Showing posts with label ஈரோடு சூரம்பட்டியில் ஓர் இரவு - சிறுகதை - வா மு கோமு. Show all posts
Showing posts with label ஈரோடு சூரம்பட்டியில் ஓர் இரவு - சிறுகதை - வா மு கோமு. Show all posts

Tuesday, May 21, 2013

ஈரோடு சூரம்பட்டியில் ஓர் இரவு - சிறுகதை - வா மு கோமு

பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் நான் வண்டியைக் கிளப்பினேன். சூரம்பட்டி நான்கு வழிப் பாதையில் வடக்கு நோக்கிச் செலுத்தினேன்.


ஈரோடு அக்ரஹாரம் வரை கல்லூரிப் பெண் ஒருத்தியை என் பஜாஜ் டிஸ்கவரில் சூரம்பட்டியில் இருந்து இரவு இரண்டு மணிக்கு பின் இருக்கையில் அமர்த்திக்கொண்டு, காலியான சாலையில் பயணிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நான்கு சக்கர வாகனங்கள்தான் கண்ணில்படவில்லையே ஒழிய, இரண்டு சக்கர வாகனங்கள் சாலையோர விளக்குகளின் பிரகாசத்தில் ஊர்ந்துகொண்டுதான் இருந்தன.


அரசாங்க மருத்துவமனை ஓரமாக இரண்டு லாரிகள் தூங்கிக்கொண்டு சாலை ஓரத்தில் நின்றிருந்தன. செவன் டாங்கி வயதாகிவிட்ட நான், ஒரு நாள்கூட இந்த நகரத்தை இவ்வளவு அமைதியாகக் கண்டதே இல்லை.


இரவில் இந்த நேரத்தில் எல்லாம் விழித்திருந்து எனக்குப் பழக்கம் இல்லை. இரவு ஒன்பதைத் தாண்டியதும் படுக்கையில் விழுந்தேன் என்றால், சூரம்பட்டியில் பெரிய பெரிய வெடிகுண்டுகள் வெடித்தால் கூட எழ மாட்டேன். காலையில் ஏழு மணியைப் போல அம்மா காபி டம்ளரோடு வந்து, ''எழுந்திரு கணேசா...'' என்று எழுப்பினால்தான் உண்டு. நகரில் பிரபலமான துணிக் கடை ஒன்றில் நான் மேனேஜராக, கடந்த மூன்று வருடங்களாகப் பணியில் இருக்கிறேன். சம்பளம் என்று பார்த்தால் எனக்கும் அம்மாவுக்கும் போதும். இதனால், வேலையில் இருக்கும் பெண்ணைக் கட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருக்கிறேன். 


வேலையில் இருக்கும் பெண்களெல்லாம் முதலாளிமார்களைக் கட்டிக் கொள்ளும் திட்டத்தில் இருப்பார்கள்போல் இருக்கிறது. இதனால் என் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.


எங்கள் துணிக் கடையில் இருக்கும் அழகுப் பதுமைகள் எல்லாம் இருபது வயதுக்கும் குறைந்தவர்கள். அவர்கள் யாரும் இருபத்தேழு வயதுக்காரனான என்னைச் சட்டைசெய்வது இல்லை.


''என்ன சார்... தும்பிக்கையைக் காணோம்?'' என்று கணேசன் என்கிற பெயரை, சார் போட்டுக் கிண்டல் செய்கிறார்கள். ஈரோட்டில் எத்தனை கணேசன்கள் என்னைப் போலவே வருத்தத்தோடு வாழ்க்கையை ஓட்டுகிறார்களோ?


இரவு நேரத்தில் சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் சிக்னல்களில் பச்சை, சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டுதான் இருந்தன. பேருந்து நிலையத்துக்கு அருகில் வந்தபோது, அந்த நேரத்திலும் காவலர்கள் கையில் தடியோடு நின்றிருந்தார்கள். கடவுள் புண்ணியத்தில் குச்சியைக் காட்டி என் டிஸ்கவரை அவர்கள் தடுக்கவில்லை. அது தவிர, இந்தப் பெண்ணை அந்த மாதிரிப் பெண் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் விசாரித்தால்?


