கோரி தேரே பியார் மே - நீங்கள் அறிந்த சினிமா -சினிமா பித்தன்
01. கண்டெடுத்தான் காடு, மண்ணைத் தின்னும் குழந்தைகள், உழைப்பைத் தவிர வேறெதும் அறியாத ஏழை வெள்ளந்தி குடிமக்கள்... ஏமாறுகிறோம் என்று அறியாமல் நாளும் தேயும் இக்குடியினரின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கும் வாத்தி 'வேலுத் தம்பி'. பெல் பாட்டம் பேன்ட்டுடன் விமலும், 'டீ'யுடன் மனசையும் சேர்த்து ஆற்றும் இனியாவும் கண்முன் தோன்றுவார்களே!
02. நாசாவில் வேலை பார்த்து, தன்னை வளர்த்த காவேரி அம்மாவை பார்க்க கிராமத்திற்கு வரும் பேரன். கிராமத்தில் உள்ள வேறுபாடுகள் மனிதர்களின் அறியாமையை உணர்ந்து தன் தேவையை அறிந்து, அமெரிக்க வேலையை விடுகிறான்.
03. வெளிநாடு சென்று பெரிய 'குக்'காக வேண்டும் என நினைக்கும் இளைஞன் தன் தாத்தாவின் தாக்கத்தால், உணவின் தேவையை உணர்ந்து, அவர் ஹோட்டலையை எடுத்து நடத்துவது.
மேற்கண்டவை முறையே வாகை சூட வா (தமிழ்), ஸ்வதேஷ் (இந்தி), உஸ்தாத் ஹோட்டல் (மலையாளம்) என ஏறத்தாழ ஒரே கதைக்களத்தில் அமைந்த படங்கள்தான். இப்படங்களின் பெரிய பலம் என்னவென்றால் இவை பார்வையாளர்களை ஆட்கொள்ளும் தன்மை கொண்டவை. Captivating Cinema என்று இதைக் கூறலாம்.
படத்தின் மையக் கதாபாத்திரம் ரசிகனில் ஒருவனாகக் கூட இருக்கலாம். சுகவாசியாக, தனக்காக மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் நாயகன் மெல்ல மெல்ல தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தால், சம்பவங்களால் ஆட்கொள்ளப்பட்டு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதுதான் இப்படங்களின் ஆணிவேர். படம் பார்க்கையில் ரசிகர்களாகிய நம்மை போல் கதாநாயகன் தோன்றுவான், அவனுள் நிகழும் மாற்றங்கள் நம்முள்ளும் வரக்கூடியவையாகத்தான் திகழும். இதுவே இக்கதை வடிவம் அமைக்கப்பட்ட சிறப்பு எனவும் கூறலாம்.
புனித் மல்ஹோத்ரா இயக்கத்தில் இவ்வாரம் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம் 'கோரி தேரே பியார் மே(ன்)' |Gori Tere Pyaar Mein| கூட இதே அடிநாதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால், முன்பு கூறிய எவ்விதத் தாக்கத்தையும் இது ஏற்படுத்தவில்லை. அவரின் முந்தைய மூன்று படங்களின் சாயலில் அமைந்த கதைதான் என்றாலும், பேனாவின் தேவையை கேள்விக்குறியாக்கும் திரைக்கதை, கடந்து போகும் படங்களின் வலையில் இதை விழ வைத்துள்ளது.
இந்த இடத்துல ஹீரோயின் மேல லவ் வரும், இப்போ இரண்டு பேரும் ஓடி வந்து கட்டிப் புடிப்பாங்க பாரு, நீ வேணும்னா பாரு கடைசியில இதுதான் கிளைமாக்ஸா இருக்கும். இப்படி சில படங்களில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, ட்ராலி பார்வர்ட், கட் உட்பட அனைத்தையும் பார்வையாளனால் வரையறைக்க முடிகிறது. கட்டுக்கோப்பற்ற திரைக்கதையும், புளித்துப் போன க்ளீஷே காட்சிகளும் இதற்கு காரணங்களாக அமைகின்றன.
