Showing posts with label உதயநிதி ஸ்டாலின். Show all posts
Showing posts with label உதயநிதி ஸ்டாலின். Show all posts

Saturday, August 15, 2015

வாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை? விஜய் என்ன உதவி செய்தார்? - சிம்பு ஓப்பன் டாக்!

"ஒய் சோ லேட்டு..?
இதான் வந்துட்டோம்ல... அதான் மாஸ்!"
இந்த விளம்பரத் துண்டு ரீலில் அடங்கியிருக்கிறது, 'வாலு' ரிலீஸ் எதிர்கொண்ட பிரச்சினைகள், வழக்குகள், தடைகள்!
திரையரங்குகள் பஞ்சாயத்து, விஜய் உதவி, அரசியலில் களம் இறங்குகிறார் சிம்பு என பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவை சந்தித்து பேசியபோது...
"மூன்று 3 வருடங்கள் கழித்து படம் ரீலீஸ். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?"
"நான் என்னை கடவுள்கிட்ட கொடுத்துவிட்டேன். அவர் என்ன நினைக்கிறாரோ அப்படி நடக்குது. 3 வருடங்கள் சிம்புக்கு படங்கள் வெளியாகவில்லை, அவன் காலி, இனிமேல் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தார்கள். இப்போது என் படம் 'வாலு' ரிலீஸ். அதை வெளியிடுவதற்கும் வழக்கு, திரையரங்குகள் ஒப்பந்தம் என நிறைய பிரச்சினைகள் எழுந்தது.
மூன்று வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்தது என் ரசிகர்கள். அவர்களின் பாசத்துக்கு நான் எப்போதுமே அடிமைதான். இந்த பஞ்சாயத்து, வழக்கு என எதுவுமே இல்லாமல் இருந்தால் 'வாலு' எப்போதோ வெளியாகி இருக்கும். நான் எப்போதுமே மற்றவர்களுக்கு நிறைய உதவிகள் பண்ணியிருக்கிறேன். ஆனால், எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதைதான் இதுவரை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு புதுமுக இயக்குநரான விஜய் சந்தருடன் இணைந்து பண்ணியிருக்கிறேன். என்னை விடுங்கள், அவருடைய உழைப்பு, கஷ்டம் அனைத்துமே வீணாகி விடக்கூடாது. அதனால் 'வாலு' வெளியாகி வரை கூடவே நின்றேன்.
"தொடர் பிரச்சினைகள் வருவதால் அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறதே. உண்மையா?"
"அரசியலைப் பற்றி எனக்கு தெரியாது. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தனியாக நின்று எதிர்கொள்வேன். அந்த தகவலில் உண்மை இல்லை."
"விஜய் எந்த வகையில் 'வாலு' படத்துக்கு உதவி செய்தார்..?"
"பணம் கொடுத்து விஜய் உதவி செய்யவில்லை. இப்படத்துக்கு வெளியீட்டில் பிரச்சினை எழுந்தபோது விஜய் தரப்பில் இருந்து பி.டி.செல்வகுமார் தான் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இப்போதும் காலையில் இருந்து, இரவு வரை கூடவே இருந்து என்ன பிரச்சினை வந்தாலும் முடித்து கொடுத்து படம் வெளிவர உதவி செய்கிறார். அந்த வகையில் எனக்கு விஜய் அண்ணா செய்த உதவியை இன்றைக்கு அல்ல என்றைக்குமே மறக்க மாட்டேன்.
இன்னொரு உண்மையும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்பாக 'வாலு' பிரச்சினை நிலவி வந்த நேரத்தில் லதா ரஜினிகாந்த் மேடம் போன் செய்து, "'வாலு'வுக்கு என்ன பிரச்சினை. உங்களை ரஜினி சார் பார்க்க வேண்டும்' என சொல்கிறார் என்றார்கள். ஆனால், நான் சொல்லவில்லை. என் படத்தின் பிரச்சினையை நாமளே தான் முடிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தேன். பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் ரஜினி சார் போன் பண்ணினார். "பிரச்சினை முடித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துகள். நான் உங்களை அழைத்தேனே. ஏன் வரவில்லை" என்றார்.
பிரச்சினை எழுந்தபோது அனைவருமே எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என்ன பிரச்சினை வந்தாலும், எழுந்து நிற்பேனே தவிர, பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளியும் ஆள் சிம்பு இல்லை.
"நீங்கள் ஒரு அஜித் ரசிகர். அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..?"
" 'தல' மேல வருத்தமா... வாய்ப்பே இல்லை. 'வாலு' படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. அஜித்துக்கு, சக்ரவர்த்திக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்ன என்பது திரையுலகுக்கு தெரியும். அப்புறம் எப்படி அஜித் உதவி செய்வார். படத்தை வாங்கியவுடன் அப்பாவுக்கு போன் பண்ணிய அஜித் சார், "எதற்குள் கவலைப்படாதீர்கள். அனைத்து பிரச்சினைகளையும் கடந்து சிம்பு வருவான்" என்று ஆறுதல் சொன்னார். இந்த விஷயத்தில் அஜித் உதவவில்லை என்று மாற்றி பேசி, அவர் மீது பழி போடுவதை நான் விரும்பவில்லை."
"உங்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தான் பிரச்சினை..?"
"ஒரு பிரச்சினையும் இல்லை. வருத்தம் இருக்கிறது. சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் வேறு ஒரு படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். 3 வருடம் கழித்து எனது படம் வெளியாகும் போது, பெரிய திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் எனக்கு கோபம் கிடையாது, வருத்தம் தான்.
இந்தப் பிரச்சினையால் எனது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் செய்த விஷயங்களை நிறுத்தச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நான்தானே. அவர்களது கோபத்தில் நியாயம் இருக்கிறது. தனது நடிகரின் படம் பெரிய திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்படத்தான் செய்வான். அதில் தவறு இல்லை.
"உங்களது அடுத்த படங்கள் குறித்து...?"
"கெளதம் மேனன் படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. 'வாலு' இப்போது ரிலீஸ். இனிமேல் செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். செப்டம்பரில் 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியீடு இருக்கும். அக்டோபர் அல்லது நவம்பரில் படம் வெளியாகும்.
கெளதம் மேனன், செல்வராகவன் படங்களை முடித்துவிட்டு அமீர் படத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன். அமீர் படத்தில் விஜய் சேதுபதி என்னுடன் நடிக்கிறார் என்பது எல்லாம் தவறான செய்தி. அந்த மாதிரியான ஒரு பாத்திரம், அப்படத்தில் இல்லை."


