ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மை மற்றும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அவசியம் குறித்து பதிவு செய்துள்ளனர். அதேசமயம் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பாதகம் குறித்தும் ஒருசிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
வி.பவானி, இல்லத்தரசி, சிந்தாதிரிப்பேட்டை.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கணவர் வெளியே செல்லும் போதெல்லாம், ஒருவித பய உணர்வு ஏற்படும். போலீஸாரும் அபராதம் வசூலிக்க வேண்டுமே என்ற மனநிலையில் இல்லாமல் ஹெல்மெட் அணிவதையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். மேலும் குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் விபத்துகளே நடக்கின்றன. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், ரேஸ் விடுபவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.ராஜா, புகைப்படக் கலைஞர், அயனாவரம்.
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. அதே சமயம் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகள் ஹெல்மெட் அணிந்து தப்பிச் செல்வதால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிறது. ஹெல்மெட் அணிவதால் கழுத்து வலி, முதுகுவலி ஏற்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ரூ.150-க்கு விற்ற ஹெல்மெட்டுகள் ரூ.2500 வரை விலை ஏற வாய்ப்பு உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மொத்தத்தில் ஹெல்மெட் அணிவது 60% பாதுகாப்பானது. 40% பிரச்சினைக்குரியது.
டி.இந்துமதி, வியாபாரம், மவுண்ட் ரோடு.
ஹெல்மெட் அணிவது நம்முடைய உயிருக்குப் பாதுகாப்பானது. இன்று மரணம் ஏற்படுவதற்கு தலையில் ஏற்படும் காயம்தான் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அரசாங்கம் சொல்லித்தான் இதை அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருவரும் தானாகவே முன்வந்து ஹெல்மெட் அணிய வேண்டும்.
எஸ். சுபாஷ், பொறியாளர், பாளையங்கோட்டை.
நீண்ட தூரத்துக்கு செல்லும்போது வேண்டுமானால் ஹெல்மெட் அணியலாம். ஆனால் பக்கத்து தெருவுக்கோ, அருகிலுள்ள கடைகளுக்கோ செல்வதற்கு ஹெல்மெட் அணிவது சிரமமாக உள்ளது. ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தக் கூடாது. வேண்டும்போது நாங்கள் அணிந்துகொள்வோம்.
என். வெள்ளத்துரை, தண்ணீர் கேன் விற்பனையாளர், நெல்லை.
ஹெல்மெட் அணிவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது. என்னை போன்ற தண்ணீர் கேன் விற்பனை செய்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது அருகில் வாகனங்கள் வரும்போது பக்கவாட்டில் மறைப்பதால் சிறுசிறு விபத்துகள் நேர்கின்றன. அலுவலகங்களுக்கு செல்வோர் ஹெல்மெட் அணிந்து சென்று அலுவலகத்தில் கழற்றி வைத்துவிடலாம். ஆனால், என்னைப் போன்றவர்கள் எப்போதும் அதை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு அலைய முடியாது. இதுவரை நான் 3 ஹெல்மெட்டுகளை தொலைத்துள்ளேன். ஹெல்மெட் திருடர்களும் அதிகமாகிவிட்டார்கள். அடிக்கடி ஹெல்மெட் வாங்க முடியுமா?
ராஜசேகர், ஓய்வுபெற்ற ஊழியர், புதுச்சேரி.
புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளன. இவற்றை சரிசெய்யாமல் ஹெல்மெட் கட்டாயம் என்றால் என்ன செய்வது. முதலில் சாலையில் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
ரமேஷ், மெக்கானிக், புதுச்சேரி.
ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டால் திருட்டு, கொலை, கொள்ளைதான் புதுச்சேரியில் அதிகமாகும். ஹெல்மெட் இல்லாமல் நடைபெறும் திருட்டு, வழிப்பறியை பிடிப்பதற்கே சிரமமாக உள்ளது. தற்போது ஹெல்மெட் அவசியம் என்றால் நிச்சயம் பாதிப்புதான். புதுச்சேரிக்கு கட்டாயம் தேவையில்லை.
லெனின், தேவதானம்பேட்டை, விழுப்புரம்
இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. நகரங்களில் இந்த உத்தரவின்மூலம் அனைவரையும் ஹெல்மெட் அணியவைக்கலாம், கிராமப்புறங்களில் ஓட்டுநர் உரிமமே இல்லாமல் உள்ளனர். முதலில் ஓட்டுநர் உரிமத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என் றார்.
ராஜா, ராணுவ வீரர், வேலூர்.
