ஜானகியின் பாடல்கள் கொடுக்கும் பரவசத்தை அவருடனான
உரையாடலும் கொடுக்கும் என்பதை அந்த அரை மணி நேரத் தின் ஒவ்வொரு நொடியும்
உணர்த்திக்கொண்டே இருந்தது. தனக்கு அளிக்கப்பட்ட 'பத்மபூஷண்’ விருதை
மறுத்ததன் மூலம் அகில இந்தியக் கவனம் ஈர்த்தவர், இப்போது அந்தப் பரபரப்பின்
சின்ன சாயல் கூட இல்லாமல் தன் வாழ்க்கையின் முக்கியமான நினைவுகளைப்
பகிர்ந்துகொண்டார்.
''நான் முதல்ல பாடுனது வி.சந்திரசேகரன் என்கிற ஒரு மேடை
நாடகக் கலைஞருக்காக. அற்புதமான மோனோ ஆக்டிங் கலைஞர் அவர். அவரோட நாடக
இடைவேளைகளின்போது என்னைப் பாடவைப்பார். அப்படி ஒரு சமயம் போனபோது, அவரோட
பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோ கீழே விழுந்துடுச்சு. எடுத்துப் பார்த்தா
அது ஒரு கம்பீரமான இளைஞரின் படம். என்னமோ தெரியலை...
பார்த்த உடனே அவர் மேல
ஒரு ஈர்ப்பு உண்டாகிருச்சு. அப்புறம் அவர் சந்திரசேகரனோட மகன்
ராம்பிரசாத்னு தெரிஞ்சிக் கிட்டேன். அவரை நேர்ல பார்க் காமலேயே காதலிக்க
ஆரம்பிச் சிட்டேன். தெய்வீகக் காதல் மாதிரினு வெச்சுக்கங்களேன். ஒவ்வொரு
நாள் மேடையில பாடும்போதும் அவர் கூட்டத்தில் அமர்ந்திருக்காரான்னு கண்கள்
தேடும். இல்லைன்னா மனசு ஏங்கும்.
ஒரு நாள் சந்திரசேகரன் சார், 'இன்னைக்கு என் மகன் உன்
பாட்டைக் கேட்க வந்திருக்கான்’னு சொன்னார். அந்த வார்த்தைகள் உண்டாக்கிய
பரவசத்தை இன்னும் என்னால மறக்க முடியலை. அன்னைக்குக் கண்கள் மூடி
மெய்மறந்து பாடினேன். கண்ல ஆனந்தக் கண்ணீர் கட்டிக்கிச்சு. பாடி
முடிச்சதும் ராம்பிரசாத் ஆச்சர்யமா என்னைப் பார்த்துக்கிட்டே அவர்
அப்பாகிட்ட சொன்னார், 'எவ்வளவு திவ்யமா பாடுறாங்க. அந்தக் குரல் உங்களை
எதுவும் செய்யலையா? இந்தக் குரல் என் உசுரை, மனசை உலுக்கிடுச்சு. இவங்க
இங்க பாட வேண்டியவங்க இல்லை. இந்தக் குரல் உலகம் முழுக்கக் கேட்கணும்.’
என்னை சினிமா பக்கம் திசை திருப்பினவர் ராம்பிரசாத்தான்.
அவர் சொல்லிட்டாருங்கிற ஒரே காரணத்துக்காகவே சினிமாவில்
பாடும் முயற்சிகளை மேற்கொண்டேன். என் மனசுல இருந்த காதலை அவர்கிட்ட
சொல்லத் தயக்கம். அந்தக் காலத்துல அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனா, நான்
தயங்கித் தாமதிச்சதே என் காதலுக்கு ஒரு சோதனையை உண்டாக்குச்சு.
ஒரு முறை அவர் அப்பா சந்திரசேகரன் சார், 'எங்கேயோ
வெளியே போகணும்’னு சொல்லி என்னைக் கூப்பிட்டு அனுப்பிச்சார். போய் நின்னா,
ராம்பிரசாத்துக்குப் பொண்ணு பார்க்க என்னையும் அழைச்சுட்டுப் போனாங்க.
கண்ணுல துளிர்த்த கண்ணீரை மறைச்சுட்டு கலங்கிப்போய் உட்கார்ந்து இருந்தேன்.
