திருச்சி மாநகரில் உள்ள ஒரு கார் விற்பனை மையத்தில் வேலை செய்கிறார் வாசு (ஸ்ரீகாந்த்). தற்செயலாகச் சந்திக்கும் சாந்தி (நீலம்) என்னும் பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார். சாந்திக்கும் வாசுவைப் பிடித்துவிடுவதால் அவர் வேலை செய்யும் இடத்திலேயே வேலைக்குச் சேர்கிறார்.
ஒரு முதியவர், ஒரு இளம்பெண், ஒரு சிறுவன், நடுத்தர வயதுப் பெண்மணி மற்றும் ஒரு ஆண் ஆகிய ஐந்து பேர் வாசுவைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். வாசுவின் அலுவலகம், வீடு என அவர் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரிக்கிறார். தங்களது ஆசைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
உதவ முன்வரும் வாசுவுக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் தன் கண்களுக்கு மட்டுமே புலப்படும் ஆவிகள் என்பது தெரியவருகிறது. வாசுவின் நடவடிக்கைகளைப் பார்த்து அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறார் சாந்தி. ஆவிகளின் பிரச்சினைகளும் காதலர்களின் சிக்கலும் தீர்ந்தனவா என்பதுதான் கதை.
ஆவி மனிதன் நன்னம்பிக்கைக் கூட்டணியை ஏற்கெனவே தமிழ்த் திரையில் நாம் பார்த்துவிட்டோம். இந்தப் படத்தில் குடும்பம், உறவுகள், காதல், நம்பிக்கை துரோகம், போலி மருந்து போன்ற சமூகப் பிரச்சினை என ஆவிகளின் பிரச்சினையைச் சித்தரித்துக் கதையை நகர்த்துகிறார் இயக்குநர் டி. சூர்யபிரபாகர். பல சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் படத்தில் தொடர்ந்து பயணிக்கும் காதல் பிரச்சினை மட்டுமே இதை ஒரே படமாக உணரவைக்கிறது.
பிரச்சினைகளைத் தீர்க்கும் விதத்தில் ரசிக்கும்படி எதுவும் இல்லை. சம்பவங்கள் விறுவிறுப்பாகவும் சித்தரிக்கப்படவில்லை. எல்லாமே நாடகத்தனமாக இருக்கின்றன. மந்தமாக நகருகின்றன. வட்டிக்கு விடும் தாதாவைச் சமாளிக்கும் இடம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.
காதலைச் சித்தரிக்கும் விதத்தில் சிறிதும் கற்பனை வளம் தெரியவில்லை. படத்தில் யாருக்கும் எந்தப் பின்னணியும் காட்டப்படவில்லை. எந்தப் பாத்திரமும் முறையாகச் சித்தரிக்கப்படவில்லை. எனவே எந்தப் பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.
ஸ்ரீகாந்த் தனது வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். அறிமுகக் கதாநாயகி நீலம் நடிக்க முயற்சித் திருக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந் திரன் வழக்கமான தனது நகைச்சுவை வில்லத்தனத்துடன் நடனமாடியும் கவர்கிறார். ஆவிகளின் கதாபாத்திரங் களை ஏற்ற ஒவ்வொருவரும் பொருத்த மான நட்சத்திரத் தேர்வுகள்.
கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது. பேருந்து விபத்துக்குள்ளாகும் காட்சியை ஒளிப்பதிவாளரும் கிராஃபிக்ஸ் குழுவும் துல்லியமாகப் படைத்திருக்கிறார்கள். திருச்சியையும் அதன் சுற்று வட்டாரங்களையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தின் முதல் பாதி முழுவதும் இரைச்சலான பின்னணி இசையை ஒலிக்கவிடும் விஜய் எபிநேசர் இரண்டாம் பாதியில் மிக இசைவான பின்னணியை வாசித்திருக்கிறார். படத்தில் பல பாடல்கள் இருந்தும் எதுவும் கவரவில்லை. சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் படத்தில் மைய இழையை உருவாக்காமல் போனது பெரிய குறை. சம்பவங்கள் அழுத்தமாக இல்லாததும் படத்தோடு பார்வையாளர்களை ஒன்றவிடாமல் தடுக்கிறது
=தஹிந்து