நன்றி - த இந்து

Wednesday, August 12, 2015

தன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது.......

'வாலு' படத்துக்கு விஜய்யின் தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' படத்தை வெளியிட இருப்பதால், செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர். அச்சந்திப்பில் டி.ஆர் பேசியது:
"சினிமா துறை எக்கச்சக்கமாக மாறியுள்ளது. படத்துக்கான மினிமம் கேரண்டி தொகையை தர திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லை. எனவே விநியோகஸ்தர்கள் தான் அனைத்து பணத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.
நேற்று வரை ’’வாலு’’ தயாரிப்பாளருக்கு பணப் பிரச்சினை இருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் நாங்கள் சரிகட்டியுள்ளோம்.
எனக்கு நடிகர் விஜய்யின் பால் பெரிய மரியாதை உள்ளது. அவர் நல்ல இதயம் கொண்ட தமிழர். விஜய் எனது பெரிய ரசிகர் என்பதை அவரது நண்பர்கள் சிலர் மூலம் அறிந்து கொண்டேன். நானும் அவருக்கு உண்மையிலேயே ஒரு ரசிகன்.
சினிமாவைச் சேர்ந்த யாரும் எந்த உதவியும் செய்யாத போது, விஜய் தனது மேனேஜர் பிடி செல்வகுமார் மூலமாக ’வாலு’ படத்துக்கு உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். அவரது தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது. பிடி செல்வகுமார் மற்றும் கோவையைச் சேர்ந்த விநியோகர் சிவாவிடம் பேசி ’வாலு’ படம் எந்த சிக்கலுமின்றி வெளியாக உதவி செய்யச் சொன்னார்.
அவர்கள் இருவரும் விஜய்க்கு தூதுவர்களைப் போல. அவர்கள் என்னுடன் நேற்று இரவு வரை இருந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவியாக இருந்தனர்.
நான் யாரையும் குற்றம் சாட்டப் போவதில்லை. அடிக்கடி படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம் தான். எனவே அவர்கள் இன்னொரு படத்துக்கு அதிக அரங்குகளை ஒதுக்கியுள்ளனர். சென்னையை தவிர மற்ற ஊர்களில் ’வாலு’ படம் பெரிய அரங்குகளில் வெளியாகும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் பல படங்களை வெளியிடத் திட்டங்கள் உள்ளன. எனக்கு விஜய் நடித்து வரும் 'புலி' படத்த்தின் சேலம் மற்றும் திருநெல்வேலி வெளியீடு உரிமையை வாங்க ஆசையும் உள்ளது" என்று பேசினார் டி.ராஜேந்தர்.

