Showing posts with label கடவுள் பாதி மிருகம் பாதி - திரை விமர்சனம். Show all posts
Showing posts with label கடவுள் பாதி மிருகம் பாதி - திரை விமர்சனம். Show all posts

Tuesday, March 24, 2015

கடவுள் பாதி மிருகம் பாதி - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர்)

மர்மக் கதைக்கு ஏற்ற விதத்தில் இருளில் தொடங்குகிறது படம். முகத்தில் அச்சம் அப்பியிருக்க, இரவுக் காவலர் நடந்து செல்வதை கேமரா பின்தொடரும்போதே பெரும் அசம்பாவிதத்துக்கு மனம் தயாராகிவிடுகிறது. எதிர்பார்த்தபடியே காவலர் கொன்று இழுத்துச் செல்லப்படுகிறார். கொல்லும் நபரின் முகத்தைக் காட்ட கேமரா விரும்பவில்லை.
அடுத்த காட்சியில் படபடப்புடன் வீட்டில் இருந்து ஓடிவந்து காரில் ஏறுகிறாள் நேகா (ஸ்வேதா விஜய்). காரில் காத்திருக்கும் அவளது காதலன் (அபிஷேக்) காரை கிளப்புகிறான். வெளியூருக்குச் சென்று திருமணம் செய்துகொள்வது அவர்கள் திட்டம்.
வழியில் ஒரு கார் ரிப்பேராகி நிற்கிறது. அங்கு நிற்கும் ஒருவர் (ராஜ்) இவர்களது காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்கிறார். அவர் இயல்பான நபர் அல்ல என்பது சிறிது நேரம் கழித்துத்தான் காதலர்களுக்குத் தெரிகிறது. அபிஷேக்கை கத்தியால் குத்தவரும் ராஜின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காதலர்கள் தப்பிக்கிறார்கள்.
ஆனால் வேறொரு கார் மூலம் இவர்களைப் பின்தொடர்ந்து வந்து மீண்டும் இவர்களது காரில் ஏறிக்கொள்கிறார் ராஜ்.
நெடுஞ்சாலையில் ராஜ் விட்டுச் சென்ற காரில் இருக்கும் பிணத்தை போலீஸார் கண்டுபிடிக்கின்றனர். பிணத்தின் அடையாளங் களை வைத்துப் புலனாய்வைத் தொடங்கு கின்றனர். கொலையாளி, மனநல மருத் துவமனையில் இருந்து தப்பியவன் என்பது தெரிய வர, அவன் ஏறிக்கொண்ட கார் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. கார் சென்ற வழியில் விரை கிறார் போலீஸ் அதிகாரி சேது.
பல அபாயங்களுக்கு மத்தியில் நடக்கும் இந்த தேடுதல் வேட்டையின் முடிவு என்ன என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக் கிறார்கள்.
படத்தைத் தயாரித்து இயக்கி முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கும் ராஜ், காட்சியால் கதை சொல்வதில் பெருமளவு வெற்றிபெற்றிருக்கிறார். அடிப்படைக் கதை, மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியின் பின்னணி ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. ஆனாலும், அனாவசியக் காட்சி கள் இல்லாமல் கச்சிதமாகத் திரைக்கதை அமைத் திருக்கிறார். சில நீளமான காட்சிகள் அலுப்பூட்டு கின்றன. அடுத்தடுத்த திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், முடிவு எளிதாக யூகிக்கக்கூடியதாக இருப்பதால் முழுமையாக ஒன்றமுடியவில்லை. சண்டைக் காட்சிகள் படமாக்கம் அருமை. குறிப்பாக காவல் நிலையச் சண்டை. குற்றவாளியின் பின்னணியைச் சொல்லும் குறுங்கதையில் புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம்.
ராஜ் அதிகம் பேசாமல் உடல்மொழி மூலமாகவே கலக்கியிருக்கிறார். அபிஷேக்கும் ஸ்வேதாவும் எதிர்பாராத ஆபத்தில் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தையை நன்கு வெளிப்படுத்துகின்றனர். ஸ்வேதாவின் கண்கள் நன்றாகப் பேசுகின்றன. மைனாவில் காவல் துறை அதிகாரியாக வரும் சேது அமைதியாக வந்துபோகிறார். சிறிய வேடத்தில் வரும் பூஜா பளிச்சென்று மனதில் நிற்கிறார்.
ராகுல்ராஜின் பின்னணி இசை நன்றாக உள் ளது. காட்சியின் உணர்வை வெளிப்படுத்தும் கிஷோர் மணியின் ஒளிப்பதிவு படத் தின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற தலைப்பின் இரண்டாவது பாதியை மட்டுமே காட்டுகிறது படம். சைக்கோ குற்றவாளி பாத்திரத்தின் மென்மையான பகுதியையும் காட்டியிருந்தால் தலைப்புக்கு நியாயம் செய்வதுடன் படத்தின் பரிமாணமும் கூடியிருக்கும்.



நன்றி  - த இந்து


வாசகர் கருத்து -படிக்கும் போதே தெரியுது நல்ல வித்தியாசமான படம் னு.. அதுல கொரை கண்டுபுடிச்சி எழுதலனா உங்களுக்கு தூக்கம் வராதே... யாராச்சும் பெரிய நடிகர் நடிச்சிருந்தா கதையே இல்லைனாலும் பாராட்டித்தள்ளுவிங்க..