Showing posts with label கடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்!. Show all posts
Showing posts with label கடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்!. Show all posts

Sunday, December 13, 2015

கடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்!-இன்னமும் "ஸ்டிக்கர்" வந்து சேர வில்லையா?'

கடலூர்: கடலூரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிநபர்கள் மற்றும் தொண்டு 
நிறுவனங்கள் சார்பில் ஒருபுறம் நிவாரண பொருட்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டாலும், அரசு சார்பில் இன்னமும் சரிவர நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மக்கள் பல இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் தனிநபர்கள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் கூட இன்னமும் விநியோகிக்கப்படாமல் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திலேயே குவிந்து கிடப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி, கடலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கர்,  மாவட்ட ஆட்சியருக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தை அவர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது...

" அன்பிற்குரிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருக்கும் நிவாரணப் பொருட்களை கொஞ்சம் வெளியே எடுங்களேன்.

ஆங்காங்கே மக்கள் நிவாரணம் கேட்டு, சாலை மறியலில் இறங்கி விட்டார்கள். இன்று (11.12.2015) காலை 11.00 மணியளவில் வடலூர் அருகே, சாலை மறியலில் நான் மாட்டிக் கொண்டேன். இப்போது மறியலுக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் வருவதாகத் தகவல்.

அரசாங்க சார்பாக நீங்கள் ஒன்றுமே தர வேண்டாம். மற்ற ஊர்களில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பொருட்களை எடுத்து விநியோகம் செய்தாலே போதும்.

அங்கு ஒரு லட்சம் போர்வைகள் இருப்பதாகத் தகவல். அரிசி பல்லாயிரம் கிலோ குவிந்திருக்கிறது. சமையல் பொருட்கள், பிஸ்கெட், வேட்டி, சேலை என இன்னும் பல அத்தியாவசியப் பொருட்கள் குவிந்திருப்பதை வெளியே எடுக்காவிட்டால், காற்றில் இருக்கும் ஈரப்பதத்திலேயே பூஞ்சை பிடித்து விடும்.

அதை காவல் காக்க, ஒரு தாசில்தார், பல கிராம நிர்வாக அலுவலர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் என நியமித்து, பயனில்லாமல் பத்திரமாக வைத்திருப்பது நியாயமா?

வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் மக்கள் பொறுக்க மாட்டார்கள். பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் ஆங்காங்கே சாலைமறியல் என்ற செய்தி வர ஆரம்பித்து விட்டது.

தனி நபர்கள் தங்கள் உழைப்பில் சம்பாதித்ததை கொண்டு வந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கி உதவி வருகிறார்கள்.

நீங்கள் மற்றவர்கள் அளித்ததை எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள், தாமதப்படுத்துகிறீர்கள் ?

இன்னமும் "ஸ்டிக்கர் " வந்து சேர வில்லையா ?

அன்புடன்
சிவசங்கர்.எஸ்.எஸ்.
சட்டமன்ற உறுப்பினர்,
குன்னம் தொகுதி." 

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்

-விகடன்