Showing posts with label இயற்கை மருந்து. Show all posts
Showing posts with label இயற்கை மருந்து. Show all posts

Wednesday, November 04, 2015

சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு?-மருத்துவர் கு. சிவராமன்

தேவையற்ற பதற்றமும் அறிய வேண்டிய உண்மைகளும்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.
மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட.
வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.
உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).
வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.
தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.
எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.
ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.
நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் 
தொடர்புக்கு: [email protected]

-தஹிந்து


  • திரு .சிவராமன் அவர்களே... மக்களாகிய எங்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சினை ...சித்த வைத்தியத்தில் போலி மருத்துவருக்கும் ஒரிஜினல் சித்த மருத்துவருக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது என்பதுதான் ... திருச்சியில் எழுபது எண்பதுகளில் சித்த மருத்துவர் கண்ணன் அவ்வளவு பாப்புலர் ஆக இருந்தார்...அவர் போல ...உங்களை போல ...சிலரைத்தான் எங்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது ஹிந்து பத்திரிகை மூலமாக நீங்கள் ஏன் சித்த டாக்டர்(ஒரிஜினல்) லிஸ்ட் வெளியிடக்கூடாது? நிச்சயம் மக்கள் இதை வரவேற்ப்பார்கள் .
    590
    about 22 hours ago
     (0) ·  (0)
     
    • Arumugam Eswaran  from India
      மருத்துவர் சிவராமனின் கட்டுரை எனது முக நூல் பதிவுக்காக எழுதப்பட்டது. திருப்பூரில் பிரபல சித்தா மருந்தகத்தில் தோல் அலர்ஜிக்காக சித்தா மருந்து 8 நாட்கள் மட்டுமே சாப்பிட்ட எனது மகள் நடக்கமுடியாமல் தலை சுற்றல்,பசியின்மை, மறதி, உடல் கட்டை போல ஆனதால் அலோபதி சென்றோம். எனது மகளின் ரத்தத்தில் 4.99 அளவு மெர்க்குரி இருந்ததால் கடந்த 3 மாதமாக தினம் 22 மாத்திரை சாப்பிடுகிறார்., மெர்க்குரி எப்படி வரும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். எனது மகள் சாப்பிட்ட சித்தா மருந்தை சென்னையில் உள்ள லேப்பில் பரிசோதித்தேன். 0.51 அளவு மெர்க்குரி இருப்பது தெரிந்தது. அதனால் இணையத்தில் பார்த்ததில் சித்தா மருந்தில் மெர்க்குரி ஒரு மருந்தாக இருப்பது தெரியவந்தது. எனவே எனது மகளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படாதிருக்க முக நூலில் பதிவிட்டேன். பெற்ற மகளின் வேதனை தாளாது ஒரு தகப்பனின் வேதனைதான் அந்த பதிவு. நான் ஒன்றும் சித்தவைத்தியத்தின் எதிரியல்ல.. பன்னாட்டு மருந்துக்கம்பெனிகளின் ஏஜண்டும் அல்ல.. ஒரு ஒய்வு பெற்ற அரசு ஊழியன்...எனது மகளின் உடல் நிலை சரியாக 4 மாதமாவது ஆகும்.எருதுக்குப்புண்.. காக்கைக்கு கொண்டாட்டம்..
      345
      a day ago
       (0) ·  (0)
       
      • SSubbu  from India
        வீணர்களின் பிரச்சாரம் இது, ஆங்கில மருத்துவம் வெறும் விஷமே, அதனால் தான் பல பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன, இதுவரையில் சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் ஏதும் இல்லை. கட்டுபடுத்துவோம் என்று கூறி மருந்துகளை ஏற்றி ஏற்றி கொடுத்து நோயை அதிகபடுத்தி நோயாளியை நடைபிணமாக்கி இறுதியில் கொன்று விடுகிறார்கள். சித்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. உணவே மருந்து, மருந்தே உணவு. இன்று பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மறுத்து இல்லாமல் பலர் இறந்து வரும் நிலையில் அரசாங்கமே பப்பாளி இல்லை குடிநீர் குடிக்க சொல்கிறது, இதற்க்கு என்ன சொல்கிறிர்கள்.
        3 days ago
         (1) ·  (0)
         
        yours Up Voted
        • MMadheshvet  from India
          பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன மருத்துவம் அழிக்க நினைக்கவில்லை அத்தொழில் ஈடுபட்டுவரும் பண்ணன்ட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களே இப்படி தவறான விசியங்களை மக்களிடத்தில் பரப்பி வருகிறது. அதேசமயம் சித்த மருந்துகளில் இருக்கும் கன உலோகங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிபதில்லை என்று கட்டுரை ஆசிரியர் ஆணித்தரமாக சொன்னாலும் அதை ஏன் இந்திய அரசாங்கமும் ,பண்ணன்ட்டு மருத்துவ அமைப்புகளும் இன்றளவிலும் நவீன அறிவியல்படி சோதனை செய்து ,சோதனை முடிவுகளை மக்களுக்கு அறிவிக்கவில்லை. இது அரசின் மெத்தனமொ, அல்லது அல்லோபதி மருந்து கம்பனிகளின் லாப மோகமோ அல்லது சித்த மருந்துகள் பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை நவீன மருத்துவம் போல ஏற்றுகொள்ளாமல் சித்தமருதுவர்கள் மறைக்கிறார்களோ தெரியவில்லையே. சீனா மருத்துவத்திற்கு இணையாக நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளும் சிறந்து என்று அரசால் பறை சட்ற்றபடவேண்டும் . நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் சிறந்து விளங்க வேண்டும் .இதை இந்திய அரசு உடனடியாக செய்து நம்மக்களை காப்ததொடு அந்நிய செலாவணியும் பெருக்கி ,இந்தியாவை சிறுபுற செய்ய முடியும் .
          155
          3 days ago
           (1) ·  (0)
           
          yours Up Voted
          • DRDr Rajasekaran  from India
            Heavy metal facts Dr Sivaraman unveiled the unexplained truth of siddha drugs and saved the dignity of system through his article. In recent times, siddha and other ISM systems are in news for wrong reasons. This system mainly based on Knowledge, Literature, Experience and Believes. In short, it is a philosophical based medical system which served and saved this society till 100 yrs before. Due to the absence of Anti microbials and emergency treatment care, this system lose its shine. But till date , this system is surviving based on its own merits and empirical value . Comparing with highly evolved modern drugs is not a good approach. Both are different verticals. A separate evolution method (ie Reverse pharmacology) should be developed for these drugs. Instead of ignoring and insulting the Indian Systems of Medicine, we find new ways to improvement of this system. Dr Rajasekaran
            3 days ago
             (3) ·  (0)
             
            balasundaram · kdileepan · g Up Voted
            • DJDr.PUTHUMAIVINAYAGAM JEYAPRAKASH  from India
              நன்று.அருமையான படைப்பு.மிகுந்த பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன்.சிறந்த அறிவியல் எதிர்கொள்ளல்.வெல்க.
              3 days ago
               (1) ·  (0)
               
              yours Up Voted
              • MMuthu  
                பாதரசம் ஆபத்தானது. கொடைக்கானல் பாதரச தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் ஒரு தலைமுறையே பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் இரத்த அழுத்தம் பார்க்கும் பாதரச கருவி தடைசெய்யபட்டுள்ளது.