உலகின் மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்று எனச் சொல்லப்படுவது எவரெஸ்ட் சிகரப் பகுதி. இந்தச் சிகரத்தின் உச்சியைத் தொடும் சாகசப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் பலர் வெற்றிபெற்றுள்ளனர், பலர் வாழ்வை இழந்துள்ளனர். 1996-ம் ஆண்டில் எவரெஸ்டில் நிகழ்ந்த பேரழிவுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் நிக்கல்சனும், சைமன் போஃபாயும் எழுதிய கதையை ‘எவரெஸ்ட்’ என்னும் பெயரிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால்டஸார் கார்மேகர்.
ஜூனில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.
உயிரைத் துச்சமாக மதித்து ஜேஸன் க்ளார்க் தலைமையிலான ஒரு குழுவும், ஜேக் கிலினால் தலைமையிலான ஒரு குழுவும் எவரெஸ்டில் ஏறுகின்றன. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும், ஒருபோதும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத தடைகளை, நெருக்கடிகளை, அவற்றைச் சமாளித்து அவர்கள் மேற்கொள்ளும் துணிச்சலான பயணத்தை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
உறைந்த பனிமலையில் காற்றுகூட அரிதான சூழலில் எப்படியும் உச்சியைத் தொட வேண்டும் என்ற வெறியுடன் செல்லும் குழுவினருடன் ரசிகர்களும் செல்லும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் உயிரோட்டத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. பரந்த பனிமலையின் தோற்றத்தைப் பார்க்கும்போதும் அதில் அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசப் பயணத்தைக் காணும்போதும் மனத்தில் எழும் கிலி அடங்குவதேயில்லை.
உயர்ந்து எழுந்து நிற்கும் மலையில் குழுவினர் ஏறிக்கொண்டிருக்கும்போது உலகையே விழுங்கிவிடுவது போன்ற பெரும் பசியுடன் சரிந்து விழும் பெரும் பனித் திரளில் குழுவினர் மாட்டிக்கொள்வார்களோ என்ற பதைபதைப்பை மனம் உணர்கிறது. திகில் சிறையில் மாட்டிக்கொண்டு லப்டப் என இதயம் துடிக்கும் ஓசையைத் துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தை இப்படம் உருவாக்கிவிடுகிறது.
இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துத் துணிச்சலுடன் முன்னேறி இயற்கையின் குழந்தையான எவரெஸ்டின் உச்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து முன்னேறும் குழுவினரின் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருக்கிறது. அத்தனையையும் சமாளித்துச் செல்லும் அவர்கள் இறுதியில் உச்சியைத் தொட்டார்களா, அதலபாதாளத்தில் வீழ்ந்தார்களா என்ற விடைதெரியாத கேள்விக்கு விடைகாண இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்.
செப்டம்பர் 18-ல் திரையரங்குக்கு வரவிருக்கிறது இந்தப் படம். பயம், துணிச்சல், நம்பிக்கை, காதல் போன்ற உணர்வுகள் பின்னிப்பிணைந்த திரைக்கதையின் பயணத்தில் முன்னணியில் இருப்பது சாகச உணர்வு மட்டுமே. சாகச விரும்பிகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் எவரெஸ்ட் நிச்சயம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்றே தோன்றுகிறது.
நன்றி-த இந்து