காமெடி எக்ஸ்பிரஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
கீர்த்தனாரம்பத்திலே, ஒபாமாவும் ரோம்னியும் முட்டிக் கொண்டிருந்த காலகட்டத்திலே, இந்தக் கதை ஆரம்பிக்கிறது. தனக்கு
‘கன்னா பின்னா’ வென்று தேர்தல் நிதி வாரிக் கொடுக்கும் NRI இந்தியர்களைக் குஷிப்படுத்த அதிபர் ஒபாமா வருடாவருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது தெரிந்ததே.
நவம்பர் 6, 2012 எலெக்ஷன் ஜுரம் தொற்றிக் கொண்ட நிலையில் நவம்பர் 13ல் வரும் தீபாவளியை அக்டோபரிலேயே கொண்டாடிவிட அமெரிக்க அரசு உத்தரவு பறக்கிறது.
வெள்ளை மாளிகையில் எக்கச் சக்கமான இந்தியர்கள் கூட்டம்.
வடக்கத்தி சேட்டு ஒருவர் ஒபாமாவின் காதில் கிசுகிசுக்கிறார்: வழக்கமா அல்வா சாப்பிட்டுட்டு போட்டோ எடுத்துக்கிட்டு போயிடுவோம். அடுத்த தீபாவளிக்கு நீங்க இருப்பீங்களா போயிடுவீங்களான்னு தெரியல."
ஒபாமா சேட்டை ஒரு மாதிரியாக முறைக்க, சேட்டு தொடர்கிறார்.
ஐ மீன், அமெரிக்க ஜனாதிபதியா. அதனால இந்த வருஷம் நீங்க உங்க கையால ஒரு வெடியாவது கொளுத்தணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க."
ஒபாமாவால் என்றைக்குத்தான் உடனடியாக முடிவெடுக்க முடிந்தது? புருவத்தைச் சுருக்கி யோசிக்கிறார். உடனடியாக உதவியாளர் ஒருவர் ஓடி வந்து, சார், எல்லாருமே ரூ. 10,000 ப்ளேட்வாலா ஆளுங்க. ஒரே ஒரு வெடி கொளுத்தினா ஒண்ணும் கொறைஞ்சிடாது. அதுக்கு வேணும்னா தனியா ஒரு ரேட்டு போட்டு கலெக்ஷன் பண்ணிடறேன்."
உடனே பிரகாசமான ஒபாமா ஒரு ஒத்தை வெடியை ரோஸ் கார்டனில் கொளுத்த ஆயத்தமாகிறார். எல்லோரும் போட்டோ பிடிக்க ரெடி. ஆனால் அந்த ஒத்தை வெடி வெடிக்காமல் நமுத்துப் போய் பிசுபிசுக்கிறது.
உதவியாளர் ஓடிவந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்து, சத்தமாக 'Made in China' என்கிறார்.
ஒபாமா உடனே தொண்டையைச் செருமியபடி,சீனர்கள் நம்மை ஏற்றுமதியில் ஏமாற்றுவது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு நூடுல்ஸ் பாக்கெட்டிலும் எத்தனை நூடுல்ஸ் இருக்கிறது என்று அவர்கள் கண்டிப்பாகத் தெரிவித்தே ஆகவேண்டும். யாரங்கே? இது அரசாணை... உடனே தண்டோரா போடுங்கள்," என்று கர்ஜிக்கிறார்.
வழக்கம்போல் அவருடைய கட்சி ஜால்ரா கூட்டம் விசிலடிக்கிறது.
எந்த இந்தியனாவது இன்னொரு இந்தியனை முன்னால நிற்கவிடுவானா? ‘இதுதான் சமயம்’ என்று தமிழர் ஒருவர் சேட்டின் அடித்தொடையில் ‘நறுக்’கென்று கிள்ள, அவர் பயந்து விலக, அவருக்கு முன்னால் போய் நின்று, அது போனா போவட்டும், சார், இதை வெடிங்க. இது Made in Sivakasi, Tamil Nadu"
சிவகாசி கெடக்கட்டும்யா, தென்காசியில உங்க ஊரு அர்நால்ட் ஷ்வாசநெகர் இருக்காரே, அவரு சௌக்கியமா?"
மிஸ்டர் ப்ரசிடெண்ட், நெசமாவே உங்களுக்கு சரத்தைத் தெரியுமா?"
என்னது தெரியுமாவா? வேர்ல்ட் வைட் ஒரே நேரத்தில நெட்ல தமிழ்ப் படம் ரிலீஸ் பண்ணின ‘ஜக்கு பாய்’ அவருதானேயா?"
அடேடே, ஒபாமாவுக்கு அவ்வளவு தூரம் ஜெனரல் நாலட்ஜா?
போட்ரா போன சித்தப்புக்கு!