நன்றி - த இந்து

Tuesday, August 11, 2015

'வாலு' வெளியீட்டைத் தடுக்கிறேனா?- உதயநிதி ட்விட்டர் ட்விஸ்ட்

உதயநிதி ஸ்டாலின்| கோப்புப் படம்.
உதயநிதி ஸ்டாலின்| கோப்புப் படம்.
'வாலு' படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார் என்று ட்விட்டர் தளத்தில் கூறிவந்த சிம்பு ரசிகர்களுக்கு, காட்டமாக பதிலளித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் 'வாலு' படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், படத்துக்கு பல்வேறு தரப்பில் பிரச்சினைகள் நிலவி வந்ததால், ஒவ்வொரு பிரச்சினையாக முடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 14ம் தேதி படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. ஆர்யா நடிப்பில் வெளியாகும் 25வது படம் என்பதால், படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு என்பதை ஒரு மாதத்துக்கு முன்பே அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். இப்படத்துக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் மட்டும் உதயநிதி ஸ்டாலின் செய்து கொடுக்கிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' வெளியாக கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள், உதயநிதிக்கு எதிராக ஹாஷ்டேக் ஒன்றை தயார் செய்து ட்ரெண்ட் செய்து வந்தார்கள். மேலும், உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் தளத்தை குறிப்பிட்டு திட்டி தீர்த்தார்கள் சிம்பு ரசிகர்கள்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், "இது மிகவும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. நான் ஏன் வாலு பட ரிலீஸை தடுக்க வேண்டும். மேலும் அது எவ்வாறு முடியும். இத்தகைய முடிவுகளுக்கு வருவதற்கு முன் நன்றாக யோசியுங்கள்.
அர்த்தமற்ற விஷயங்களை பதிவு செய்து காரணமே இல்லாமல் ட்விட்டரில் நான் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த ஒரு நட்சத்திரத்துக்கும் எதிரானவன் இல்லை. எந்த ஒரு நட்சத்திரத்தின் ரசிகர்களும் எனக்கு எதிரி இல்லை. அடுத்தவர்களை விமர்சிக்கும் முன் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு படமும் அதனை தயாரிப்பவர்கள், விநியோகிப்பவர்கள், தியேட்டரில் அதை வெளியிடுபவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எனது படங்கள் முக்கியத்துவம் பெற வேண்டும் என நான் நிச்சயம் நினைப்பேன். ஆனால், அதற்காக அடுத்தவர் படத்தை தடுக்க மாட்டேன்" என்று காட்டமாக தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.



