சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’
என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார்
முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன் ஒருத்தன்.
இந்த நஜீபை இழுத்துப் போட்டு உதைக்க வேண்டும்.
சரவணனுக்குப் பங்க்ளாதேஷ் காரன் நஜீப் மேல் வந்த ஆத்திரத்தை மீறி அரையில் முட்டிக்கொண்டு வந்தது.
பாத்ரும் கதவைத் திறக்க விடாமல் அதன் மேல் ராணுவ வீரன் படிந்து நின்று
கேத்தியை முத்தம் கொடுக்கச் சொல்லித் திரும்பத் திரும்பக் கேட்டான்.
உனக்குப் புண்ணியமாப் போறது. கொஞ்சம் நகரு. நான் பாத்ரூம் போய்ட்டு
வந்து தூங்கிடுவேன். அப்புறம் இஷ்டம் போல ஓடிப்பிடிச்சு விளையாடுங்க ..
சரவணன் விசனத்தோடு கேத்தியைப் பார்த்தான்.
கேத்தி ராணுவத்தானைப் பிடித்துப் பின்னால் இழுத்தாள்.
ஜார்ஜ் .. இவன் பாத்ரூம் போக வழிவிடு. திரும்பி வர வரைக்கும் நாம அவன் படுக்கையில் உருண்டு புரண்டுக் கொஞ்சம் போலக் கொஞ்சலாம் ..
சரவணன் அவளை நன்றியோடு பார்க்க அவள் பூப்போல சிரித்தாள்.
வடிவான சின்னப் பெண். இருபது வயசு காணும். அந்தப் பிராயத்தில் பிசாசு கூட அழகாகத் தான் இருக்கிறது.
பாத்ரூம் பிளஷ்ஷை இழுக்கும் போது நஜீப்பின் கழுத்து டையை இப்படிப்
பிடித்து இழுத்து அவன் மொகரையில் குத்த வேண்டும் போல் இருந்தது சரவணனுக்கு.
ஜனாப் .. இந்த யார்க்ஷயர் கவுண்டியிலே எந்த ஊர்லே எந்தப் பேட்டையிலே
வீடு வேணும்னாலும் சொல்லுங்க .. சல்லிசா முடிச்சுத் தரேன் .. வீடு
பிடிச்சிருந்தா கமிஷன் கொடுங்க .. இல்லாட்ட வேணாம் ..
கொலாசியம் மதுக்கடையில் உசர ஸ்டூலில் உட்கார்ந்து சரவணன் காசில் பியர்
குடித்துக் கொண்டு, பர்மிங்ஹாம், ஹாலிஃபாக்ஸ், ப்ரட்போர்ட் என்று எல்லாப்
பிரதேசத்தையும் அவன் குப்புகுப்பென்று விட்ட சுருட்டுப் புகைக்கு ஊடாகக்
காற்றில் வரைபடமாக விரலால் வரைந்து, அங்கேயெல்லாம் காலியான வீட்டு
விவரங்களை சரமாரியாக அடுக்கியபோது சரவணனுக்கு அவன் மேல் அசைக்க முடியாத
நம்பிக்கை வந்தது.
விட்டால் பக்கிங்ஹாம் அரண்மனையில் கூட இரண்டாம் மாடியில் செயிண்ட்
ஜேம்ஸ் பார்க்கைப் பார்க்க ஒரு காற்றோட்டமான அறையைக் குடக்கூலிக்குப்
பிடித்துக் கொடுத்துவிடுவான் இவன்.
நூறு பவுண்ட் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கைமாறியதும் அந்தப் பங்களா தேஷ்காரத் தடியன் ஒரு மாதம் காணாமல் போனான்.
என்ன செய்ய ? ஆபீஸில் சடுதியில் இங்கிலாந்து போ என்று வொர்க் பெர்மிட்
எடுத்துக் கொடுத்து சரவணனை அனுப்பி விட்டார்கள். அவர்கள் கூடவே வந்து இங்கே
குடித்தனம் இருக்க வீடெல்லாம் பிடித்துக் கொடுக்க முடியாது. வேலையோடு
வேலையாக அதைச் சரவணன் தான் செய்தாக வேண்டும்.