நல்லவேளை அந்தப் பொண்ணு கைகூடலை. அப்புறம் அவரோட அப்பாவே என்
நடவடிக்கைகளைக் கவனிச்சிட்டு, 'பக்கத்துல லட்சுமியை வெச்சிக்கிட்டு
ஊரெல்லாம் தேடுறேனே’னு என்கிட்ட வந்து என் விருப்பத் தைக் கேட்டார்.
சந்தோஷமா தலையாட்டுனேன். அப்புறம் ராம்பிரசாத்தும் மனசு நிறைய என் மேலே
காதலை மறைச்சி வெச்சிருந்ததைப் பின்னாடி சொன்னார். இப்படி ரெண்டு பேருமே
ஒருத்தருக்கொருத்தர் காதலைச் சொல்லாமலேயே வாழ்க்கைத் துணை ஆனோம். என்
கணவர்தான் சென்னைக்கு என்னை அழைச்சிட்டு வந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவுல
மாசச் சம்பளத்துக்கு ஆர்ட்டிஸ்ட்டா சேர்ந்தேன்.''
''அந்தச் சமயம்
பி.சுசீலா, பி.லீலா, ஜிக்கின்னு பிரமாதமான பாடகிகள் சினிமாவில்
கோலோச்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு நடுவில் எப்படி எஸ்.ஜானகி
உருவானாங்க?''
''தானா எல்லாம் நடந்துச்சு. ஏவி.எம்-ல மாசச் சம்பளம்
300 ரூபான்னு மூணு வருஷம் ஒப்பந்தம் போட்டாங்க. அப்ப ஏவி.எம்.
ஆர்ட்டிஸ்ட்னா பெரிய மரியாதை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அங்கே நான்
பாடின முதல் பாட்டைக் கேட்ட எல்லாரும், 'யாரு இந்த சின்னப் பொண்ணு. குரல்
ஃப்ரெஷ்ஷா இருக்கே... பாட்டைக் கேட்டுட்டே இருக்கணும்போல இருக்கே’னு
ஆச்சர்யப்பட்டாங்க. அந்த ஒரு பாட்டைக் கேட்டதுமே வெளியே இருந்து நிறைய
அழைப்புகள் வந்தன. எதிர்பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பெரிய
வாய்ப்புகள் வந்தன.
ஆனா, ஏவி.எம். நிறுவனத்தோட இருந்த ஒப்பந்தத்தை மனசுல
வெச்சுட்டு நான் தயங்கி நின்னேன். என் தர்மசங்கடம் புரிஞ்சுட்டு ஒரு
கட்டத்துல அவங்களே மனசு கேட்காம ஒப்பந்தத்தைத் தளர்த்திட்டாங்க. ஏவி.எம்-ல
நான் முழுசா ஒரு வருஷம்கூடப் பாடலை. நான் கோரஸ் பாடி அறிமுகம் ஆனதா சிலர்
நினைக்கிறாங்க. ஆனா, நான் கோரஸ் பாடுனதே இல்லை. முதல் பாடலே ஸோலோவாகத்தான்
பாடினேன். அந்தக் காலகட்டத்தில் மேதைகளுக்கு நடுவில் எனக்கு ஒரு சின்ன இடம்
கிடைச்சதுக்கு ஏவி.எம். நிறுவனம் எனக்குக் கொடுத்த வாய்ப்பும்
சுதந்திரமுமே முக்கியக் காரணம்.''
''17,000 சினிமா
பாடல்கள், சுமார் 20,000 தனிப் பாடல்கள், திருவையாறில் மூன்று முறை
அரங்கேற்றம்... இந்தச் சாதனைகளுக்கான சின்ன அங்கீகாரமாகத்தானே உங்களுக்கு
பத்மபூஷண் அறிவிக்கப்பட்டது. அதை ஏன் மறுத்தீங்க?''
''ரசிகர்களின் அன்பை விட இந்த உலகத்துல வேற எதையும்
பெரிய அங்கீகாரமா நான் நினைக்கலை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
ஒரியா, பெங்காலி, படுகா, சிங்களம், இங்கிலீஷ், ஜெர்மன் உட்பட 17 மொழிகளில்
பாடியிருக்கேன். விருதை எதிர்பார்த்து இத்தனை மொழிகளில் நான் பாடலை.
