
‘பெஞ்ச் டாக்கீஸ்’ குறும்படத்தில் ஒரு காட்சி. - கார்த்திக் சுப்புராஜ்
‘‘நல்ல விஷயங்களைச் செய்யும்போது மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும்போது புதிய விஷயங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் மலர்கிறது’’என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
‘ஜிகர்தண்டா’ படத்தை தொடர்ந்து ‘இறைவி’ படத்தை தொடங்கவுள்ள அவர், மற்றொரு புறம் தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக தனது ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்’ நிறுவனத்தின் மூலம் 6 குறும்படங்களை திரையரங்கில் வெளியிடும் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
சினிமாவில் டெக்னாலஜி மூலம் என்ன செய்ய முடியும் என்கிற தேடலை நோக்கிய பயணம் இது. இது படம் எடுக்கும் கம்பெனி இல்லை. என் நண்பர்கள் கார்த்திகேயன், கல்யாண், எழில் ஆகியோர்களோடு சேர்ந்து இதைத் தொடங்கியிருக்கிறேன். இதன் மூலம் குறும்படங்களை தியேட்டருக்கு கொண்டு வந்து சினிமாவை டிக்கெட் கொடுத்து பார்ப்பதைப்போல குறும்படங்களையும் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவேன்.
குறும்படம் என்பது ஒரு கலை வடிவம். எந்த ஒரு குறும்பட இயக்குநருக்கும் தன் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று ஆசை இருக்கும். சினிமா பார்க்க வருபவர்கள் ஒரு குறும்படத்தை பார்த்துவிட்டு போகும் மனநிலையோடு வருவதில்லை. 2 மணிநேரமாவது அவர்களை அமர வைக்க வேண்டும். அந்த அடிப்படையில் முதல்கட்டமாக எங்களிடம் வந்த குறும்படங்களில் 6 படங்களை தேர்ந்தெடுத்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களில் மார்ச் 6-ம் தேதி (நாளை) ரிலீஸ் செய்கிறோம். இந்த 6 குறும்படங்களில் விஜய் சேதுபதி நடிப்பில் நான் இயக்கிய ஒரு குறும்படமும் இடம்பெறுகிறது.
குறும்படங்களை இதேபோல் தொடர்ந்து வெளியிடுவீர்களா?
இப்போது வெளியிடவுள்ள குறும்படங் களுக்கு மக்களிடம் கிடைக்கும் வர வேற்பை வைத்து இந்தப் பணியை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. பெரிய இயக்குநர்கள் பலரும் குறும்படங் களை இயக்கவேண்டும் என்பது என் ஆசை. சில பெரிய இயக்குநர்களும் குறும்படங்கள் இயக்கித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி, ‘மதுபான கடை’ இயக்குநர் கமலக்கண்ணன் ஆகியோர் அடுத்தடுத்து குறும்படங்களை இயக்கவிருக் கிறார்கள். சித்தார்த் ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகிறார். அதேபோல மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களும் குறும்படங்களை இயக்கித்தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
முன்னணி இயக்குநர், நடிகர்கள் குறும்படத்துக்கு வந்தால் அவர்களுக்கான சம்பளம், கால்ஷீட் பிரச்சினை ஆகியவை வருமே. அதை எப்படி சமாளிப்பீர்கள்?
அவர்கள் இப்போது வாங்கும் அளவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. கால்ஷீட் பிரச்சினை பெரிதாக இருக்காது. படங்களின் கால்ஷீட்டுக்கு நடுவில் கிடைக்கும் ஒன்றிரண்டு ஓய்வு நாட்களை இதற்கு ஒதுக்கினாலே போதும். மேலும் இதை விரும்பிச் செய்யும் கலைஞர்களை மட்டுமே இதற்காக அணுகவுள்ளோம்.
‘இறைவி’ படம் எந்த கட்டத்தில் உள்ளது?
கதையை எழுதி முடித்துவிட்டேன். காதல் பின்னணியாகக் கொண்ட கதை இது. எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவோம்.
இந்தப் படத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவை எப்படி பிடித்தீர்கள்?
இப்படத்துக்கான கதையை எழுதும் போது அவர் முகம்தான் நின்றது. ‘இசை’ படத்தின் பணிகள் முடிந்ததும் அவரைச் சந்தித்து படத்தின் கதையைக் கூறினேன். உடனே ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.
இங்கே தயாரிக்கப்படும் படங்கள் அதிகமாக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவதில்லையே?
திரைப்படவிழாக்களுக்கு என்று படங்களை திட்டமிட்டு பண்ண வேண்டும். நானும், ‘ஜிகர்தண்டா’ படத்தை இங்கே ரிலீஸ் செய்வதற்கு முன்பே பெர்லின் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டேன். ஆனால், சில காரணங்களால் அது சாத்தியமில்லாமல் போனது. குறிப்பாக, ரிலீஸ் ஆவதற்கு முன் படம் விழாக்களில் கலந்துகொண்டால் திருட்டு விசிடி வந்துவிடும் என்கிற பயம் இங்கே அதிகம் உள்ளது. அதனால்தான் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை. தரமான திரைப்பட விழாக்களில் எல்லாம் திருட்டு விசிடி போன்ற மறைமுகமான திருட்டு வேலைகள் நடக்க விடுவதில்லை. இன்றைக்கு ஹாலிவுட்டில் பெரிய வரவேற்பை பெறும் பல படங்கள் ரிலீஸுக்கு முன் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்கள்தான்.
திரைப்பட விழாக்களில் கவனிக்கப்படும் படங்கள் நம் நாட்டில் விற்பனைரீதியாக பெரிய தாக்கத்தை பெறுவதில்லையே?
நம்ம ஊரில் அவார்டு படங்கள் என்றால், தியேட்டர் கிடைப்பதில்லை. அதை மக்கள் ரசிப்பதில்லை என்ற ஒரு தவறான புரிதல் உள்ளது. இந்த மனநிலை முதலில் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து மாற வேண்டும். வருகிற ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘காக்கா முட்டை’ திரைப்படம் பல விருதுகளை குவித்த படம். இதை ஃபாக்ஸ் ஸ்டார் என்ற பெரிய நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இப்படி நல்ல மாற்றம் வர வேண்டும். வரும்.
‘ஆஸ்கர்’ வென்ற படங்களை கவனித்தீர் களா?
‘பேர்டுமேன்’ பார்த்தேன். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய படமாக அது எனக்கு பட்டது. அந்தப்படத்தின் கேமரா நகர்வைப்போல நாங்கள் ‘ஜிகர்தண்டா’ படத்தில் 3 நிமிடங்கள் முயற்சி செய்திருப்போம். ‘பேர்டு மேன்’ படத்தில் சாதனை அளவாக அப்படி செய்திருக்கிறார்கள்.
நன்றி - த இந்து