Showing posts with label ஐபிஎல் போட்டி. Show all posts
Showing posts with label ஐபிஎல் போட்டி. Show all posts

Sunday, June 15, 2014

நெஸ் வாடியா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்

தன்னுடைய முன்னாள் காதலனும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவருமான நெஸ் வாடியா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்துள்ளார்.

நெஸ் வாடியாவுடன் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. | கோப்புப் படம்

இது தொடர்பாக, மும்பை மெரைன் ட்ரைவ் காவல் நிலையத்தில், பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த புகார் குறித்து 'தி இந்து'விடம் அதிகாரிகள் கூறுகையில், "கடந்த மே மாதம் 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தபோது, தன்னிடம் நெஸ் வாடியா தகாத முறையில் நடந்துகொண்டதாக ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்துள்ளார்.



அன்றைய தினம், மைதானத்தின் கார்வார் பெவிலியனில் வைத்து, தன்னை பல முறை பலவந்தமாக நெஸ் வாடியா தொந்தரவு அளித்ததாகவும், பொது இடத்தில் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டதால், அங்கிருந்து விலக முயன்றபோது தன்னை அங்கிருந்த செல்லவிடாமல் தடுத்ததாகவும் அந்தப் புகாரில் ப்ரீத்தி ஜிந்தா விவரித்துள்ளார்.



நெஸ் வாடியா அத்துமீறி நடந்துகொண்டபோது, அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றபோது, பலர் முன்னிலையில் கொச்சையான வார்த்தைகளில் பேசியதாகவும், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி ஜிந்தாவின் இந்தப் புகார்கள், ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலானது.



இனியும் இதுபோன்ற தொந்தரவுகளை அளிக்க வேண்டாம் என்று நெஸ் வாடியாவிடம் இ-மெயில் அனுப்பியதாகவும், பிசிசிஐ அதிகாரிகளிடம் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளின்போது தன்னையும் நெஸ் வாடியாவையும் அருகருகே அமரும்படி இருக்கைகளை அமைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் ப்ரீத்தி கூறியுள்ளார்.



ஆனால், சில அதிகாரிகளோ ஐபிஎல் போட்டிகள் நடந்துவரும் வேளையில், இதுபோன்ற கோரிக்கைகளையும், நெஸ் வாடியா மீது குற்றச்சாட்டுகளை எழுப்ப வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியதாகவும், இனி அவரிடமிருந்து தொந்தரவு எதுவும் வராமல் இருக்கவே தற்போது இந்தப் புகாரை அளித்துள்ளதாகவும் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்" என்றனர் அதிகாரிகள்.
நடிகை ப்ரீத்தி ஜிந்தா


இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் தேதியில் நடந்த ஐபிஎல் போட்டியின், சிசிடிவி கோப்புகளை வைத்து ஆராய உள்ளதாகவும், அதன் பிறகே இந்தப் புகார் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதனிடையே, ப்ரீத்தி ஜிந்தாவின் புகாரை முற்றிலுமாக மறுத்த நெஸ் வாடியா, இது அடிப்படை ஆதாரமற்றது என்றும், இது குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.





 THANX - THE HINDU