எனது இந்தியா!
தையல்காரர் தயாரித்த
கொடி!
இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டதன் பின்னால்,
பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இந்திய தேசியக் கொடி முதன்முதலாக
கல்கத்தாவில் ஏற்றப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்கு முன்பே
பெர்லின் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியப் புரட்சியாளர் மேடம்
காமாவால் 1905-ம் ஆண்டிலேயே ஏற்றப்பட்டது என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
மேடம் காமா தயாரித்த அந்தக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள்,
கீழே பச்சை என்று மூன்று
பட்டைகளும்,
சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், எட்டு நட்சத்திரங்களும்
பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் பட்டையில் நீல வண்ணத்தில் 'வந்தே
மாதரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்ததாகவும், பச்சைப் பட்டையின் இடது
மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் பிறை நிலவு இருந்ததாகவும்
கூறுகின்றனர். மேடம் காமா எனப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861-ம் ஆண்டு
செப்டம்பர் 24-ம் தேதி பம்பாயில் வாழ்ந்து வந்த செல்வச்செழிப்பு மிக்க
பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.
இளம் வயது முதலே தேச விடுதலைப் போரில்
அக்கறையுடன் இருந்தார் காமா. அதனால், அவருடைய தந்தை 1885-ம் ஆண்டு ஆகஸ்டு
3-ம் தேதி ருஸ்தம் காமா என்பவருக்கு மணம்செய்து வைத்தார். ருஸ்தம் காமா,
பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால், மனைவி மேடம் காமாவோ, நேர்
விரோதமானவர். அதனால், வீடு அரசியல் களமானது.
பம்பாயில் பிளேக் நோய் பரவியபோது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில்
ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக, அவருக்கும் அந்த நோய் ஏற்பட்டது.
இருப்பினும், தேச சேவையில் தொடர்ந்து பணியாற்றினார். நோய் காரணமாக உடல்
நலிந்து பலவீனமாக இருந்ததால், அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வு
எடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினர். அதனால், மேடம் காமா 1902-ம்
ஆண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய
நாடுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்ற மேடம் காமா, 1905-ம் ஆண்டு
லண்டனுக்குச் சென்றார். அங்கே, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழுநலம் பெறச் செய்தது.
அப்போது, லண்டனில் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார்
ஒன்றரை ஆண்டு காலம் அவருடைய செயலாளராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில்
லண்டனில் இயங்கி வந்த, 'இந்தியா ஹவுஸ்’ இந்திய விடுதலைக்காகப் பாடுபடுவோரை
எல்லாம் ஒன்று திரட்டியது.
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே.சு.ஐயர், வீர
சாவர்க்கர் போன்றவர்களின் நட்பும் மேடம் காமாவுக்குக் கிடைத்தது. 1907-ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட்
மாநாட்டில் இந்திய தேசியக் கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக்
காட்டிய மேடம் காமா, 'இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும்
எங்கள் தேசியக் கொடி. இந்தக் கொடி இப்போது வானளாவப் பறக்கிறது'' என
இந்தியாவின் முதல் கொடியைப் பறக்கவிட்டார். இந்தக் கொடி உருவாக்கத்துக்கு
தனக்கு ஆலோசனை சொன்னவர்கள் வ.வே.சு, ஐயர் மற்றும் வீர சாவர்க்கர் என்று
காமா குறிப்பிட்டுள்ளார்.
1917-ம் ஆண்டில் அடுத்த தேசியக் கொடி உருவானது. இதை வடிவமைத்தது
திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும். அந்தக் கொடியில் மேலி ருந்து கீழாக
ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும்
வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் ஏழு பட்டைகளில்
நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை
நிற இளம் பிறையும் அதற்கு மேல் ஒரு நட்சத்திரமும் இடம்பெற்று இருந்தன.
உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டு
இருந்தது.
இதை, தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப்
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்துகொண்டு அவர்களுடன் நாம் சமரசமாகப் போக
வேண்டுமா? என்று பலரும் குமுறினார். அதனால், அந்தக் கொடி கைவிடப்பட்டது.
