Showing posts with label எவரெஸ்ட். Show all posts
Showing posts with label எவரெஸ்ட். Show all posts

Monday, December 17, 2012

உலக சாதனை - அந்தமான் ஆர்யன் - எவரெஸ்ட் சிகரம்

எவரெஸ்ட் சிறுவன்

வாவ் ஆர்யன்!

ரமணன்

நினைவிருக்கிறதா... ‘ஆனந்தபுரத்து வீடுபடத்தில் சுருட்டை முடி தலையோடு திகிலூட்டிய சிறுவன் ஆர்யனை? அதன் பிறகு பல விளம்பரப் படங்களில் நடித்துவிட்ட இந்தக் குட்டிப் பையனுக்கு இப்போது வயது ஏழு. பெற்றோருடன் அந்தமானில் வசிக்கும் ஆர்யன் இந்த ஆண்டு 17,300 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட்டின் பேஸ்கேம்ப் வரை மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறார்.  



உலகிலேயே இப்படி ஒரு சாதனையைச் செய்த சிறுவன் ஆர்யன் தான். நேபாளத்தின் 17900 அடி உயர (நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் போகும் வழியில் இருக்கும்) கல்பத்தர் சிகரத்தில் ஏறி நமது தேசியக் கொடியை நட்டுவைத்து மற்றோர் உலக சாதனையையும் படைத்திருக்கிறார் இந்தத் தமிழ்ப் பையன்.


ஆர்யனின் தந்தை ஸ்ரீநிவாஸ் பாலாஜி இந்தியக் கடற்படை கமாண்டர். தற்போது அந்தமானில் வேலை. இவர் அடிப்படையில் மலையேற்ற வீரர். பூமியின் வட துருவத்தில் ட்ரெக்கிங் செய்தவர். அம்மா ரிக்கியும் அடிக்கடி ட்ரெக்கிங் செல்பவர். பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து டைவ் அடித்தவர்.  


பெற்றோருடனும் ஒரு ஷெர்பா கைடுடனும் எவரெஸ்ட் பேஸ்கேம்ப் வரை ஏறி இருக்கிறார் ஆர்யன். அந்தமான் லெப்டினட் கவர்னர் வாழ்த்தி வழியனுப்ப 250 கி.மீ. பயணத்தை இருபத்துரெண்டு நாட்களில் கடந்திருக்கிறார். கூட பயணித்த புனேவைச் சார்ந்த இன்னொரு மலையேற்றக் குழுவினர் சிலர் களைத்துப்போய் மலையேற்றத்தைக் கைவிடும் நிலையிலிருந்தபோது ஆர்யனைப் பார்த்து ஊக்கமடைந்து தொடர்ந்திருக்கிறார்கள்.


பேஸ்கேம்பில் மைனஸ் 22 டிகிரி குளிரில்கூட பாடல் பாடி அந்தக் குழுவினரை மகிழ்வித்திருக்கிறார் ஆர்யன். எப்படி இந்தச் சிறுவனால் முடிந்தது?


காஷ்மீர், ஹிமாலசலப் பிரதேசத்தின் கடும் குளிர்ப்பகுதிகளில் தங்கவைத்துப் பயிற்சி அளித்திருந்தாலும் அவன் மனோ திடம் எங்களை ஆச்சர்யப்படுத்துகிறது," என்கிறார் தந்தை பாலாஜி. மலையேறுவதில் மட்டுமல்ல நீச்சலிலும் ஆர்யன் கில்லாடி


 அந்தமான் ஆழ்கடலில் 25 அடி ஆழத்தில் ஒரு மணி நேரம் நீந்தி பிரமிக்க வைத்திருக்கிறான். ஏழு வயதுக்குள் எவரும் செய்யாத உலக சாதனை இது. இம்மாதிரி சாகசங்களுக்கு மூச்சு பிடிக்கும் திறன் அதிகம் வேண்டும். அணிந்து கொள்ளும் ஆக்ஸிஜன் ஹெல்மெட் 25 கிலோ எடை என்பதால் 12 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. சிறப்பு அனுமதி பெற்று இதைச் செய்திருக்கிறார் ஆர்யன்.



