Showing posts with label கடலூர் நிவாரண உதவிகள். Show all posts
Showing posts with label கடலூர் நிவாரண உதவிகள். Show all posts

Sunday, December 13, 2015

கடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு கதறல் கடிதம்

கடலூரில் இருந்து தன்னார்வலர்கள் அனுப்பிய படங்கள்.
கடலூரில் இருந்து தன்னார்வலர்கள் அனுப்பிய படங்கள்.
கடலூர் பற்றிய விஷயங்கள், அனுபவங்கள், நடப்பது என்ன? முதல்நாளில் இருந்தே குழுவினரோடு இருப்பதால் அனுபவங்கள், மனக்கசப்புகள், இயலாமை எல்லாம் வருத்த வடுக்களாக வலிக்கின்றன.
இத்தனை நிவாரணங்கள் இருந்தும் ஏன் இன்னும் ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலைமை? அனுபவங்களைப் பகிரலாமா?
ஒரு பக்கம் லாரிகள் களவு... மறுபக்கம் லாரிகளுக்கு பாதுகாப்பு; ஒரு பக்கம் நிவாரணம், மறுபக்கம் பசியில் தவிக்கும் மக்கள். இதற்கிடையிலும், நிற்காமல் நீள்கிறது கடலூர் செய்திகள்.
பசியில் 750 பேர் துடிக்கிறார்கள் என்று ஓர் இரவில் தகவல் வந்தது. இதுபோன்று தகவல் வந்தால் நம்பி சமைத்து எடுத்துக்கொண்டு போனால் பெரும்பாலும் அதை வாங்கிக்கொள்ளும் கூட்டம் வேறாக இருக்கும்.
சேற்றிலும், சகதியிலும், மழையிலும் நனைந்துகொண்டு பெரிய பெரிய வேலைகளை விட்டுவிட்டு வந்த களப்பணியாளர்களை சோர்வடைய வைத்த விஷயம் இவை. எனவே சில நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்... பெரும்பாலும் இவை பொய்யான தகவல்களாக இருக்கும் என்று சொன்னார்கள்.
ஆனால், தகவல்களை பொய் என்று சொல்லமுடியவில்லை. அதுவும் உண்மை. தோழி அனிதா தொடர்புகொண்டு கடும் உழைப்பில் 350 பேருக்கான உணவை ஏற்பாடு செய்து இரவு பதினோரு மணிக்குள் கொண்டுபோய் சேரச் செய்தார். இந்த உண்மை என்னை கடலூர் நோக்கி பார்வையை இன்னும் ஆழமாக செலுத்த வைத்தது.
மாயூரத்தை சேர்ந்த அக்கா சுதா சத்யநாராயணாவை நிவாரண நிலவரத்தைக் கண்டு பகிரச் சொன்னேன். குறைந்தபட்சம் மூன்று கிராமங்கள் பற்றியாவது தகவல் வேண்டும் என கேட்டேன்.
சுதா அக்காவின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். நிவாரண உதவிக்காக களப் பணிக்கு சென்றவள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் திரும்பி வந்தாள்.
''நான் கொடுக்க நினைத்த எல்லா பொருட்களையும் பிடுங்கிச் சென்றுவிட்டார்கள்'' என கவலையுடன் சொன்னாள்.
உதவ நினைத்து உற்சாகமாகக் கிளம்பிய பத்தாம் வகுப்பு மாணவிக்கு மனக்கசப்பை உருவாக்கியது யார்? ஏன்?
அக்கா சுதாவின் குழுவினர் கடலூர் கிளம்பும்போது இந்த பகுதிக்குதான் கொடுக்க வேண்டும் என்று சிலரால் மறைமுகமாக போனில் வற்புறுத்தப்பட்டது. ஆனால் சுதா குழு சமயோசிதமாக போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு வேறு கிராமத்து குடிசைப் பகுதிக்கு கொடுத்தனர்.
அடுத்து, சாத்தப்பாடி கிராமத்தில் உதவி இல்லாமல் தவிப்பதாக சங்கர் செய்தி சொன்னார். சில களப்பணியாளர்கள் "இதுபோன்ற செய்தி வந்த பிறகு செல்வது ஆபத்து. நாங்கள் கிராமம் கிராமமாக செல்கிறோம்" என்றும் தெரிவித்தனர்.
சுதா அக்காவை எப்படியாவது போய் பார்த்துவிட்டு வரச் சொன்னேன். பார்த்துவிட்டு அங்கிருந்தே போன் செய்தாள்.
''பிஞ்சுக் குழந்தைகள் கூடசேற்றில் நிற்கும் அவலம் பார்த்து மனம் பதறுகிறது'' என கதறினாள். அந்த பதற்ற தருணத்திலும் புகைப்படங்களை அனுப்பினாள்.