ஹெல்மெட் அணிவது நல்லதுதான். பயணத்தின்போது கண்ணில் தூசு, பூச்சிகள் விழாமல் இருக்கும். கண் துடைக்கும் நேரத்தில் விபத்து நேரும். ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது. இதை போக்குவரத்து போலீஸார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது.
சரவணகுமார், பொறியாளர், ராணிப்பேட்டை.
நீ்திமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. 2006-ம் ஆண்டு முதல் தவறாமல் ஹெல்மெட் பயன்படுத்துகிறேன். இரண்டு முறை விபத்தில் சிக்கினேன். அப்போதெல்லாம் ஹெல்மெட்தான் எனது உயிரை காப்பாற்றியது. எனவே ஆண், பெண் வித்தியாசமில்லாமல் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம்.
வேத தயாளநாதன், ஆசிரியர், வேலூர்.
ஹெல்மெட் அணியாமல் சென்றவர் விபத்தில் இறந்ததை நேரில் பார்த்ததுமுதல் நான் ஹெல்மெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். ஹெல்மெட் அணிவதால் அசௌகரியமாக இருப்பதாக நினைத்தாலும், ஏதேனும் விபத்தில் சிக்கும்போதோ, வாகனத்திலிருந்து கீழே விழும்போதோ தலையைக் காப்பது ஹெல்மெட்தானே. எனவே ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.
சுதர்சன், காளவாசல், மதுரை.
விபத்துகளின்போது நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸார் கட்டாயப்படுத்தித்தான் அதை அணிய வேண்டும் என்றில்லை. நாமாகவே முன்வந்து ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக, ஹெல்மெட் அணியாமல் நான் பைக் ஓட்டுவதில்லை. இப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மூலம், மற்றவர்களும் அணிய வேண்டிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். அதேசமயம் போலீஸார் இந்த உத்தரவை தவறாக அணுகக்கூடாது. ஹெல்மெட் அணியவில்லையென்றால் முதலில் எச்சரித்தும், இரண்டாவது முறை என்றால் அபராதம் விதிப்பதும் என்ற நடைமுறையை போலீஸார் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
பிரவீண், காமராஜர்புரம், மதுரை.
ஹெல்மெட் அணிந்தால், பின்புறம் பக்கவாட்டில் வரும் வாகனங்களை எளிதில் பார்க்க முடியாது. இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இது உதவும்.
சசிப்பிரியா, அண்ணாநகர், மதுரை.
இது நல்ல உத்தரவு. ஹெல்மெட் அணிவதால் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஹெல்மெட் அணியும்போது உருவாகும் வியர்வை காரணமாக தலைவலி ஏற்படும். பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சத்தமும் கேட்க முடியாது. ஆனாலும் அதைவிட உயிரின் மதிப்பு பெரிது என்பதால், இதை வரவேற்கிறேன். அதேசமயம் போலீஸார் இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது.
கார்த்திக், கல்லூரி மாணவர், திருச்சி.
மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியவேண்டும் என்பதை வரவேற்கிறேன். ஹெல்மெட் போடவில்லையென்றால் போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இது சரியான நடைமுறைதான். ஆனால், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது.
டி.ஆனந்த சுப்பிரமணியன், குருக்கள், தஞ்சாவூர்.
நான் கோயில் குருக்கள் என்பதால், அதற்கு ஏற்றபடிதான் தலைமுடி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஹெல்மெட் அணியும்போது, ஒவ்வொரு முறையும் முடியை அவிழ்த்துப்போட்டுச் செல்வது சிரமம். ஆனால், வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது உயிருக்குப் பாதுகாப்பு என்பதால், சிரமம் இருந்தாலும் இச்சட்டத்தை நான் வரவேற்கிறேன்.
விஜய் மித்ரா, ஆங்கில மொழிப் பயிற்றுநர், தஞ்சாவூர்.
ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை வரவேற்கிறேன். சில நேரங்களில் ஹெல்மெட்டுகளே விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன. ஹெல்மெட்டுகளில் ஹாரன் ஒலியைத் தடுக்கும் காது பகுதியும், கண் பார்வையைத் தடுக்கும் பக்கவாட்டுப் பகுதியும் மறு வடிவமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம்.
கா.சுரேஷ்குமார், திருப்பூர்.
ஜூலை 1 முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவை, வரவேற்கிறோம். இதை நாடு முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள சூழ்நிலையை, எந்தளவுக்கு வரவேற்கிறோமோ, அதேயளவு அரசின் மதுபானக் கடைகளை மூடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
thanx - tha hindu