இன்சென்டிவ் இன்வெஸ்ட்மென்ட்... சேமிக்க சிறந்த வழிகாட்டி!
செ.கார்த்திகேயன்.
நிறுவனங்கள் நிதி ஆண்டின் இறுதியில் தங்கள் ஊழியர்
களுக்கு போனஸ் அல்லது ஊக்கத்தொகையை (இன்சென்டிவ்) மொத்தமாக வழங்கும்.
இந்தத் தொகை, ஊழியர்கள் அந்த வருடம் முழுவதும் செய்த பணியின் செயல்பாட்டைப்
பொறுத்து இருக்கும். இப்படி கிடைக்கும் பணத்தைப் பலரும் சரியான
திட்டமிடல் இல்லாமல் செலவழிக்கிறார்கள். இப்படி ஒரேசமயத்தில் கிடைக்கும்
பணத்தை எப்படி சேமிக்கலாம், எவ்வளவு செலவழிக்கலாம் என்பது குறித்து நிதி
ஆலோசகர் யூ.என்.சுபாஷ் நம் வாசகர்களுக்காக கொடுத்த இன்சென்டிவ்
இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் இதோ...
''ஊழியர்களின் உழைப்பை ஊக்கப்படுத்துவதற்கு அலுவலகம்
தரும் இன்சென்டிவ் பணத்தைப் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒருவகையில் செலவு
செய்துவிடுகிறார்கள். இப்படி செலவழிப்பதைவிட, அந்தப் பணத்தை
எப்படியெல்லாம் சரியாகப் பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.
கடன்களைத் திருப்பிக் கட்ட..!
கிடைக்கும் ஊக்கத்தொகையில் முன்னுரிமை தரவேண்டிய
விஷயம், அதிக வட்டி கட்டும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக இருக்க
வேண்டும். கடன் இல்லாமலோ அல்லது கடன் சுமை குறைவாகவோ இருக்கும்போதுதான்
செலவுகளும், முதலீடுகளும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதனால்
வெளியிடங்களில் கடன் வாங்கி இருந்தாலோ, கிரெடிட் கார்டு ரீபேமென்ட் மற்றும்
தனிநபர் கடன் போன்ற கடன்கள் கட்டவேண்டி இருந்தாலோ மொத்தமாக கிடைக்கும்
ஊக்கத்தொகையைப் பயன்படுத்தி அவற்றை திருப்பிச் செலுத்திவிடுவது நல்லது.
ஆனால், வீட்டுக் கடன் இதில் அடங்காது.
20% செலவுக்கு..!
ஊக்கத் தொகையைப் பயன்படுத்தி செலவு செய்யக் கூடாது
என்பதில்லை. அந்தச் செலவையும் திட்டமிட்டுச் செய்வது அவசியம். கிடைக்கும்
ஊக்கத் தொகையில் 20 சதவிகிதத்தைச் செலவுக்காகப் பயன்படுத்தலாம். திடீரென
மொத்தமாகப் பணம் கிடைத்தால், குடும்ப உறுப்பினர்களுக்காக பரிசுப் பொருள்
வாங்கித் தருவது, சுற்றுலா அழைத்துச் செல்வது போன்றவற்றுக்கு செலவு
செய்யலாம். அதற்கு மொத்தமாகக் கிடைக்கும் பணத்தில் 20 சதவிகிதத்தைப்
பயன்படுத்திக்கொள்ளலாம். மீதியை எதிர்காலத்திற்கு சேமிப்பதால் அது
ரிட்டையர்மென்ட் வயதிற்கு முன்பாகவே ஓய்வுபெறுவதற்கு உபயோகமாக இருக்கும்.
அவசரகாலத் தொகை சேமிப்பு!
