Showing posts with label இங்கிலிஷ் விங்லிஷ். Show all posts
Showing posts with label இங்கிலிஷ் விங்லிஷ். Show all posts

Sunday, April 21, 2013

எனக்கு என் வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது - பாரதி பாஸ்கர்


உத்வேகத் தொடர் - 2

சில பாதைகள்... சில பயணங்கள்...

பாரதி பாஸ்கர்

அண்மையில் திரைப்படப் பிரச்னைகள்விஸ்வரூபம்எடுத்துக் கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில்தான், நான் ஆற அமர, எப்போதோ வந்து ஓடி முடிந்துவிட்டஇங்கிலிஷ் விங்லிஷ்படம் பார்த்தேன்.

ஆயிரம் சொல்லுங்கள். ஸ்ரீதேவி ஸ்ரீதேவி தான். ‘மஞ்சள் தாவணி போட்டுக்கலமா? போட்டுக்கலாமேஎன்று கொஞ்சியபதினாறு வயதினிலேஸ்ரீதேவியின் குண்டுக்கன்னம் கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனாலும் தான் என்ன? கண்களின் வசீகரம் அப்படியே இருக்கிறது


 படத்தில் இங்கிலீஷ் பேசத் தெரியாத சசியாக நடிக்கிறார் ஸ்ரீ. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாததை ஆகப் பெரும் அவமனமாக உணரும் டீன்ஏஜ் மகள். ‘என் மனைவி பிறந்ததே சமைக்கவும் லட்டு பிடிக்கவும்தான்என்கிறார் கணவர். அக்கா மகளின் கல்யாணத்துக்காக அமெரிக்கா போய், அங்கேயும் அவமானப்பட்டு, நாலு வாரங்களில் ஆங்கிலம் சொல்லித் தரும் பள்ளியில் சேரும் சசியை கூடப்படிக்கும் ஃபிரெஞ்சுக்காரன் காதலிப்பதாகச் சொல்கிறான். சசி ரொம்ப அழகாக பதில் சொல்கிறாள். ‘எனக்கு இப்போது தேவை காதல் இல்லை; மரியாதை மட்டுமே!’


அந்த வசனம் என்னை அசைத்தது. ஏதோ சினிமாவில் லட்டு பிடிக்கும் ஒரு பம்பாய் பெண்ணின் வசனமா அது? நடுத்தர வயதில், நாற்பதில் அடி வைக்கும் காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் விதையாய் விழுந்து, காடாய்ப் பெருகும் ஒரு கேள்வி. ‘எனக்கு என் வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது?’ ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் வாயிலாக படத்தின் டைரக்டர் கௌரி, நடுத்தர வயது இந்தியப் பெண் இதயங்களின் அடர் பள்ளங்களில் ஒளிந்திருக்கும் கேள்வியை எடுத்து வெளியே வீசியிருக்கிறார்.

கடும் கசப்பை உருவாக்கும் கேள்வி இது. குறைகள் என்று பெரியதாக ஏதுமில்லைதான். வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. கணவன், குழந்தைகள், அவர்களின் தேவை என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. பிரியமும் பகிர்தலும்கூட அவ்வப்போது உண்டு. உடம்பு சரியில்லையென்றால் வந்து நிற்கும் குடும்ப நபர்களின் கண்களில் அக்கறை தெரிகிறதுதான். ‘எதுக்காக எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கற?’ என்று யாராவது நிச்சயம் கத்துகிறார்கள். அதில் கரிசனமும் தொனிக்கிறதுதான். ஆனால் மரியாதை? சந்தேகமாகத்தான் இருக்கிறது; இல்லை? அவள் தன் வீட்டில் செய்யும் மின்வண்டித் தொடர் போன்ற முடியாத வேலைகளுக்கு பொருளாதார மதிப்பும் இல்லை. செய்பவளுக்கு மரியாதையும் இல்லை என்பதுதான் நிசர்சனமோ?