பங்க்ளாதேஷ்காரனை நம்பாதேன்னா கேட்டியா ?
சரவணனுடைய பாக்கிஸ்தானிய ரெஸ்டாரண்ட் நண்பர்கள் பரிதாபப்பட்டு ராத்திரி
கோழிக்கறிக்குத் தொட்டுக் கொள்ள இன்னொரு பப்படம் இலவசமாகப் போட்டார்கள்.
அவர்களால் அவ்வளவு தான் உதவ முடியும்.
இன்றைக்கு வெள்ளிக்கிழமை ராத்திரி என்பதால் சும்மா பார் பாராகச் சுற்றி
தாகசாந்தி செய்து கொண்டு, பாக்கிஸ்தானி கடையில் சாப்பிட்டு விட்டு
வீட்டுக்குள் நுழையும்போதும் முதலில் ஞாபகம் வந்தது நஜீப் சொன்னது தான்.
உங்களுக்காக அருமையான வீடு பார்த்து வச்சிருக்கேன் ஜனாப் .. விக்டோரியா
காலத்துக் கட்டிடம். கிண்ணுனு கிராமப் பொண்ணு கணக்கா வனப்பா வடிவமா
நிக்குது .. நாளைக்கே லேப்டேப் கம்ப்யூட்டர், ஊறுகாய் பாட்டில், துவைக்க
வேண்டிய துணி சகிதம் போய் இறங்கிடுங்க ..படு சல்லிசு .. மாதம் நானூத்தம்பது
பவுண்ட் தான் .. இந்தப் பேட்டையிலேயே இந்த ரேட்டுக்குக் கிடைக்காது.. ஒரு
மாசமா அலஞ்சு பிடிச்சு வந்திருக்கேன் .. பெரிய வீடு .. . நவாப் மாதிரி
சின்ன சைஸ் அந்தப்புரத்தோட இருக்கலாம் ….
தனிக்கட்டைப் பிரம்மச்சாரி சரவணன் படுக்கைக்குத் திரும்பினான்.
அங்கே கேத்தியைக் கட்டிப் பிடித்தபடி இழவெடுத்த பட்டாளத்தான்.
எங்கள் கால ஆங்கிலத்தில் நீ சொல்கிற இந்த நாலெழுத்து வார்த்தை கிடையாது .. இந்த மகா விஷயத்தை நாங்க போர்னிக்கேஷன் என்போம்.
கெக்கெக் என்று சிரிக்கும் அவன் நாசமாப் போக. சரவணன் தலையில் அடித்துக் கொண்டான்.
இந்த வீட்டில் வளைய வரும் பேயாகக் கேத்தரினும் அவ்வப்போது பேயிங்க்
கெஸ்டாக வந்து போகும் அவளுடைய பேய் பிரண்டும் இருக்கிற விஷயத்தைக்
கடன்காரன் நஜீப் சொல்லி இருந்தால் சரவணன் இங்கே வந்திருக்கவே மாட்டான்.
கேத்தி ராணுவக்காரனைப் பிடித்து அவளோடு இழுத்துக் கொண்டு படுக்கைக்குப்
பக்கத்தில் மிதந்தபடி, “தூங்கு டார்லிங்” என்று சரவணனைப் பார்த்துக்
கண்ணடித்தாள்.
அவள் பாவம். முப்பது வருஷம் முந்தி இறந்து போனவள். இப்படி ஒரு
வெள்ளிக்கிழமை ராத்திரி பழைய பாய் பிரண்டோடு பாரில் போய் சுதி ஏற்றிக்
கொண்டு நடனமாடி விட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது டிரக் இடித்து
அகால மரணம் அடைந்தவள்.
சரவணன் இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள் ராத்திரி அவள் பிரத்யட்சமானதே சுவாரசியமான கதை.
ராத்திரியில் டெலிவிஷன் திரை தன்னிச்சையாக உயிர் பெற்று சானல் சானலாக
மாறிய சத்தத்தில் சரவணன் விழித்துக் கொண்டபோது முன்னறை நாற்காலியில் புகை
மாதிரி உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்த கேத்தி என்ற கேத்தரின்
அவனுக்குப் பழக்கமானாள்.
