"சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. வெனீஸ் திரைப்பட விழாவில் இப்படம் "மனித உரிமை சினிமா விருது" என்ற விருதை வென்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு இயக்குநர்கள் படக்குழு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
வெனீஸ் நகர திரைப்பட விழாவில் உன்னுடைய 'விசாரணை' திரைப்படம் சிறப்புப் பரிசு பெற்றதையெடுத்து, உனக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது, நீ என்னை உன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அத்திரைப்படத்தின் ஒரு காட்சியைக் காண்பித்தாய். அதில் பரவியிருந்த குரூரமும், நேர்மையும் என் ஆழ்மனத்தை உலுக்கியது. அதிர்ந்தவனாய் என் அலுவலகத்திற்கு திரும்பினேன்.
என் நண்பர்கள் "படம் பார்த்தாயா? எப்படியுள்ளது 'விசாரணை'?" என்று விசாரித்தனர். என் மெளனம் உடைந்தது, என் எண்ணவோட்டத்தினை பகிர்ந்தேன். அவர்கள் அமைதியானார்கள்.
மறுநாள், சி. மோகனை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். மிகுந்த ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றியபடி, "'விசாரணை' பார்த்தாயா?" என்று கேட்க, "நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினேன். "நீ நிச்சயம் பார்க்க வேண்டும், பிரமாதமான படமது" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. அவரது கண்களில் நேர்மை பளிச்சிட்டது.
பின்பு நான் உன்னை அழைத்து "எனக்கு முழுப்படத்தினையும் காண்பி" எனக் கேட்டேன். இன்னும் சில இயக்குநர்களை ஒன்று சேர்க்கட் சொன்னாய், மறுநாள் உன்னுடைய அலுவலகத்தில், எடிட்டிங் ரூமில் காட்டப்படும் என முடிவானது. நான் மற்ற இயக்குநர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், பாலாஜி சக்திவேல் என்றவொரு திருடன், "நாம் வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா" என்று கேட்டான். சரிதானே எனத் தோன்றியது. மறுகணமே, என் அலுவலகத்தில் சிறிய விழாவொன்றுக்கான ஏற்பாட்டினை ஆரம்பித்து, இயக்குநர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி படைப்பாளிகளுக்கும், "வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா?" எனக்கேட்டு மெசேஜ் தட்டினேன். சரி, நான்கைந்து பேராவது வந்தால் போதுமே என்று தான் என் எண்ணமாக இருந்தது. அனைவருமே 'சரி' என மறுகணமே பதிலளித்தனர்.
மகிழ்ச்சிக் களிப்பில், அன்று முழுவதும் விழாவிற்கான வேலையில் ஈடுபட்டு கடைசியில் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால், மற்ற இயக்குநர்கள் உன் அலுவலகத்தினில் படம் பார்த்தனர். சிலர் அமைதியானார்கள், சிலர் புகழ்ந்தார்கள், சிலர் அழுதார்கள்.. சிலர்...
விழாவிற்கு முதல் ஆளாக மணிரத்னம் வந்து நின்றார். அவர் படம் பார்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து பாலா, ஷங்கர், லிங்குசாமி, ராம், சமுத்திரக்கனி, மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல், கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதான், சசி, மணிகண்டன், ரஞ்சித், சுப்ரமணிய சிவா, ரோகினி, ஸ்டான்லி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், மகேஷ் முத்துசாமி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், உனது சக தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். மேடை வலுத்திருந்தது.
ரோகிணி தொகுத்து வழங்க, மணிரத்னம் 'விசாரணை' திரைப்படத்தின் மீது புகழ் கிரீடம் சூட்டினார். படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனியோ பேச நா எழாது உறைந்து நெகிழ்ச்சியுடன் நின்றான். திரைப்படம் கொடுத்த அனுபவத்தினை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் மெளனத்தில் தஞ்சமடைந்தான் பாலாஜி சக்திவேல். "நான் பேச மாட்டேன். ஆனால், இப்படத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒலிப்பெருக்கியாவேன்" என்றார் ஸ்டான்லி. உன் தைரியத்தினைப் பற்றி வியந்து பேசினார் சுப்ரமணியசிவா. "என் படம் விசாரணை முன் ஒன்றுமேயில்லை" என்றான் மணிகண்டன்..
உன் படத்தின் ஒளிப்பதிவாளருக்கோ பேச்சு எழவில்லை, உன் கலை இயக்குநர், "நான் மேடையேற மாட்டேன்" என்று கூறி உரக்க "நன்றி" சொல்லி அமர்ந்தார். படம் பார்க்காத மற்றவர்கள் எதுவும் புரியாமல், எல்லோருக்கும் புரிந்த ஒற்றை வாக்கியமான 'வெற்றி பெற வாழ்த்துகள்' என்று சொல்லி தப்பித்தனர்.
பிறகு விருந்து தொடங்கியது. ஆலமரத்தின் கிளைகளில் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போல் கலகலவென்ற குதூகலப் பேச்சொலி.. பிறகு இசைந்தோடியது இளையராஜாவின் பாட்டு. அதில் மயங்கினோம், பாலாஜி சக்திவேலின் சேட்டைகளுக்கு சிரித்து விழுந்தோம். பின்பு மரத்திலிருந்து இறங்கி மனதை வெற்றிடம் ஆக்கிரமிக்க, வீட்டை நோக்கி நகர்ந்தோம்.
மறுநாள் நான் ஃபோர் பிரேமிஸில் 'விசாரணை' படம் பார்த்தேன். படத்தின் முடிவில் "எண்ட் கிரெட்டிட்ஸ்" வரும் முன்னே நான் திரையரங்கினை விட்டு வெளியே ஒடி வந்து என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"விசாரணையின் ஒற்றைக் காட்சியைப் பார்த்தபின் என் மனதில் எழுந்திருந்த எண்ணம் தவறு. மிகச்சிறந்த படம் இது. கலையும் கலைஞனும் கை கோர்த்து புதிய பரிமாணத்தினை எட்டியிருக்கின்றனர்."
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய், என் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்திருந்தால் உன்னைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே 'விசாரணை'. 'மனிதம்' என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும், படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள்.
நண்பா, உன் 'விசாரணை' என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது.
இதோ, சில வார்த்தைகள் கூவிச் சொல்கிறேன்.
"சினிமா கலைஞர்களாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'"
இனி வரலாறு சத்தமிடும்..
வெற்றிமாறா.. தலை நிமிர்ந்து நட..
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மிஷ்கின் கூறியுள்ளார்.
thannnx-thehindu