில் ஸ்ருஷ்டி டாங்கே மிக எளிமையாக நடித்திருக் கிறார். அருள்தேவ் இசையில் பாடல் கள் ரசிக்க வைக்கின்றன. சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு தஞ்சை மண்ணை அதன் மணம் மாறாமல் பிரதிபலிக்கிறது.
படத்தின் முக்கிய திருப்பம் நாயகி யின் அப்பா தற்கொலை செய்துகொள் ளும் காட்சிதான். அவரின் தற்கொலை முடிவுக்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்க லாம். மேலோட்டமாக பதிவு செய்திருப்ப தால் அந்தக் காட்சி பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை. அதேபோல் நாய கனுக்குக்கும் நாயகிக்கும் இடையே காதல் மலர்வதற்கான காரணங்கள் தெளி வாக சொல்லப்படவில்லை. அதைச் சரியாகச் சொல்லி காதல் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இரண்டாவது பாதி எடிட்டிங்கிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வணிக சினிமாக்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படும் இன்றைய சூழலில் அரசியல் சார்ந்த கதையை தேர்வு செய்து அதை கமர்ஷியல் தன்மை குறையாமல் சொன்ன கத்துக்குட்டியை வரவேற்கலாம்.
நன்றி-தஹிந்து