நிலைமையின் தீவிரம் உணர்ந்து அன்று இரவே அபிலேஷ், அபிலேஷ், தீபன், நவீன் குழுவினர் நிவாரணப் பொருட்கள் கொடுத்ததும் மிக அமைதியாக வாங்கிகொண்டனர். குறிப்பாக, அங்கு எந்த பிரச்சினையோ, தள்ளு முள்ளோ நிகழவில்லை.
மறுநாள் சிதம்பரம் பகுதி கொத்தடைக்கு தம்பி திராவிட மணி நண்பர் சக்தி சரவணனிடம் இருந்து பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்றார்.
கிராமத்து மக்கள் என்னிடம் போனில் பேசினர். கிட்டத்தட்ட அவர்கள் கிராமத்தை காப்பாற்ற வந்த ரட்சகியாக நினைத்து உருகினர்.
"ஸ்டவ், பாத்திரம், தார் பாய் கொடுங்க. அதை வச்சு சமாளிப்போம்" என்றார்கள். எதுவுமே இல்லாதபோதும் எத்தனை மிக மிக எளிமையான கோரிக்கையை முன்வைத்தார்கள் என்று நினைக்கையில் இப்போதும் சிலிர்க்கிறது எனக்கு.
இதுபோன்ற பல கிராமங்களுக்கும், இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஜெயபிரகாஷ், கனிமொழி போன்ற நண்பர்கள் சென்று பார்த்து பார்த்து தேவைபட்ட பொருட்களைக் கொடுத்து உதவி செய்தனர். அவர்கள் மிகச்சரியாக தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு வைத்து இருந்தனர்.
பாஸ்கர் சார் முதல் நாளில் இருந்தே தகவல்கள் கொடுத்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும், தார் பாயின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஆனால், இன்னும் நிவாரணம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா உங்களால்?
இது முழுக்க முழுக்க உண்மை. இந்த உண்மை சுடும்போது தான் இன்னொரு கேள்வி எழுகிறது.
வண்டி வண்டியாக லாரிகளில், வாகனங்களில் செல்லும் பொருட்கள் எங்கே போகின்றன? யாருக்கு கிடைக்கின்றன? அதற்கான பதில் உங்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம்.
முதலில் உணவுக்கு வழியில்லாமல் தர்ணா செய்யும் மக்களை போலீஸ் சமாதானப்படுத்துகிறது. அந்த வழியில் வரும் லாரியில் உள்ள பொருட்களை கேட்கத் தொடங்குகின்றனர். இதனால் தர்ணா செய்யும் மக்களின் நலன் கருதி லாரியில் உள்ள பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. நாளடைவில் இதுவே பழக்கமும், வழக்கமும் ஆகிப் போகிறது.
மக்கள் தர்ணா செய்வதும், போலீஸ் அடுத்த லாரியை குறிவைப்பதும், இடத்தை நோக்கி செல்லும் லாரியில் உள்ள பொருட்கள் பாதி வழியிலேயே காலியாவதும் இப்படித்தான்.
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற அரசை நாட வேண்டியவர்கள் முகநூல் நண்பர்களை, தன்னார்வலர்களை நம்பி, பல இடங்களில் வலுக்கட்டாயமாக பொருட்களைப் பறிப்பது எந்த மாதிரியான செயல்?
இப்படி பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் கண்ணுக்கு தெரியாத புறம்போக்கு இடங்களிலும் ஏழைகள் வசிக்கின்றனர். காட்டுப்பள்ளம் கிராமத்தில் முதல் வெள்ளத்தின்போதே 9 அருந்ததியினர் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், நிவாரணப் பொருட்கள் இவர்களை சேர்வதே இல்லை.
எல்லா கிராமங்களிலும் ஐந்து முதல் ஐநூறு வரை குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், கடலோரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
