வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை.
குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு
சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை
நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல்
போனதுதான்.
சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து
விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ,
முழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால்,
மானத்தை மறைக்க முடியாத பரிதாபத்தை நினைத்து அவள் அதிகமாகக்
கவலைப்பட்டுவிடவில்லை. அவளுடைய கவலையெல்லாம், தான் உழைக்காவிட்டால் குழந்தைகள்
பட்டினி கிடக்கவேண்டுமே என்பதுதான். இந்தச் சமயத்தில் குளிர் ஜூரமும் வந்து
அவளைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.
அவள் படுத்திருக்கும் தாழ்வாரம் ஒரு மாட்டுத்தொழு. ஐந்தாறு ஓலைகளை வைத்துக்
கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய
குழந்தைகளுமாக வசித்து வந்தார்கள். வீடில்லாத ஏழைகள் மாட்டுத் தொழுவில்
குடியிருக்க இடம் கேட்டால், அந்தக் காலத்தில் வாடகை கேட்காமலே அனுமதிக்கும்
மனிதர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.
அதனால், வாடகை
கொடுக்காவிட்டாலும், அதற்குப் பதிலாகத் தொழுவின் சொந்தக்காரருடைய
வீட்டில்-முதலாளி வீட்டில் - அவ்வப்போது வெள்ளையம்மாள் இலவசமாக வேலை செய்து
வரவேண்டியிருந்தது. அப்படி ஊழியம் செய்வதர்கு முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு
வரும் தினத்தில் அவள் கூலி கிடைக்கும் வேலைக்கும் போகக்கூடாது. விடிந்ததும்
முதலாளி வீட்டுக்குப் போய் விளக்கு வைக்கும் நேரம் வரை கலக் கணக்கில் நெல்லைக்
குத்திவிட்டு, ஆழாக்கு உமிகூட இல்லாமல் தொழுவுக்குத் திரும்புவாள்.
இப்போது
இந்த ஐந்தாறு தினங்களாக இந்த ஊழியத்துக்கு அழைப்பு வந்தும் அவளால் போக
முடியவில்லை. அதனால் அவள் தொழுவை விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று
முதலாளியம்மாள் காலையும் மாலையும் ஆள் விட்டு விரட்டிக் கொண்டிருந்தாள். நல்ல
வேளையாக இந்தத் தொல்லை இப்போது இரண்டு நாட்களாக இல்லை; முதலாளியம்மாள்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், “பாவம், வெள்ளை, இருந்துட்டுபோறா போங்க.
வெளியிலே புடிச்சித் தள்ளினா எங்கே போவா? ஏதோ, நம்ம வீடே அடைக்கலம்னு வந்து
சேந்துட்டா. என்ன பண்றது?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் அவள்
உள்ளம் விசாலமாகிவிட்டதற்குக் காரணம் வெள்ளையம்மாள் இன்றோ நாளையோ செத்துப்
போய்விடுவாள் என்று அவளுக்கு நம்பகமான தகவல் கிடைத்ததுதான். அவளுடைய சாவை
முதலாளியம்மாள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்....
வெள்ளையம்மாள் குளிர்காய்ச்சலில் வெடவெடத்துக் கொண்டு தன்னுணர்வில்லாமல்
தொழுவில் கிடந்தாள். ஆறுவயதும், ஐந்து வயதும் ஆன அவளுடைய குழந்தைகள் இரண்டும்
அப்போது அங்கே இல்லை. அதுவரையிலும் பசி பொறுக்க மாட்டாமல் அம்மாவைப் பிய்த்துப்
பிடுங்கி விட்டு அப்பொழுதுதான் வெளியே போயிருந்தன.