அதன் பிறகு, 1921-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து
இந்தியக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
அப்போது, பிங்காலி
வெங்கைய்யா என்பவர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி
ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். பிங்காலி வெங்கையா ஒரு தையற்
கலைஞர். அவர் உருவாக்கிய தேசியக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன.
மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும்
இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்புகளான இந்து முஸ்லிம் இருவரையும்
குறிக்கிறது என்றார் பிங்காலி வெங்கையா. அந்தக் கொடியைப் பரிசீலித்த
காந்திஜி, அந்த தையற் கலை ஞரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, கூடுதலாக சில
யோசனை வழங்கினார்.
அதை, வெங்கையா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அன்றே அந்தக்
கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொடுத்தார். அதுவே பின்னாளில் நமது
தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் உருக்கொண்டது. நமது தேசியக் கொடிக்கு
ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பெங்காலி வெங்கைய்யா, அரசால் எந்த
மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-ம் ஆண்டு இறந்தார்.
அகில
இந்திய காங்கிரஸ் கட்சியானது அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி இந்தக்
கொடியை அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே,
காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநா டுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது.
ஆகவே, பின்னர் அந்தக் கொடியை காங்கிரஸ் அங்கீகரித்துக்கொண்டது. கொடியில்
இடம் பெற் றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாக இந்து, சீக்கியர்
மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்
காரணமாக, சில இடங்களில் சண்டை நடந்தது.
1931-ம் ஆண்டு கராச்சியில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது, அனைத்துப்
பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு தேசியக் கொடியை உருவாக்குவது
அவசியம் என்றும் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்றும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட மூவண்ணக் கொடியில்
ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள
வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று
தீர்மானிக்கப்பட்டது.
அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடி ஆனது. 1947-ம்
ஆண்டு ஜூலை 22-ம் தேதி அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக்
கொடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியின்
கொடியாகவும் அதுவே இருந்ததால், அரசாங்கக் கொடிக்கும் கட்சிக் கொடிக்கும்
வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக
அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.
1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி,
இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால்
நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், சம அளவில்
அமைந்த மூன்று நீண்ட செவ்வகப் பாகங்கள்கொண்ட நீள்சதுர மூவண்ணக் கொடியை
அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம்
குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. மத்தியில்
உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச்
சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்தியத் தர நிர்ணயக் கழக அலுவலகத்தில்
முத்திரையிட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு
அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் ராணுவ உடைத் தயாரிப்புத்
தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமது கொடியில் உள்ள
இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேஸரி’, 'இந்தியப் பச்சை’ என்று பெயர்.
உலகில் உள்ள வண்ணத் தர நிர்ணயப் பட்டியல்களில் இந்த இரு வண்ணங்களும் இல்லை.
எனவே, இந்தியத் தேசியக் கொடிக்கு என்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு
தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய
நாட்டின் தேசியச் சின்னம், மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய
வாசகம் 'சத்யமேவ ஜெயதே’. அதன் பொருள், வாய்மையே வெல்லும். இது, முண்டக
உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு
தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களைப் பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற
அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்மச் சக்கரங்கள் எனப்படுகின்றன. அதில் 24
ஆரங்கள் இருக்கின்றன. இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக்கொண்ட தர்மச்
சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை
ஆகியவற்றின் உருவங்கள் அமைந்துள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு
சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்றன. சாரநாத்தில், மகான்
புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோகச் சக்கரவர்த்தி ஓர்
உயரமான கல் தூணை நிறுவினார். அதுவே, தேசிய சின்னமாகத் தேர்வு
செய்யப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும், அரசு விழாக்களிலும்
மட்டுமே நாம் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை முதன்மைப்படுத்துகிறோம்.
அதுவும்கூட, சம்பிரதாயமாகவே.
இவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நமது தேசிய அடையாளங்கள். அதன்
மகத்துவத்தை நாமே அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தப்படவேண்டிய உண்மை.
thanx - ஜூ வி , எஸ் ராமகிருஷ்ணன்