ஐயோடா சாமி! பெரிய கண்டத்தில் இருந்து தும்பிக்கை இல்லாத நான் தப்பிவிட்டேன். சமீபத்தில் 'ராட்டினம்’ திரைப்படம் பார்த்தேன். அதில் பள்ளியில் படிக்கும் காதலியின் விருப்பத் தின் பேரில் காதலன் தன் டூவீலரில் திருச்செந்தூர் வரை, ''ஏலே ஏ புள்ளே... நெஞ்சுக்குள்ள நெருஞ்சி முள்ளெ வெச்சாக்கூட உற்சாகமா ஆடுறேனே!'' என்று பாடிக்கொண்டே சுற்றிப் பார்த்து காதலைப் பலப்படுத்திக்கொண்டு திரும்பும்போது, வாகனப் பரிசோதனையில் மாட்டிக்கொள் கிறார்கள். 


படத்தை நான் பார்த்த நாளில் இருந்து அந்தப் பெண்ணை நான் மனதாரக் காதலித்துக்கொண்டு இருக்கிறேன் என்பது வேறு விஷயம். இதற்கும் முன்பாக அமலா பாலையும் அஞ்சலியையும் சேர்த்துக் காதலித்துக்கொண்டிருந்தேன். என் காதல் மாபெரும் தோல்வியைத் தழுவிவிடும் என்பது உறுதியாகிவிட்டதால், 'ராட்டினம்’ நாயகிக்குத் தாவிவிட்டேன்.


சுவேதா! என் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் பெயர். அவள் பிடிமானத்துக்காக என் தோள் மீது கை போட்டிருந்தால், நான் டிஸ்கவரை நாற்பது, நாற்பத்தைந்தில் ஒட்டியபடி இருக்க மாட்டேன். சுவேதா உலகத்தில் உள்ள அத்தனை ஒழுக்கங்களையும் ஒருசேரப் பெற்றவள் போல் இருக்கிறது. ஒரு சாயலில் 'ராட்டினம்’ பட நாயகியை அடிக்கடி ஞாபகப்படுத்தியதால், என் ஹார்மோன்கள் என்றும் இல்லாத இயக்கத்தில் இருந்தன. அதே உப்பிய கன்னங்கள். கொடுத்துவைத்த மகராசன் யார் எனத் தெரியவில்லை.


எல்லாம் இந்த சுரேந்திரன் பயலால் வந்த தீவினை. சுரேந்திரன் என் கல்லூரி நண்பன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அவனுக்குப் பதிமூன்று காதலிகள் இருந்தார்கள். அதில் ஒருவர், கல்லூரி கணிதப் பேராசிரியை. அவனுடைய அப்பா, நகரில் காசு பார்ட்டி. வீட்டில் ஒரே பையன் என்பதால், செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவன். துணிமணிகள் எல்லாம் உயர்ரகத்தில் அணியும் அவனுக்குப் பதிமூன்று காதல்கள் ஒரே நேரத்தில் வந்தது, எண்ணிக்கை குறைவோ என்று தான் யோசித்தேன்.


நல்லவேளை... அவன் காதலிகள் யாரையும் வாழ்க்கைத் துணைவியாக அமைத்துக்கொள்ளவில்லை. நல்ல பையன்களோடு மட்டுமே சாவ காசம் வைத்துக்கொள்ளும் நான், அந்தப் பழக்க வழக்கத்தை இன்று வரை தொடர்கிறேன். சுரேந்திரனை நல்ல பையன் என்றுதான் இன்று வரை நம்பிவந்தேன். ஒரு ஆத்திரஅவசரத்துக்குப் பணம் வேண்டும் என்றால், என் முதலாளியிடம் நான் மண்டை முடியைச் சொறிந்தபடி நின்றுதான் பணம் வாங்க வேண்டும். அப்படிச் சொறிவதைத் தடுத்துக்கொள்ள, ஈரோடு நகரில் ஆறு செல்போன் கடைகளுக்கு முதலாளியான சுரேந்திரனைப் பயன்படுத்திக்கொள்வேன்.


சுரேந்திரன் பெண்களைக் காதலிப்பதோடு சரி... வேறு தப்புத்தண்டாவில் எல்லாம் இறங்க மாட் டான். ஒருவேளை தனக்கான ஒரு நல்ல பெண் ணைக் கண்டறியத் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறானோ என்றுதான் எனக்குத் தோன்றும். கல்லூரியைவிட்டு வெளிவந்ததும் அவன் தேடலில் எத்தனை பெண்கள் வந்து போனார்கள் என்ற லிஸ்ட் என்னிடம் இல்லை. நான்தான் பொறுப்பாக வேலை யில் அமர்ந்துவிட்டேனே!


அவனது தேடுதல் வேட்டையில் கிடைத்த சூரியப்பந்து சுவேதா என்றுதான் போதையில் சுரேந்திரன் என்னிடம் சொன்னான். ஈரோடு ஆர்ட்ஸ் கல்லூரி யில் வேதியியல் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த சுவேதாவைக் கல்யாணம் செய்து, மகாராணிபோல வாழவைப்பதாகக் கூறிக்கொண்டு, தினமும் லோலோலோலோ என்று சுற்றியிருக்கிறான் சுரேந்திரன். அந்தப் பெண்ணுக்குக் காதல் என்ற வார்த்தையே தமிழில் பிடிக்காதுபோல. மாரியம் மன் கோயிலில் தேங்காய்ப் பழம் கொடுத்து சாமி கும்பிடும் பெண் போல் இருக்கிறது.


ஆறு மாத காலம் சுற்றிச் சலித்தவன், விஷம் சாப்பிடப்போகிறேன் என்று விஷ பாட்டிலைக் கையில் எடுத்துவிட்டானாம் நேற்று. அந்தப் பெண் மிரண்டுவிட்டது. விஷ பாட்டிலைக் காட்டி, மிரட்டித் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு நேராக என் வீடு வந்துவிட்டான். காதலைக் கட்டாயப்படுத்தி மிரட்டிப் பெற முடியுமா? புரியாத முட்டாளாகிவிட்டான் என் நண்பன். நல்ல பையனுக்கு ஏன் இப்படிப் புத்தி பிசகிவிட்டது?


தோளில் பெரிய புத்தகப் பையைச் சுமந்தபடி அந்தப் பெண் அழுதுகொண்டே என் வீட்டு வாசலில் நிற்க, அம்மாதான் அவளை அணைத்து ஆறுதல் சொல்லி வீட்டுக்குக் கூட்டிப்போயிற்று. சுரேந்திரன் என் முகம் பார்த்தான். ''ஒரு வழியும் தோணலை கணேசா... கடைசியா இப்படிப் பண்ணிட்டேன்'' என்றான்.


மருந்துக் கடை சென்று அவன் காயத்துக்கான மருந்துகளை வாங்கி வந்து அவனுக்கு முதலுதவி செய்தேன். வண்டியின் டேங்க் கவரில் சரக்கு பாட்டில் இருப்பதாகவும், அதை எடுத்துவரும்படியும் சொன்னான்.


''என் வலி இப்போ போயிடும் பாரு'' என்றவன் இரண்டு டம்ளர்களில் ஊற்றி சியர்ஸ் போட்டுக் குடித்தான்.


எனக்குப் பயமாக இருந்தது. உண்மையிலேயே இவன் என் நண்பன் சுரேந்திரன்தானா? எப்போதும் விளையாட்டு, கேலி என்றுதான் இருப்பான். 'நல்ல விஸ்கில ஒரு பிராந்தி குடுங்க சார்’ என்றுதான் டாஸ்மாக்கில் கேட்பான். நிஜமாகவே இந்தப் பெண்ணை இவன் விரும்பியிருக்கிறான் போலிருக்கிறதே. காதலினால் எல்லோ ருடைய முகமும் பூரிப்பில் சிவந்து காணப்படும் என்றுதான் கேள்விப்பட்டும் படித்தும் இருக்கிறேன். 


இங்கே அச்சுஅசல் திரைப் படத்தில் பெண்ணைக் கடத்திவந்த வில்லன் மாதிரியே இருந்தான். இவனையும் இவனுக்கு உடந்தையாக இருந்த என்னையும் பறந்து பறந்து உதைத்துவிட்டு, அவளை இழுத்துப்போகும் நாயகன் ஒருவேளை ஒன்பது மணிக்கு மேல்தான் பைக்கில் வருவானோ?


