Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Sunday, March 31, 2013

கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1

Monday, March 11, 2013

புரட்சித்தீ பற்றி எரிகிறது ! ஸ்தம்பித்தது தமிழகம்

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது! ( படங்கள் ) 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 2200 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.




மேலும், இலங்கை உடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசுவாமி உருவ பொம்மையை எரி்த்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 70 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், லயோலா மாணவர்களை விடுதலை செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவபட்டன், சாயல்ராமன் ஆகியோர் களத்தில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவை கண்டித்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் லயோலா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் காரல்மார்க்ஸ் மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

பின்னர், 100 மாணவர்களை திரட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதியளிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி அளி்த்தது. இதையடுத்து காரல்மார்க்ஸ் தலைமையில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

சென்னை அடையாறில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் காதர்மொய்தீன் கல்லூரி மாணவர்கள்  3 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மக்கள் கருத்து 



1. ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் நாலு பேர் நான்கு விதமாக பேசத்தான் செய்வார்கள்!!! துவங்கிவிட்டோம் நல்ல செயல் என்று அதன் முடிவை அறுவடை செய்யும் வரை போராடுவோம்!!! வெற்றி கிடைக்கவில்லையெனினும் பரவாயில்லை!!! முயற்சி செய்த திருப்தியாவது இருக்கும்!!!



2, இது கட்டாயம் தேவையானது. இந்தியாவினால் அழிக்கபட்ட ஈழத்தமிழர் போராட்டமும் அதனான் அடிமையாக்கப்பட்ட ஈழத்தமிழலர் விடுதலை தமிழ் நாட்டு மாணவர்களால் பெற கடவுள் ஆசிர்வதிபாராக.
ஈழத்தமிழன் போராட முடியாது. அங்கே அது அடக்கப்பட்டுவிட்டது. மற்றைய நாடுகளில் எல்லாம் தமிழன் சிறுபாமண்மை. அந்த நாடுகள் தமிழனுக்கு மதிப்பு கொடுப்பதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் போராட முடிகிறது. தாய்த்தமிழன் தான்மற்றத்தமிழனை காப்பாற்ற வேண்டும். 




3. மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.--- இதெல்லாம் தவறு. உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். எவனாவது தவறான உசுப்பேத்தலின் பெயரில் விட்டில் பூச்சியாகாமல் ஜாக்கிரதையாக போராடவேண்டும். 



4. இப்போராட்டம் தமிழர்களை ஒன்றுபடுத்தும் போராட்டம்; இதை யாரும் கொச்சை படுத்த வேண்டாம். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ்நாட்டின்,தமிழர்களின் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்; மத்திய அரசாங்கத்தை உலூக்கும் போராட்டம்; தேவை அமைதியான அதே சமயம் அழுத்தமான , விட்டுக்குடுக்காத போராட்டமாக இருக்கவேண்டும். லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அடக்கப்பட்டதன் விளைவே இன்று தமிழகம் முழுவதும் போராட்டம். இந்த தருணத்தில் வைகோ போன்ற தலைவர்கள் மக்கள் சக்தியை ஓன்று திரட்டி மொத தமிழகமும் இதில் பங்குபெற செய்யவேண்டும். இப்பொழுது ஒற்றுமை இல்லாவிட்டால் இனிமேல் தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைக்கும் ஒற்றுமையாக போராடமுடியாது. மக்களே நியமாக போராடும் மாணவர்கள் பின்னால் அணி திரளுங்கள் . 




5.  மனித உரிமை விதிகள் எல்லா கல்லுரிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன.பின் பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

குழு நிலையில் மனித உரிமைகளாக மக்கள் கருதுவதை அரசுக்கு எடுத்து செல்லலாம்.அதற்குரிய பதில், அரசு விதிகளாக சுட்டப்படும் நிலையில் நாட்டு நடப்பு, அரசுக்கொள்கைகள் பின் பற்றும் சூழல் வரும்.
நாட்டு நடப்பு நிர்வாகம் செய்யும் முதல்வர் மக்களுக்கு போராட்டம் அரசு கொள்கைகளுக்குட்பட்டதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்.உண்ணாவிரதம் இருந்தாலும் கோரிக்கையை பெற்று தக்க அரசு விதிகளின் பால் பதில் சொல்லிவிட்டால் , தக்க நடவடிக்கை எடுக்க அரசு யந்திரத்தை அணுகி விட்டால் போராட்டத்தின் நோக்கம் முற்று பெறுகிறந்தென்ற வகையில் அரசுக்கு அதற்கு மேல் பொறுப்பு இல்லை.

காவல்பணி சட்ட ஒழுங்கு துறை தர வேண்டியதில்லை.மொழி, மதம், இனம், சாதி இவற்றினடிப்படையில் எடுக்கப்படும் தீர்வு தனி மனித நம்பிக்கை.பொது நடப்பாகாது.என்பதை முதல்வர் மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டவர்.சார்பின்மை அரசுக்கொள்கை.சுயனிர்ணயத்தன்மை, நல்லிணக்கம், ஒற்றுமை இவை அரசுக் கொள்கை என அறிவுறுத்த முதல்வர் கடமைப்பட்டவர்.

அரசு விதிகளின் படி நெறிப்படுத்தப்பட்ட கோரிக்கையை அரச்சு செயலகத்துக்கு தந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரும் கடமை பெற்றவர்.


சர்வதேச நீதி மன்றத்தில் தன் நிலைப்பாட்டை ஆதரிக்க சொல்லி யாரும் வற்புறுத்த முடியாது.ஆதரவு அல்லது எதிர்ப்பு சர்வதேச அமைப்புகளை பொறுத்தவரை வெறும் வாக்குகளல்ல.அன்னிலைப்பாடு ஏன் என்ற தெளிவு, விளக்கம், தீர்வை முன்னடத்தும் சான்றுகள்.

இது போன்ற நிகழ்வுகள் தரும் அழுத்தம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு சிந்திக்க , செயல்பட விடாத அவசர சூழலை தரும்.போராட்டத்தை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் தெளிவான நிலைப்பாட்டை தெரிவித்து கட்சி தொண்டர்களின் ஒப்பம் பெற்று அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிப்பது அரசு நடை முறை என அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகை, விழாக்களின் போது தரும் வாழ்த்து செய்திகள் ஏன் நடைமுறையாகவில்லை நஎன்பதை அரசியல் சதலைவர்கள் சிந்திக்க வேண்டும்.சுயனிர்ணயத்தன்மை, சிந்திக்க அனுமதிக்கும் தளம்.கருத்து சுதந்திரம், நெற்ப்படுத்தி அரசுக்கொள்கைகளை ஏற்றுக்கொல்ள தரும் வாய்ப்பு.முதல்வர் பயனாக்குவாரா?.

