Showing posts with label இந்திராணி. Show all posts
Showing posts with label இந்திராணி. Show all posts

Tuesday, September 08, 2015

மகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்

முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திராணியின் படம்.
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திராணியின் படம்.
மகள் ஷீனா போராவை கொலை செய்த பிறகு, தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டு உடலை அலங்கரித்து நறுமண திரவியத்தை (சென்ட்) தெளித்துள்ளார் இந்திராணி. அதன்பிறகுதான் காரில் உடலை எடுத்து சென்று புதைத்துள்ளனர். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியை, 2002-ல் திருமணம் செய்தவர் இந்திராணி. சித்தார்த் தாஸுடன் சேர்ந்து வாழ்ந்தபோது (திருமணம் செய்யாமல்) பிறந்த ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் இந்திராணி. பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த ராகுலை காதலித்தது பிடிக்காமல் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இந்திராணி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் டிரைவர் ஷ்யாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திராணியிடம் போலீஸார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷனாவை கொலை செய்துள்ளார் இந்திராணி. பின்னர் மும்பை வொர்லி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் கார் நிறுத்தும் இடத்தில் ஷீனாவின் உடலை மறைத்து வைத்துள்ளார். பின்னர் சஞ்சீவ் கண்ணா, டிரைவர் ஷ்யாம் ராய் வந்தவுடன், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு ஷீனா உடலை காரில் வைத்து ராய்கட் வனப் பகுதிக்கு எடுத்து சென்று எரித்து புதைத்துள்ளனர்.
முன்னதாக, வழியில் போலீஸார் செக் போஸ்ட்களில் சோதனையிட்டால் சந்தேகம் வராமல் இருக்க இந்திராணி உஷாராக இருந்துள்ளார். அதற்காக ஷீனாவுக்கு தலைவாரி, உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டு, சென்ட் அடித்துள்ளார். பின்னர் காரை ஷ்யாம் ராய் ஓட்டி உள்ளார். பின் இருக்கையில் நடுவில் ஷீனாவின் உடலை வைத்து இரு பக்கமும் சஞ்சீவ் கண்ணாவும், இந்திராணியும் உட்கார்ந்து சென்றுள்ளனர். அத்துடன் ஷீனா தலையை தன் தோள் மீது போட்டு கொண்டுள்ளார்.
வழியில் போலீஸார் ஏதாவது கேட்டால்கூட, மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் தூங்குகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று இந்திராணி திட்டமிட்டுள்ளார். பின்னர் ராய்கட் பகுதியில் உடலை எரித்து புதைத் துள்ளனர். உடலை அப்புறப் படுத்தும்போது முன்னெச்சரிக்கை யாக இவை எல்லாவற்றையும் செய்ததாக விசாரணையின்போது இந்திராணியும், சஞ்சீவும் கூறினர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மைக்கேலுக்கு ரூ.40 ஆயிரம்
கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா திடீரென காணாமல் போனதால், அவரைப் பற்றி இந்திராணியிடம் கேட்டுள்ளார் மைக்கேல். அதற்கு அவள் அமெரிக்கா சென்று விட்டாள் என்று கூறி மழுப்பி இருக்கிறார். எனினும் மைக்கேலுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அதன்பிறகு சில நாட்களில் ஷீனா பெயரில் இருந்து மைக்கேலுக்கு இமெயில் வந்துள்ளது. அதில், தான் அமெரிக்காவில் சந்தோஷமாக இருப்பதாக ஷீனா கூறியதுபோல் இந்திராணி அனுப்பி உள்ளார். அதனால் மைக்கேல் அமைதியாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, மைக்கேலுக்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரத்தை இந்திராணி அனுப்பி உள்ளார்.மைக்கேலுக்கு வேலை எதுவும் சரியாக அமையாததால், தாய் தரும் ரூ.40 ஆயிரம் மிகப் பெரிதாக இருந்தது. அந்த பணத்தில்தான் தனது தாத்தா, பாட்டியை (இந்திராணியின் பெற்றோர்) கவனித்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த சூழ்நிலையில் துருவி துருவி கேள்வி கேட்டால் பணம் தருவதை இந்திராணி நிறுத்தி விடுவார் என்று பயந்துள்ளார் மைக்கேல்.
மைக்கேலைக் கூட கொலை செய்ய இந்திராணி முயற்சித்ததாகவும், 3 முறை மைக்கேல் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


நன்றி - த இந்து