நிறைய அழகான கலர் மீன்களுக்கு நடுவே நடப்பது ஜாலியாக இருந்தது. அம்மாவுக்காக ஓர் அழகான கலர் சிப்பி எடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் ட்ரெயினர் எதையும் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்" என்கிறார் ஆர்யன்.


ஆர்யன் படிப்பிலும் சுட்டி. இரண்டாம் வகுப்பு. எல்லா பரீட்சைகளிலும் முதல் ரேங்க். மியூஸிக், டான்ஸ் ஸ்கேடிங், சைக்கிளிங்... எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறான்"- பெருமைப்படுகிறார் அம்மா ரிக்கி. இவர் மலை ஏற்றம், காட்டாற்றுப் படகுப் போட்டி, டைவிங் போன்ற சாகஸ விளையாட்டுகளைத் திட்டமிட்டு நடத்திக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


ஆர்யனின் அப்பா பாலாஜி கடலூர் மாவட்ட கலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போதும் அவருடைய பெற்றோரும் உறவினர்களும் அங்கு வசிக்கிறார்கள். ஆர்யன் தாத்தாவுடனும் மாமாவுடனும் தமிழில் பேசுகிறான். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் பிராண்ட் அம்பாஸிடரான ஆர்யன், போலியோ ஒழிப்புக்காக நேபாள அரசின் சிறப்பு விளம்பரத் தூதுவரும்கூட.


கடந்த மாதம் தமிழக கவர்னர் ரோசய்யா இந்தச் சிறுவனை ராஜ்பவனுக்கு அழைத்து கௌரவித்து இருக்கிறார். இந்த ஆண்டு டிசம்பரில் கிளிமஞ்சரோ சிகரத்தையும், 2017இல் எவெரஸ்ட் சிகரத்தையும் தொட திட்டமிட்டிருக்கிறது இந்தக் குடும்பம். இந்த ஆண்டு கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம் பெறப்போகும் இவனின் சாதனையை தமிழக சேனல்களும் மீடியாவும் கண்டுகொள்ளவில்லை என வருந்தும் பெற்றோர் தமிழக முதல்வரிடம் மகனை அறிமுகப்படுத்த நேரம் கேட்டுக் காத்திருக்கிறார்கள்.


ஆர்யனை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் நாகா:

அறையில் நான் கம்ப்யூட்டரில் பிஸியாக இருந்த போது குடுகுடுவென ஓடி வந்து, ‘ ஆம் ஆர்யா , வாட் இஸ் யூவர் நேம்?’ எனக்கேட்டு மடியில் உட்கார்ந்த போது, ஆர்யனுக்கு வயது மூன்றரை. ஆனந்தபுரத்து வீடு படத்துக்காகப் பல குழந்தைகளைப் பார்த்துத் திருப்தியில்லை. ஒரு மாடல் கோ ஆர்டினேட்டர் அனுப்பிய குழந்தை இவன். நான் என் பெயரைச் சொன்னவுடன், ‘ யூ ஆர் டைரக்டர்எனச் சொல்லி என் கம்ப்யூட்டரில் என்ன கேம்ஸ் எல்லாம் இருக்கு எனப் பேசத் தொடங்கி விட்டான்.


படத்தில் அந்தக் குழந்தை கேரக்டர் மிக அழுத்தமானது. நான் சொல்வதைப் புரிந்து சிரமமில்லாமல் செய்து முழு யூனிட்டையே வியக்க வைத்த பையன் ஆர்யன். திறமைகளை வெளிக்காட்ட திறமை வேண்டும். அது ஆர்யனுக்கு இயல்பாகவே இருக்கிறது.

நன்றி - கல்கி , புலவர் தருமி