நெசமாவே போன்ல ஒபாமாதானுங்களா? நானு நாட்டாமை 2, கோச்சடையான் 3, ராணா 4 எல்லாத்திலயும் கும்பலோட கோவிந்தாவா நடிக்கிறேன்னு அவருகிட்ட சொல்லிட்டீங்களா?" - சமத்துவக்கட்சியின் சகலகோடி
11 உறுப்பினர்களும் ஒருங்கே தலையாட்ட, குஷியாகிறார் சரத்ஜி!
யூ ஸீ மிஸ்டர் ஒபாமா, மை சப்போர்ட் ஈஸ் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ. நானே 2011ல தமிழ்நாட்டு சி.எம்.மா ஆகலாம்னு தான் இருந்தேன். சரி, அப்புறமா பார்த்துக்கலாம்னு இப்ப மறுபடியும் டெம்பரவரி பவ்யமாயிட்டேன். ஐ கேன் அரேஞ்ச் ஈவன் டன் க்ரோர் சப்போர்ட்டர்ஸ் ஃபார் யூ. ஆனாக்க இந்தக் குண்டுச்சட்டியில குதிரை ஓட்ற கூடங்குளம்வாலாஸ் எல்லாருமே யூஸ்லெஸ்னு நீங்க ஒரு பதில் ஸ்டேட்மென்ட் மட்டும் விட்ருங்க.
அப்படியே ஹாலிவுட்ல எதுனா ஒரு படத்துல பல்டி அடிக்கிற ஸ்டன்ட் சீனா இருந்தாலும் பரவாயில்ல, நீங்க சொல்லி அதை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா உலகநாயகனுக்கு மின்னாடியே நானும் உலக சினிமாவுல..."
கால் கனெக்ஷனே சரியில்லயே," என்று காதைக் குடைந்தபடியே ஒபாமா லைனை டிஸ்கனெக்ட் செய்கிறார்.
வெள்ளை மாளிகையில் ராம்னிக்கு இல்லாத அல்லக்கைகளா? ஒபாமா - சித்தப்பு சமத்துவ மீட்டிங் நியூஸ் உடனே பரவி, அவரும் மேட்சிங்காகப் போடுகிறார் கேப்டனுக்கு ஒரு கால்!
ஹா, திஸ் ஈஸ் ராம்னி!"
ஏற்கெனவே கூடாரம் காலியானதில் பேஸ்தடித்துக் கிடக்கும் கேப்டன் போன் அடித்ததிலேயே செம கடுப்பாகிறார்.
வேட்டியை மடித்துக்கட்டி நாக்கைத் துருத்தி, ஏ, ஆர்ராது ராமுநீ, யார்கிட்ட விளையாடறீங்க, யாரோ மெனுவில இல்லாத வெள்ளைக்கார பேரையெல்லாம் சொன்னா நாங்க மெரண்ட்ருவமா?"
காலைத் தூக்கிச் சுவரில் வைத்து எகிறத் தயாராகும் தலைமையை, சோர்ந்து கிடக்கும் கட்சிக்காரர் ஒருவர் கூல் செய்கிறார்.
இல்லீங்க, நெசமாவே ராம்னிங்கறது அமெரிக்க அப்போசிஷன் லீடர்ங்க. ஒபாமாவை எதிர்த்து நிக்கிறாரு. உங்ககிட்ட ஏதோ ஆலோசனை கேட்கணும்கிறாரு."
ஏ, அதையெல்லாம் மொதல்லயே சொல்ல மாட்டீங்களாடா! உங்களுக்கெல்லாம் வெட்டிச் சம்பளம் அவனாடா கொடுக்குறான்?"
யூ ஸீ மிஸ்டர் ராம்னி, டோண்ட் வொர்ரி அபௌட் அம்மா, ஐ மீன் ஒபாமா. ஒபாமாவ ஒழிக்கணும்னு நீங்க நெனச்சீங் கன்னா மொதல்ல அவரோட கூட்டு வைக்கணும். ஜெயிச்சி வந்த உடனே அவருகிட்டயே பயங்கரமாய் மோதணும். அப்புறமா கூட்டும் கிடையாது, பொரியலும் கிடையாது எல்லாமே அவியல்தான்னு ஒரு ஸ்டேட்மென்டும் விடணும். நாட்ல அவனவனும் ஒண்ணும் புரியாம தலைய பிச்சிப்பான், நாம ஃபுல்பூஸ்ட்ல யாரையாவது ‘பளார் பளார்’னு டைமிங்கா நாலு நெத்து நெத்திட்டுப் போயிட்டே இருக்கலாம்.
ஹலோ, ஹலோ, இருங்க, இருங்க, காலை கட் பண்ணிறாதீங்க. மொதல்ல அமெரிக்காவுல எங்க இந்தத் திராணி கிடைக்குதுன்னு மட்டும் கேட்டு வாங்கி பத்து ஃபுல் பெட்டி அனுப்புங்க. இங்ஙன ஒரு பயபுள்ளைக்கும் இந்த பெசல் நாலெஜ்ஜு பத்தாது. அக்காங்!"
ராம்னி தடாலென்று கீழே விழுந்து மூர்ச்சையாகிறார்!
நன்றி - கல்கி