அந்த இரண்டு சிறுவர்களும்
தெருவுக்குப் போய், வேலப்பன் வீட்டு வாசலுக்கு அருகில் முழங்கால்களைக் கட்டிக்
கொண்டும், முழங்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்துக்கொண்டும் ஆளுக்கு ஒரு
பக்கமாகக் குந்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்புதான் முதலாளி
வீட்டு மாடுகளைத் தொழுவில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வந்து, மத்தியானக் கஞ்சி
குடித்த வேலப்பன், வாயையும் மீசையையும் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
வாசலுக்கு அருகில் அந்த இரண்டு சிறுவர்களும் குந்திக் கொண்டிருந்த கோலத்தைப்
பார்த்தான். பார்த்ததும், “என்னடா ஆக்கங்கெட்ட கழுதைகளா! ஏன் முழங்காலைக்
கட்டிக்கிட்டு நடுத்தெருவிலே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?” என்று கேட்டான்.
அவனுடைய பேச்சுக்குரல் கேட்டு, சிறுவர்கள் இருவரும் தலையைத் தூக்கிப்
பார்த்தார்கள். இருவருடைய கண்களும் சிவந்திருந்தன. வெகுநேரமாக அவர்கள்
பசியினால் அழுதிருக்கிறார்கள் என்பது வேலப்பனுக்குத் தெரியாது.
“உங்க அம்மா எங்கடா?” என்று அவன் கேட்டான்.
சிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.
“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா?”
இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே,
அதற்கும் மௌனமாகவே இருந்தார்கள்.
மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற
போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப்
பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப்
பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று. மாடு முரட்டுத்தனமாகத்
தன்னை இழுத்துக்கொண்டு போகும் சிரமத்துக்கு இடையே, ஒரு கேள்வி கேட்டான்.
வெள்ளையம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் சொன்னது அவன் காதில் விழவில்லை. அவனும் அவள்
பதிலுக்காகக் காத்துக்கொண்டு நிற்கவில்லை. அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லாமலே
சும்மா படுத்துக் கொண்டும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, மாட்டைக்
கொண்டுபோய்க் கட்டிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். அவளுக்கு உடம்பு
சரியில்லாமல் இருக்குமோ என்று அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்போது திரும்பவும்
ஞாபகத்துக்கு வரவே மேற்படி கேள்வியைக் கேட்டான் வேலப்பன்.
தண்ணீர் காணாத
பயிர்களைப்போல வாடித் துவளும் சிறுவர்கள் மௌனமாக இருப்பதையும், அவர்களுடைய
கண்கள் சிவந்திருப்பதையும் பார்த்து, “கஞ்சி குடிச்சீங்களாடா?” என்று அவன்
விசாரித்தான்.
அப்போது தான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.
“இல்லே.”
“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு!” என்று ஒரு தடவை தமாஷாகச்
சொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும்
கூப்பிட்டான்.
சிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.
வேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான்.
அவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி,
சட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டு
அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம்
கொடுத்தாள்.
இளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான்.
மூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.
“வேண்டாமா! வாங்கிக்கோ நாயே!” என்று ஒரு அதட்டுப் போட்டான் வேலப்பன்.
“இங்கேயே வச்சிக் குடிச்சிட்டுப் போங்களேண்டா” என்றாள் வேலப்பனின் மனைவி.
”இல்லை இல்லை, கொண்டு போகட்டும். இவுக ஆத்தாளும் அங்கே வயித்துக்கு
இல்லாமத்தான் கெடப்பா. இல்லேன்னா, இதுகள் எதுக்கு இப்படிக் காயுது? அங்கே
கொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.
சிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ! ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக்
கிட்டு வாறே! கேவலம்! இரு, அம்மாகிட்டச் சொல்றேன்” என்றான் மூத்தவன்.
பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று
அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருக்கிறாள். அந்த நிலையில் இப்போது கஞ்சிச்
சட்டியோடு போனால் அம்மா அடிப்பாள் என்று சின்னவனுக்கும் தெரியும். இருந்தாலும்,
இரண்டு நாளையப் பசி அவனுக்குப் பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் நின்று அண்ணனையும்
அம்மாவின் உபதேசத்தையும் எதிர்த்து முழுப் பலத்தோடு போராடியது.
“அம்மாவுக்குச் சொல்லாதே, உனக்கும் கஞ்சிதாறேன்” என்று ஆசை காட்டினான் தம்பி.
”சீ! நான் குடிக்கவே மாட்டேன்” என்றான் அண்ணன்.