போதை ஏறிப்போன சுரேந்திரன் தடுமாறி எழுந்து என் அறையில் இருந்து வெளியேறினான். என் அம்மா இருக்கும்போது அந்தப் பெண்ணிடம் ஏடாகூடமாக நடந்துகொண்டான் என்றால்? மிரண்டு அவன் பின்னால் ஓடினேன். ''சுவேதா... சுவேதா...'' என்று சத்தமிட்டபடி என் அம்மாவின் அறைக்குள் நுழைந்துவிட்டான். கெடுத்தான் கதையை!


நான் அம்மாவின் அறைக்குள் நுழைந்தபோது, சுரேந்திரன் சுவேதாவின் காலைப் பிடித்துக்கொண்டு தரையில் நெடுகக் கிடந்தான். ''என்னை மன்னிச்சுடு சுவேதா. நீ எனக்கு வேணும் சுவேதா... பாட்டில் எல்லாம் காட்டி உன்னை மிரட்டிட்டேன்... ஸாரி சுவேதா. காலையில உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறேன் சுவேதா!''


அந்தப் பெண் மீண்டும் நடுங்கிக்கொண்டே அழத் தொடங்கிற்று.


இதில் அம்மாவும் செய்வது அறியாமல் மிரண்டு விட்டது. இத்தனைக்கும் சுரேந்திரனும் 'அம்மா... அம்மா...’ என்றுதான் பழகுவான். எத்தனை வருடங்களாக வீட்டுக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறான். படாதபாடு பட்டு, பாப்பா உனக்குத்தான் என்று சொல்லித் தூக்க முயற்சித்து, முடியாமல்போய் இழுத்துக்கொண்டே என் அறைக்கு வந்தேன். அறைக்குள் வந்ததும் இன்னொரு டம்ளர் ஊற்றிக்கொண்டவனுக்கு நிதானம் இல்லாமல் போயிற்று. என் படுக்கையில் சாய்ந்தவன், 'சுவேதா எனக்கு வேணும்டா கணேசா!’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே அமைதியானான். நான் மீதம் இருந்த சரக்கைக் காதலுடன் பார்த்தேன்.


அம்மா எந்த நேரமும் அறைக்குள் வந்துவிடுவார் என்பதால் டம்ளரையும், பாட்டிலையும், தண்ணீர்க் கேனையும் தாவிக்கொண்டு மொட்டைமாடிக்குத் திருட்டுப் பூனைபோல் வந்துவிட்டேன். முதல் ரவுண்டை ஆரம்பிக்க டம்ளரில் சரக்கை ஊற்றித் தண்ணீர் கலந்தேன். (மது அருந்துவது உடல் நலனுக்குத் தீங்கானது!) டம்ளரைக் கையில் எடுத்து, ''நண்பன் இழுத்து வந்த கல்லூரிப் பெண்ணின் நலனுக்காக'' என்று வானம் பார்த்து வாய்விட்டுச் சொல்லிவிட்டு அருந்தினேன்.



சும்மா கிடைக்கிறது என்றால், பினாயிலைக்கூடக் குடிக்கத் தயாராக இருப்பவனான நான், ஒரு நல்ல குடிகாரன் அல்ல. சரக்கு பாட்டிலை ஓரளவு தம்கட்டி முகர்ந்து இழுத்தாலே போதை ஏறிவிடும் எனக்கு. நண்பர்களுடன் மது அருந்தும்போது போதை இல்லாதவன்போலவும், விட்டால் முழு பாட்டிலையும் காலி செய்துவிட்டு வீடு போய்விடுபவன்போலவும் நடிக்க முடியும் என்னால். மூன்றாவது ரவுண்டு சரக்கை அவர்கள் அறியாமல் நான் கீழே ஊற்றிவிடுவேன். குடிகாரர்கள் அனை வரும் தங்கள் கெபாசிட்டியை உணர்ந்து குடிக்கப் பழக வேண்டும். ஆனால், அப்படி நடப்பதே இல்லை. நான் மாடியிலேயே சாய்ந்துவிடுவதற்கு அரை மணி நேரம்தான் ஆயிற்று.