நம்மில் பலர் அவசரகாலத் தொகை என எந்தவொரு சேமிப்பும்
இல்லாமல் இருப்பார்கள். எப்பொழுதும் குறைந்தபட்சம் மூன்று அல்லது
அதிகபட்சம் ஆறு மாதத்திற்கு தேவைப்படும் குடும்பச் செலவிற்கான தொகையை
அவசரகால நிதியாக எடுத்து வைக்கவேண்டும். இந்தப் பணத்தை சேமிப்புக் கணக்கோடு
சேர்ந்து இயங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் (ஸ்வீப் எஃப்.டி.) அல்லது லிக்விட்
ஃபண்டுகளிலோ முதலீடு செய்து வைப்பது நல்லது. இந்த அவசரகால நிதி
இல்லாதவர்கள் மொத்தமாகக் கிடைக்கும் இன்சென்டிவ் தொகை யிலிருந்து செலவு போக
மீதி இருக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்து சேமித்து வைப்பது
அவசியம்.
லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
ஒரு
மனிதனுக்கு எது இருக்கிறதோ, இல்லையோ இன்றைய நடைமுறை வாழ்க்கை யில்
இன்ஷூரன்ஸ் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். ஊக்கத்தொகை கிடைக்கும்
சமயத்தில் தங்களுக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான
லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது புத்திசாலித்தனம். லைஃப்
இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு டேர்ம் ப்ளான் எடுப்பதே சிறந்தது. ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பாலிசிகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஃபேமிலி
ஃப்ளோட்டர் பாலியை எடுத்துக்கொள்ளலாம். இதற்காகத் தேவைப்படும் பிரீமியத்
தொகையைக் கிடைக்கும் ஊக்கத்தொகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
முதலீட்டுத் திட்டம்!
மேலே சொன்னதுபோல செலவு, அவசரகாலத் தொகை, இன்ஷூரன்ஸ்
பிரீமியத்திற்கு ஒதுக்கியதுபோக மீதமிருக்கும் தொகையை முதலீட்டிற்கு
பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தொகையை 100 சதவிகிதமாக எடுத்துக்கொண்டால்,
இதிலிருந்து 50 சதவிகித தொகையை ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்குச்
சந்தையில் முதலீடு செய்யலாம். அதாவது, அப்படி ரிஸ்க் எடுக்க
விரும்புபவர்கள் நீண்டகால நோக்கில்தான் முதலீடு செய்யவேண்டும். பங்குச்
சந்தையில் இன்று முதலீடு செய்துவிட்டு நாளையே வருமானத்தை எதிர்பார்க்க
முடியாது. பங்குச் சந்தையை கவனித்து முதலீடு செய்ய முடியாதவர்கள், குறைவான
ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இந்த 50 சதவிகிதத் தொகையை ஈக்விட்டி
டைவர்சிஃபைட் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
மீதமிருக்கும் 30 சதவிகிதத் தொகையில் கடன் சார்ந்த
திட்டங்களில் எஃப்.டி., எஃப்.எம்.பி., பி.பி.எஃப்., கடன் சார்ந்த
மியூச்சுவல் ஃபண்டுகள், என்.எஸ்.சி., அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டங்கள்
மற்றும் வரிச் சலுகை பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மீதி 20 சத
விகிதத் தொகையை தங்க நாணயம், கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங் ஃபண்டுகள்,
இ-கோல்டு திட்டங்கள் மற்றும் இ-சில்வர் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.
கோல்டு காயின்கள் வாங்குவதைவிட கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் போன்ற
திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.
முதலீட்டுத் திட்ட அட்டவணை!
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு வெவ்வேறு வருமான விகிதங்களில் தரும் முதிர்வுத் தொகை முன் பக்கம் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
மொத்தமாகச் செய்யப்படும் இந்த முதலீட்டை குழந்தைகளின்
கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்
கொள்ளலாம்.''
செலவு செய்வது சுலபம்; சேமிப்பதுதான் கடினம். ஆக செலவை
குறைத்து சேமிப்பைப் பெருக்க எளிமையான நிதித் திட்டமிடலை தந்து விட்டோம்.
இனி வாழ்வை வளமாக்கிக்கொள்வது அவரவர்களின் கடமை!
நன்றி - விகடன்