கட்சி நிலைப்பாடும், தேர்தலும் , முதல்வரையும், மக்கள் பிரதினிதிகளையும் அரசுக்கொள்கைகள் நிறுவ தயங்கும் சூழல் ஏற்படுத்துமெனில், கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக அரசால் மாற்றம் கொள்ள செய்வது அவசியம்




லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்! 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், இன்று தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, முதலில் கல்லூரி அருகேயும், பின்னர் கோயம்பேடு அருகிலும்  உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், நேற்று இரவு கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்களை காவல்துறை விடுவித்தது.


இந்நிலையில் அவர்கள் இன்று மாலை  தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். லயோலா கல்லூரி முதல்வர் ஜெயராஜ், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


தங்களது போராட்டம் தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தியும், லயோலா மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - விகடன் 


 எனது ட்வீட்ஸ்


1. இரட்டை இலைக்கு இரட்டைத்தலைவலி 1 கூடங்குளம் போராட்டம் 2 நாடு தழுவிய மாணவர்கள் பிரம்மாண்டப்போராட்டம்



2. ஒவ்வொரு புரட்சி ந்டக்கும்போதும் எகத்தாளங்களைத்தாண்டியே வந்திருக்கிறது.



3. நாளை - முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் போராட்டம் பின்னுக்குத்தள்ளப்பட்டு மாண்வர் போராட்டம் முன்னிலைப்படுத்தப்படும் நாள்


4. வெற்றி பெறுவதில் மட்டும் வீரம் இல்லை.போராட்டமே ஒரு வெற்றியே!



5. புரட்சித்தீ பற்ற வைக்கப்பட்டு விட்டது.சிலர் தீக்குச்சி தீர்ந்து விட்டது என எள்ளி நகையாடுகின்றனர்.காட்டுத்தீ பரவி விட்டதை அறியாமல்


6. முன்னே பாய்வதற்கு முன் சில அடிகள் பின்னோக்கி போக வேண்டி இருக்கும்.அது பின்னடைவு அல்ல


7. 

Saturday, November 17, 2012

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததா ஐ நா?

ஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.?

கேள்வி எழுப்பும் உள் பரிசீலனைக் குழு!
'இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறி விட்டது. மிக அபாயகரமான போர் சூழலில் வெகுதிறமையான முடிவை எடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் போனது இந்த அமைப்பின் செயல்பாடு மற்றும் அணுகுமுறைக்கான மிகப்பெரும் தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது, அந்த அமைப்​பின் உள்பரிசீலனைக் குழு.




ஈழப்போர் சமயத்தில் ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள் குறித்து ஐ.நா. அமைப்பின் உள்பரிசீலனைக் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அந்தக் குழு தயாரித்த முக்கிய அறிக்கையின் (இறுதி வடிவத்துக்கு முந்தைய நிலை அறிக்கை) நகல் ஒன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு லீக் ஆனது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் பி.பி.சி-யின் செய்தி​யாளர் ஒருவர், ''26 ஆண்டுகள் நடத்தப்பட்ட போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.



 இறுதிக் கட்டப் போரின் கடைசி நான்கைந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா-வின் முந்தைய அறிக்கை சொன்னது. ஐ.நா-வின் உறுப்பினர்கள் யுத்தக்களத்தில் தொடர்ந்து இருந்திருந்தால், இலங்கை அரசின் வீரியம் குறைந்து இருக்கும் என்பதே இப்போது வெளியாகி இருக்கும் அறிக்கையின் அடிப்படை சாராம்சம். ஐ.நா-வின் யுத்தக்கால செயல்பாடுகள் குறித்து அந்தக்குழு கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.



 குறிப்பாக, 2008 செப்டம்பரில் ஐ.நா. தனது ஊழியர்களை யுத்தக்களத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்ட முடிவு குறித்து அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். 'உங்களுடைய பாதுகாப்பை இனிமேலும் நாங்கள் உறுதிப்படுத்த முடியாது’ என்று, இலங்கை அரசு எச்சரித்ததும், இந்த திரும்பப்பெறுதல் நடந்ததை கேள்வியாக்கி இருக்கிறார்கள்.



இப்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை, 'ஐ.நா. குழுவினர் யுத்தக் களத்தைவிட்டு கிளம்பியபோது, போக வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் அழுதும் கெஞ்சியும் பார்த்தோம். ஆனால், அவர்கள் எங்களது கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கவே இல்லை. அவர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந் திருந்தால், இன்றைக்கு அப்பாவித் தமிழர்கள் பலரும் உயிரோடு இருந்திருப்பார்கள்’ என்று எங்கள் செய்தி​யாளரிடம் குமுறினார்.



'இலங்கை அரசு தொடர்ந்து பிரஷர் கொடுத்ததன் விளைவாக, மிகஅதிகமான மக்கள் ஷெல் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை ஐ.நா. அழுத்தமாக எழுப்பவில்லையோ...’ என்ற விமர்சனத்தையும் அந்தக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது. அமைதிக் காப்பாளர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந்திருக்க வேண்டும், அங்கே என்னென்ன நடக்கிறது என்பதையும் உலகுக்கு உடனுக்குடன் உணர்த்தி இருக்க வேண்டும் என்பதையும் அறிக்கை அழுத்திச் சொல்கிறது.


தமிழர்களுக்கு எதிரான யுத்தக் காலத்தின் இறுதி மாதங்களில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்றுகூட நடத்தப்படவில்லை. ஐ.நா-வின் உயர்மட்டக் குழுவும் ஃபார்மாலிட்டி ஆலோசனை கூட செய்யவில்லை என்கிறார்கள். எங்களுடைய முன்னாள் ஸ்ரீலங்கா செய்தியாளர் ஒருவர், 'மிகக் குரூரமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டி இருக்கிறது.



அதேநேரம், இலங்கை அரசின் ராணுவம், பயங்கரவாதிகள் கூட்டம் போன்று மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டி, உலகப் போர்நடைமுறை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அந்த நேரத்தில் முயற்சி மேற்கொண்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால், அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் அவர்.



ஐ.நா-வின் முன்னாள் உயர் அதிகாரியும் அறிக்கை அளித்திருக்கும் ஆய்வுக்குழுவின் தலைவருமான சார்லஸ் பெட்ரே, 'குழு கண்டறிந்த விஷயங்களை இந்த அறிக்கை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது’ என்று அதிர்ச்சிகளுக்கு வலுசேர்த்து இருக்கிறார். அறிக்கையின் உள்ளடக்கங்கள் வெளியான பிறகு பல தளங்களில் இருந்தும் விமர்சனங்களும் கண்டனங்​களும் கருத்துகளும் குவிந்த வண்ணம் இருக்​கின்றன. 'பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து ஐ.நா. தவறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.



ஐ.நா-வின் கரங்கள் கட்டப்பட்டு இருப்பது புலன் ஆகிறது. சென்சிட்டிவான சமயங்களில் ஐ.நா. அமைப்புக்கு அரசியல் மற்றும் அதிகார ரீதியில் ஆலோசனைகளையும் அறிவுரை களையும் வழங்குவதற்கு ஆட்களே இல்லை’ என்று உலக நாடுகள் பலவற்றில் இருந் தும் கண்டன விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.



இந்த விவகாரத்தில் ஐ.நா-வின் பதில் என்ன? ''அறிக்கை நகல் வெளியானது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இறுதி அறிக்கை பொதுச்செயலாளரின் கரங்களுக்கு வந்து, அவர் அதை வாசித்த பிறகு வெளியிடப்படும்'' என்கிறார் ஐ.நா-வின் செய்தித்தொடர்பாளர் மார்டின் நெசிர்கி.



இறுதி அறிக்கை வெளியாகும்போது, ஐ.நா-வின் இந்த பலவீனப் பக்கங்கள் எடிட் செய்யப்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆபத்தில் அலறும் மக்களைக் காப்பாற்ற முடியாத ஓர் அமைப்பு இருந்து என்னதான் பயன்?



- எஸ்.ஷக்தி



இலங்கைக்கு எதிராக 93 நாடுகள்!

நம்பிக்கை தரும் உலகத் தமிழர் மாநாடு
லங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகளையும் சதிகளையும் மீறி, ஈழ விடுதலைப் போராட்​டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.


ஈழ விவகாரத்தில் எதிரும் புதிருமாக இருக்​கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, லண்டனில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் முக்கிய சில தீர்மானங்களை நிறை​வேற்றி இருக்கிறது, பிரித்தானிய தமிழர் பேரவை. இங்கிலாந்து பாராளு​மன்றக் கட்டட‌த்தில் நிகழ்ந்த‌ இந்த மாநாட்டில், இங்கிலாந்தின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதும் சிறப்பு அம்சம். காலங்காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் வைகோவும், பழ.நெடுமாறனும் இந்த மாநாட்டை புறக்கணித்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் சார்பாக‌ ஸ்டாலின் முக்கியப் பங்கெடுத்து உள்ளார்.



மாநாட்டை நடத்திய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.


''2009-ம் ஆண்டு ஈழப் போரில் வகைதொகை இல்லாமல் கொடூரமாக‌க் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களை நினைத்துத் தினம் தினம் அழுகிறோம். நாம் தனித்தனியாகப் போராடி களைத்து விட்டோம். சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு நமது குரல் கேட்கவே இல்லை. அதனால்தான் ஒற்றுமையாக, ஒரே குரலில் 30 லட்சம் தமிழர்களின் பிரச்னையை இங்கிலாந்தின் 78 பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்தோம்.


கட்சிக் கருத்தியல் பாகுபாடுகளை மறந்து உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் அனைத்துப் பிரதிநிதிகளையும் மேடை ஏற்றினோம். இதுவரை தமிழகத்திலும் தாயகத்திலும் அரங்கேறாத அதிசயம் லண்டனில் நடந்திருக்கிறது. கட்சிப் பாகுபாடு​களைக் களைந்து ஒரே குரலாக ஒலித்தால் மட்டுமே நம்முடைய சோகம், சர்வதேச சமூகத்தின் காது​களுக்குப் போய்ச் சேரும் என்பதை உணர்த்தவே இந்த மாநாடு.''


''உச்சக்கட்ட போரைக் கண்டுகொள்ளாத கட்சிகளையும், தீவிர ஆதரவுக் கட்சிகளையும் ஒரே மேடையில் நிற்க வைத்திருக்கிறீர்கள். ஏடா​கூடம் ஆகவில்லையா?''



''தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் மாநாட்டுக்கு அழைக்க வேண்டும் என முடிவெடுத்தபோதே, எங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்​கள் வெளிப்பட்டன. ஆனால் தமிழர்களின் குரல் சர்வதேச அளவுக்குக் கேட்க வேண்டும் என்றால், முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். அதற்காகத்தான் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரையும் அழைத்தோம்.


ஆனால், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரும் தார்மீகப் பொறுப்புடனும், மிகுந்த அக்கறையுடனும் நடந்து கொண்டனர். தமிழக எல்லைகளைக் கடந்து இந்தியா முழுக்க ஈழப் பிரச்னையைக் கொண்டு போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது எங்களுக்குப் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது.


அன்று ஈழப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதவர்கள், இன்று எங்களுடன் நின்று எம்மக்களுக்காவும் மண்ணுக்காகவும் ஆதரவு தருகிறார்கள் என்றால் நல்ல மனமாற்றம்தானே... யாரையும் உதாசீனப்​படுத்தவோ, வெறுக்கவோ செய்யாமல் அனைவரையும் அரவணைத்துப் போகவே விரும்புகிறோம்!''




''மு.க.ஸ்டாலினை, ஈழ மக்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பியதாகச் சொல்​கிறார்களே?''



'’நாங்கள் அறிந்தவரை அப்படி எதுவும் நடக்க​வில்லை. மாநாட்டுக்கு வந்திருந்த நிறைய ஜனங்களும், அமைப்புகளும் அவர்களோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்!''



''வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் உங்களுடைய மாநாட்டை புறக்கணித்து இருக்​கிறார்களே?''


''வைகோ அண்ணாவையும், நெடுமாறன் அய்யாவையும் வரவழைக்க பல்வேறு வடிவங்களில் நாங்கள் தொடர்புகொண்டோம். வைகோவுக்கு டெல்லியில் முக்கிய வழக்குகள் இருந்தமையாலும், நெடுமாறன் சார்பாக வர இருந்தவருக்கு கடைசி நேரத்தில் கடவுச் சீட்டில் சிக்கல் இருந்தமையால் வர இயலவில்லை என்று அறிகிறோம்.!''



''உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''


''2012 மார்ச் மாதம் ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த‌ தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தானாக அமைத்துக்கொண்ட 'எல்.எல்.ஆர்.சி’ அமைப்பு இதுவரை எவ்வித ஆக்கப்​பூர்வமான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2008 உச்சக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் ஐ.நா. மன்றமே தோற்றுப்போய் இருப்பதாக, அதன் உள்அறிக்கை கசிந்திருக்கிறது.



இலங்கையில் மனித உரிமை மீறல், வெள்ளை வேன் கடத்தல் போன்ற பிரச்னைகளைச் சேகரித்து, 2013 மார்ச் மாதம் ஐ.நா. மன்றத்தில் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இன்னும் அழுத்தம் கொடுப்போம். இந்த முறையும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள் என்றே நம்புகிறோம்.