மேற்கொண்டு விவகாரம் பண்ணுவதற்குத் தம்பியின் உடம்பில் ஆவி இல்லை. ஒன்றும்
பேசாமல் அங்கேயே நின்று கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்து விட்டான்.
“கேவலம்,கேவலம்” என்று சொல்லிக்கொண்டு சின்னவனை அடித்தான் பெரியவன். தம்பி ஒரு
மடக்குத்தான் குடித்திருந்தான். அதற்குள் முதுகில் பலமாக அடி விழவே, ஒரு கையால்
சட்டியை இடுக்கிக்கொண்டு மறு கையால் அண்ணனைத் திரும்பி அடித்தான் தம்பி. சண்டை
முற்றிவிட்டது. கைகளால் அடித்தும், நகங்களால் பிறாண்டியும், பல்லால் கடித்தும்
சண்டை போட்டதன் பலனாகக் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது.
கஞ்சியெல்லாம் தெருப்புழுதியோடு ஐக்கியமாகிவிட்டது.
ஏமாற்றத்தோடும் பயத்தோடும் அதைப் பார்த்தான் தம்பி.
அண்ணனும் பார்த்தான். மண்ணில் கொட்டியதை இனிமேல் எடுத்துக் குடிக்க முடியாதே
என்ற ஏமாற்றத்தினால் அவன் விட்ட பெருமூச்சில் அவனுடைய உயிரே வெளிவந்து
திரும்பியது. பெருமூச்சைத் தொடர்ந்து அடக்கமுடியாத அழுகை வந்தது;
அழுதுவிட்டான்.
“அடுத்த வீட்டிலே வாங்கிச் சாப்பிடுவது கேவலம்” என்று அம்மா சொல்லி வந்ததற்கு
என்ன அர்த்தம் என்று தெரியாமலே, தானும் அப்படியே சொல்லி அதைப் பிடிவாதமாக
நிலைநாட்ட முயன்றபோது, இப்படிப்பட்ட ஒரு பெரு நஷ்டம் ஏற்படும் என்று அவன்
எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்குப் பசி மும்மடங்காகிவிட்டது. அர்த்தமில்லாத
உபதேசம் செய்து, அதன் மூலம் இப்போது கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல்
செய்துவிட்ட அம்மாவின் மீது அண்ணனுக்குக் கோபம் சண்டாளமாக வந்தது.
இருவரும் தொழுவை நோக்கி ஓடிவந்தார்கள். அம்மாவிடம் வந்து பரஸ்பரம் ஒருவனை
ஒருவன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் அப்படி ஓடிவந்ததுதான் நோக்கம்.
அம்மா முன்போலவே கிழிந்துபோன பழைய கோணியின் கந்தலைப் போர்த்துக்கொண்டு
கிடந்தாள். வாய் ஒரு புறம் கோணித் திறந்திருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.
உடம்பிலே அசைவே இல்லை.
இப்படியெல்லாம் அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை
ஆடியிருக்கிறாள். அப்போதெல்லாம் அம்மாவின் மேல் விழுந்து, “செத்துப்போக
வேண்டாம்” என்று இருவரும் கூச்சல் போடுவார்கள். இப்போதும் அதேமாதிரி கூச்சல்
போட்டார்கள்; அம்மாவை அடித்தார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சிரித்துக்கொண்டே, “நான் செத்துப் போகவில்லை” என்று
சொல்லியவண்ணம் கண்களை முழுக்கத் திறப்பதுபோல அம்மா இன்று திறக்கவில்லை. அதனால்
சிறுவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. பிணத்தைப் போட்டு அடிஅடி என்று
அடித்தார்கள். “அம்மா, செத்துப்போகாதே! செத்துப் போகாதே, அம்மா!” என்று
கதறிக்கொண்டு அவளைக் கிள்ளிக் கிழித்தார்கள். சின்னவன் அவள் மீது கிடந்த கந்தல்
கோணியையும் கோபத்தோடு இழுத்துத் தூரப்போட்டான். அம்மா முழு நிர்வாணமாகக்
கிடந்தாள்.