அம்மா நடுச்சாமம்போல மாடி ஏறி வந்து என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டது. 'மழை பெய்கிறதோ?’ என்று தலையை உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மாவின் பின்னால் அந்தப் பெண்ணும் நின்றுகொண்டிருந்தது. ''அக்ரஹாரத்துலதான் இந்தப் பொண் ணோட வீடு இருக்குதாம் கணேசா... அந்த எடுபட்ட பயல் நல்லாத் தூங் கிட்டு இருக்கான். வீட்டுல கொண்டு போய் விடச் சொல்லுது இந்தப் பொண்ணு. நீ என்ன பண்றே... இந்தப் பொண்ணை உன் பைக்குல பத்திரமா கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்துடு கணேசா'' என்றது. அது ஒரு நல்ல யோசனையாகத்தான் எனக்கும் பட்டது.



இதோ அக்ரஹாரத்தினுள் நுழைந்துவிட்டேன். சோம்பேறி நாய்கள் எல்லாம் வீட்டு வாயிற்படிகளில் தூக்கத்தில் கிடந்தன. அவள் வீட்டுக்குச் சந்துபொந்து என்று சுற்றவேண்டி இருந்தது. 'லெஃப்ட், ரைட் கட் பண்ணுங்க’ என்று ஐந்தாறு முறை சொன்னாள் சுவேதா. ''அதோ அதுதான்... கம்பி கேட் போட்ட வீடு'' என்று அவள் சொன் னதும் மெதுவாக டிச்சு குழி ஓரமாக வண்டியை நிறுத்தி, சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தினேன். இறங்கி நின்ற சுவேதா, ''தேங்க்ஸ், இனி நீங்க புறப்படுங்க'' என்றாள் என்னிடம். அது எனக்கு நல்லதாகப்படவில்லை என்பதால் மறுத்து தலையை ஆட்டினேன். சுவேதா திரும்ப என்னி டம் எதுவும் பேசாமல், அவள் வீட்டு டிங்டாங்... டிங்டாங்கை அழுத்தினாள்.


சுவேதாவின் வீட்டில் யாருமே தூங்கவில்லைபோல் இருக்கிறது. எப்படித் தூங்குவார்கள்? கல்லூரி சென்ற பிள்ளையைக் காணோம் என்றால், பெரிய அமளிதுமளியாக அல்லவா இருந்திருக்கும். பெண்களைப் படிப்புக்கோ, வேலைக்கோ அனுப்பிவிட்டுப் பெற்றோர்கள் தங்கள் வயிற்றில் ஃபயரைக் கட்டிக்கொண்டுஅல்லவா காத்திருக்க வேண்டி இருக்கிறது. பெரிய சைஸ் நாய் ஒன்று படபடவென வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவந்தது. இவள் அண்ணன் போலும்... ஒருவன் முகப்பு கேட்டை நீக்க வந்தான். அம்மாவும் அப்பாவும் பின்னால் வந்தார்கள்.


நான் எதிர்பார்க்கவே இல்லை. கேட்டைத் திறந்தவன் தன் சக்தி அனைத்தையும் திரட்டி ஓடிவந்து என் கன்னத்தில் ரைய்ய்... என்று வீசி, சாலையில் என்னைத் தள்ளி ணங்ணங்கென மிதித்தான். ஒரு மிதி என் வயிற்றில் சரியாக விழவே சாலையில் நான் வாந்தி எடுத்தேன். ஜீரணசக்தி எனக்குக் குறைவு தான் போலும்.


''அண்ணா, அவரை மிதிக்காதே... அவரை மிதிச்சுக் கொன்னுடாதே! அவரு என்னை வீட்டுல விட்டுட்டுப் போக வந்தவரு'' என்று சுவேதா கத்திக்கொண்டே, அண்ணனின் கையைப் பிடித்து இழுத்தாள். அவன் அந்தக் கத்தலுக்காக என்னை மிதிப்பதை நிறுத்தவில்லை. மேலே போய்ச் சேர்ந்துவிடுவேனோ என்ற பயத்தில்தான் நிறுத்தினான்.


தீனிக்காரன்... நல்ல சாப்பாடு சாப்பிடுபவன்போல் உள்ளது. மிதி ஒவ்வொன்றும் என்னை மரண வாயிலுக்கு இழுத்துப்போய் இழுத்துப்போய் வந்தது. எழுந்து நேராக நின்று, தனுஷ்போல ஒற்றை விரலை நீட்டி என் பக்கத்துவீட்டு எல்.கே.ஜி. பாப்பா சொல்வதுபோல, 'கொன்டேபுடுவேன்’ என்று வசனம் பேசலாம் என்றால், எழவே முடியாமல் முனகிக்கிடந்தேன்.