எதுவுமே தெரியாமல் வண்டியை கடலூருக்கு எடுத்துக்கொண்டு சென்றவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் பகுதியிலேயே கொடுத்ததால்,திரும்பத் திரும்ப ஒரே இடத்தில கொடுத்தது அதிகம் நடந்தது.
அடுத்த இடியாப்ப சிக்கல் கடுமையான சாதிய அமைப்பு. இதில் எந்தக் கட்சியும் விலக்கில்லை. பெருங்கொடுமை என்னவென்றால், சில தோழர்களிடமும் இது மறைந்தே இருக்கிறது. நல்லவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் அடி மனதில் கூட சாதிப் பேய் கொழுந்து விட்டு எரிகிறது. அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள நலிந்தவர்களுக்கு கொடுக்க மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஆனால், நிஜ பொருளாதரத்தில் பின்தங்கி வாழும் குடிசைப் பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுத்து விடுகின்றனர். இது நிராயுதபாணியாக சென்ற தன்னார்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்.
அடுத்த சிக்கலை உருவாக்குபவர்கள் மிக முக்கியம் கட்சி பேதமில்லாத லோக்கல் அரசியல்வாதிகள். தங்களை முன்னிறுத்த என்ன வேண்டும் என்றாலும் செய்யத் துணிந்தவர்கள். பொருட்களை வாங்கி அல்லது பிடுங்கி தாங்கள் கொடுப்பது போல போட்டோ எடுத்துக்கொன்டனர். இதுவும் தன்னார்வலர்களை மனதளவில் மிக பாதித்த விஷயம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நண்பர் ஒருவர் பாய் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தக் கிராமத்தில் அரசியல் தலைவர் அந்த வழியாகச் சென்றார். கிராமத்தில் இறங்கவில்லை. ஆனால், டிவியில் பாய் அவர் கையால் வழங்கப்பட்டதாக செய்தி. நடுநிலை என்று ஒன்று எங்குமே இல்லை.
அடுத்து ஊரில் செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாருக்கும் கொடுங்க என்று வற்புறுத்த வசதியானவர்கள் வந்து வாங்கிச் செல்வதைப் பார்த்த பலர் கடலூர் சரியாகி விட்டது என்ற தகவலை பரப்பத் தொடங்கினர்.
அடுத்து, போலீஸ் வண்டியை மறித்து சமுதாயக்கூடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்வார்கள். நேற்று மட்டும் கலெக்டர் ஆபிஸ் அருகே எக்கச்சக்கமான லாரிகள், சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும் கண்டதாக தோழி சொன்னாள். அங்கும் இங்குமாக சென்றுகொண்டிருந்த லாரிகளை வழிமறித்து அத்தனையும் சமுதாயக்கூடத்துக்கு திருப்பி அனுப்பபட்டது. இன்று கடலூரில் லாரிகள் பார்ப்பது மிக கடினம்.
ஒரு வாரமாக மக்கள் பசியால் துடித்துக்கொண்டு இருகின்றனர். பிஞ்சுக் குழுந்தை கூட சேற்றில் இருக்க இடமின்றி சேற்றில் நிற்கிறது. அவர்கள் கேட்பது கொஞ்சம் அரிசி, தார் பாய், ஸ்டவ் போன்ற எளிமையான பொருட்கள் மட்டுமே.
ஒரு தாய்க்கிழவி போனில் சொன்னது... "பசியில் கிழிந்த பாய் போல கிடக்கிறோம். உள்ளூர் ஆட்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் கை விட்டு விட்டார்கள். உங்களால்தான் இதுவாவது கிடைக்கிறது. எங்களுக்கு நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்". இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியுமா?
