புதியவர்களின் யதார்த்தம் ரசிக்கவைக்கிறது- 'எட்டுத்திக்கும் மதயானை' இயக்குநர் பேட்டி
ஒரு சாதாரண மனிதன் யதார்த்த வாழ்க்கையைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது சுற்றி இருக்கும் கட்டமைப்புகள் அவனுக்கு எதிராக மாறுகின்றன. உதவி என்ற உன்னதமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்போது அவமானப்படுத்தப்படுவதும், கட்டம் கட்டப்படுவதும் அவனைத் தொடரத்தான் செய்கிறது. இப்படி எட்டுத்திக்கும் மதயானையாக சூழும் பிரச்சினைகளை என் ஹீரோ எப்படி எதிர்கொள்ளப்போகிறான் என்பதை கொஞ்சம் காமெடி கலந்து எமோஷனலாக சொல்லியிருக்கேன்’’ என்கிறார் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.
‘ராட்டினம்’ படம் வழியே அறியாமைக் காதலின் விளைவை படம்பிடித்துக் காட்டியவர், தன் 2-வது படமான ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவை ஆக்ரோஷ நாயகனாகக் களத்தில் இறக்கி மதயானைகளோடு மோதவிட்டிருக்கிறார். கே.எஸ்.தங்கசாமியை சந்தித்துப் பேசியதிலிருந்து..
நீங்கள் சொல்லும் கதைக் களத்துக்கு ஒரு மாஸ் ஹீரோவை இறக்கியிருக்கலாமே?
தனக்கென்று தனி இமேஜ் உள்ள நடிகர் இந்த கதைக்கு தேவை யில்லை. இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமானவர் என்கிற கட்டத்தை உடைக்கவே புது நடிகர்களை, தொழில் நுட்பக் கலைஞர்களை தொடர்ந்து களமிறக்குகிறேன். எந்த அளவுகோலும் இல்லாமல் திறந்த வெள்ளைப் புத்தகமாக வரும் கலைஞனைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ‘நான் நடிக்கிறேன்’ என்று வருபவர்களைவிட, சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாமல் வெளியில் பார்ப்பவர்களை நடிக்க வைக்கும்போது அவர்கள் கொடுக்கும் யதார்த்தம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.
இந்த படத்தில் ஆர்யா தம்பி ஹீரோ என்கிற இமேஜ் இருக்கிறதே?
சத்யாவுக்கு இது 2-வது படம். முதல் படம் அவருக்கு பெரிய இமேஜ் எதையும் கிரியேட் பண்ணலை. அப்படியான அந்த இமேஜ்தான் எனக்குத் தேவைப்பட்டது. இந்த படத்துக்குப் பிறகு, அவருக்கென்று தனி இமேஜ் உருவாகிவிடும். இன்னொரு விஷயம், ஆர்யாவின் தம்பி என்பதை அவர் எந்த இடத்திலும் கொஞ்சம்கூட காட்டிக்கொள்ளவில்லை. சமயத்தில் உரிமையோடு கோபப்பட்டாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முழு ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்திருக்கார்.
அவருடன் அறிமுக நாயகி ஸ்ரீமுகி. ‘ராட்டினம்’ பட நாயகன் லகுபரண், துர்கா, சாம் ஆன்டர்சன், ‘அசத்தப்போவது யாரு’ ராஜ்குமார், ஸ்ரீனிவாசன், சீமர், பானுசந்தர் இப்படி நல்ல டீமோடு சேர்ந்து விளையாடி இருக்கிறார் சத்யா. இந்த படத்தில் சத்யாவின் வேலையைப் பார்த்து ஆர்யா தன் தயாரிப்பு பேனருக்கே ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
கமர்ஷியல், புரமோஷன் எல்லாம் புதியவர்களுக்கு அவசியம்தானா?
இயக்குநர்கள் தங்களோட திறமையை நிரூபிக்க புரமோஷன், கமர்ஷியல் அவசியம் இல்லை. ஹீரோ, தயாரிப்பாளர்களுக்கு வேண்டு மானால் கமர்ஷியல் படங்கள் நல்லது. இயக்குநர்களைப் பொருத்தவரை தயாரிப் பாளரும் ஹீரோவும் சுதந்திரமானவராக அமைந்தாலே போதும். மக்களுக்கு அவசியமான விஷயத்தை முழுமையாக படைக்க முடியும். ‘ராட்டினம்’ படம் நல்ல பேரை வாங்கிக்கொடுத்தாலும் பெரிதா புரமோஷன் இல்லாததால் அடுத்த பட வேலைகளை தொடர முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் நல்ல நண்பர்கள் ஒன்றிணைந்ததால் இந்த படம் சாத்தியமானது.
ஒரு சினிமா பாடல் வரியைக் கேட்டுதான் இந்த படத்துக்கு பெயர் வைத்தேன். கலிங்கத்துப்பரணியிலேயே இந்த வரிகள் வருகின்றன. இந்த பெயரில் நாஞ்சில் நாடன் நாவல் ஒன்று இருப்பதுகூட பிற்பாடு நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்.
இயக்குநர் பாலாஜி சக்திவேலும் நீங்களும் ரூம் மேட்டாமே?
தூத்துக்குடியில் இருந்து நடிக்க வந்தவன் நான். யார்கிட்ட போய் வாய்ப்பு கேட்பது என்று தெரியாமல் இருந்தவன். அறையில் மின்விசிறி சுற்றும். ஆனால் காற்று எங்கள் மீது வீசாது. அப்படி கழிந்த நாட்கள். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அறையிலிருந்து கிளம்பிய நேரத்தில் நான் உள்ளே நுழைந்தேன். அப்போ பாலாஜி சக்திவேல் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர். நிறைய உற்சாகத்தை விதைப்பவர்.
சோர்ந்து போக விடமாட்டார். நான், அவர், பொன்மாலைப்பொழுது இயக்குநர் துரை, கண்ணன், மார்கழி 16 பட இயக்குநர் ஸ்டீபன் எல்லோரும் கனவுகளோடு சுற்றித்திரிந்த காலம். எங்கள் வானத்தில் கனவு நட்சத்திரங்கள் மின்னிய காலமும் அதுதான். அப்போதான் இயக்குநர் கலைமணி சாரோட நட்பு கிடைச்சது. நடிக்கும் ஆசையை தள்ளி வைத்துவிட்டு அப்போதே அவரிடம் உதவியாளரா சேர்ந்தேன். அதற்கு பாலாஜி சக்திவேலின் வார்த்தைகள்தான் ஊக்கமாக அமைந்தது.
உங்களது மதயானைக் கோபம், தியேட்டருக்கு வந்த ரசிகர்களை எந்த மனநிலையோடு வெளியே அனுப்பும்?
பார்த்தோம், ரசித்தோம் என்று இருக்க விடமாட்டேன். ‘நானாக இருந்தாலும் இப்படி ஒரு கேரக்டராகத்தான் இருப்பேன்’ என்கிற உணர்வு, படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.
thanx - the tamil hindu