நன்றி - த இந்து

Saturday, March 28, 2015

நண்பேன்டா - நயன் தாராவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது எப்படி - உதயநிதி பேட்டி

“ஆறு மாதத்துக்கு முன் 'நண்பேன்டா' படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது நயன்தாராவைப் பார்த்தது. ஆனால் இப்பவும் கிசுகிசு எழுதிகிட்டே இருக்காங்க. கிசுகிசுக்கள் என்னோட படத்திற்கு விளம்பரம்தானே. அதனால் நான் எதையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் எனக்குக் கொடுக்கும் விளம்பரம், கோடி ரூபாய் செலவழித்தாலும் கிடைக்காது" எனச் சண்டை காட்சி படப்பிடிப்பு இடையே கெத்தாகப் பேசத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
மறுபடியும் ஒரு வெற்றி தேவை என்பதை மனதில் வைத்து உருவான படம் மாதிரித் தெரிகிறதே?
என்னோட கடந்த இரண்டு படங்கள் மாதிரிக் குடும்பம், சென்டிமெண்ட் எதுவும் எல்லாம் இல்லாமல் முழுக்கக் காமெடியைப் பின்னணியாகக் கொண்டு தொடக்கப்பட்ட படம்தான் ‘நண்பேன்டா'.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானம் என்னோடு முழுக்க இருப்பார். இந்தப் படத்தில் நான், சந்தானம், நயன் எல்லாருக்குமே சரிசமமா இருக்கோம். சந்தானத்துடன் நான் செய்திருக்கும் காமெடி கலாட்டா மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். தமன்னா ஒரு சின்னக் கதாபாத்திரம் பண்ணியிருக்காங்க.
தொடர்ச்சியாகச் சந்தானத்தோடு கூட்டணி அமைக்க என்னக் காரணம்?
எனக்கு யாரோடு படப்பிடிப்புக்குப் போனால் ஜாலியாக இருக்குமோ அவர்களோடு பயணிக்கிறேன். அவ்வளவுதான். இப்போது 'கெத்து' படத்தில் கருணாகரனோடு நடிக்கிறேன். இந்தப் படத்தில் சந்தானம் கிடையாது. கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை இயக்குநரின் பார்வைக்கு விட்டு விடுகிறேன். ‘நண்பேன்டா' படத்தில் சந்தானம் பண்ணியிருக்கும் பாத்திரத்தை வேறு யார் பண்ணினாலும் சரியாக வராது.
‘நண்பேன்டா' படத்தில் நடனம், சண்டை என அடுத்த கட்டத்திற்குப் போயிருக்கிறீர்களாமே?
அதற்குக் காரணம் சந்தானம்தான். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துக்கு நடனம் சொல்லிக் கொடுத்தால், "அய்யோ.. நடனமா இதெல்லாம் வேண்டாம்பா" என்று சொல்லிவிடுவார். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் பார்த்தேன்.
நாயகன் என்றவுடன் நடனத்திற்கு நிறைய பயிற்சிகள் செய்து அவ்வளவு சூப்பராக நடனமாடிவிட்டார். அப்படி என்றால் நான் சும்மா இருக்க முடியுமா? நானும் நடனப் பயிற்சி எல்லாம் எடுத்து, இந்தப் படத்தில் சந்தானத்துக்குச் சரிசமமாக நடனமாடி இருக்கிறேன்.
நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
உங்களது வீட்டில் உங்களது படங்களை விமர்சனம் செய்பவர் யார்?
என் மனைவிதான். நான் நடிக்கும் எல்லாப் படங்களின் கதையும் அவங்களுக்குத் தெரியும். படம் முடிந்தவுடனே போட்டுக் காண்பிப்பேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' பார்த்துவிட்டுச் சூப்பர் என்றார், ‘இது கதிர்வேலன் காதல்' பார்த்துவிட்டு முந்தைய படம் மாதிரி காமெடி இல்ல என்றார்.
அவங்கதான் எனது முதல் விமர்சகர். அதற்குப் பிறகு என்னோட பசங்க, என்னோட தங்கை பசங்க. இப்பவும், சந்தானம் என்று பேச்சை எடுத்தால், அவர் பெயர் பார்த்தா, சந்தானம் கிடையாது என்கிறார்கள். அந்தக் கதாபாத்திரம் அந்தளவிற்குப் பதிந்துவிட்டது.
கெத்து' படத்தில் ஆக் ஷன் அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போல?
கண்டிப்பாகக் கிடையாது. ‘நண்பேன்டா' படத்தில் சண்டை காமெடியாக இருக்கும். இந்தப் படத்தில் ரோப் எல்லாம் கட்டி சண்டை போட்டிருக்கிறேன். இரண்டு சண்டைக் காட்சிகள். என் முந்தைய படங்களை விட கெட்அப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். கதாநாயகி ஏமி ஜாக் ஸன், காமெடிக்கு கருணாகரன், இயக்குநர் திருக்குமரன், ஒளிப்பதிவாளர் சுகுமாரன் எனப் புதிய கூட்டணி, புதிய களம்.
ஒரே மாதிரியான படங்கள் பண்ணுவதைவிட, அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கிறேன். ‘கெத்து' ஒரு ஆக் ஷன் த்ரில்லர் வகையில் இருக்கும். இப்படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் அஹமத்துடன் ‘இதயம் முரளி' பண்றேன். அப்படம் ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். அமெரிக்காவில் நடப்பது போன்ற கதை.


