சிட்டுக்குருவி... நம்மில் பெரும்பாலானவர்களின் உயிரோடும்... உணர்வோடும் உறவாடிய ஒரு ஜீவன் என்றால்... அதில் அதிசயம் ஏதுமில்லை! ஆம்... சின்னஞ்சிறு வயதில் சிட்டுக்குருவிகளோடு விளையாடாதவர்கள் மிகக் குறைவே! அதன் முட்டைகளைத் தேடிப்பிடித்து கையில் வைத்து விளையாடுவது, அதன் குஞ்சுகளை ஆசையோடு வருடிக் கொடுப்பது, சிறகடித்து விர்ரென்று பறக்கும் அந்த அழகை ரசிப்பது... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தகைய அனுபவம்தான், இலக்கியம், சினிமா என்று எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவியை ஆசை ஆசையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால், இதெல்லாம் எதிர்கால தலைமுறைக்கு கொஞ்சம் கூட கிடைக்காமல் போய்விடக்கூடிய ஆபத்து துரத்திக்கொண்டே இருப்பதுதான் கொடுமை!
மைனா, பருந்து, ஆந்தை... என அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவியும் சமீபகாலமாக சேர்ந்திருக்கிறது. யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, சமீப வருடங்களில் அவை அழிவின் விளிம்புக்கே துரத்தப்பட்டிருப்பதுதான் பெருங்கொடுமை!'' என்று நடுங்கும் குரலில் எச்சரிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
!
இத்தகைய நிலையில், சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்பு உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதியை 'சிட்டுக்குருவிகள் தினம்’ என்று கொண்டாடி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இயற்கை ஆர்வலரான சதீஸ்முத்துகோபால், பழனிமலை பாதுகாப்பு இயக்கத்தோடு இணைந்து, பழனியில் உள்ள அக்ஷயா பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடினர்.
அதில், 'சிட்டுக்குருவி’ என்ற குறும்படத்தைத் திரையிட்டு, குருவிகள் பற்றிய பல விஷயங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. குருவிக் கூடுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
அது பற்றிப் பேசிய, சதீஸ்முத்துகோபால், ''ஒரு காலத்தில் வீட்டு முற்றங்களிலெல்லாம் அமர்ந்து உறவு பாராட்டி வந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. அந்த ஜீவன் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட நாம் உணராமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
பாரம்பர்ய விவசாய முறைகளை விட்டொழித்து ரசாயனத்தைப் பயன்படுத்துவதுதான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். ரசாயனத்தின் எச்சம் மிஞ்சிய தானியங்களை உண்ணும்போது அதன் வீரியத்தை அந்த சின்னஞ்சிறு ஜீவனால் தாங்க முடியாமல் மடிந்து போகின்றன.
அலைபேசிக் கோபுரங்களின் கதிர் வீச்சு, வாகனங்களின் ஒலி, பட்டாசுச் சத்தம் என்று அந்தக் குருவிகளின் அழிவுக்குக் காரணமான விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்'' என்றவர்,
''வீடுகளில் உயரமான இடங்களில் சின்னச்சின்ன சட்டிகளை வைத்து, அதில் கம்பையும், சிறிது நீரையும் ஊற்றி வைத்தால்... சிட்டுக்குருவிகள் தேடி வந்து உண்ணத் தொடங்கும். அதேபோல செம்பருத்தி, மல்லிகை போன்ற செடிகளை வளர்த்தால், அவற்றில் குருவிகள் கூடுகட்டிக் கொள்ளும். முடிந்தளவுக்கு விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க முன்வர வேண்டும்'' என்று அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.
நிறைவாக, ''பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவிகள் தினத்தன்று, குருவிகளைப் பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கும் வரவேண்டும் என்பதற்காக, விலங்குகள் ஆணையம் மூலமாக, குருவிக் கூடுகளை இலவசமாக அரசாங்கம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் கூடுகளை வழங்கி, குருவிகளைக் காப்பாற்றும் எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையையும் வைத்தார் சதீஸ்முத்துகோபால்.
நன்றி - விகடன்
நன்றி - சன் டி வி
நன்றி - விகடன்
நன்றி - சன் டி வி