லன்ச் டப்பாவில் என்ன கட்டிக் கொடுத்தாலும்போர்என்று பிள்ளைகள் இடும் கூக்குரல்கள். ‘சரி, இன்னைக்கு என்ன வேணும்னு நீயே சொல்என்றால்ஏதாவது செய்மாஎன்று சலிப்போடு வரும் பதில்கள். அவசரத்துக்குக் கடைக்குப் போகச் சொன்னால், ‘ஐயயோ... நாளைக்கு பிராஜக்ட் சப்மிட் பண்ணணும்என்று வரும் சால் ஜாப்புகள். ‘உதடு தேயறதைவிட உள்ளங்கால் தேயலாம்என்று முணுமுணுத்துக்கொண்டு அவளே கடைக்கு ஓடும் நேரத்தில் பொங்கித் தொலையும் பாலை அல்லது கதறும் குக்கரை யாரும் கவனிக்காத அசட்டைகள்.

நாளை இரவுச் சமையலுக்காக இன்று காலையிலிருந்தே யோசிக்கும் ஆயத்த அபத்தங்கள். எத்தனை வேகமாய்ச் சமைத்தாலும், பாதி வேகும் போதே, ‘லேட் ஆயிடுச்சுநான் வெளியே பாத்துக்கறேன்என்று எழும் அலறல்கள். ‘சாப்பிட வர்றீங்களா?’ என்று எட்டுமுறை கேட்ட பின்பு, ‘ம்என்று செய்தித்தாளை கால் சென்டிமீட்டர் கீழே தணித்து, ‘என்ன கேட்ட?’ எனும் எரிச்சல்கள். இத்தனையையும் சமாளித்து பரிபூரண ஆத்ம சமர்ப்பணத்துடன் உழைப்பவள் மீது அவ்வப்போது தூவப்படும் அவமானங்களின் எள்ளல்...


ஒரு அம்மாவிடம் எரிந்து விழுகிற சிடுசிடுப்பை, காட்டுகிற எரிச்சலை, ‘சும்மா நைநைன்னு இர்ரிடேட் பண்ணாதம்மாஎன்கிற எகிறலை வீட்டில் வேறு யாரிடமும் பெரும்பாலும் வெளிப்படுத்த முடியாது. அம்மா? அவள் தாங்கிக் கொள்வாள். அவள் மீதுதான்பூமாதேவி அவதாரம்என்று லேபில் குத்தியாகிவிட்டதே. அப்புறம் என்ன?

எங்கம்மாவுக்கு அப்பா செல் வாங்கிக் கொடுத்திருக்காரு. பயங்கர வேஸ்டுடா மச்சான். இவங்க ரிங்டோனாகௌஸல்யா சுப்ரஜா...’ செட் பண்ணிக் கொடுக்கச் சொல்லி கடையிலேயே வாங்கியிருக்காங்க. வீட்டுக்கு வந்தவுடனே, நான்ஏலே கீச்சான் வந்தாச்சுசெட் பண்ணிட்டேன். மறுநாள் இவங்க பஸ்ஸிலே போயி, ஃபோன் அடிச்சு, கதறியும் இவங்க எடுக்காமலேயே இருந்திருக்காங்க. பஸ்ஸே அலறியிருக்கு. ‘ஏம்மா, உன் ஃபோன்தான் அடிக்குது...’ன்னு. வீட்டுக்கு வந்ததும் தான் மேடத்துக்குத் தெரியுதுஎன்கிறான் மகன், தன் நண்பனிடம். நண்பனுடன் சேர்ந்து வீடு மொத்தமும் அம்மாவின் அறியாமைக்குச் சிரிக்கிறது. ‘எங்க பரத்துக்கு செல்ஃபோன்ல தெரியாத விஷயமே கிடையாதுஎன்று தன் சிறுமையையும் மகனின் பெருமையாய் மாற்றும் அம்மா.

இதே மகன்தான் மூன்றாம் வகுப்பு வரையில் ‘3’ என்று எழுதச் சொன்னால் 'E' என்றே எழுதி வந்தான். வகுப்பில் டீச்சர் திட்டினாள் என்று பிழியப் பிழிய அழுத குழந்தையை தூக்கிக் கொண்டு போய் பிலுபிலுவென்று டீச்சரிடம் சண்டை போட்டாள் இவள். ‘நான் சொல்லித் தரேண்டா கண்ணு. உன்னை மாதிரி யாராவது புத்திசாலி இருக்க முடியுமா?’ என்று தன்னம்பிக்கையை வளர்த்தவள் இவள்தான். நாலு மாசம் போராடி சரியாக ‘3’ போட வைத்தவளும் இவள் தான்.

குடும்பமே ஹாலில் உற்சாகமாய் கிரிக்கெட் பார்க்க, இரு அடுப்புகளில் இரண்டு தோசைக்கல் போட்டு, மாற்றி மாற்றி தோசை ஊற்றி, அடுக்களையிலிருந்து ஹாலுக்கு ஓடி ஓடி சுடச்சுட பரிமாறியதும் இவளே. அன்று இவள் ஓடிய ஓட்டத்தை இந்திய அணி வீரர்கள் ஓடியிருந்தால் அணிக்கு அறுபது ரன் அதிகம் கிடைத்திருக்கும். இன்று திருமணம் ஆன மகன், தன் மனைவி அடுக்களையில் இருந்தால் தானே வந்து காஃபி போட்டுக் கொண்டு அவளுக்கும் ஒரு தம்ளர் கொடுப்பதைப் பார்த்தும் பாராமலே இருக்கிறவளும் இவளே.

ஆரம்பத்தில் தன் மாமியாரிடம் பேச்சுப்பட்டு, இன்றைக்கு மருமகளிடம் பேச முடியாது நயத்தகு நாகரிகம் பாராட்டும் இவளது வாழ்வு இன்னமும் எழுதப்படாத ஒரு சரித்திரம்.

இளமையில் எதையும் தாண்டி ஓடி விட முடிகிறது. நடுத்தர வயதிலோ உரிய மரியாதைகள் இல்லாத உழைப்பு விழலுக்கு இறைத்த நீரோ என்ற ஏமாற்றம் தாக்குகிறது. தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடும் பெண்ணின் வலியும் ஆழ்மன ஏக்கமும், உதாசீனம் செய்யப்படுவது யுகங்கள் தோறும் தொடரும் நம் சமூக அவமானம். ‘நான் சொன்னா யாரு மதிக்கறாங்க இந்த வீட்டுல?’ என்று நம் வீடுகள்தோறும் கேட்கும் பெண்ணின் குரல் வெற்றுக் கூச்சல் அல்ல, அது நிராகரிக்கப்பட்ட ஆன்மாவின் கதறல்.

இந்த அவமானங்களுக்கு மாற்று உண்டா? இதற்கு மட்டுமல்ல; எந்த அவமானமும் கடித்து விழுங்க முடியாததல்ல. முயற்சியால் தன்னை உயர்த்திக் கொள்ளும் ஓர் உயிரின் தவத்துக்கு முன் எந்த அவமானமும் பெரிதல்ல என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவள் ஒரு பெண்தான்.


சமீபத்தில் கார் டிரைவிங் கற்றுக்கொள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த போதுதான் சாவித்ரியைச் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் யாருக்கும்குபுக்கென்று சிரிப்பு வரும். காரணம் அவரது எடை சுமாராக 120 கிலோவாவது இருப்பார். குள்ளமான உடல் வேறு. அவர் வந்து டூவீலர் ஓட்டக் கற்க வேண்டும் என்ற போது, டிரைவிங் பள்ளியின் கூட்டும் ஆயாகூட சிரித்துவிட்டார். அவர் சேர்ந்த பாட்ச்சில் ஏனைய பெண்களுக்கு சராசரி வயது 20. அவர்கள் யாவருக்கும் இரண்டே நாட்களில் பாலன்ஸ் வந்து விட்டது. சாவித்திரி அம்மாவுக்கு பத்து நாளாகியும் வண்டி குடை சாய்வது நிற்கவில்லை. டிரைவிங் சொல்லிக் கொடுப்பவர்கள் எத்தனை திட்டினாலும் விடாது அதிகாலை ஆறுமணிக்கு வந்து அடாது பயிற்சி செய்வார்.