நன்றி - த இந்து


Monday, February 17, 2014

‘நண்பேன்டா' - படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம் -உதயநிதி ஸ்டாலின்

சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாத சமத்துப் பையன் உதயநிதி ஸ்டாலின். அரசியல் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு வார்த்தைகளையும் அளந்து பேசுகிறார்.



 அதே நேரம் மனதில் பட்ட ஆதங்கத்தைப் பளிச்சென்று உடைக்கும் துணிவுக்கும் குறைவில்லை. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி‘ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகமான உதயநிதிக்கு இன்று வெளியாகியிருக்கும் 'இது கதிர்வேலன் காதல்' இரண்டாவது படம். பரிட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் +2 பையனைப் போல ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்... 



முதல் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இரண்டாவது படம் காப்பாற்றுமா?


 

நிச்சயமா! படத்தில் கதிர்வேலன் என்ற கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணன் கேரக்டரருக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர். அப்பாவுக்கு ரொம்ப பயந்த பையன். ஆஞ்சநேய பக்தன். பெண்ணுங்களே பிடிக்காது. இப்படியிருக்குற ஒரு பையன் கோயம்புத்தூர் போறான். அங்க பவித்ராவைப் பாத்து காதலிக்கிறான். நண்பன் உதவுகிறான். இப்படிப் போகும் கதை. 



காதலர்கள், நண்பன் என்பதைத் தவிர வேறு என்ன புதுமை?


 

‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நான், ஹன்சிகா, சந்தானம் இப்படி எங்களுக்குள்ளதான் கதையே போகும். ஆனா, இதுல எல்லாரையும் சுற்றியும் கதை நகரும். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி', ‘சுந்தரபாண்டியன்' படத்தையும் சேர்ந்து பண்ணினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் படம். முகம் சுளிக்க வைக்கிற எந்த ஒரு காட்சியும் இருக்காது. படம் முடிச்சு வெளியே வர்றப்போ அப்பா -
பையன் உறவுக்கான படமா பேசப்படும். முழுக்க காதல் கதைன்னு சொல்ல மாட்டேன்.
ஃபேமிலியோட பார்க்க பெஸ்ட்டான படம்.
 



நிஜத்திலும் நீங்க ஆஞ்சநேயர் பக்தனா?


 

நிஜத்துல எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. கோவிலுக்கு எல்லாம் போகவே மாட்டேன். சில விஷயங்கள் ஒத்துப் போகும். அவ்வளவுதான்.
 



படத்தில் உங்க குடும்ப விஷயங்களும் நிறைய இடம் பிடிச்சிருக்காமே ?


 

படத்தோட கதை விவாதம் நடந்தப்போ
 எங்கப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கேன். அதை பிரபாகரன் அப்படியே படத்துல வைச்சிட்டார். எனக்கு டப்பிங் பேசறப்போ
கூட இது தெரியல. ‘உங்கப்பா பத்தி சொன்னீங்களே.. அதைத்தான் காட்சியாக மாற்றிவிட்டேன்' அப்படின்னு சொன்னார். நான் தினமும் எங்கப்பாகிட்ட பேசிருவேன், இல்லன்னா நேர்ல பாத்துருவேன். பேசாம ஒரு நாள்கூட இருந்ததில்லை. அதைத்தான் அவர் காட்சியாக வைத்து விட்டார். என்னோட காதலுக்கு முதல் சப்போர்ட் எங்கப்பாதான். என்னோட ஒரிஜினல் கேரக்டரை இந்தப் படத்துல பண்ணல. இயக்குநர் பிரபாகரனுக்கும் காதல் திருமணம்தான். அவரோட கதையா இருக்கலாம்னு நினைக்கிறேன்.
 




