யாசகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சில விஷயங்களை மனம்விட்டு பேசினார். அவர் பேசியதாவது: நான், பாலா, சசிகுமார்னு ஒரு செட்டு. மதுரை அலங்கார் தியேட்டர்ல படம் பார்த்துட்டு நாமும் படம் எடுப்போம்னு கிளம்பி வந்தோம். பாலா, பாலுமகேந்திரா சார்கிட்ட தொழில் கத்துக்கிட்டார். நான் பாலாகிட்ட கத்துக்கிட்டேன். என்கிட்டேருந்து சசி கத்துக்கிட்டார். இப்போ அவர்கிட்டேருந்து எஸ்.ஆர்.பிரபாகரன் வந்து சுந்தரபாண்டியன் பண்ணினார். இப்போ துரைவாணன் யாசகன் பண்ணியிருக்கார். இது தவிர சமுத்திரகனி, சீனு ராமசாமின்னு எங்க குடும்பம் பெருசா ஆகிக்கிட்டிருக்கு.
மதுரையிலேருந்து நாங்க ஒண்ணா வந்தாலும் வெளியில நினைக்கிற மாதிரி ஒண்ணா இல்லை. பங்ஷன்ல, நேர்ல பார்த்தா ஒரு ஹலோ சொல்லிக்குவோம். மற்றபடி அவுங்கவுங்க வேலைய பார்க்க கிளம்பிருவோம். ஒண்ணாவே திரிஞ்சா உருப்படாம போயிருப்போம். சசிகுமார் நடிக்க வந்தப்போ சினிமாவுக்கு ஒரு டி.ராஜேந்தர் போதும் நீயுமாடான்னு கிண்டல் பண்ணியிருக்கேன். இன்னிக்கு அவன் நடிக்குறதுக்கு வாங்குற சம்பளத்தை கேட்டா மயக்கம் வருது. பாலா படத்துல நடிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கான். நான் கால்ஷீட் கேட்டாகூட தருவானோ மாட்டானோ தெரியல. இப்படி ஒருத்தரை ஒருத்தர் தூரத்துல இருந்துதான் பார்த்துக்கிறோமே தவிர மற்றவங்க நினைக்கிறமாதிரி தினமும் சந்திக்கிறதில்லை. போன்கூட பண்ணிக்கிறதில்லைங்றதுதான் உண்மை. ஆளாளுக்கு தனி ரூட்டுல போறோம், ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறோம்.
இவ்வாறு அமீர் பேசினார்.
எம்ஜிஆர்தான் எனக்கு தலைவர் என்று டைரக்டர் அமீர் கூறினார். சமீபத்தில் நடந்த ஆடியோ விழா ஒன்றில் பங்கேற்ற அமீர் பேசுகையில், இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஒரு பாடல் வெளியீட்டு விழா, மாநாடு மாதிரி நடப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. தொழிலாளர்களே இந்த படத்தின் பாடல்களை வெளியிடப் போகிறார்கள் என்று தகவல் அறிந்ததும் நானும், ஜனநாதனும் விழாவில் கலந்து கொண்டோம். தொழிலாளர்களை நேசிக்க வேண்டும் என்ற சிந்தனை, மக்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமே வரும். எனக்கு தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். அவர், தலைவன் என்ற படத்தில் நடித்தார். இப்போது விஜய், தலைவா என்று ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது தலைவனாக இப்போது பாஸ் வந்திருக்கிறார். அவர் எதை நினைத்து சினிமாவுக்கு வந்திருக்கிறாரோ, அது நிறைவேற வாழ்த்துகிறேன், என்றார்.
பேரன்பு கொண்டவர்களுக்காக தாடி எடுத்த அமீர்
‘‘யோகி’’ படத்தில் ஹீரோவாக நடித்த அமீர் அதன்பிறகு கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாட்டுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ‘‘கொள்ளைக்காரன்’’ படத்தை இயக்கிய சந்திரன் அடுத்து இயக்கும் ‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’’ படத்தில் அமீர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தற்போது 555 படத்தில் பரத்க்கு ஜோடியாக நடிக்கும் மிருத்திகா. ‘ஆடுகளம்’ நரேன் வில்லன். எப்போதும் தாடியுடன் காட்சி தரும் அமீர், ‘‘பேரன்பு கொண்ட பெரியவர்களுக்காக’’ தாடியை எடுத்துவிட்டார். "நடுத்தர வயது அமீருக்கும் இளம் பெண் மிருத்திகாவுக்கும் வரும் காதலும் அந்த காதலால் வரும் குழப்பமும், அந்த குழப்பத்தை தீர்க்க உதவும் காட்சிகளும் காமெடியாக இருக்கும். அமீர் அண்ணனுக்கு இந்தப் படம் பெரிய டர்னிங்பாயிண்டா இருக்கும்" என்கிறார் இயக்குனர் சந்திரன்.
அமீர் ஹீரோவாக நடிக்கும் பேரன்பு கொண்ட பெரியோர்களே...!
யோகி படத்திற்கு பிறகு டைரக்டர் அமீர், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே" என்று பெயர் வைத்துள்ளனர். "மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ஹீரோவாகவும், மிஸ்கினின், "யுத்தம் செய்" படத்தில் கன்னித்தீவு பொண்ணா... என்று பாட்டுக்கு நடனம் ஆடியும் அசத்தினார். டைரக்டர், பெப்சி சங்க தலைவர் என்று பிஸியாக இருக்கும் அமீர், சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார்.
உதவி இயக்குனராக இருக்கும் ஆதம்பாவா என்பவரது தயாரிப்பில், சந்திரன் என்பவர் இயக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே" படத்தில், அமீர் ஹீரோவாக நடிக்க போகிறார். இப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது. படத்தில் அமீருக்கு ஜோடியாக "555"-ல் நடித்துள்ள மிருத்திகா நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் ஆரம்பமாக இருக்கிறது.
நன்றி - தினமலர்