உட்டாலங்கடி உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை
நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன்
வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக
உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத்
தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று
நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல
தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர்.

உண்ணாவிரதப்
பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு
வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை
சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரையும் குசலம் விசாரித்தார்.
12.45-மணிக்கு தனது இன்னோவா காரில் பறந்துவிட்டார் ரஜினி.

தி.மு.க-வின்
உள்கட்சி விவகாரங்களில் தலையிடும் குஷ்பு, பொதுப் பிரச்னையான ஈழத்
தமிழருக்கு ஆதரவான உண்ணவிரதத்தில் தலையே காட்டவில்லை. 2-ம் தேதி இரவு
ஸ்டார் ஹோட்டலில் பிரபுதேவா பிறந்த நாள் கொண்டாடினார். அங்கே நடந்த
திருவிழாவில் 'உற்சாகமாக’ பிரபுதேவாவை அரவணைத்தபடி போஸ் கொடுத்தார் குஷ்பு.
இருவருமே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

ஏப்ரல்
1-ம் தேதி 'சிறுத்தை’ சிவா இயக்கும் 'வெற்றிகொண்டான்’ படத்தின்
படப்பிடிப்பை வைத்திருந்தனர். உண்ணாவிரதத்தில் அஜித் கலந்துகொண்டதால்,
படப்பிடிப்பை 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். பொது நிகழ்ச்சிகளில்
பெரும்பாலும் தலையைக் காட்டாத அஜித், கால் வலியுடன் காலில் வளையம்
மாட்டிக்கொண்டு உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து இருந்தார்.

அன்று
காலை உண்ணாவிரதப் பந்தலுக்கு வராமல் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழாவில்
கலந்துகொண்டார், த்ரிஷா. விஷயம் கேள்விப்பட்டு, த்ரிஷாவுக்கு போன்செய்த
ராதாரவி கடுமையாகவே திட்டிவிட்டாராம். அதன் பிறகே மதியம் ஒன்றரை மணிக்கு
வந்தார். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நைஸாக எஸ்கேப் ஆனார். அன்று இரவு
நடந்த பிரபுதேவா பார்ட்டியில் த்ரிஷாவும் செம டான்ஸ்.

''சிறுவன்
பாலச்சந்திரன் முதுகில் குண்டு பாய்ந்து இறக்கவில்லை. மார்பில் குண்டு
வாங்கி, மரணத்தில்கூட தான் ஒரு மாவீரனின் மகன் என்று நிரூபித்து
இருக்கிறான்'' என்று கடைசியில் வாகை சந்திரசேகர் பேசியதைக் கேட்டு சிலர்
கண் கலங்கினார்கள்.


ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம்
இருந்தார் விஜய். இப்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்ததால்
வரவில்லை. அதைக் கடிதமாக சரத்குமாருக்கு அனுப்ப, உண்ணாவிரதப் பந்தலில்
விஜய் கடிதம் படித்துக் காட்டப்பட்டது.

உண்ணாவிரதத்துக்கு
வந்தவர்களை வாசல் வரை சென்று ராதாரவியும் வாகை சந்திரசேகரும் அழைத்து
வந்தனர். வடிவேலுவை உண்ணாவிரதத்துக்கு அழைத்தார்களாம். ''வேணாம். அங்கே
வந்தா, நான் ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுற மாதிரி சிலர் விசாரிப்பாங்க.
எனக்கு தர்மசங்கடம் ஆகிடும். ஆளைவிடுங்கப்பா..’ என்று கழண்டுகொண்டாராம்
வைகைப் புயல்.

'விஸ்வரூபம்’
விவகாரத்தை உலக மகா பிரச்னை ஆக்கி, 'நான் தமிழ்நாட்டை விட்டுப்போறேன்.
இந்தியாவை விட்டுப் போகப்போறேன். எனக்கு வாழ்வதற்கு உலகத்தில் இடமே
இல்லையா?’ என்றெல்லாம் தழுதழுத்த கமல், உண்ணாவிரதம் முடியும் நேரத்தில்
வந்து மற்றவர்கள் பழரசம் குடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
நல்லாத்தாம்பா நடிக்கிறாங்க!
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்
thanx - ju vi