முதல் படம் தோல்வி. இரண்டா வது படம் பாதியில் கைவிடப் பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக் கிறது கருணாகரனுக்கு. ஆனால் ஒரு நிபந்தனை. படத்தைத் தயாரிக்க முன் வரும் எம்.எஸ். பாஸ்கரின் செல்ல மகள் நந்திதாவைப் படத்தின் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும். பட வாய்ப்பைப் பெற்றுத்தந்த மயில்சாமி பரிந்துரைக்கும் கிராமத்து இளைஞன் ‘டவுட்’ செந்திலை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த சமரசங்களைச் செய்துகொள் ளும் இயக்குநர் கருணாகரன், தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து படத்தை இயக்கத் தயாராகிறார். அவ ரால் தயாரிப்பாளரின் மகளை நடிக்க வைக்க முடிந்ததா? உதவி இயக்குநரா கச் சேர்ந்த ‘டவுட்’ செந்திலால் பலன் இருந்ததா? படப்பிடிப்பு நடந்ததா ஆகிய கேள்விகளுக்குப் பதில்தான் ‘உப்பு கருவாடு’ படம்.
தரமான படத்தைக் கொடுக்க வேண் டும் என்று கனவு காணும் இயக்குநர் களுக்கு, படத்தைத் தயாரிக்க முதலீடு செய்பவர்களிடமிருந்து வரும் நெருக்கடிகளை பற்றி சீரியஸாகவும் நகைச்சுவையாகவும் பேசிய பல படங்களைத் தமிழ் சினிமா கண்டிருக்கிறது. தேர்ந்த வசனங்களுக்காகவும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்காகவும் பெயர்பெற்ற ராதா மோகன் இயக்கியிருக்கும் இந்தப் பட மும் அதே கதையைத்தான் கையாள் கிறது. சினிமா எடுப்பதற்கான போராட் டத்தை இயல்பான நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பொன் பார்த்திபனின் வசனங் கள் படத்தின் பெரிய பலம். குறிப்பாகப் ‘புண்படுவது’ குறித்த வசனம் கூர்மை.
படம் எடுப்பதைப் பற்றிய படம் என்பதால் கதை விவாதம், ஒத்திகை என்று சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன. ஆனால் அந்தக் காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் வித்தியாசம் காட்டி சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் ராதா மோகன். படத்தின் ஆதாரமான அம் சத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் எல்லாக் காட்சிகளிலுமே நகைச்சுவை யைக் கலந்திருப்பது படத்தில் சிறப் பம்சம். கதையோடு ஒட்டிய பாத்திரச் சித்தரிப்புகளே நகைச்சுவைக்கு உத்தர வாதம் அளித்துவிடுகின்றன.
மயில்சாமி, ஜோதிடராக வரும் ‘டாடி’ சரவணன், ‘டவுட்’ செந்தில், நந்திதா ஆகியோரின் பாத்திரங்கள் கேலிச் சித்திரங்களாக இருப்பது கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் படம் எடுக்கும் எம்.எஸ். பாஸ்கரின் பாத் திரமும் கேலிச்சித்திரம் போலச் சித்தரிக் கப்படுவது படத்தின் ஆதாரத்தையே அசைப்பதாக உள்ளது.
படம் எடுப்பதிலுள்ள போராட்டம், வேதனை, பரவசம் ஆகியவை இயல் பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கை யதார்த்தம் வலுவாக உருப்பெறவில்லை. இளங்கோ குமாரவேலின் பாத்திரம் மட்டுமே கனமாக உள்ளது. இயக்குநராக வரும் கருணாகரனின் பாத்திரம்கூட வலுவாக இல்லை. ஆனால் அவரது நிஜ வாழ்வின் காதல் அத்தியாயம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிப்புக்காகப் புகழ் பெற்றுவரும் கருணாகரனை ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருத்தியிருப்பது பாராட் டுக்குரியது. இந்த வாய்ப்பின் மதிப்பை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார் கருணாகரன். ஒரே காட்சியில் இரு வேறு விதமாக நடிப்பதற்கான சவாலை நந்திதா நேர்த்தியாகக் கையாள்கிறார்.
ராதாமோகன் படங்களில் வலுவான பாத்திரத்தை ஏற்று அதற்குரிய நியாயம் செய்யும் இளங்கோ குமாரவேல் இந்தப் படத்திலும் அதைச் செய்திருக்கிறார். ‘டவுட்’ செந்தில் போடும் அப்பாவித்தனமான வெடிகள் திரையரங்கைக் கலகலக்க வைக்கின்றன. சாம்ஸ், மயில் சாமி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்ஷிதாவின் நடிப்பு மனதில் நிற்கிறது.
மகேஷ் முத்துஸ்வாமி கதைக்கான பொருத்தமான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். வசனங்களால் நகரும் காட்சிகள் அதிகம் என்பதால் ஸ்டீவ் வாட்ஸின் இசை தேவைப்படும் இடங்களில் அமைதியாக இருந்துவிடுவது படத்தை முழுமையாக ரசிக்க உதவியிருக்கிறது.
படைப்பூக்கத்துடன் போராடுபவர்கள், எத்தனை பொய்களைச் சொல்லியும் சினிமாவில் வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளாமல் தேங்கிவிடும் உதவி இயக்குநர்கள், கோடம்பாக்கத்துத் தெருக்களில் திக்கற்றுத் திரியும் ‘டவுட்’ செந்தில் போன்ற இளைஞர்கள், தமிழ் சினிமா விடம் மேன்மையை எதிர்பார்க்கும் இளங்கோ போன்ற சாமானியர்கள், நடிப்பு வாசனையே அறியாமல் நடிக்க வைக்கப்படும் கற்றுக்குட்டிகள் எனக் கோடம்பாக்கத்தின் பிரதிநிதிகள் சிலரை ராதாமோகன் நகைச்சுவை முலாம் பூசி நம் கண் முன் நிறுத்துகிறார்.
படம் எடுப்பதைப் பற்றிப் படம் எடுத் திருக்கும் இயக்குநர், அந்தச் சூழலை ஆழமாகக் கையாளவில்லை. வாழ்வின் யதார்த்தத்தைச் சொல்லவும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. என்றாலும் நகைச்சுவை, வசனங்கள், பாத்திரப் படைப்புகள் ஆகியவற்றால் ‘உப்பு கருவாடு’ மணக்கிறது.
-தஹிந்து