இதுக்கு அடுத்து நடிக்கிற படத்திலும் நயன்தாராவோட கூட்டணி தொடருதே? ஏதும் கெமிஸ்ட்ரி விசேஷமா?
 


கெமிஸ்ட்ரியும் இல்ல, பிசிக்ஸும் இல்ல.
என்னோட ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல ஹாரிஸ், சந்தானம், பாலசுப்பிரமணியம் இருந்தாங்க. ‘இது கதிர்வேலன் காதல்'
படத்துலயும் இருக்காங்க. ‘நண்பேன்டா'லயும் இருக்காங்க. அதே மாதிரிதான் அடுத்த படத்துல நயன்தாரா இருக்குறதும்.
ஒரு ஹிட் காம்பினேஷன் திருப்பியும் சேருவதில் தப்பில்லையே. 



நகைச்சுவைக் கதைகளிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?


 

எனக்கு காமெடி ஈசியா வருது, பண்றேன். அடுத்து நடிக்கப்போற ‘நண்பேன்டா' படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம்னு சொல்லலாம். நானும் சந்தானமும் பயங்கர கலாட்டா பண்ற படமாயிருக்கும். மற்ற படங்கள் பண்ணலாம் அப்படிங்குற நம்பிக்கை வரல. நம்பிக்கை வர்றப்போ பண்ணுவேன். 



நடிப்பு, தயாரிப்பு, விநியோகம்னு கலக்குறீங்க. பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இல்லையா?


 

முதல் காரணம் நடிகர்கள் சம்பளம். பெரிய நடிகர்கள் பண்ணினா அவருக்கு ஏற்றாற்போல பெரிய இயக்குநரைத்தான் பாக்கணும். இரண்டாவது காரணம் இப்போ நானே ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னோரு ஹீரோ கிட்ட போய் தேதி கேட்கிறதுக்கு நானே நடிச்சுடுவேன். பெரிய பட்ஜெட் படங்கள் இனிமேல் பண்ண மாட்
டேன்னு சொல்ல மாட்டேன். பண்ணுவேன். ஆனால் வியாபார ரீதியில் நல்லா போக
ணும். அந்த மாதிரி கரெக்ட்டான டீம் அமைஞ்
சுட்டா தயாரிக்கத் தயாரா இருக்கேன். 



வரி விலக்கு பிரச்சனையில் தொடர்ந்து போராடிகிட்டு இருக்கிங்களே?


 

இப்ப இருக்குற வரி விலக்குக் குழுவே வேண்டாம் அப்படின்னு நீதிமன்றத்துல வழக்கு போட்டுருக்கேன். படத்தைப் பார்த்து அவங்களுக்கு முடிவு எடுக்கத் தெரியல. அதனால நீதிமன்றமே ஒரு குழு அமைக்க வேண்டும் அப்படின்னு கேட்டிருக்கேன். நீதி கிடைக்கும்வரை விட மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்துலயும் புகார் கொடுத்தேன். யாரும் ஒரு நடவடிக்கையும் எடுக்கல. இப்போ எனக்கு மட்டும் நடக்கல.
அரசாங்கத்திற்கு யாரெல்லாம் எதிரா இருக்காங்களோ எல்லாத்துக்கும் வரி
விலக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. ஜில்லா, வீரம் இப்படி எந்தப் படத்துக்கும் வரிவிலக்கு கொடுக்கலயே. 


THANX = THE HINDU

Tuesday, October 22, 2013

ஜெ. VS உதயநிதி - புகார் - வரி விலக்கில் முறைகேடுகள் :

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்தொடர்ச்சியாக தான் தயாரிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைக் கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் 'ரெட் ஜெயன்ட்' நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.