 கடந்த முறை 24 நாடுகள் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையைக் கேள்வி கேட்டன. இப்போது 93 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றன. இது இலங்கைக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு, 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து சொல்வதற்குக் காரணம் எங்கள் லாபிதான். 30 லட்சம் தமிழர்களின் போராட்டத்தை சிதைத்தது போன்று 10 கோடி தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியாது. எங்களது புதிய, வித்தியாசமான போராட்ட முறைகளால் இலங்கை தோற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!''
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!


- இரா.வினோத் 


சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா?

கேள்வி எழுப்பும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை​யுடன் நெருக்கமான உறவைப் பேணி ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறோம் நாம். அவர்களது சீனப் பாசத் துக்கு அடிப்படைக் காரணம், இந்தியாவின் மீதான வெறுப்புத்தான்!



இதுவரை இந்தியாவில் இருந்து சென்ற முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சிங்கள வெறியர்​கள் தாக்கி இருக்கிறார்கள் என்பதே வரலாறு. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், ராஜீவ் காந்தி. ஆனால், நமக்கு ராஜீவ் தாக்கப்பட்டது மட்டும்தான் தெரியும்!


1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் விஜேமுனி விஜித ரோகன டி சில்வா  மூலமாக கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செயல், இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு மறந்து​ போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைக்காரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990-ல் அந்தக் கயவனுக்கு மன்னிப்பு அளித்து 'பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டது இலங்கை அரசு.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ஆட்சி​யில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவின் மீது மரியாதை செலுத்துவதைப் போல பாசாங்கு செய்தபடி, இந்தியாவுக்கு விரோதமான அத்தனை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்கூட, கொழும்பு நகர மையப்பகுதியில் காலே சாலையில் இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை சீன விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து, ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது இலங்கை.



இலங்கையின் தென்கோடியில் உள்ள கெம்பன் தோட்டா துறைமுகத்தை 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கி உள்ளது. இதனால், வரும் காலத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவம் குறைந்து போகும். அது மட்டுமல்லாமல் சிறிய கப்பல்கள் மட் டுமே தூத்துக்குடி, சென்னைக்கு வரக்கூடிய சூழலை இலங்கை உருவாக்கி விட்டது.



இந்தியா மீது நல்ல எண்ணம் இல்லாத மியான்மர், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நாடுகளுடன் எல்லாம் அதீத நட்பு பாராட்டுகிறது இலங்கை. இப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிரம்மபுத்ரா நீரோட்டத்தைத் தன்வசம் திருப்ப முயன்று வருகிறது சீனா. அப்படிப்பட்ட சீனாவுடன் இலங்கை 14 புதிய ஒப்பந்தங்களுக்குக் கையெழுத்துப் போட்டுள்ளது.





 அதன்படி 4,180 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி போன்றவற்றையும் இலங்கைக்கு சீனா அளிக்க இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வு பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளார்.



 அதைத்தொடர்ந்து, இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடன் வழங்க இருக்கின்றன. அருணா​சலப் பிரதேசத்தை உரிமை கொண்​டாடுவது, எல்லையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கும் சீனாவுக்கு, இலங்கை நெருங்கிய நட்பு நாடாக மாறுவது ஆபத்தானது. அதனால், எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் சேர்ந்து இந்தி​யாவுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.



இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்​காமல் தொடர்ந்து தாக்கி வருகிற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்​களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்குப் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன மீனவர்கள் சுதந்திரமாக அந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்​படவும், கைதியாகப் பிடிக்கப்​பட்ட நேரத்திலும் சீன நாட்டினரையும் இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லி இருக் கிறார்கள்.



தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இலங்கை, பாகிஸ்தான், அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்து மகா சமுத்திரம், தன் ஆளுகைக்கு உட்பட வேண்டுமென்று தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது சீனா. இந்தியாவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது. அதற்குக் கடல் ஆதிக்கமும் தேவைப்படுகிறது.



பங்களாதேஷில் சிட்டகாங், பாகிஸ்தானில் கோத்தார் ஆகிய துறைமுகங்கள் சீனாவின் பிடியில் வந்து விட்டன. தைவானை தன் வசமாக்கிக்கொண்ட பிறகு, ஆசிய கண்டத்தையே தன் ஆளுமைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயம் தரும் நிலை ஏற்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்தக் காரணம் இலங்கை சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேவும்தான்.



இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராகச் செயல்​பட்ட பசீது வாலி முகம்மதுவின் உதவியோடு பாகிஸ்தான், இரண்டு கப்பல் நிறைய ஆயுதங்களை வழங்கியது. இந்தியாவுக்குள் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவராகச் செயல்​பட்டவர் பசீது வாலி முகம்மது. மேலும், இவர் கோவை குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 இந்தி​யாவின் தலைப் பகுதியான காஷ்மீரில் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், சிங்கள இலங்கை வழியாக தென்னிந்தியப் பகுதிகளிலும் மத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் இறை யாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலுக்கும் சிங்கள அரசு துணை போகக்கூடும். ஈழத்தின் சம்பூர் மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டு, இலங்கை அரசு அதை நிறைவேற்றவிடாமல் மழுப்பி பாகிஸ்தானுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.



பலாலி விமான நிலையத்தை இந்தியா சீர் அமைத்துக் கட்டித்தர சம்மதித்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ராஜபக்ஷே. சமீபத்​தில் வர்த்தக ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவுக்குத் தெளிவான பதிலை இலங்கை அரசு கூறவில்லை.



போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்​தான் ஆயுதங்களோடு ராணுவத்தினரைக் குவித்து, தமிழர்களை அச்சப்படுத்துகிறது.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணு​வம் அதன் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்து இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மூன்று பிரிவுகளும், கிளி நொச்சியில் மூன்று பிரிவுகளும், முல்லைத் தீவில் மூன்று பிரிவுகளும் வவுனியாவில் ஐந்து பிரிவுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் மூன்று பிரிவுகளும் வைக்கப்பட்டு உள்ளன.



இதுகுறித்து, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.அரிகரன், 'இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்று காட்சி அளிக்கிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே, 'தமிழ்ப் புலி களுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் சீனாவும் உதவியதற்காக நன்றி’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்து இருக்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் தனது வணிகத்தை பெருக்க சீனா திட்டமிட்டு உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளோடு உறவுகொள்ளத் துடிக்கிறது.