சுவேதாவின் அப்பாவோ திடகாத்திரமான ஆள். மகளின் கன்னத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்போல சரமாரியாக வீசிக்கொண்டிருந்தார். அவருக்குச் சரியாக ஒரு கெட்டவார்த்தைகூட உச்சரிக்கத் தெரியவில்லை. ஓடுகாலி, கழுதை என்று திட்டுவதை விட்டுவிட்டு, 'ஓடறியாடி பெண்ணே’ என்று உளறிக்கொண்டிருந்தார். நல்லவேளை அவரிடம் நான் மிதிபடவில்லை.


 சட்னியாகி இருப்பேன். நான் கும்பிடும் திண்டல் முருகன் என்னைக் கைவிடவில்லை. சுவேதா நடந்த விஷயங்களை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர்கள் கேட்பார்கள் இல்லை.


சுவேதாவின் புஷ்டியான அம்மா தன் மகள் சோரம் போய்விட்டதால், சுவரில் தலையை முட்டிக்கொண்டு அழுதது. இவளின் அண்ணன்காரன் ஓடிப்போய் அம்மாவை இழுத்துக் கட்டிக்கொண்டு அழுதான். எனக்குத் தண்ணீர் தருவார் யாரும் இல்லை. டி.வி-யில் தினமும் என் அம்மா பார்க்கும் நாடகக் காட்சிபோல் ஆகிவிட்டது.


 ''நீங்க வளர்த்த பொண்ணு, நான் சொல்றதை நம்பவே மாட்டீங்களாப்பா!'' என்றெல்லாம் அழுதபடி சுவேதா கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு விளக்குகள் எல்லாம் எரியத் தொடங்கின. அவர்கள் சுவேதாவை ஒதுக்கிவிட்டு கேட்டைப் படீர் எனச் சாத்திவிட்டு வீட்டினுள் போய்விட்டார்கள்.



சுவேதா செய்வதறியாது கீழே கிடந்த என்னிடம் நெருங்கி கை நீட்டினாள். அவள் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் உதடு கிழிந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. சுவேதா துப்பட்டாவால் அதைத் துடைத்தபடி, ''ஸாரிங்க!'' என்றாள்.


புறப்பட்ட இடமான என் வீட்டுக்கே நாங்கள் வந்து விட்டோம். வீட்டினுள் விளக்கொளி தெரிந்தது. சுரேந்திரனின் சத்தம் கேட்டபடி இருந்தது. என் வண்டி வந்து வாசலில் ஓய்ந்த சத்தம் கேட்டு வெளியே வந்தவன் எங்கள் இருவரையும் பார்த்து வெறி வந்தவன்போல அங்கும் இங்கும் எதையோ தேடி ஓடினான். கண்ணுக்குத் தென்பட்ட பெரிய கல் ஒன்றை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு எங்களைப் பார்த்து வந்தான். எனக்கு நாளிதழ் தலைப்புச் செய்தி கண்களுக்கே தெரிந்தது... 'இருபத்தேழு வயது வாலிபனை நண்பனே கல்லால் தாக்கிக் கொடூரம். இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்ததால் நிகழ்ந்த கொலை!’


சுரேந்திரன் வெறிபிடித்த மிருகம்போல் வரவே, சுவேதா என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எனக்கு அரணாக முன்னால் நின்றாள். சுரேந்திரன் கையில் இருந்த கல்லைக் கீழே நழுவவிட்டான். அந்த நொடியில் இருந்து சுவேதா எனக்கானவள் என்று முடிவுசெய்துவிட்டேன். பின்னாளில்  சுவேதா என்னிடம் சொன்னாள். அவள் வீட்டு வாச லில் என் உதட்டில் இருந்த ரத்தத்தைத் துடைத்தபோதே, எனக்கானவன் என்று முடிவுசெய்துவிட்டாளாம். எப்பவுமே நான் கொஞ்சம் லேட் பிக்அப்தான்!


நன்றி - விகடன்