விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்
1. ''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''
2. ''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''
''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''
3. ''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?''
''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...
'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''
\
4.''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?''
''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர் நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.
ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது: A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''
5. '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?''
'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''
6. ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?''
''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.
இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.
கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது. அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''
7. ''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?''
''ஒருபோதும் இல்லை. காரணம், இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.
10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''
8. ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?''
அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது.
லஞ்சம் வாங்குவதைத் தனது திறமை என்று எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது.
அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''
- அடுத்த வாரம்...
''உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?''
''உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே... பயமா?''
''சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?''
- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...
நன்றி - விகடன்