இந்த அவசர அவசிய சூழலுக்கு இடையிலும், நிவாரணப் பொருட்களை டாஸ்மாக் கடைகளில் சிலசமயம் பார்க்கும் அவலம் நீடிக்கிறது. பெண்கள் அடுத்த புடவைக்கும், அடுத்த வேளை அரிசிக்கும் கையேந்தி கொண்டு இருக்க, சில குடி அடிமைகள் பாத்திரம், தார் பாய் போன்றவற்றை விற்று, டாஸ்மாக்கில் குடிப்பதும் நடக்கிறது. ஏற்கெனவே குழந்தைகளுடன் ரோட்டில் நிற்கும் பெண்களுக்கு இன்னும் துயரத்தை அரசே வெள்ள நிவாரணமாக வழங்கி இருக்கிறது.
இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து எங்களின் கையறு நிலையை மிக அதிகமாக நொந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
எந்த மீடியாவும் போலீஸையும், அதிகாரிகளையும் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான பொருட்களையும் அடையாளம் காட்டத் தயாராக இல்லை. இரு நாட்களாக அவர்களிடம் பேசி மன உளைச்சலுக்கு ஆளானது தான் மிச்சம்.
தாழ்த்தப்பட்ட மக்களை ரட்சிக்க வந்த தலைவர்கள், தமிழின தலைவர்கள் என ஒருவரையும் களத்தில் காணவில்லை. 10 நாட்கள் ஆகியும் அவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலிலேயே இருக்கிறார்கள். இன்னும் எப்பொழுதுதான் வரப் போகிறார்கள்?
அன்பால் நீளும் நேசக் கரங்கள் மட்டும் இல்லையென்றால் பல மக்கள் பட்டினியால் வாடி இறந்திருக்கக் கூடும். இல்லையென்றால் பெருமளவில் வழிப்பறி, கொள்ளை அதிகமாகி கொள்ளைகள் நடைபெற்று இருக்கும். இன்று சென்னை, கடலூரில் வசதியாக இருக்கும் மக்களுக்கு ஓரளவு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு உள்ளது என்றால் தன்னார்வலர்களே காரணம்.
அரசு தன் ஆட்சியின் அனைத்து வேலைகளையும் தன்னார்வலர்களை விட்டு செய்ய வைக்கலாம். ஆனால் அது கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தல். எங்களுக்கு அரசியல் வேண்டாம். ஆனால், மக்களுக்கு உதவி வேண்டும். அந்த உதவி முழுமையாகச் சென்று சேர வேண்டும். என்ன செய்ய திட்டம் உங்களுக்கு?
ஃபவர்புல் மீடியா என்பது பவர்லெஸ் ஆகிக் கொண்டு இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இனி சமூக வலைத்தளம்தான் மக்களின் மீடியா. இனி இந்த மீடியாக்கள் மூலம் மீடியா பவர் ஒழியும். ஆனால், அதில் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே இருக்கும். மீடியாக்கள் இந்த சமயத்தில் விழிக்காவிட்டால் யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். நீங்கள் சினிமா செய்திகள், நடிகர் சங்கத் தேர்தல் மட்டுமே கவர் செய்ய வேண்டி வரும். போனால் போகட்டும் என்று நினைத்தால் நீங்கள் கடையை மூடிக்கொண்டு போகும் காலம் வந்துவிடும்.
அத்தனையும் மாற்றி எழுத வற்புறுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நிவாரண நிதி, கார்ப்பரேட் அளித்த நிதி, மத்திய அரசு நிதி, கட்சி நிதி, கப்பலில் தேங்கி நிற்கும் பொருட்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் சமுதாயக்கூடத்தில் இருக்கும் பொருட்களை நசுக்கப்பட்ட சமூகத்துக்கு உடனே கொடுங்கள். எங்களுக்கும் வேலை இருக்கிறது. எங்களை உங்கள் வேலைகளை செய்ய வற்புறுத்த வேண்டாம். மக்களை காப்பாற்றி ஓட்டுகளை சேகரிக்கவாவது களத்தில் இறங்குங்கள். பசியை நீங்கள் போக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் பசியை போக்க தயார். அதற்கு வழிவிடுங்கள் போதும்.
- நிவாரண உதவிகளைத் திரட்டி, அதை உரியர்வர்களுக்குப் போய்ச்சேர போராடும் நபர்கள் ஒருவர், கிர்த்திகா தரண்


