Showing posts with label எலும்புத் தாது. Show all posts
Showing posts with label எலும்புத் தாது. Show all posts

Tuesday, April 16, 2013

ஏ சி ரூம்ல வேலை செய்யறீங்களா? கண்டிப்பா படிங்க



எலும்புத் தேய்மானம் தடுப்பது எப்படி?


பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. ஆனால், இப்பொழுது இருபது முதல் முப்பது வயதுடைய இளம்பெண்களிடையே கூட எலும்புத் தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டுவலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் எலும்புத் தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவதுதான்.

எலும்புத் தேய்மானத்திற்கான காரணங்கள்:

இரவு வெகு நேரம் கண்விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவுப் பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, .சி. வாகனங்களில் பயணிப்பது என சூரியஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர். சூரிய ஒளியினால் கிடைக்கக்கூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும்.


உடலுக்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது எலும்பு.கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது. கால்சியத்தை எலும்பு ஏற்றுக் கொள்ள வைட்டமின்டிதேவைப்படுகிறது. இளவயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்குப் பின் நீண்டு வளராது. அகலத்தில்தான் வளரும். 30 வயதுக்குப் பின் எலும்பின் வளர்ச்சி நின்றுவிடும். அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். 30 வயதுக்குப் பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கும்.


உணவில் தேவை அக்கறை:

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும்பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும், தாதுவும் வெளியேறிவிடும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குத் தீனியைக் குறைத்துச் சாப்பிட வேண்டும்.

பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்பானங்கள் கால்சியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருகுவதும் கால்சியம் குறையக் காரணமாகின்றது.


கால்சியம் நிறைந்த உணவுகள்:

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்குக் குறைந்தது 400 மி.லி.. பால் அருந்த வேண்டும்.

வயதானவர்களுக்குப் பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.


அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.

எள், கால்சியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் சேர்த்து உருண்டைகளாகச் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாகச் செய்து உணவுடன் சாப்பிடலாம்.

தினமும் 5 பாதாம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்குப் பருகக் கொடுக்கலாம்.


கேழ்வரகில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்குக் கேழ்வரகு மாவில் முருங்கைக்கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி, பெரியவர்கள் கஞ்சி, கூழாகச் செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்.


எலும்புத் தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுவதோடு, இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையைத் துவையலாகச் செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்: எலும்புகள் உறுதியாக உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும்.

இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை.

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கிக் குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும். வலுவான தசைகள் எலும்புகளைப் பாதுகாக்கும்.

ஒல்லியாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால், அது தவறான கருத்து. பலமாக, உறுதியாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம்.

பிற்காலத்திற்கான பணத்தைச் சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும். இள வயதிலேயே எலும்பை உறுதியாக, வலுவாக ஆக்கிக் கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிட்டுமே!

- டாக்டர் இரா.பத்மப்ரியா, சித்த மருத்துவர்

நன்றி - கல்கி