Showing posts with label ஐங்கரன் நிறுவனம். Show all posts
Showing posts with label ஐங்கரன் நிறுவனம். Show all posts

Wednesday, April 09, 2014

'கத்தி' தயாரிப்பாளர் பேட்டி - ராஜபக்சேவுக்கு ஆதரவானது அல்ல லைக்கா நிறுவனம்:

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். 



விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். 


இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன், இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என்று தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 


அப்போது அவர் கூறும்போது, "இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து பணியாற்றிகிறோம் என்று இந்த படத்திற்கு சம்பந்தமில்லாத செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தியில் உண்மையில்லை. நான் 27 வருடங்களாக சினிமா துறையில் நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். 



நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். நாட்டை விட்டு 30 வருடங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன். அங்கே தமிழர்கள் என்றால் புலிகள் என்று தான் சொல்வார்கள். 



உங்களுக்கே தெரியும்... ஐங்கரன் நிறுவனம் 2000 படங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் வெளியிட்டு இருக்கிறோம். 20 வருடங்களுக்கு மேலாக லைக்கா நிறுவனத்தின் சுபாஷ் கரன் எனக்கு நண்பர். அவர் இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்தவர். அவர் 100 சதவீதம் தமிழர். அம்மா முல்லைத்தீவு, அப்பா திருக்கோணமலை. இப்போ லண்டனில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். 



நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் எங்கள் நிறுவனத்திற்குதான் தேதிகள் கொடுத்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் எங்களால் தனியாக பண்ண முடியாமல் இருந்து வந்தது. அப்போது தான் எனது நண்பரான சுபாஷ் கரன், "இவ்வளோ அனுபவத்தை வைச்சுக்கிட்டு ஏன் சும்மா இருக்கீங்க, நாம சேர்ந்து பண்ணலாம்"னு சொன்னார். இந்தப் படத்தினை 100 சதவீதம் நான் மட்டும் தான் பண்றேன். அவர் எனக்கு பண உதவி பண்றார் அவ்வளவு தான். 



லைக்கா நிறுவனம் உலகத்தில் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாகும். அவர்களுக்கு தொழில்முறை போட்டிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிளப்பிவிடும் செய்திகள்தான் இவை. 2013-ல் சுபாஷ் கரன் கம்பெனியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள். நானும் உடன் போயிருந்தேன். அவர் பிறந்த இடம், உள்ளிட்ட இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். 


தனியார் ஹெலிகாப்டர்கள் எல்லாம் இலங்கை விமானப் படையினரிடம் இருந்துதான் பெற முடியும். 25 பேர் அமரக்கூடிய இரண்டு ஹெலிகாப்டர்கள் எடுத்து, 5 நாட்கள் சுற்றிப் பார்த்தோம். அப்படிச் சுற்றிப் பார்த்ததில் அவர் நிறைய உதவிகளை பண்ண முன்வந்தார். இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வேண்டும் என்று இந்தாண்டு ரூ.20 கோடியும், அடுத்தாண்டு இன்னும் அதிகமாகவும் செய்ய முன் வந்திருக்கிறார். 


நாங்கள் போயிட்டு வந்தது அனைத்துமே உதவுவதற்காக மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு டீலிங்கும் கிடையாது. இலங்கை அரசிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு லைக்கா நிறுவனம் சிறு நிறுவனம் அல்ல. 


ராஜபக்சேவுக்கும் சுபாஷ் கரணுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது. அதுமட்டுமல்லாது, இந்தப் படத்தில் நான் இப்போது அவரை தயாரிப்பாளராக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால், வந்தச் செய்தி உண்மையாகி விடும். அதனால் மட்டுமே இதனை செய்யாமல் இருக்கிறேன். 


'கத்தி' படத்தினைப் பொறுத்தவரை 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விஜய் இருவேடத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும். இப்போதைக்கும் என்னால் இதை மட்டுமே கூறமுடியும்" என்றார் அவர். 


thanx - the hindu