சீனா வுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் வருவதற்கு பர்மா வழியாக பைப் லைன் போட்டு அந்தமான், இலங்கை வழியாக ஊடுருவும் திட்டங்கள் உள்ளன. வங்கக் கடலோரத்தில் இருக்கிற கொக்கோ தீவுகள், பர்மாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடியது. இப்போது அந்த இரண்டு தீவுகளையும் சீனா பர்மாவிடம் குத்தகை எடுத்துக்கொண்டு, அங்கே கப்பல் படைத் தளத்தை நிறுவ உள்ளது.  மேலும், எலக்ட்ரானிக் பொருட்களையும், துணிகள், பீங்கான் பாத்திரங்கள், பிளாஸ்க் போன்ற சீனப் பொருட்களை உலகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறது சீனா. இதன் மூலம் இந்தியாவின் ஆளுமையை தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது.


இப்படிப்பட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகின்ற சிங்கள அரசை, நம்பக் கூடாது என்பதை இந்தியா எப்போது புரிந்துகொள்ளுமோ?


நன்றி - ஜூ வி

Friday, November 02, 2012

ஒரு ஈழப்போராளியின் ரத்தத்தை உறைய வைக்கும் பேட்டி

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மைக் கதை
ம.அருளினியன்
ஓவியங்கள் : ஸ்யாம்
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.



ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.



 உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.


''எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.



 என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.




நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.




''பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?''




''1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.




ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!''




''அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?''



''இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு  துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த  விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!''




''இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?'



''ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!''




''என்ன நடந்தது?''



''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.




அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. 




முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.




அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.




அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். 'சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.




 காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.




 குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!'




''விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?''



''சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!'



''நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?'  



''பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான்  இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.



நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத மார்பை சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!''




''ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?''



''எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!''




''யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?''



''பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.''




''தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?''



''அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.''

''இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?''




(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.



அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.




 (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.




ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாய்ப்  பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''




''உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'



(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான்  எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!''
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)




வாசகர் கருத்து -


1.Venky1 Days ago
1. முதன் முதலாக அரசியல் கோ.... (வைகோ, திருமா, சீமான் போன்ற பலரை) அடையாளம் காட்டி அவர்களை வேறு எதையாவது செய்ய சொல்லுவது. அதிசயம். இனிமேலும், இதனை படித்து விட்டு அவர்கள் இலங்கை, ஈழம் என்று பேசினால் நிஜமாகவே வெட்கம் கெட்ட மாந்தர்கள் என்பதற்கு விளக்கமாக இருப்பார்கள்.

2. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அதிகார ஆசையில் கருகி போன இவர்களை அடையாளம் கண்டது. அன்னிய அரசுகளின் பாதுகாப்பில், அந்த நாட்டின் குடிமக்களாகிவிட்டு அந்த தைரியத்தில் இந்த மக்களை தூண்டிவிட்டு அவர்களின் அழிவை வேடிக்கை பார்த்து - இந்த புலம் பெயர்தவர்களை போல ஒரு கொடிய கூட்டத்தை பார்க்கவே இயலாது. இன்றும் ஒரு அரசை அமைத்து கொண்டு, இந்த மக்களை இன்னமும் தூண்டிவிட்டு - இவர்களை என்ன செய்வது? போரினை தூண்டிய இவர்கள் இந்த பெண்ணின் அவல குரலை கேட்டது உண்டா? இல்லை அது அவர்களுக்கு வேடிக்கையா - இறந்த பெற்றோர்களை அடக்கம் செய்யாது ஓடியவர்கள் - இவர்களுக்கு காட்சி பொருட்களா என்ன? முதலில் அந்த புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வாயை அடையுங்கள். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களுக்கும் காட்டியது அதிசயமே.

உண்மையாகவே விகடனுக்கு இலங்கை தமிழர்களின் மீது அக்கறை உள்ளது என்பதை இது காட்டுகிறது. 
2. Ramakrishnan23 Hours ago
30 ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரு சந்ததி காலம் முடிந்துவிட்டது...என்ன செய்தார் பிரபாகரன் ....பரிதாபம்..பணம் கொடுத்து உதவலாம்...ஆனால் இழந்த வாழ்க்கையை கொடுக்க முடியுமா???? நம் அரசியல்வாதிகள் எல்லாரும் சுய நல வாதிகள்
இலங்கை தழிழர்கள் யாரும் நம்மை எதிர்பார்க்கவில்லை ஆனால் நாம்தான் அவர்களை வைத்து அரசியல் செய்கிறோம்
3. Appan23 Hours ago
படிக்க வேதனையாக உள்ளது. இந்த துயரத்தில் இந்தியா, தமிழகதிர்க்கும் பங்கு உண்டு. சில வருடங்களுகு முன் இப்படி ஒரு பெண் போராளி அந்த இயக்கதிலிருந்து வெளியே வந்து 'ஏன் இந்த இயக்கதிலிருந்து வெளி வந்தேன் என்று' மேலை நாட்டு பத்திரைகளில் எழுதி உள்ளார். அவர் கூற்றுப்படி பிரபகர்னிடைய போக்குத்தன் காரணம் என்கிரார். பிரபாகரன் ஈழ போராட்டம் எல்லாம் பணம் பன்ன ஈழம் விடுதலை பெற இல்லை. அந்த பெண்மனி இப்போ ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி உள்ளார். இந்த பெண் படிதவர் ஆதாலல் தொடக்கதிலே புலியை அறிந்து விலகினார். ஆனால் படிக்காத பெண்கள் இந்த கட்டுரையுல் உள்ள பெண் போல் கடைசிவரை போரிட்டு உயிரை இழந்தார்கள்.
4.முஹம்மது ரஸ்வி24 Hours ago
கடைசிக்கேள்விக்கான அந்த பாவப்பட்ட பெண்மணி சொன்னதைத்தான் ஈழம் போர் முடிவிற்கு வந்தததிலிந்து சொல்லி வருகிறேன். கருணாநிதி ஒன்றும் செய்யாமல் இலங்கை தமிழர்களை கைவிட்டார். வைகோ, பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள பேசியே கைவிட்டார்கள். மேடையில் மேலும் மேலும் உணர்ச்சி பொங்க பேசிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு பேச போய் விடுகிறார்கள். அங்கு அடிவாங்குவது யார். இராஜபக்சே இந்தியா வரும்போதெல்லாம் அவரை எதிக்கிறேன் பேர்வழி என்று அவரை கோபமூட்டி இன்னும் கொடுமைப்படுத்த ஏற்பாடு செய்கிறார்கள். இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். இறைவன் நாடினால், இலங்கையில் அமைதி திரும்பும்.