இப்படத்தைப் பொருத்தவரை, படம் பார்த்து கதை சொல்ல வேண்டும் என்று இல்லை, ட்ரைலரைப் பார்த்தே மொத்த கதையையும் சொல்லிவிடலாம். பாலிவுட் சினிமாவின் பாரம்பரிய மசாலா காதல் கதை, பணக்கார ஆர்கிடெக்ட் நாயகன், சமூக சேவகி நாயகி. வழக்கம்போல் சமூகத்தில் இது தவறு, அது தவறு என்று கூறுவதும், மினிஸ்டர்களை மீட்டிங்கில் கலாய்ப்பதுமாக 'கரீனா கபூர்' பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். அதைப் பார்த்து ஜொள்ளு விடும் நாயகன் இம்ரான் கான் லவ்வாகி காதலில் விழுகிறார். புதுசா எதாவது நடக்கும் என்ற நமது நம்பிக்கை பாதாளத்தில் விழுகிறது.
காதல் மோதலாகி பிரேக் அப் ஆகிறது, கிராம மக்களுக்கென சேவை செய்ய கரீனா கிராமத்திற்கு செல்கிறார். 'நீ தானே என் பொன் வசந்தம்' எனக்கூறி நம்ம ஹீரோவும் அங்கே செல்கிறார். கிராமத்தில் பாலம் தேவைப்படும் சூழல் எழ, இம்ரான் தன் காதலுக்கு பாலம் அமைத்துக் கொள்கிறார். இவர்களின் காதலுக்கு கிராம மக்களை பொம்மையாக்கி கடைசியில் ஹீரோ, ஹீரோயின் கெட்டி மேளம் கொட்டுவதுதான் நீங்கள் அறிந்த க்ளைமாக்ஸ்.
இந்தப் படத்தில் ஒரு நல்ல விஷயம், இது நம் முழு கவனத்தை பரிசாகக் கேட்கவில்லை, படத்தை எவ்விடத்திலிருந்து பார்த்தாலும் நம்மால் கதையை புரிந்துகொள்ள முடியும். துணிக்கு இஸ்திரி போடும்போது, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சாப்பிடும்பொழுது, இப்படி போர் அடித்தால் நேரத்தை கடப்பதற்கென சில படங்கள் அமைந்திருக்கும் இப்படம் அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பட்டியலில் முந்துகிறது என்றும் சொல்லலாம்.
சில நல்ல காட்சிகள், சில சுமார் காட்சிகள், சில மொக்கை காட்சிகள், சில ஃபில்லர் காட்சிகள், உளறிக் கொட்டி கிளறி மூடும் க்ளைமாக்ஸ் இப்படி வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இப்படம் விளங்குகிறது. (விளங்கிடும்!). சினிமா என்பது வெறும் காட்சியின் தொகுப்பல்ல; கதைக்கு வடிவும் அளிக்கும் யுக்தி என்பதை உணர்ந்தோர், இப்படத்தில் சலிப்படைவர்.
அழகான ஹீரோ - ஹீரோயின், கலர்ஃபுல் லொகேஷன், நான்கு பஞ்சாபி தேசீ பீட்டுக்களுடன் பார்ட்டி பாடல்கள், சின்ன சின்ன காமெடி. வருத்திக்கொள்ளாத கதைக்களம். பக்கெட் பாப்கார்ன் காலியாகும் வரை படம் பார்க்க வேண்டும் என விழைவோர், இப்படத்தை தாராளமாக நாடலாம்.
இம்ரான் கானை தமிழனாகக் காட்டியும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஷாருக்கானை போல் தமிழ்க்கொலை செய்து பேசாமல் இருந்தது மனதிற்கு ஆறுதல்.
ஆறுதலுக்காகப் படம் போவேன் என்றால், உங்கள் இஷ்டம்... எனக்கென்ன கஷ்டம்!
thanx - the tamil hindu
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan