எந்த திரைக்கதை (பொதுவாக கதை என நாம் சொல்வது) மக்களுக்கு பிடிக்கும்
என்பதை எவராலும் எளிதில் கணிக்க முடியாது. அது மட்டும் தெரிந்திருந்தால்,
எல்லாத் தயாரிப்பாளர்களும், அந்த மாதிரி கதையைத்தான் எடுப்பார்கள்.
எனக்கும் என் குழுவில் உள்ள நாலு பேருக்கும் பிடித்த ஒரு கதை, ஐம்பது
லட்சம் மக்களுக்கு பிடிக்கும் எனக் கணிக்க முடியாது. ஓரளவே நம்மால் அதைச்
சொல்ல இயலும். ஐம்பது லட்சம் மக்களுக்குப் பிடிக்க ஒரு நல்ல திரைக்கதை
எப்படி இருக்க வேண்டும்?
பாலுமகேந்திரா காட்டும் பாதை
மறைந்த இயக்குநர் மேதை, கேமரா கவிஞர் பாலுமகேந்திரா பல பேட்டிகளில் இவ்வாறு
சொன்னார்: வாழ்க்கையிலிருந்து ரத்தமும் சதையுமாக, மக்களிடமிருந்து
பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை, ஊடக ஆளுமையோடு உள்ள ஒரு படைப்பாளியால்
சமரசங்கள் இல்லாமல் நேர்மையாகச் சொல்லப்படும்போது அந்த இடத்தில் ஒரு நல்ல
சினிமா பிறக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதெல்லாம் இருந்தால் மட்டும் ஒரு
நல்ல படம் வந்துவிடும் என்று சொல்ல முடியாது. அது ஒரு சாத்தியம்தான்.
இவைகளுடன், வார்த்தைகளால் சொல்ல முடியாத நமக்கே தெரியாத ஒரு மந்திரமும்
இருக்கிறது. அந்த மந்திரம் சேரும்போது ஒரு படம் மக்களால் கொண்டாடப்படும்
படமாக மாறுகிறது.” சினிமா என்பது வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுடன் உள்ள
ஒரு ஃபார்முலா அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பாலுமகேந்திராவின் இந்த அற்புதமான கருத்தை, ஒரு பொதுவான, அனைத்துத் தரப்பு
படங்களுக்கும் ஏதுவானதாக என்னால் பார்க்க முடியவில்லை. நான் ஏற்கனவே ஒரு
கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, எந்த மாதிரிப் படங்களை நாம் உருவாக்க
நினைக்கிறோமோ, அதற்கு ஏற்ற மாதிரி, கதைகளின் கட்டமைப்புகளும் வேறுபட
வேண்டிய அவசியம் உள்ளது.
யதார்த்த சினிமாக்கள் எப்படிப்பட்டவை?
பாலு மகேந்திரா அவர்களின் கருத்து, யதார்த்த (அ) இணை (ரியலிஸ்டிக் /
பேரலல்) சினிமாக்களுக்குக் கண்டிப்பாகப் பொருந்தும். ஏனெனில் யதார்த்த
சினிமா நாம் பார்த்து அல்லது படித்த வாழ்க்கையை, யதார்த்தத்துடனும்
உணர்ச்சிகளுடனும் அளிப்பவை. யதார்த்த சினிமாவில் எல்லாச் சுவைகளும் இருக்க
வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஏனெனில், யதார்த்த சினிமாவின் நிகழ்வுகள்
நம்மை அதனுடன் ஒன்றிவிடச் செய்யும்போது, நாம் அந்தக் கதாபாத்திரங்களுடன்
வாழ ஆரம்பித்துவிடுகிறோம். எனவே இத்தகைய படங்களை சமரசங்கள் இல்லாமலும்
செய்ய முடியும். யதார்த்த பாணியிலான பல வெற்றிப் படங்கள், அவரது
கருத்துக்களைப் பிரதிபலித்துள்ளன (சில உதாரணங்கள்: சுப்ரமணியபுரம், பருத்தி
வீரன், தென்மேற்குப் பருவக்காற்று, களவாணி, ஆடுகளம், வழக்கு என்: 18/9).
இத்தகைய சினிமாக்களில், இதுவரை பார்க்காத, சொல்லப்படாத ஒரு கருத்தும்,
கதையும் புதுமையாக இருக்கும்போது வெற்றியின் அளவு அதிகரிக்கிறது.
வெகுஜன சினிமாவின் சூத்திரம்
ஆனால் வெகுஜன சினிமா (அல்லது வணிக சினிமா) என்பது வேறு. இத்தகைய
சினிமாக்கள் எல்லாத் தரப்பு மக்களையும் குறி வைத்து எடுக்கப்படுபவை.
இவைகளில் எல்லா ரசனைகளும் தவறாமல் இருக்க வேண்டும் (சண்டை, காதல்,
கலகலப்பு, பாடல்கள், நடனம், சென்டிமெண்ட்). அவ்வாறு இருந்தால்தான்
வெகுஜனங்கள் அத்தகைய படங்களை ரசித்து வெற்றி பெறச் செய்வார்கள்
(சமீபத்திய
உதாரணங்கள்: எந்திரன், விஸ்வரூபம், துப்பாக்கி, ஆரம்பம், சிங்கம் 2,
சுந்தரபாண்டியன், வீரம். என நிறைய படங்களை குறிப்பிடலாம்). இத்தகைய
படங்களில், யதார்த்தை மீறி, மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்க ஒரு
பிரபலமான கதாநாயகன் தேவை. வெகுஜன சினிமா கதைகளின் வெற்றி, அந்த
கதாநாயகனுக்கு மக்களிடம் உள்ள தாக்கத்தை பொறுத்து மாறும்.
அழகியல் சினிமாக்களின் பாதை
அழகியல் சினிமாக்கள் (அல்லது ஆர்டிஸ்டிக் சினிமா) எவ்வித வெகுஜன சினிமா
நெருக்கடிக்கும் விட்டுக் கொடுக்காமல், சமாதானத்திற்கும் உட்படாமல், தான்
சொல்ல வந்த கருத்தை, அழகுடனும், யதார்த்ததுடனும், புதிய அறிதலை, புதிய
உணர்வு நிலையை உண்டாக்கும். இப்படங்களின் கதைகள் உண்மையாகும், இலக்கிய
நயத்தோடும் சொல்லப்படுபவை. (உதாரணம்: காஞ்சிவரம், நந்தலாலா, பாலை,
மதுபானக்கடை, ஆரோஹணம், அழகர்சாமியின் குதிரை எனப் பல படங்கள்). இத்தகைய
கதைகளில் உள்ள நேர்மைதான் அவைகளுக்கு பாராட்டுதல்களைத் தருகின்றன. மேல்
தட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுகின்றன.
புதுவகை சினிமாக்கள்
புதுவகை சினிமாக்கள் (நியோ-ரியலிஸ்டிக் மற்றும் நியோ-நாய்ர் சினிமா), எளிய
அல்லது சாதாரண மனிதர்களை பற்றியும் அவர்களின் போராட்டங்களை பற்றியும்,
எளிமையான கதைகளுடன், புதுமையான முறையில் தரப்பட்டுவருகின்றன. இப்படங்களில்
புது மாதிரியான கதையும், கதை சொல்லிய விதமும்தான் மக்களை சந்தோஷப்
படுத்துகின்றன. (உதாரணம்: மூடர் கூடம், நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம்,
ஆரண்ய காண்டம், சூது கவ்வும் எனப் பல படங்கள்).
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, அழகியல் சினிமாக்களுக்கும், புதுவகை
சினிமாக்களுக்கும், குறைந்த அளவு மட்டுமே பார்வையாளர்கள் இருப்பது
மாறினால்தான், அத்தகைய படங்கள் மேலும் வர வாய்ப்புள்ளது. புதிய மற்றும்
உண்மையான முயற்சிகளை ரசிகர்கள் ஆதரிக்கும் அதே நேரம், வெகுஜனப் படங்களும்,
யதார்த்த சினிமாக்களும் வியாபார வெற்றியைப் பெறுவதால், அத்தகைய படங்களுக்கு
தேவைப்படும் சில விஷயங்களைப் பார்ப்போம்.
1. மோசமான கதையில் இருந்து ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பு இல்லை. மேலும்
கதை, திரைக்கதை மட்டுமே சினிமா அல்ல. நல்ல சினிமாவிற்கு அது ஒரு சிறு
ஆரம்பம் மட்டுமே. அதனுடன், நல்ல, ரசிக்கத் தகுந்த வசனங்களும், ஊடக ஆளுமை
கொண்ட ஒரு இயக்கமும்தான் அதை நல்ல சினிமாவாக்குகின்றன.
நல்ல கதைக்குத் தேவைப்படும் மேலும் பல அவசியங்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
thanx - the tamil hindu