நன்றி - விகடன்

Saturday, October 06, 2012

நெடுமாறனுக்கு கலைஞரின் காட்டமான கடிதம்


தமிழகத்தில் நடைபெறும அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து,  இன்று முதல் கருப்புச் சட்டையே அணிவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது குறித்து இன்று அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், கடுமையான மின் தடை, குடிநீர் பஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு  கொடுமைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து
மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்போகிறோம் என்று கழகச் செயற்குழுவிலே முடிவெடுத்து, முறைப்படி அதற்கு அனுமதி கோரி, காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்தால் அதற்குக் கூட இந்த ஆட்சியிலே அனுமதி கிடைக்கவில்லை. கழகத்தின் சார்பில் கேட்கப்படும் வழி சரியில்லை
என்று சொன்னதால், மூன்று மாற்று வழிகளைக் குறித்துக் கொடுத்து, இதிலே ஒன்றைக் கொடுங்கள் என்று கேட்டால்; அதற்குக்கூட இந்த ஆட்சியினர் அனுமதி தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தவிருந்த மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தற்போது மூன்று நாட்களில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த ஆட்சியினர் நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில மணிகள் சாலையோரத்தில் கருப்பு உடை அணிந்து நிற்பதோடு முடிந்து விடுகின்ற நிலையை - கருப்பு உடை அணிந்து வீடு வீடாகச் சென்று இந்த ஆட்சியினரின் அவலங்களை எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு நம்மைக் கொண்டு போய் விட்டிருப்பது ஆளுங்கட்சியினரே தவிர நாமல்ல.



கழகம் நடத்தவிருந்த மனிதச் சங்கிலிக்கான அனுமதியை ரத்து செய்து காவல் துறை பிறப்பித்த ஓர் ஆணையை தற்போது என்னிடம் காட்டினார்கள். அந்த ஆணையின் தொடக்கத்தில், “அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்தும், தொடர்ந்து தி.மு.க. வினரைப் பழி வாங்குவதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்” போராட்டம் என்று எழுதியிருக்கிறார்கள். எனவே காவல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அ.தி.மு.க. ஆட்சியிலே கடும் மின்வெட்டு இருப்பதையும், தி.மு.க. வினர் பழிவாங்கப்படு வதையும் ஒப்புக் கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே இன்றையதினம் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அளவிற்குத் தமிழகம் இருண்ட கண்டமாகவே  காட்சியளிக்கிறது.


இந்த அவலங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலேதான் 5ஆம் தேதியன்று சென்னையிலும், 6ஆம் தேதியும், 7ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் மாநகர், ஒன்றியம், சிற்றூர், பேரூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், கருப்பு உடை அணிந்து துண்டுப் பிரசுரங்களாக அச்சியற்றி, வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்று சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வழங்க வேண்டுமென்று கழகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


இந்தப் பணியினை மிகவும் அமைதியாக, அற வழியில், எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் தந்து விடாமல் நடத்திட வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். சாலையோரத்தில் அமைதியாக மனிதச் சங்கிலியாக ஒரே இடத்தில் கருப்பு உடை அணிந்து நின்று அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றுதான் நாம் அனுமதி கோரினோம்.


நாளைய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளையதினம் கருப்புச் சட்டை அணிந்து மனிதச் சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கருப்புச் சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன் என்று கூறியுள்ளார்.


 கடிதம் 2 


சென்னை: இலங்கை போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கிவைத்தவன் நான் என்றால் 1985-ம் ஆண்டு உருவான டெசோ அமைப்பில் நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.




இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," கடந்த 23-8-2012 அன்று நெடுமாறன் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் இலங்கையில் விடுதலைப்போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, அதைத்தடுக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆதாரப்பூர்வமாக சில விவரங்களை குறிப்பிட்டு; இலங்கையில் போர் நடைபெற்றபோது அதனை தடுக்க நான் எதுவுமே செய்யவில்லையா? என்னென்ன செய்தேன்? என்பதையெல்லாம் தொகுத்து தேதிவாரியாக விளக்கியிருந்தேன்.




நெடுமாறனை பொறுத்தவரையில் அவருக்கு எப்படியாவது தற்போது ஆளுங்கட்சியோடு இணைந்து ஏதாவது பயன்பெற வேண்டுமென்பதுதான் குறிக்கோள். அங்கே நெருங்க வேண்டுமென்பதற்கு என்ன வழி என்று பார்த்து, நம்மை தாக்கினால்தான், அங்கே உள்ளவர்கள் மனம் குளிர்வார்கள், தனக்கு தக்க இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, 24 மணி நேரமும் நம்மை சாடுவதிலேயே நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.



1984-85 ஆண்டுகளில் போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கி வைத்தவனே கருணாநிதிதான் என்று எழுதியிருக்கிறார். சகோதர யுத்தத்தை போராளிகளிடையே நான் தூண்டி விட்டேனா? அல்லது நெடுமாறன் கும்பல் தூண்டி விட்டதா? என்பதை அந்தப்போராளி இயக்கங்களை சேர்ந்தவர்களே நன்குணர்வார்கள். அந்த போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று நெடுமாறன் கூறுவதை வாதத்திற்காக ஒப்புக்கொண்டு கேட்கிறேன்.




நான்தான் போராளிகள் இயக்கத்தை தூண்டி விட்டவன் ஆயிற்றே? 1985-ம் ஆண்டு மே திங்களில் என் தலைமையில் உருவான "டெசோ'' அமைப்பில் இந்த நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார்? "டெசோ'' அமைப்பின் சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் என்னுடன் எதற்காக நெடுமாறன் கலந்து கொண்டார்?



கடைசியாக நடைபெற்ற வேலூர் பேரணியில் நெடுமாறன் கலந்துகொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்றபோது, 10-10-1985 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், "டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காண போராடும் விடுதலை போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது "டெசோ'' இயக்கத்தை தவிர உற்ற துணைவன்-உண்மையான துணைவன் வேறு யாருமில்லை'' என்று எழுதிய கை நெடுமாறன் கை தானே?


அதுமாத்திரமல்ல; அந்த காலகட்டத்தில் இதே நெடுமாறன்; அவர் எழுதிய "மத்திய-மாநில உறவுகள்-சில குறிப்புகள்'' என்ற நூலினை நான்தான் வெளியிட வேண்டுமென்று கேட்டு, 30-6-1985 அன்று சென்னை பெரியார் திடலில் தி.சு.கிள்ளிவளவன் தலைமையில் நான் வெளியிட்டேன். அப்போது நெடுமாறனுக்கு நான்தான் இலங்கையில் சகோதர சண்டையை தொடங்கி வைத்தவன் என்று தெரியாமல் போய்விட்டதா?



