தினமலர் விமர்சனம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவரசநாயகர் கார்த்திக், கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரியில் போட்டியிருக்கிறார் தொழில் அதிபர் வசந்த குமார்! இவர்கள் இருவருக்கும், இவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கும், தமிழகத்தில் வெற்றியா, தோல்வியா? என்பது இருக்கட்டும்! இவர்களது வாரிசுகள் நடித்து இந்தவாரம் இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பெயருடன் திரைக்கு வந்திருக்கிறது. அதில் கார்த்திக்கின் வாரிசு கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்துள்ள 'என்னமோ ஏதோ' அவரது அப்பா பிரச்சாரம் செய்த கட்சிக்கு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையிலேயே சிக்கித்தவித்தபடி இருப்பதை ஏற்கனவே எழுதியுள்ளோம்!
வசந்தகுமாரின் வாரிசு விஜய் வசந்த் நடித்துள்ள, 'என்னமோ நடக்குது' ஒட்டுமொத்த தமிழகத்தில் மற்ற இடங்களில் எல்லாம் டெபாசிட் கூட மிஞ்சாது எனம் நிலையில் இருக்கும் காங்கிரஸ்க்கு, குமரியில் மட்டும் ஆறுதல் அளிக்கக்கூடும் படியாக வசந்தகுமார், முதல் இரண்டு இடங்களில் ஒன்றில் நிச்சயம் இருப்பார் எனும் நம்பிக்கை கீற்றை விதைத்திருப்பது போன்று, விஜய் வசந்தின் 'என்னமோ நடக்குது' எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. இனி படம் பற்றி பார்ப்போம்...
கதைப்படி, விஜய் வசந்த்., அப்பா இல்லாது அம்மாவுடன் வாழும் குப்பத்து இளைஞர். பகலில் போஸ்டர் ஒட்டுவதும், இரவில் நண்பர்களுடன் குவாட்டர் குடிப்பதுமா வாழ்க்கையை குதுகலமாக ஓட்டும் அவரது வாழ்க்கையில், அம்மா சரண்யா பொன்வண்ணன் இறக்கும் தருவாயில், வசந்தமாக குறுக்கிடுகிறார் மிடில் கிளாஸ் நர்ஸ் மஹிமா! அம்மணியும், அவரது அப்பா அழகம் பெருமாள் பட்ட 5 லட்சம் கடனுக்காக, வங்கி படத்தை கடத்தி வட்டிக்கு விட்டு துட்டு பார்க்கும் ஒரு மாபியா கும்பலிடம் வேலைக்கு சேருகிறார் விஜய் வசந்த்!
ரகுமான் தலைமையிலான அந்த மாபியா கும்பலுக்கு ஆப்பு வைக்க முயலுகிறார், அவர்களால் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளான பிரபு! அதில் பகடைகாயாக பந்தாடப்படும் விஜய் வசந்த், காதலியை கடன் சுமையிலிருந்து மீட்டாரா?, ரகுமான் - பிரபு கோஷ்டிகளுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமானாரா.? என்பது தான் “என்னமோ நடக்குது” படத்தின் கதை! இந்த கதையை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படம் பிடிக்க முடியுமோ அத்தனை வித்தியாசமாகவும், அழகாகவும் படம் பிடித்திருப்பதற்காகவே இயக்குநர் பி.ராஜபாண்டியை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். இப்படி ஒரு படத்தை தயாரித்திருப்பதற்காக வி.வினோத் குமாரை (இவர் விஜய் வசந்த்தின் சகோதரர்) சீராட்டலாம்!
விஜய் வசந்த் பெரிதாக மேக்கப் இல்லாமல், தன் முந்தைய படங்களை காட்டிலும் இயல்பாக நடித்து, குப்பத்து இளைஞராகவே பேசி, சிரித்து ரசிகர்களை சீட்டோடு கட்டி போட்டு விடுகிறார். பேஷ், பேஷ்!!
மஹிமாவும், கனடாவில் படிக்க வேண்டிய கனவுடன் நர்ஸாக நன்றாகவே நடித்திருக்கிறார். விஜய் வசந்த், மஹிமா மாதிரியே பிரபு, ரகுமான், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமைய்யா, சுகன்யா, கும்கி அஸ்வின், நமோ நாராயணா, திருமுருகன், அழகம் பெருமாள், வின்செண்ட் அசோகன், சௌந்தர்யா உள்ளிட்ட ஒவ்வொருவரும் 'நச்' என்று நடித்து நம்மை 'டச்' செய்து விடுகின்றனர்.
உன் கடனுக்கு ஏன் 'தல'-யை அடகு வைக்கிற? உன் 'மது' பொதுவாகி விடுவார்... உள்ளிட்ட பளிச், பளிச் பன்ச் வசனங்கள் தான் 'என்னமோ நடக்குது' படத்தில் செம கிக்!
பிரேம்ஜி அமரன், இனி நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர இசையமைப்பாளராகலாம் எனும் அளவிற்கு பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் மிரட்டி! ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், ஆக்ஷன் படத்திற்கே உரிய அதிரடியில் மிரட்டி இருக்கிறது பலே! பலே!! ராதகிருஷ்ணனின் வசனம், பிரேம்ஜியின் இசை, ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, விஜய் வசந்த்தின் இயல்பான நடிப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும், பி.ராஜபாண்டியின் “என்னமோ நடக்குது” படத்தை எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் நடக்க விட்டிருக்கிறார் என்றால் மிகையல்ல!
ஆகமொத்தத்தில், “என்னமோ நடக்குது” - 'என்னமாய் இருக்கிறது' எனவே எல்லோருக்கும் பிடித்திருக்கிறது!
நன்றி - தினமலர்
- நடிகர் : விஜய் வசந்த்
- நடிகை : மகிமா
- இயக்குனர் :ராஜபாண்டி