Showing posts with label இளைஞர் பாசறை (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இளைஞர் பாசறை (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 06, 2015

இளைஞர் பாசறை (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : அஸ்வின்
நடிகை :அனு கிருஷ்ணா
இயக்குனர் :ரித்தன்
இசை :ஜெய் சுதாகர்
ஓளிப்பதிவு :கணேசராசா
தந்தையை இழந்த நாயகன் அஸ்வின் தன் தாயுடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். பதினொன்னாம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் நாயகி அனுகிருஷ்ணா சேருகிறார். இவர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார். இவருக்கும் நாயகன் அஸ்வினுக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

இந்நிலையில் இதே வகுப்பில் படிக்கும் உதயராஜ், அனு கிருஷ்ணாவை காதலிக்கிறார். தன் காதலை அனு கிருஷ்ணாவிடம் சொல்லி தொல்லை கொடுக்கிறார். காதலை ஏற்க மறுக்கும் அனுகிருஷ்ணா, மிகவும் வருந்தி மறுநாள் பள்ளி செல்லாமல் இருக்கிறார். இந்த விஷயம் அஸ்வினுக்கு தெரிய, உதயராஜ்ஜிடம் சண்டைக்கு செல்கிறார். இந்த சண்டை பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதைப் பார்க்கும் பள்ளி தலைமையாசிரியர் இருவரையும் கண்டித்து அனுப்பி வைக்கிறார்.

மறுநாள் வகுப்பறையில் அஸ்வினும், அனுவும் தனியாக பேசுகிறார்கள். இதைப் பார்க்கும் உதய் அந்த அறையை பூட்டி விட்டு சென்று விடுகிறார். இவர்கள் ஒரே அறையில் இருக்கும் செய்தி தலைமையாசிரியருக்கு செல்கிறது. மேலும் இவர்கள் காதலிக்கும் விஷயமும் தெரியவருகிறது. உடனே இவர்களின் பெற்றோர்களை வரவழைக்கிறார் தலைமையாசிரியர்.

இந்த விஷயம் அறிந்த அனுவின் பெற்றோர்கள் அனுவை தாய்மாமாவுக்கு கட்டி வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் அனுவும், அஸ்வினும் சென்னைக்கு ஓடிப்போகின்றனர்.

இறுதியில் அஸ்வினும், அனுவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? பெற்றோர்கள் இவர்களை பிரித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வினுக்கு பள்ளிச் சிறுவன் கதாபாத்திரம் பொருந்தாமல் இருக்கிறது. இவருக்கும் நாயகி அனுகிருஷ்ணாவுக்கும் இடையே ரசிக்கும் படியான காட்சிகள் இல்லை. அனு கிருஷ்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் இவருடைய நடிப்பு சொல்லும் படியாக அமையவில்லை.

இளைஞர் பாசறை என்று இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை தடுத்து வருவதாக கதையில் வருகிறது. ஆனால், இந்த கும்பலுக்கும் கதைக்கும் ஒட்டாத அளவிற்கு இருக்கிறது.

படிக்கும் பருவத்தில் மாணவர்கள் காதல் வயப்படுவதை கதைக்களமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரித்தன். இதே கதையை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இப்படம் முற்றிலும் மாறுபடும் என்று நினைத்தால் அது தவறு. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அது பெரியதாக எடுபடவில்லை.

ஜெய்சுதாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கணேசராசா ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘இளைஞர் பாசறை’ எழுச்சி இல்லை.

--மாலைமலர்