'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' ஆகிய படங்களுக்கு வரிவிலக்கு வழங்காததால், நீதிமன்றத்திற்கு சென்று, பிறகு வரிவிலக்கு வாங்கினார்கள். அதைப் போலவே தற்போது 'வணக்கம் சென்னை' படத்திற்கும் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.


வழக்குத் தொடர்ந்தது மட்டுமன்றி, தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பது :


“'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' போன்ற மக்களின் வரவேற்பைப் பெற்ற எங்களின் படங்களுக்கு வரிவிலக்கை நிராகரித்த இந்தக் குழுவினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் 'வணக்கம் சென்னை' திரைப்படத்துக்கும் வரிவிலக்கு நிராகரிப்புச் செய்து பரிந்துரை செய்துள்ளனர்.
குறிப்பாக திரைப்படப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி இம்மூன்று படங்களையுமே பார்வையிட்ட குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.


 எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மக்கள் குரல் பத்திரிகை நிருபர் திரு.ராம்ஜி போன்றோர் வரிவிலக்கு நிராகரிப்படும் படங்களைப் பார்க்கும் குழுக்களில் தவறாமல் இடம் பெறுகின்றனர். இவர்கள் சுயேட்சையாக தங்கள் முடிவுகளை அறிவிக்காமல், அரசு அதிகாரிகளால் இடப்படும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்தே தங்கள் முடிவுகளை எழுதி வருகின்றனர்.



திரைப்படத்தை பார்வையிட வரும் குழு உறுப்பினர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலரைத் தங்களுடன் திரையரங்குகள் அழைத்துச்சென்று திரைப்படத்தைப் பார்வையிடுவது வாடிக்கையாக உள்ளது. இவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டபடி பரிந்துரைக் கடிதங்களை குழு உறுப்பினர்களிடமிருந்து எழுதி வாங்குவதற்கும், வணிக வரி இணை ஆணையருக்கு உதவுவதற்குமே வருவதாக தெரிகிறது.



'வணக்கம் சென்னை' வரி விலக்குக் குழுவிற்காகத் திரையிடப்பட்டபோது பழனி என்ற வணிக வரித்துறை இணை ஆணையாளர் அலுவல் சார்ந்த உறுப்பினராகக் குழுவில் இடம் பிடித்திருந்தார். குழுவின் இன்னொரு உறுப்பினரான பின்னணிப் பாடகர் டி.எல்.மகாராஜன் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை உடன் அழைத்து வந்த போது பழனி மறுப்பேதும் கூறாமல் அந்த நபரை தங்களுடன் திரைப்படத்தைப் பார்வையிட அனுமதித்தார்.



அதேபோல மற்றொரு உறுப்பினரான எம்.என் ராஜம் தனது கணவர் ஏ.எல்.ராகவனை உடன் அழைத்து வந்தபோதும் பழனி அவர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நீதிபதியாக படம் பார்க்க வருபவர் தன்னுடன் உறவினர்களை அழைத்து வருவது சட்ட விரோதமான செயல். இதை பொறுப்பு அதிகாரியான வணிக வரித்துறை இணை ஆணையாளர் கண்டும் காணாமல் இருந்தது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது.



படம் பார்த்த ஆறு பேரில், ஐந்து பேர் நிராகரித்து எழுதிவிட்ட நிலையில், வரிவிலக்கு இந்தப் படத்துக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையிலும், பிடிவாதமாக படம் பார்த்த அனைவருமே நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பது, எந்த அளவிற்கு அவர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் உள்ளவர்கள் என்பதையே காட்டுகிறது.



இவ்வாறு தொடர்ந்து எங்களது படங்களுக்கு மட்டும் நியாயமற்ற முறையில் கேளிக்கை வரிவிலக்கு நிராகரிக்கப்படுவதால் எங்களை நம்பி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்


. ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களின் நலனையும் காத்திட வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறோம்” என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுமட்டுமல்லாமல், அப்புகாரில் என்னென்ன முறைகெடுகள் வரிவிலக்கில் நடைபெற்றன என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

thanx - the hindu