தஹிந்து

  • Thangamani  India
    100% உண்மை. நானும் என் குழுவினரும் மெடிக்கல் கேம்ப் போடுவதாக சொல்லி கடலூர் RDO அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். போலீஸ் பாதுகாப்பு தேவை எனவும் கேட்டோம். அதற்க்கு அவர்கள் உணவு மற்றும் துணிமணி போன்ற பொருட்கள் கொண்டுவருபவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை, மெடிக்கல் கேம்ப் நடத்துபவர்களுக்கு தேவை இல்லை. ஆனால் banner எதுவும் வண்டியில் கட்ட வேண்டாம் என்ற முக்கியமான தகவலை சொன்னார்கள். நாங்களும் banner எதுவும் கட்டாமல் வேனில் கிளம்பி பன்ருட்டி அருகில் உள்ள செட்டிபட்டறை காலனி என்ற பகுதியில் 09-12-15 அன்று, பண்ருட்டி GH CMO Dr அன்புசெல்வி மற்றும் Dr மாலினி ஆகியோர் உதவியுடன் கிட்டத்தட்ட 500 பேருக்கு மருத்துவ உதவி செய்தோம். பண்ருட்டியிலிருந்து உளுந்தூர்பேட்டை திரும்பும் வழியில் நாங்கள் கண்ட காட்சி எங்கள் எல்லோரையும் திகைப்படைய வைத்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக, ஆண், பெண், குழந்தைகள் எல்லோரும் மெயின் ரோடிற்கு வந்து கையசைத்து வண்டியை நிறுத்த சொல்கிறார்கள் (banner கட்டாததால் நாங்கள் தப்பித்தோம்). ஆனால் பல வண்டிகள் அவர்களிடம் சிக்கி கொண்டன. இதை முறைப்படுத்த தெரியாத அரசு இருந்தென்ன லாபம்?
    23105
    about 9 hours ago
     (2) ·  (0)
     
    Karunakaran · Siva Up Voted
    • அருணா  India
      அடுத்தவருக்கு சேர வேண்டியதை பிடுங்கி தின்னும் ஈனபுத்தி என்றுதான் ஒழியுமோ... இவர்களெல்லாம் மேலானவர்கள்?...
      180
      about 10 hours ago
       (2) ·  (0)
       
      Siva · Kevin Up Voted
      • Chandramouli Nagasundaram  
        இதையெல்லாம் படிக்கும் பொழுது நெஞ்சு பதைக்கிறது, இதற்க்கெல்லாம் ஒரு முடிவேயில்லையோ!!!
        about 11 hours ago
         (3) ·  (0)
         
        Karunakaran · Siva · Kevin Up Voted
        • SSiva  France
          மீடியாக்கள் அதுவும் தொலை காட்சிகள் அதிகம் களம் இறங்கி நேரிடையாக காட்டவேண்டிய .......அநீதிகளை காட்ட தயங்கினால் .............மக்கள் புரட்சி வெடிக்கும் என்பது உண்மை ..
          6000
          about 11 hours ago
           (3) ·  (0)
           
          Karunakaran · Siva · Kevin Up Voted
          • JJagan  India
            Our people want to build up their livelihood by utilizing this heavy rainfall. Actually we cannot satisfy this people
            about 11 hours ago
             (0) ·  (0)
             
            • TVT V  India
              தோழார்களும் சாதீயம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் இந்த நாடு உருப்பட்ட மாதிரிதான் . பொருட்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் தேர்தல் கால செலவினங்களுக்கு முடக்கப்டுகிறது . அரசு கஜானாவில் இருந்து மாத சம்பளம் பெரும் அரசு அதிகாரிகள் மன சாட்சியை கழட்டி வைத்து விட்டு கட்சியின் மாவட்ட வட்ட செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர் .இல்லைஎன்றால் திரு. சகாயம் அவர்களுக்கு கிடைத்த மரியாதைதான் [?] சாசுவதம் கடலூரின் இயற்கை துயரத்தை விட அரசின் துயரம் தான் சொல்லி மாளாது இயற்கை அளித்த துயரம் முடிவுக்கு வந்து விடாது ஆனால் தேர்தல் படுத்தும் பாட்டில் அரசின் துயரம் துரத்தி அடிக்கிறது
              36030
              about 12 hours ago
               (0) ·  (0)
               
              • NNaryaanan  India
                இவை எல்லாம் பார்க்கும் பொழுது ஏன் உலகம் இன்னும் இயங்குகிறது நின்று விட கூடாதா என மனம் ஏங்குகிறது .