நெடுமாறன் அறிக்கையில் திரும்பத்திரும்ப நான் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து கொண்டதைபோல தோற்றமளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எழுதியுள்ளதாகவே தெரிகிறது.



டெசோ மாநாட்டிற்காக வருகை தந்திருந்த வாஜ்பாய், என்.டி.ராமராவ், ராமுவாலியா போன்றவர்களின் முன்னிலையில், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளிடம் "நமக்குள் நாமே மோதி கொள்ளக் கூடாது, சகோதர யுத்தம் கூடாது, சபாரத்தினத்தை கொன்றுவிட வேண்டாம், இலங்கை தமிழர்களுக்காக அனைவரும் சேர்ந்துதான் பாடுபடவேண்டும்'' என்று அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டேன். நெடுமாறனுக்கு இது தெரியாதா?




இலங்கை தமிழர் பிரச்சினையில் என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு வார்த்தையை நெடுமாறன் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.



இலங்கைத்தமிழர் பிரச்சினையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் என் மனச்சாட்சிபடி என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.



இதிலே நெடுமாறன் போன்றவர்களின் சான்றிதழ்களை நான் ஏற்கனவே பெற்றிருக்கிறேன். எனவே இப்போது அவரை போன்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன். என்மீது குறை கூறி விரலை நீட்டுகின்ற நெடுமாறன் போன்றவர்கள் வாய் ஜாலம் காட்டுவதை தவிர இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள்.


 என்னைப்பற்றியும் நன்கறிவார்கள். ஏதோ என்னைத்தாக்கி எழுதினால் தங்கள் பிழைப்பு நடக்காதா என்பதற்காக எழுதுகிறார்கள் என்றால் எழுதி விட்டுப்போகட்டும்! எதையும் தாங்கும் இந்த இதயம்-வாழ்க வசவாளர்கள்! என்று மட்டும் அண்ணா வழியில் கூறி, அவ்வழியில் நடப்போம் நாம்" என்று கூறியுள்ளார்.

Wednesday, September 12, 2012

ஈழ விவகாரம் - உணர்ச்சி அரசியல் - ஓ பக்கங்கள் ஞானி @ கல்கி

பக்கங்கள்

உணர்ச்சி அரசியல் கூடாது!

ஞாநி

இந்தக் கட்டுரையை மிகுந்த மன வருத்தத்துடன் எழுதுகிறேன், இதற்காக ஒரு சிலரின் வசைகளும் அவதூறுகளும் வருமென்ற போதிலும். உண்மைகள் கசக்கும் என்பதற்காக அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட வந்த இலங்கைச் சிறுவர்களையும், தேவாலயத் திருவிழாவுக்கு வந்த இலங்கை பக்தர்களையும் துரத்தியடித்த நிகழ்வுகள் நிச்சயம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கக்கூடியவை அல்ல.
இலங்கையில் நடந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இங்கே இலங்கையைச் சேர்ந்த சிங்களர் வரக் கூடாது என்று போராடுவது அர்த்தமற்றது; அநீதியானது.
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது இலங்கை அரசுதான். இலங்கை மக்கள் அல்ல. இலங்கை அரசின் உச்ச அடையாளமான ராஜபட்சேவையும் அவரது சகாக்கள் கோத்தபாயா, பொன்சேகா முதலியோரையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வழிகள் என்ன என்றுதான் யோசிக்க வேண்டும்.
அரசையும் பொதுமக்களையும் பிரித்துப் பார்க்கக்கூடத் தெரியாதவர்கள் அரசியல் செய்வதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். பாகிஸ்தான் அரசு பல விதங்களில் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வோருக்கு ஆதரவும் தூண்டுதலும் அளித்துவருகிறது என்பதை இந்தியா பல முறை நிரூபித்திருக்கிறது. அதற்காக அந்த அரசின் மீது நடவடிக்கையைக் கோரி வந்திருக்கிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தானின் சாதாரண மக்களுடன் நாம் விரோதம் பாராட்டுவதில்லை. பல பாகிஸ்தான் நோயாளிகள் சென்னை வரை வந்து மருத்துவச் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் நாம் இலங்கையின் சிங்கள மக்கள் விஷயத்திலும் பின்பற்றவேண்டும்.

சாதாரண சிங்கள மக்களையும் எதிரியாகத்தான் பார்ப்போம் என்று ஒரு தமிழ்த் தேசிய அமைப்பின் பிரமுகர் தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னார். காரணம் அவர்கள்தான் ராஜபட்சேவைத் தேர்தலில் ஜெயிக்க வைத்தவர்கள் என்றார். இந்த விசித்திரமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், தமிழகத்தில் ஊழலின் உச்சங்களான கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திரும்பத் திரும்ப தேர்தல்களில் தேர்வு செய்யும் தமிழக மக்களை அதற்காகத் தண்டிக்கவேண்டும் என்றாகிவிடும். தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது பல அம்சங்களைப் பொறுத்தது.
இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் விளையாட்டு வீரர்களையும் மிரட்டித் திருப்பி அனுப்புபவர்கள், இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசின் பிரதமரை தமிழ்நாட்டுக்கு வராதே என்று தடுப்பதில்லை. அப்பாவிகளான சுற்றுலாப் பயணிகளை மிரட்டுவது தான் அவர்களுக்கு எளிமையான அரசியல்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்கள் அரசியல் போட்டிக்காக ஈழத்தமிழர் பிரச்னையை வழக்கம் போல் மேலும் குழப்புகிறார்கள். ஜெயலலிதா அரசு இலங்கையின் கால்பந்து சிறுவர்களைத் திருப்பி அனுப்பியதும் அவர்கள் விளையாட அரங்கை அளித்த தமிழக அதிகாரியை இடைநீக்கம் செய்ததும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு ஒப்பந்தங்களுக்கு விரோதமானது.

இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான தமிழர்கள், வணிகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே வரும் சிங்கள சிறுவர்களைத் திருப்பி அனுப்பும் ஜெயலலிதாவால், இங்கிருக்கும் தமிழர்கள் யாரும் எதற்கும் இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று தடுத்துவிட முடியுமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடக்கும் வர்த்தகத்தில் அங்கிருந்து இறக்குமதியாவதைவிட நான்கு மடங்கு அதிக மதிப்புக்கு இங்கிருந்து ஏற்றுமதி நடக்கிறது. தமிழகத்திலிருந்து கார்களும் பஸ்களும் இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன.
சீனா இந்தியாவின் எதிரி நாடு. அதற்கு இலங்கை அரசு பெருமளவில் இடமளித்து வருகிறது. எனவே இலங்கை மக்களும் அதிபரும் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று இன்னொரு தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார். சீனா எதிரியா, அல்லது அமெரிக்காவால் நமது எதிரியாக ஆக்கப்படுகிறதா என்பது இன்னொரு ஆய்வுக்குரிய விஷயம். ‘எதிரியான சீனாவுடன் இந்தியா பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. அண்மையில் சீனாவுடன் கூட்டாக ராணுவப் பயிற்சிகளில் கூட ஈடுபட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சீன அமைச்சர்கள் இந்தியாவுக்கு வந்து போகிறார்கள்.