என்னமோ சரவணனுக்குப் பயமே வரவில்லை. அவளுடைய சிநேகிதமான சிரிப்புத்தான் காரணம்.
ஒரு மாதத்தில் கேத்தி பழகி விட்டதோடு அவனுக்கு அவ்வப்போது வீட்டு
வேலைகளில் ஒத்தாசையும் செய்கிறதை எப்போதும் சரவணன் நன்றியோடு நினைத்துப்
பார்க்கிறான்.
ராத்திரி வீட்டுக்குத் திரும்பும்போது வெங்காயம் அரிந்து வைத்திருப்பது,
வாஷிங் மிஷினில் தண்ணீரும் சலவைப் பவுடரும் நிறைத்து வைப்பது, புது ஒயின்
பாட்டிலைக் கார்க் ஸ்குரூவால் திறந்து வைக்கிறேன் என்று உடைத்து அறை
முழுக்க வாசனை வாசனையாக சிவப்பு ஒயினை ஓட விட்டது என்று உபத்திரவம்
குறைவாகவும் உதவி கூடுதலாகவும் கேத்தி செய்கிறாள்.
அதற்காக இப்படி முன்னூறு வருஷம் முன்னால் உசிரை விட்ட ஒருத்தனைப் புது
பாய் பிரண்ட் என்று கூட்டிக் கொண்டு வந்து ராக்கூத்து அடிக்கும் சலுகை
எல்லாம் இந்தப் பெண்ணுக்குத் தர முடியாது சரவணனால்.
அந்த முப்பாட்டன் ராணுவ வீரன் முழியே சரியில்லை. தாடியும் மீசையும்
வினோதமான ஆங்கில உச்சரிப்புமாக இருந்த அவன் வருஷக் கணக்காகக் குளிக்காதவன்
என்று ஏனோ சரவணனுக்குத் தோன்றியது.
அந்தப் பக்கத்தில் இருந்து மொச்சு மொச்சு என்று சத்தம் வர, எக்கேடும்
கெட்டுப் போங்க என்று ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு சரவணன் தூங்க
ஆரம்பித்தான்.
காலையில் எழுந்ததும் பார்க்கக் கெட்டிலில் கேத்தி தண்ணீர் நிரப்பி
இருந்தாள். செய்தித்தாள் மேஜை மேல் இருந்தது. டாய்லெட்டில் புது உருளை
டாய்லெட் பேப்பர் மாட்டி வைத்துவிட்டுப் போயிருந்தாள். சக
குடித்தனக்காரியால் சின்னச் சின்ன சவுகரியங்கள்.
ஆனாலும் நஜீப் மேல் கோபம் மட்டும் மாறாமல் சரவணன் விரைப்பாக எழுந்தான்.
இன்றைக்கு எப்படியும் முடிவு கட்டிவிட வேண்டும். தொலைபேசியை எடுத்தான்.
மாஃப் கீஜியே ஜனாப் .. உங்களுக்கு வீடு பிடிக்கலேன்னா வேறே உடனே
மாத்திக் கொடுத்திடறேன் .. ஆனால் இங்கே கொடுத்த அட்வான்ஸ் அம்போதான் ..
சரியா .. பேயாவது .. பிசாசாவது .. ராத்திரியிலே கொஞ்சமாத் தண்ணி போடுங்க
ஜனாப்.
நஜீப் சொன்னபடிக்கே ஜூபிளித் தெருவில் இன்னொரு வீடு பார்க்கக் கூட்டிப்
போனான். வீடு விக்டோரியா காலப் பழசு இல்லை. புத்தம் புதுசும் இல்லை.
இரண்டாம் உலகப் போர்க் காலத்துக் கட்டடம்.
இங்கேயும் ஒரு மாத வாடகை முன்பணம் தண்டம். நஜீபுக்கு ஐம்பது சதவிகிதம் தள்ளுபடியில் புரோக்கர் கமிஷன்.
ஆவி உலகத் தொந்தரவு இல்லாமல் ராத்திரி இனிமேல் நிம்மதியாகத் தூங்கலாம்.