ஏம்மா கஷ்டப்படறீங்க? பேசாமல் பஸ்ல போகலாமேஎன்றேன். ‘பஸ் கூட்டமா வருதுங்க. ஏத்த மாட்டேங்றாங்க. ஷேர் ஆட்டோவுலகூட ஏத்தறதில்லைங்க. தினம் தினம் ஆட்டோவில போக காசில்லை. காசிருந்தா தைராய்ட் மருந்து ரெகுலரா சாப்பிட்டு எடையைக் கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம். வேற வழியில்லாம தான் லோன் போட்டு டூவீலர் வாங்கினேன்என்றார்.

மெல்லிய குரலில் தன் வாழ்வைப் பற்றிச் சொன்னார். கடும் தைராய்ட் பிரச்னையால் உடல் பருமன். கணவர் விலகி விட்டார். பிள்ளைகளையும் வயதான அம்மாவையும் இவர்தான் காப்பாற்றுகிறார். காலை எழுந்து, சமையல் வேலை முடித்து, ஆறு மணிக்கு டிரைவிங் பள்ளிக்கு வந்து, அங்கிருந்து வேலைக்குப் போய், சாயங்காலம் கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போய்... கேட்டாலே தலைசுற்றும் வாழ்க்கை.

எல்லா இடத்திலேயும் கேலி, கிண்டல். ‘குண்டம்மாஎன்று பட்டப் பெயர். கம்ப்யூட்டர் வகுப்பிலே நாற்காலியெல்லாம் சின்னது. நான் உட்காரவே முடியாது. நின்னுகிட்டே கத்துப்பேன். எல்லாரும் சிரிப்பாங்க. இங்கே மத்தவங்க எல்லாம் ஒரு வாரத்திலேயே வண்டி ஓட்டக் கத்துப்பாங்க. எனக்கு மூணு மாசம்கூட ஆகலாம். ஆனா என்ன? மூணு மாசமும் காலையில ஆறு மணிக்கு வருவேன். டூவீலர் ஓட்ட ஆரம்பிச்சா ஆபீஸுக்கு சீக்கிரமா போயிடுவேன். கம்ப்யூட்டர் வகுப்பும் முடிச்சேன்னா வேலையை நிரந்தரம் பண்ணிடுவாங்க. அவமானமெல்லாம் பார்த்தா இதெல்லாம் நடக்குமா?’ என்றார்.

சாவித்திரி அம்மா வாங்கஎன்கிறான் டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர். அவனே மிக இளைஞன்தான். ‘பார்த்து, பார்த்து... வண்டியிலே ஏறி உடைச்சுடாதீங்கஎன்கிறான். கொல்லென்று சூழ இருக்கும் இளம் பெண்கள் சிரிக்கிறார்கள். சாவித்திரி முகத்தில் புன் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் பயிற்சிக்குப் போகிறார்.

நான் அப்படியே உட்கார்ந்தேன். ‘என்னை யாரும் அவமானப்படுத்த முடியாது. அதை நான் அனுமதிக்கும்வரைஎன்று காந்தி சொன்னது நினைவில் வந்தது.
யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று சாவித்திரி நடந்து போன தடத்து மண்ணை எடுத்து என் நெற்றியில் இட்டுக் கொண்டேன்...

(பயணம் தொடரும்)

நன்றி - கல்கி