எப்படியும் அம்மாவை எழுப்பிவிடுவது என்ற உறுதியோடு சிறுவர்கள் உயிரைக்
கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் அடிக்க முடியும்? கை
ஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா!” என்று ஓலமிட
ஆரம்பித்து விட்டான். அவன் அழுவதைப் பார்த்த பெரியவனும், அம்மாவின்மேல்
விழுந்து அழுதான்.
மாலையில் வெள்ளையம்மாளின் பிணத்தை எடுத்துத் தகனம் செய்வதற்காகச் சிலர் வந்து
சேர்ந்தார்கள். நாலு பச்சைக் கட்டைகளையும், ஐந்தாறு தென்னை ஓலைகளையும் வைத்து
ஒரு பாடை கட்டினார்கள். பிணத்துக்கு உடுத்துவதற்காக ஒரு கிழவர் புதிதாக
வெள்ளைச்சேலை ஒன்று வாங்கிக்கொண்டு வந்து தர்மமாகக் கொடுத்தார். தாயார் வெள்ளை
வெளேர் என்று புதுச்சேலை கட்டியிருப்பதைச் சிறுவர்கள் அன்றுதான் முதன்முதலாகப்
பார்த்தார்கள். ஆச்சரியத்தினால் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தினார்கள்.
அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஆனந்தம்கூட ஏற்பட்டது; மறுநிமிஷம் தங்களுக்கும்
அப்படி ஒரு புதுச்சேலை கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பிறகு, அம்மா
செத்துப்போனது ஞாபகம் வந்து, பழையபடியும் அழத் தொடங்கினார்கள்.
வெள்ளையம்மாளின் பிணம் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாகி விட்டது. இதையும்
சிறுவர்கள் பார்க்கும்படி ஊரார் விடவில்லை. பார்த்திருந்தால் அம்மா
மட்டுமல்லாமல் அழகான புதுப்புடவையும் சேர்ந்து தீயில் எரிந்ததற்காகச்
சிறுவர்கள் அழுதிருக்கக்கூடும். பிணத்தைப் பாடையில் கொண்டுவந்து வைப்பதற்கு
முன்பே வேலப்பன் சிறுவர்களுக்கு முறுக்கு வாங்கிக் கொடுத்துத் தன் வீட்டுக்கு
அழைத்துச் சென்றுவிட்டாள். அங்கே இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். வயிறு
நிறைந்த பிறகுதான் அம்மாவின் நினைவு முழுவேகத்தோடு வந்து சிறுவர்களின்
நெஞ்சில் அடித்தது. வேலப்பனின் மனைவி, “உங்க அம்மா வந்துருவாடா. அழாதீங்க.
பேசாமல் இங்கேயே விளையாடிக்கிட்டிருங்க” என்று சொல்லி அவர்களுடைய துயரத்தை
மறக்க வைக்க முயன்றாள்.
இரவு வந்ததும் அவள் விளக்கு ஏற்றினாள். வேலப்பனும் வீடு வந்து சேர்ந்தான்.
சிறுவர்களுக்குச் சுடுசாதம் போட்டார்கள். அதன்பின் ஒரு பாயை விரித்து அதில்
அவர்களைப் படுக்க வைத்தார்கள். சாக்குப் படுதாவிலேயே பிறந்த நாள் முதல் படுத்து
உறங்கிய சிறுவர்களுக்குப் பாய்ப்படுக்கை சொல்லமுடியாத பேரானந்தத்தை அளித்தது.
இந்தப் பாயில் அம்மாவும் தங்களோடு படுத்துக்கொண்டால் இன்னும் ஆனந்தமாக
இருக்குமே என்று நினைத்து, “அம்மா, அம்மா” என்று பழையபடியும் அழத் தொடங்கினான்
சின்னவன். வேலப்பன் அவர்களைத் தூங்கும்படி நயமாகவும் இரக்கத்தோடும் சொன்னான்.
அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு பழைய வேஷ்டியைக் கொண்டு வந்து
போர்த்திவிட்டு, அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டு
தானும் பக்கத்திலேயே ஒரு பாயை விரித்துப் படுத்து விட்டான்.
