எவ்வித முன்னேற்பாடும் இன்றி ஒரு பிரம்மாண்டத் திரைவிழா நடைபெற்றால்
எப்படியிருக்கும் என்பதற்கு ‘ஐ' இசை வெளியீடு ஓர் உதாரணமாகிவிட்டது.
பிற்பகல் 3:30 மணியிலிருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று
டிக்கெட்களில் போடப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மணி
7:30ஐ தாண்டிவிட்டது.
டிக்கெட்களில் போட்டிருந்த நேரப்படி வந்தவர்கள், அரங்கினுள் நுழைந்தவுடன்
அதிர்ச்சி காட்டினார்கள். காரணம் அப்போதுதான் அரங்குகள் அனைத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது 7:30
மணியைத் தாண்டிவிட்டது.
நடிகர் சிம்ஹா, பாடகி சின்மயி இருவரும் விஜபிகள் திரண்ட இந்த விழாவிற்குப்
பொருத்தமான தொகுப்பாளர்கள் அல்ல. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது
“ராணாவை மேடைக்கு அழைக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
நடிகர் ராணா “ நான் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்” என்று ஏற்கனவே
அறிவித்திருந்தது தொகுப்பாளர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
வியப்பில் ஆழ்த்திய விக்ரம்
இப்போது உங்கள் முன் விக்ரம் நடனமாடுவார் என்று அறிவித்து, விளக்குகள்
அணைக்கப்பட்டன. சிறிது நேரம் கழித்துத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்
தற்போது ‘அனிருத் உங்கள் முன் பாடல் பாடுவார்’ என்றார்கள். அவரது பாடலைத்
தொடர்ந்து விக்ரம், ஏமி ஜாக்சன் நடனமாடினார்கள். படத்தில் இடம்பெற்ற அதே
ஸ்பெஷல் மேக்கப்புடன் விக்ரம் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. நடனமாடி
முடித்துவிட்டு மைக் பிடித்த விக்ரம் “ரஜினி, அர்னால்டு இருவருக்கும்
நன்றி’ கூறியபோதுதான், இது விக்ரம் என்று அடையாளம் தெரிந்தது.
வெளியேறிய அர்னால்டு
நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டி ருந்த அர்னால்டு முன்பு ‘பாடி பில்டிங் ஷோ’
நடைபெற்றது. சிக்ஸ் பேக் வைத்த இருபதுக்கும் அதிகமான ஆணழகர்கள், ஷங்கர்
படங்களின் பாடல்களுக்கு ஏற்ற வாறு பாடி பில்டிங் நிகழ்ச்சியை அரங்கேற்றி,
அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய
அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.
இதைக் கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சிம்ஹா குறுக்கிட்டு,
“படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்'’ என்று கூறவே, “நான்
எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று
சொல்லித் தனது பேச்சைத் தொடங்கி முடித்தவர் அரங்கினை விட்டு வெளியேறினார்.
இசைத் தட்டை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து
வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அர்னால்டு இல்லாமல், இசையை ரஜினி வெளியிடப் புனித் ராஜ்குமார்
பெற்றுக்கொண்டார். அப்போது படத்தின் நாயகன் விக்ரம், நாயகி ஏமி ஜாக்சன்
ஆகியோரும் மேடையில் இல்லை.
‘தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார்
ஜாக்கி சான். ‘ஐ' விழாவில் காலம் தவறாமையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்
அர்னால்டு. இரண்டுமே ஆஸ்கர் நிறுவனம் தயாரித்த படங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. யங் செய்த பபிள்ஸ் மேஜிக், ஏ.ஆர். ரஹ்மானின் இசை
நிகழ்ச்சி, ஐ உருவான விதம் என எதையும் பார்க்க அர்னால்டு இல்லை.
நிகழ்ச்சி தொடங்கும் முன் அரங்கினுள் முதல் ஆளாக வந்த ரஜினி, கடைசி வரை
உட்கார்ந்திருந்து அசத்தினார். ஷங்கர், விக்ரம் ஆகியோரை வெகுவாகப்
பாராட்டினார்.
‘ஐ' ரகசியங்கள்
# ‘ஐ’ வெளியான விதத்தைக் காட்டும் காட்சித் தொகுப்பிலிருந்து தெரியவந்த விஷயங்கள்:
# விக்ரம் பாடி பில்டராக நடித்திருக்கிறார். அவருடைய ஒரே லட்சியம் ‘மிஸ்டர் மெட்ராஸ்’ பட்டம் வெல்வது.
# விக்ரம் பாத்திரத்திற்கு அர்னால்டின் பழைய லுக் இருக்க வேண்டும் என்று
முடிவெடுத்து அவரைப் போலவே ஹேர் ஸ்டைலை வைத்திருக்கிறார்கள்.
# கூன் விழுந்திருப்பது போன்ற கெட்டப்பில்தான் விக்ரம் அதிக நேரம் வருவார்.
அந்தப் பாத்திரத்தை அதிக சிரத்தை எடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.
# படத்தில் ஒரு சைக்கிள் சண்டைக்காட்சி இருக்கிறது. பீட்டர் மிங் என்ற
ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் உலகம் முழுவதும் உள்ள சைக்கிள் பயிற்சியில்
பேர் போனவர்களை நடிக்க வைத்திருக்கிறார்.
# ஒரு பாடலில் விக்ரம், ஏமி ஜாக்சன் இருவரும் விளம்பர மாடலாக நடித்திருக்கிறார்கள்.
# விக்ரம் ஒரு காட்சியில் மிகவும் உடல் இளைத்து கேராவனிற்குள் ஏறுவது
போன்று ஒரு காட்சி இருந்தது. உண்மையில் விக்ரம் இந்தப் படத்திற்கு எவ்வளவு
சிரமப்பட்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்றாக இருந்தது. மொட்டை
அடித்து, சிவப்பு நிற டி-ஷர்ட்டில் விக்ரம் மாதிரியே தெரியவில்லை.
thanx - the hindu
a