Showing posts with label ஆனந்த விகடன் விமர்சனம். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன் விமர்சனம். Show all posts

Sunday, February 10, 2013

கடல் -ஆனந்த விகடன் - ன் விமர்சனம்

தேவனுக்கும் சாத்தானுக்கும் நடுவே போராட்டம் நடைபெறும் களம்... இந்தக் 'கடல்’!


பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். பல வருடங்கள் கழிந்தும் வன்மம் குறையாத அர்ஜுன், பொய்ப் புகாரில் அரவிந்த்சாமியைச் சிறைக்கு அனுப்புகிறார். அரவிந்த்சாமியுடன் இருக்கும் கௌதமைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அவரை மாஃபியா கிரிமினல் ஆக்குகிறார். இடையே கௌதமுக்கு அர்ஜுன் மகள் துளசியோடு காதல். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் கௌதமின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கதை.



அட... ஆச்சர்யம்! துண்டு துண்டான வசனங்கள், இருட்டுப் பின்னணி என்கிற மணிரத்னத்தின் ஃபார்முலாவில் இருந்து மாறுபட்டுச் சலசலக்கிறது கடல். ஆனால், நான்கு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான உறவு, அதில் ஏற்படும் சிக்கல் எனக் கடலுக்கான களத்தை அழுத்தமாக அமைத்தவர், அதில் பேரலைகளை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.    



பளீரெனப் படத்தில் ஈர்ப்பவர் 'ரீஎன்ட்ரி’ அரவிந்த்சாமிதான். கெட்ட வார்த்தை பேசும் சிறுவனிடம், ''ம்ம்... என்னென்ன தோணுதோ... பேசுடே'' என்று பொறுமை காப்பதாகட்டும், சிறைக்குச் சென்று மீண்டும் கிராமத்துக்கு வரும்போது, கம்பீரம் குறையாமல் வருவதாகட்டும்... கிரேட்!



இளமையும் துடிப்புமாக வசீகரிக்கிறார் கௌதம் கார்த்திக். முரட்டுத்தனம், காதல் மயக்கம், கடத்தல் திகில், நடனத் துள்ளல் என அறிமுக வாய்ப்பிலேயே அட்டகாசம். ''சாத்தான், இயேசுவுக்கு அண்ணன்டே'' என்று 'சாத்தான்’ வில்லனாக அர்ஜுன்... அமர்க்களம். துளசி... வழக்கமாக ஈர்க்கும் மணிரத்னம் பட நாயகிகளிடம் இருக்கும் மேஜிக் ஏனோ மிஸ்ஸிங்.  



ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'ஏல கீச்சான்...’, 'நெஞ்சுக்குள்ளே..’, 'என்னை எங்கே நீ கூட்டிப் போற’ என்று கடல் மேல் மழைத் துளிகளாக வசீகரித்த பாடல்களுக்கு, திரையில் எந்த ஸ்பேஸும் கொடுக்கவில்லையே... ஏன் சார்? அலைகளின் மேலாகவும் உள்ளாகவும் பயணிக்கும் ராஜீவ்மேனனின் ஒளிப்பதிவு கிளாஸிக் துல்லியம்!



அர்ஜுனுக்கும் அரவிந்த்சாமிக்கும் வருகிற முட்டல், கௌதமின் அவலமான சிறுபிராயம் என அபாரமாக ஆரம்பிக்கிற கதை, போகப் போகத் துடுப்பு இல்லாத படகு மாதிரி தடுமாறுகிறது. தான் செய்த பாவங்களை  துளசியிடம் கௌதம்  அடுக்கடுக்காகச் சொல்லும்போது, ''அதனால என்ன, இனிமே செய்யாதே!'' என்று துளசி சொல்லும் இடம் ஒரு கவிதை... அதைப் போல இயல்பும் ஈர்ப்பும் வேறெங்கும் இல்லையே?! அர்ஜுன்-அரவிந்த்சாமி இடையிலான மோதலில் இருக்கும் உயிர்ப்பு, கௌதம்-துளசி இடையிலான காதலில் இல்லவே இல்லையே?




'எனக்கு நிம்மதியா இருக்கிறதவிட... உஷாரா இருக்கிறதுதாம்டே பிடிக்கும்’, 



'இப்ப பொய் பேசுறீயா? இல்லை... நான் உன்னைக் காப்பாத்துனப்ப பொய் சொன்னீயா?’


 எனப் பல இடங்களில் சுளீரிடும் ஜெயமோகனின் வசனம் படத்துக்கு சுறா பலம்.


மேக்கிங்கில் மிரட்டும் இந்தக் 'கடல்’ பயணம், திரைக்கதைத் திக்குத் தெரியாததால் தள்ளாடுகிறது!


நன்றி - விகடன் விமர்சனக் குழு