Showing posts with label ஆவி குமார் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆவி குமார் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, July 25, 2015

ஆவி குமார் - சினிமா விமர்சனம்




நன்றி - மாலை மலர் 

மலேசியாவில் வசிக்கும் ஆவிக்குமாரான உதயா ஆவிகளுடன் பேசக்கூடியவர். ஒருநாள் மலேசியாவின் போலீஸ் அதிகாரியான நாசர், ஒரு தொலைக்காட்சியில் ஆவிக்குமாருடன் உரையாடல் நடத்துகிறார். 

அப்போது, ஒரு டாக்டர் கொலை சம்பந்தமான கேள்விக்கு ஆவியுடன் பேசி உதயா பதிலளிக்கிறார். ஆனால், அந்த டாக்டரை கொலை செய்த கொலையாளியின் பெயரை உதயா சொல்வதும், நாசர் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. 

இருப்பினும், உதயா தான் சொல்வதுதான் உண்மை என்பதில் விடாபிடியாக இருப்பதால், நாசர் ஒரு போலீஸ் அதிகாரியை நியமித்து உதயாவை பின்தொடர அனுப்பி வைக்கிறார். 

இந்நிலையில், உதயா தனது நண்பன் ஜெகனுடன் சேர்ந்து தங்க வீடு தேடி அலைகிறார். அப்போது புரோக்கர் மூலமாக இவருக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டின் மேல் மாடியில் இருக்கும் அறைக்கு யாரும் செல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் அந்த வீட்டில் உதயாவை குடியமர்த்துகிறார் புரோக்கர். 

ஆனால், உதயாவோ, புரோக்கர் கூறிய அறையில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருக்கிறான். புரோக்கர் பேச்சை மீறி, மேல் மாடியில் இருக்கும் அறைக்கு செல்கிறான் உதயா. அங்கு நாயகி கனிகா திவாரி இருப்பதை அறிந்ததும் திடுக்கிடுகிறான். 

இவன் அந்த அறைக்குள் நுழைந்ததும், அவள் உதயாவை திட்டி தீர்க்கிறாள். ஒருகட்டத்தில், அவள் ஆவியாகத்தான் அந்த அறைக்குள் இருக்கிறாள் என்பதை உதயா உணர்கிறான். அவளிடம் நீ ஆவியாகத்தான் இங்கு இருக்கிறாய் என்று உதயா கூறினாலும், அவள் அதை ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில், நாயகிக்கும் தான் ஆவிதான் என்பது தெரிய வருகிறது. 

ஆனால், உண்மையில் நாயகி இறக்கவில்லை. டாக்டரான நாயகி, ஒரு மருத்துவமனையில் கோமாவில் கிடக்கிறாள். அவளுடைய நினைவுகள் ஆவியாக சுற்றி வருகிறது. இவளுடைய கோமா நிலைக்கும், நாசர் விசாரித்த டாக்டரின் கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உதயா அறிகிறான். 

இறுதியில் நாயகி கோமா நிலைக்கு செல்ல காரணம் என்ன? நாயகியின் கோமாவுக்கும், டாக்டரின் கொலைக்கும் என்ன சம்பந்தம் என்ன? என்பதை உதயா கண்டறிந்தாரா? என்பதே மீதிக்கதை. 

ஆவிக்குமார் கதாபாத்திரத்தை ஏற்று, உதயா ஒரு எதார்த்தமான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒரு ஹீரோவுக்குண்டான ஆக்ஷன் இந்த படத்தில் இல்லையென்றாலும், கதைக்கேற்றார் போல் அழகாய் பொருந்தியிருக்கிறார். 

நாயகி கனிகா திவாரி, ஆவியாக இருந்தாலும் ரசிக்கும்படியாக அழகாக இருக்கிறார். துறுதுறு நடிப்பில் மனதை கொள்ளை கொள்கிறார். நாசருக்கு இப்படத்தில் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள் இல்லையென்றாலும், அவர் வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். 

உதயாவின் நண்பராக வரும் ஜெகன் படம் முழுவதும் பேசிக் கொண்டே இருப்பதால், இவரது நடிப்பை ரசிக்க முடியவில்லை. மேலும், மனோபாலா, தேவதர்ஷினி, முனீஷ்காந்த் ஆகியோர் வரும் காட்சிகள் நகைச்சுவையாக நகர்கிறது. 

இயக்குனர் காண்டீபன் ஒரு சிறு சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு, அதை திறம்பட இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். ஆவிகளுடன் பேசும் விஷயங்களை மிகவும் ஆராய்ந்து, அதை சுவைபட எடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க மலேசியாவிலேயே இப்படத்தை எடுத்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு. கதாபாத்திரங்களை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாண்டிருக்கலாமோ என்று ஒரு சில காட்சிகள் கேள்வி கேட்க வைக்கிறது. 

ராஜேஷ் கே நாராயணன் ஒளிப்பதிவில் மலேசியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அருமை. இறுதியில் வரும் மருத்துவமனை காட்சிகளில் இவரது கேமரா விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் அழகாக இருக்கிறது. 

மொத்தத்தில் ‘ஆவிகுமார்’ சுமார் மூஞ்சி குமார்