உலக அரசியல் என்பது வேறு தளத்தில் செயல்படுவது. மறைமுகப் போர் நடத்தும் நாட்டுடன் கூடப் பேச்சுவார்த்தையும் வர்த்தகக் கலாசார உறவுகளும் துண்டிக்கப்படுவதில்லை. சாதாரண மக்கள் இடையே பரிமாற்றங்கள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்; இருக்க வேண்டும். அதுதான் புரிதல் உணர்வை அதிகப்படுத்த உதவும். அரசுகளின் அராஜகங்களை இரு தரப்பு மக்களிடமும் அம்பலப்படுத்த, இரு தரப்பு மக்களிடையேயும் உறவுகள் தேவை.
ராஜபட்சே முதலானோரை அம்பலப்படுத்த நீதியின் முன் நிறுத்த இலங்கை மக்களின் ஆதரவையும் திரட்டுவது அவசியம். ஏற்கெனவே பல சிங்கள மனித உரிமையாளர்கள் பகிரங்கமாகவே ராஜபட்சே அரசை விமர்சித்து வருகிறார்கள். சிங்கள இன வெறியர்களால் எரிக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்பட்ட யாழ்நூலகத்துக்கு தம் நூல்கள் எல்லாவற்றையும் உயில் எழுதி வைத்திருந்தார் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் கெனுமன்.
ஈழத்தமிழர்களுடன் இணக்கத்தை விரும்பும் பல சிங்கள சக்திகள் இருக்கின்றன. தமிழகத்துக்கு வரும் சிங்களச் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி விரட்டுவது போன்ற செயல்கள் அவர்களை அந்நியப்படுத்தும். அங்குள்ள இனவெறியாளர்களுக்கே இது உதவியாக இருக்கும். எப்படி இந்துத்துவ வெறியர்களும் அல்-உம்மா தீவிரவாதிகளும் ஒருவரையொருவர் வளர்க்க உதவுகிறார்களோ அதுதான் நடக்கும். இடையில் சிக்கி சாதாரண மக்களே வீணாக அழிவர். உணர்ச்சிவசப்பட்டு சாதாரண மக்களைத் துரத்துவது ஈழத்தமிழருக்கும் உதவாது; இங்குள்ள தமிழருக்கும் உதவாது.
ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்றால் முதலில் கருணாநிதி ஜெயலலிதா முதலானோரின் உள்ளூர் அரசியலிலிருந்து இந்தப் பிரச்னை பிரிக்கப்பட வேண்டும்.
இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன?

உடனடியான மறுவாழ்வு, கல்வி, வேலைவாப்புகள். அடுத்த கட்டமாக சமமான அரசியல் உரிமைகள். இவை நிகழவேண்டுமானால் இந்திய அரசு உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்திய அரசைத் தெளிவான நிலை எடுக்க செய நிர்ப்பந்திக்கத்தான் தமிழக அரசியல் சக்திகள் முயற்சிக்க வேண்டும். சுற்றுலாப் பயணி களைத் துரத்துவது எந்த விதத்திலும் இந்திய அரசின் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது.
ராஜபட்சே இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துவிடுவதாலோ ரத்துச் செய்துவிடுவதாலோ ஈழத்தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு வரப்போவதில்லை. ஒரு பக்கம் நம் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்தபடியே மறுபக்கம் சர்வதேசப் பின்னணியிலான பேச்சு வார்த்தைகள் மூலம் காய் நகர்த்துவது தான் உலக அரசியலின் வழிமுறை. ராஜபட்சேவுக்கு நம் கண்டனத்தைத் தெரிவிக்க கறுப்புக் கொடியும் காட்டவேண்டும். மன்மோகனுடன் பேசும்போது ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைக்கான நடவடிக்கை பற்றி அழுத்தத்தையும் தரவேண்டும். இதுதான் யதார்த்த அரசியல்.
தங்கள் சக்தியை சாதாரண மக்களைத் துன்புறுத்துவதில் செலவழிக்காமல், ஆக்க பூர்வமாகச் செய்ய இங்கேயே நிறைய வேலைகள் இருக்கின்றன. சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாம்களைப் போர் முடியும்வரை எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போதாவது அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம். மத்தியப்பிரதேசம் போய் ராஜபட்சேவுக்குக் கறுப்புக்கொடி காட்டத் தயாராக இருப்போர், செங்கல்பட்டிலும் பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற தவறான பெயரில் குற்றச்சாட்டோ விசாரணையோ இன்றி இருபது வருடங்களாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் கறுப்புக் கொடி காட்ட இதுவரை முற்படாதது ஏன்?

ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசியல்வாதிகள் உண்மையிலேயே உதவ நினைத்தால், ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன்... எல்லாரும் தங்கள் ஈகோக்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு முறையேனும் நேரில் சந்தித்து உட்கார்ந்து கூடிப் பேசி தாங்கள் ஒருமித்த குரலில் சொல்வது என்ன என்பதை தில்லிக்குத் தெரிவிக்க முன் வரட்டும்; வரமாட்டார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னை எல்லாமே அவர்களுடைய உள்ளூர் அரசியலுக்கான தீனிகளே; அசல் அக்கறைகள் அல்ல.
மறுபடியும் ஆயுதப் போராட்டம், இன்னாரு யுத்தம், அதில் வென்று தனி ஈழம் அமைத்தல் என்பவை சிலருக்குச் சுகமான கனவுகளாக இருக்கலாம். ஆனால் முப்பதாண்டுகளாக வலியிலும் மரணத்துள்ளும் வாழ்ந்து எஞ்சிப் பிழைத்திருக்கும் மனங்களுக்குத் தேவைப்படுவது சுயகௌரவமும் சுயசார்பும் உள்ள ஒரு வாழ்க்கை. அதை சாதிக்கத் தேவைப்படுவது தெளிவான, நிதானமான, பொறுப்பான அரசியல் முயற்சிகள்தான். கொடுமைகளைக் கண்டு உணர்ச்சிவசப்படும் மனம் நிச்சயம் வேண்டும். ஆனால் அந்த மனம் விரும்பும் தீர்வுகளைப் பெற அறிவார்ந்த அரசியல் மட்டுமே உதவும்.




நன்றி - ஓ பக்கங்கள் , கல்கி, ஞானி , புலவர் தருமி