சாப்பிட்டு விட்டு ஹாய்யாக சீட்டி அடித்தபடி வீட்டுக்குள் வந்து
ரஜாய்க்குள் புகுந்து, புதுவீட்டில் கல்யாணமாகி குடியும் குடித்தனமுமாக
இருப்பதைக் கற்பனையில் ரசித்தபடி தூங்கப் போனான் சரவணன்.
நடு ராத்திரி திடுதிப்பென்று தூக்கத்திலிருந்து எழுந்ததும் அவன் அலறிக் கொண்டிருந்த டிவியை முதலில் அணைத்தான்.
ஏன் அதை ஆஃப் பண்ணே ?
கேத்தி தான். அறைக்கூரையில் பதினேழாம் நூற்றாண்டு பாய் பிரண்ட் மேல்
சாய்ந்தபடி கேட்டாள். அந்த மடையன் அவள் தலைமுடியில் வாசனை பிடித்துக்
கொண்டு மஞ்சள் பல் தெரிய ஈ என்று இளித்தான்.
கேத்தி .. நான் நாளைக்கு வீடு மாத்திப் போறேன் .. உன்னோட உதவிக்கு
எல்லாம் நன்றி .. ஆனாலும் ஒண்ணு .. நீ இப்படி முன்னூறு வருஷம் முந்தினவனோட
குடித்தனம் நடத்தறது கொஞ்சமும் நல்லா இல்லே ..
உசிரோடு இருக்கற என் பழைய பாய் பிரண்டைப் பார்த்தா நீ இப்படிச் சொல்ல
மாட்டே .. தொந்தியும் தொப்பையும் வழுக்கையும் ரெண்டு விவாகரத்துமா ஆளே
கிழண்டு போய்க் கிடக்கான் .. என் ஜார்ஜ் மாதிரியா ? ஜார்ஜ் உனக்கு பிரஞ்சு
முத்தம் தெரியுமா ?
அந்தத் தாடிக்காரன் பிரஞ்சு கில்லட்டின் தான் தெரியும் என்றான்.
இதான் பிரஞ்ச் கிஸ்.
சரவணன் முகத்தைத் திரும்பிக் கொண்டான்.
எங்கே போகப் போறே ?
கேத்தியின் பாய் பிரண்ட் புதுசாக ஒரு சங்கதி அனுபவப்பட்ட சந்தோஷத்தோடு விசாரித்தான்.
குளிக்காதவன். நாக்கு வழித்துப் பல்லுக் கூடத் தேய்த்திருக்க மாட்டான்
முன்னூறு வருஷமாக. இந்தப் பெண்ணுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்.
எங்கே போகப் போறே ? சும்மாச் சொல்லு .. நாங்க உன்னோட வரலை .. பழகின இடத்தைத் தவிர நாங்க எங்கேயும் புதுசாப் போக மாட்டோம் …
கேத்தி சிரித்தபடி கீழே வந்து அவன் முகத்தை வருடினாள். எர்த் ஆகாத
வாஷிங் மெஷினைத் தொட்டதும் ஷாக் அடிக்க, உறைபனியும் மேலே படிந்து விலகியது
போல் சரவணன் உணர்ந்தான்.
விலாசம் சொன்னான்.
தாடிக்காரன் ஓவென்று சிரித்தபடி அங்கேயும் இங்கேயுமாக மிதக்க
ஆரம்பித்தான். கேத்தி சரவணனின் கட்டிலில் சாய்ந்து அடக்க மாட்டாமல்
சிரித்தாள்.
அது ஜார்ஜ் வீடுதான் .. அவனுக்கு வாஷிங் மெஷின் இயக்கத் தெரியாது. ஆனா,
வெங்காயம் நல்லா நறுக்குவான் .. கவலைப்படாதே .. ஜார்ஜ் இங்கே வர மாதிரி
நான் இனிமே அவனோட இடத்துக்கு வந்து உன்னைப் பாத்துக்கறேன் ..
சரவணன் தூங்கிப் போயிருந்தான்.
நன்றி - தமிழ்க்கதைகள் எஸ் ராம கிருஷணன்