ஒருத்தருக்கு விருது அங்கீகாரம் எப்ப கிடைக்கணும்? அவர்
கம்பீரமா... நல்ல நிலைமையில் இருக்கிறப்போ, 'இந்த விருதுக்கு முழுத்
தகுதியானவன் நான்’ங்கிற எண்ணம் மனசுல அலை அடிக்கிற சமயம் கொடுக்கிறதுதானே
நியாயம்? அதை விட்டுட்டு, வீல் சேர்ல ஒருத்தர் தள்ளிட்டு வர்ற நிலைமையில
ஒருத்தருக்கு விருது கொடுக்கிறது என்ன நியாயம்?
தமிழில் பாடுவதற்கு ரொம்பவும் சிரமமான பாட்டான
'சிங்காரவேலனே தேவா’ பாடினப்பவே என்னைக் கவனிச்சு, தொடர்ந்த சில
வருஷங்களிலே என் திறமையைக் கணிச்சு விருது கொடுத்திருந்தா, அதை நான்
ஏத்துட்டு இருந்திருப்பேன். ஆனா, இப்போ எதுக்கு எனக்குச் சம்பந்தம் இல்லாம
அந்த விருது? அப்போ வடக்கத்திய ஆட்கள் நினைச்சு மனசு வெச்சாதான் தெக்கத்திய
ஆட் களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்னா, அது எதுக்கு நமக்கு? அதான்
வேண்டாம்னு மறுத்துட்டேன். அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை.''
''எல்லா
காலகட்டத்திலும் எல்லா இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக நீங்கள்தான்
இருந்திருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுடையது சுகமான பயணமாகத்தானே
இருந்திருக்கிறது. ஆனா, 'பத்மபூஷண்’ விருதை மறுக்கும் அளவுக்கு மனதில் என்ன
காயம்?''
''எல்லாரும் நினைக்கிற மாதிரி சினிமாவில் ஜானகியின்
வளர்ச்சி சுலபமா இல்லை. பலருக்கும் தெரியாத ஒரு உண்மையை இப்போ சொல்றேன்...
நான் சினிமாவில் பாடத் தொடங்கிய சில வருஷங்கள்லயே கடுமையான ஆஸ்துமா
பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். 'சுமைதாங்கி’ படத்துல 'ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ’ பாடுனப்ப மூச்சுத் திணறல் அதிகமாகி நெஞ்சை
அடைச்சிருச்சு.
ஆனாலும், தொடர்ந்து பாடினேன். 'தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே’ பாட்டு இப்பவும் எத்தனை பேரைத் தாலாட்டித் தூங்கவைக்குது. ஆனா,
அந்தப் பாட்டைப் பாடுறப்ப எனக்குக் கடுமையான மூச்சுத்திணறல். அதைப்
பொறுத்துக்கிட்டு பாடினேன். பாடி முடிச்சதும் மயங்கிட்டேன். உடனே
ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போய் உயிரைக் காப்பாத்தினாங்க. இப்படி என்
உயிரின் சில இழைகளை இழந்துதான் என் ஒவ்வொரு பாட்டிலும் ஜீவன்
சேர்க்குறேன். ஆனா, அதைக் கவனத்தில் கொள்ளாமல், 'என் குரல் சுமார்தான்.
ஆனா, பாடுற விதத்துல திறமையா இருக்கிறதால பாட்டு நல்லா வருது’னு
விமர்சிச்சாங்க. அதுதான் என் மனசை கஷ்டப்படுத்திய விஷயம். ஆனா,
அதையெல்லாம் இப்போ கடந்து வந்துட்டேன்.''
''இன்னைக்குப் பாடிட்டு இருக்கும் பின்னணிப் பாடகர், பாடகிகளில் யாரை உங்களுக்குப் பிடிக்கும்?''
''நிறையப் பேர் வர்றாங்க. அருமையா பாடுறாங்க.
எல்லாரையும் ரசிக்குறேன். இன்னைக்கும் சினிமாவுல பாடச் சொல்லி தினமும்
என்கிட்ட கேட்குறாங்க. ஆனா, தோணுறப்போ வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டுதான்
பாடுறேன். அடுத்தடுத்த தலைமுறைக்கு வழிவிடணும். என் குழந்தைங்க பாடட்டும்.
நான் இப்போ ரசிகை மட்டும்தான்.''
நன்றி - விகடன்