வயிறு பூரணமாக நிறைந்துவிட்டது. படுக்கையும் வழக்கம்போல அரித்துப் பிடுங்கும்
கோணியல்ல. அதே போலப் போர்வையும் கோணியாகவோ கந்தலாகவோ இல்லாமல் வேஷ்டியாக
இருந்தது. இத்தனை வசதிகளும் ஒரு சேர அமைந்துவிட்டதால் சிறுவர்கள் சுகமாகத்
தூங்கிவிட்டார்கள்.
அதற்கு அப்புறமும் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிசப்தம்; தாங்கமுடியாத
குளிர்; மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தைமாதப் பனி. போர்வையாகக் கிடந்த
வேஷ்டி, அவர்கள் தாறுமாறாக உருண்டு புரண்டதால் தனியே விலகி, சுருண்டுபோய் ஒரு
பக்கத்தில் கிடந்தது.
சந்தர்ப்பவசமாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட வேலப்பன் சிறுவர்களைத்
திரும்பிப் பார்த்தான். வெறுங் கோவணத்தோடு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடந்த
சிறுவர்களின் மீது மீண்டும் வேஷ்டியை எடுத்துப் போர்த்தினான். அப்போது அவன்
கொஞ்சங்கூட எதிர்பாராதவாறு சிறுவர்கள் இருவரும் ஏகாலத்தில் ஒரே குரலில்,
“அம்மா” என்று வீடே அலறும்படி கத்தினார்கள்.
வேலப்பனுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல் இருந்தது. அதிர்ச்சியால்
வாயடைத்துப்போய் நின்றான். அவன் மனைவி தூக்கத்திலிருந்து துள்ளி விழுந்து
எழுந்தாள். என்னவோ ஏதோ என்று எழுந்து உட்கார்ந்து விட்டார்கள்.
தைரியசாலியான வேலப்பனுக்கு அதிர்ச்சி நீங்கியது. “கடவுளே! இந்தக் குழந்தைகள்
என்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே!” என்று வாய்
விட்டுப் புலம்பினான்.
கணவனும் மனைவியும் வெகுநேரம்வரை என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்தியும்
சிறுவர்கள் அம்மாவை அழைப்பதையோ, சுற்றுமுற்றும் திரும்பிப் பர்த்து அம்மாவைத்
தேடுவதையோ நிறுத்தவில்லை. அவள் கதவு மறைவிலோ, சுவர் மறைவிலோ நிச்சயமாக ஒளிந்து
கொண்டிருப்பதாகவே நினைத்துப் பயங்கரமாகக் கூப்பாடு போட்டு அழைத்தார்கள்.
“ரெண்டும் ஏதாச்சும் கனாக் கண்டிருக்குமோ?” என்றாள் வேலப்பன் மனைவி.
”என்னான்னு தெரியலையே!” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியே
ஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.
அவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டு
சிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால்
நினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்?
சிறுவர்கள் தூங்கும்போது, கனவில் அவர்களுடைய அம்மா வந்தாள். குழந்தைகள்
இருவரையும் தனித்தனியாக வாரி எடுத்து முத்தமிட்டாள். அம்மாவின் புதுச்சேலையைக்
குழந்தைகள் ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்.
“என் கண்ணுகளா, இந்தச் சீலை இனி உங்களுக்குத்தான். உங்களுக்குக் கொடுக்கத்தான்
அம்மா வந்திருக்கிறேன். நான் செத்துப் போகவில்லை” என்றாள் தாய். பிறகு
குழந்தைகளைப் படுக்க வைத்தாள். அதன்பின் தான் உடுத்தியிருக்கும் புதுச் சேலையை
அவர்களுக்குப் போர்த்திவிட்டு, பிறந்த மேனியுடன் வெளியே நடந்தாள். அம்மா தங்களை
விட்டு விட்டு எங்கோ போகிறாள் என்பதைப் பார்த்தபோதுதான் சிறுவர்கள் வீடே
அலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும்
கலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை;
சுடுகாட்டுக்குப் போனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் போர்த்திய
அந்த வெள்ளைப் புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று கொண்டிருந்தான்.

நன்றி - தமிழ்க்கதைகள்